பவிஷ்யோத்ர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷாசலம், வேங்கடாசலம் என்று நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் மேலும் 14 பெயர்களைச் சொல்கிறது.இஷ்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதனால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயராயிற்று.ஞானத்தைக் கொடுப்பதால் ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சான்னித்யதைக் கொண்டிருப்பதால் தீர்த்தாசலம்.நீர்நிலைகளில் உன்னதமான சரோவரம் அங்கிருப்பதால் புஷ்கராத்ரி.யமன் இங்கு வந்து தவம் புரிந்து இறைவன் அனுக்ரகத்தைப் பெற்றதால் வ்ருஷாசலமாயிற்று. (வ்ருஷம் என்றால் யமன் என்று பொருள்.)தங்கமயமான மேருமலையின் மகனாதலால் கனகாசலம்.நாராயணன் என்ற பண்டிதன் இங்கு வந்து தவம் செய்ததால் நாராயணாத்ரி.கருடன் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்ததால் கருடாத்ரி, வைகுண்டாசலம்.நரசிம்மர் இங்கு அவதரித்ததால் சிம்ஹாசலம்.வராக தேவரே இங்கு முதலில் வந்தமர்ந்ததால் வராகாசலம்.ராமாயணத்தில் வரும் நீலன் என்ற வானரன் இங்கு வந்து தவம் புரிந்ததால் இது நீலகிரி.பாகவத உத்தமர்கள் இங்கு வந்து பகவானுடன் ஆனந்தமாயிருப்பதால் ஆனந்தகிரி.மகாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்து இருப்பதால் ஸ்ரீசைலமாயிற்று.ஸ்ரீநிவாசனின் இருப்பிடமாதலால் ஸ்ரீனிவாசகிரி.இப்படி அநேக பெயர்களை வராக புராணம் சொல்கிறது.