பசு பூஜை செய்யுங்க!
பொங்கலுக்கு மட்டுமல்ல. தீபாவளிக்கும் பசு பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. பொறுமையின் மறுவடிவமான பூமாதேவி, உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமாளும், விரைவில் உலகிலுள்ள அசுரர்களால் மக்களுக்கு ஏற்படும் அநீதியை அழிக்க அவதாரம் எடுத்து வருவேன், என்று அருள்புரிந்தார். கிருஷ்ணாவதாரம் எடுத்து கம்சன், சிசுபாலன், ஜராசந்தன், துரியோதனன் ஆகியவர்களைக் கொன்றார். இவர்களை எல்லாம் விட கொடிய அரக்கனான நரகாசுரனை மட்டும் கிருஷ்ணனால் அழிக்க முடியாத நிலை இருந்தது. ஏனென்றால் நரகாசுரன் தன் தாயின் கையால் மட்டுமே அழிவது என்ற வரம் பெற்றிருந்தான். ஆனாலும், அவளது கையாலேயே நரகாசுரனைக் கொல்லும் சூழ்நிலையை உருவாக்கினார் கிருஷ்ணர். பூமாதேவி, பசு வடிவில் பெருமாளை வழிபட்டதால், பசுக்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள் ஆகிறோம். எனவே, தீபாவளியன்றும் பசுக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். பசுக்களுக்குப் புல்லும், வாழைப்பழமும் கொடுங்கள். இதனால் முன்னோர் ஆசியும் நமக்கு கிடைக்கும்.