அறநிலைய துறை கோவில்களில் ஆன்மிக நூலகங்களுக்கு மூடுவிழா!
சென்னை : அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஏற்படுத்தப்பட்ட, ஆன்மிக நுாலகங்களுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க தயங்குவதால், மூடு விழா கண்டு வருகின்றன.இந்த அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,481 கோவில்கள் உள்ளன. இவற்றில், முந்தைய தி.மு.க., ஆட்சியில், நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிறப்பு நிலை கோவில்கள், முதல்நிலை கோவில்கள், இரண்டாம் நிலை கோவில்களில், ஆன்மிக நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பக்தர்கள், ஆன்மிகம், புராண, இதிகாசங்களை தெரிந்து கொள்ளும் வகையில், நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ராமாயணம், மகாபாரதம், புராண, இதிகாச காவியங்கள், சமய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெற்றன.கோவிலில், பிரத்யேக அறைகளில் செயல்பட்ட நுாலகங்களில், பொறுப்பு ஊழியர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அடுத்து, அதிகாரிகள், ஆன்மிக நுாலகங்களுக்கு, முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக் கொண்டனர். நுாலக பணிகளை கவனித்து வந்த ஊழியர்களுக்கு, மாற்றுப் பணி வழங்கப்பட்டதால், நுாலகத்தை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஊழியர் இல்லாததால், பக்தர்களுக்கு, புத்தகம் வழங்க ஆள் இல்லாத நிலை காணப்பட்டது. படிப்படியாக நுாலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, கோவில்களில் ஆன்மிக நுாலகங்கள் மூடப்பட்டன.அரசியல் காழ்ப்புணர்ச்சியை, நுாலகங்கள் மீது காட்டாமல், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.