சித்தாபுதுார் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!
கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக, ராஜேஷ்நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை சித்தாபுதுார் சின்னசாமிநாயுடு ரோட்டிலுள்ள அய்யப்பன் கோவிலில், கேரள தாந்திரிய முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. அதனால், சபரிமலையில் மேல்சாந்தியை தேர்வு செய்யும் நடைமுறையே இங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
மேல்சாந்தி பணி மேற்கொள்வதற்காக பாலக்காடு ஒத்தப்பாலம் சந்தோஷ் நம்பூதிரி, பட்டாம்பியை சேர்ந்த ஸ்ரீகாந்த் நம்பூதிரி, பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித் நம்பூதிரி, மலப்புறம் வண்டூர் பாலச்சேரிமனையைசேர்ந்த ராஜேஷ் நம்பூதிரி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களை தேர்வு செய்ய கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் சன்னிதானத்தின் முன்பு நான்கு பேரின் பெயர்களும் காகிதச்சீட்டில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி கோவில் சன்னிதானத்தில் கோவில் நிர்வாகிகள் முன்பு குலுக்கல் நடந்தது. அதிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில் மலப்புறம் ராஜேஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவரது பணிக்காலம் ஓராண்டு காலம். அதுவரை இவரது தலைமையில், கோவிலில் அன்றாட பூஜைகள், விழாக்கள் நடைபெறும். இவர் இதே கோவிலில், 2004ம் ஆண்டு முதல் கீழ்சாந்தியாக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.