திருஆவினன்குடி கும்பாபிஷேகம் சண்முகநதி தீர்த்தம் வருகை!
பழநி : திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 64 மிராஸ் பண்டாரங்கள் சார்பில் சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருஆவினன்குடி கோயிலில் செப்.,7ல் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கணபதிஹோமத்துடன் சிறப்புபூஜைகள் நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கி தொடர்ந்து, செப்.,7 வரை ஆறாம் கால யாகபூஜை நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதி வேளீஸ்வரர் கோயிலில் விமானங்கள், ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பழநி 64 மிராஸ்பண்டாரங்கள் சார்பில், சண்முகநதியிலிருந்து தீர்த்தம் எடுத்து, அதில் வாசனை திரவியங்களை கலந்து, ஊர்வலமாக திருஆவினன்குடிகோயிலுக்கு கொண்டுவந்தனர். இந்த புனித தீர்த்தம் யாகசாலை கும்பம், மூலவர் அபிஷேகம், மற்றும் மகா கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கு சித்தனாதன் அன் சன்ஸ் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சுகந்தவிலாஸ் மகேஷ், 64 மிராஸ் பண்டாரங்கள் தலைவர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.