உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சபூத தலங்கள் பாத யாத்திரைக் குழு நடராஜர் கோவிலில் தரிசனம்!

பஞ்சபூத தலங்கள் பாத யாத்திரைக் குழு நடராஜர் கோவிலில் தரிசனம்!

சிதம்பரம்: பஞ்சபூத தலங்கள் பாத யாத்திரைக் குழுவினர் ஆகாய ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தனர். திருச்சி ஆனந்த  பழனி வழிபாட்டுக் குழு சார்பில் பஞ்சபூத ஸ்தலமான திரு ஆனைக்காவல், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்,  காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர், ஸ்ரீகாளகஸ்தி காளத்தியப்பர் சுவாமிகளை தரிசனம் செய்ய 20 பேர் கொண்ட குழுவினர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த 29ம் தேதி வழிப்பாட்டுக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் திரு ஆனைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத திரு ஆனைக்கா அண்ணலை தரிசனம் செய்து பாத யாத்திரையை துவக்கினர். தொடர்ந்து கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருக்கண்டியூர்,  பாபநாசம், வலங்கைமான், திருவாரூர், பேரளம், மயிலாடுத்துறை, சீர்காழி வழியாக 5ம் தேதி மாலை சிதம்பரம் வந்தடைந்தனர். இந்த  குழுவினர்களுக்கு தெற்கு கோபுர வாசலில் சபாநாயகர் கோவில் தீட்சிதர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  பாத யாத்திரைக் குழுவினர் தேவாரம் பாடி நடராஜர் கோவிலை வலம் வந்து சிவகாமி அம்மன் சமேத ஆனந்த நடராஜர் சுவாமியை சிறப்பு தரிசனம்  செய்தனர். பின்னர் வடக்கு கோபரம் வழியாக புறப்பட்டு புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, மடப்பட்டு, பெரியசெவலை வழியாக திரு வண்ணாமலை சென்று 9ம் தேதி உண்ணாமலை தாயார் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர்.  12ம் தேதி காஞ்சிபுரத்தில் காமாட்சி  அம்மன் சமேத ஏகாம்பரரேஸ்வரரும், 17ம் தேதி காளகஸ்திக்கு சென்று ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தியப்பர் சுவாமியை தரிசனம் செய் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !