ஸ்தலசயன பெருமாள் கோவில் தரம் உயர்வு!
 மாமல்லபுரம்: வருவாய் அதிகரித்துஉள்ளதை அடுத்து, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் தரம் உயர்த்தப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உண்டியலை, உதவி ஆணையர் முன்னிலையில் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 108 வைணவ தலங்களில், 63வது தலமாக, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர் வீற்றிருந்து, நிலம், மகப்பேறு ஆகிய பிரச்னைகளுக்கு, பரிகார தலமாக நம்பப்படுகிறது. இக்கோவிலுக்கு, தற்போது, பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
கோவிலின் ஆண்டு வருமானம், சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஐந்து லட்சம் ரூபாயாக இருந்ததால், அதன் அடிப்படையில், 46 (1) பிரிவின் கீழ், கோவில் வகைப்படுத்தப்பட்டிருந்தது. உண்டியல் ஆய்வாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. தற்போது, ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதால், கோவிலும், கடந்த ஆண்டு 46 (2) பிரிவிற்கு தரம் உயர்த்தப்பட்டு, வகைப்படுத்தப்பட்டது. மூன்று மாத உண்டியல் காணிக்கை இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ஆய்வாளர், உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலை யில், உண்டியல் திறக்கப்படுவதும் வழக்கம். இறுதியாக, கடந்த பிப்ரவரி 5ம் தேதி, ஆய்வாளர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டபோது, 2.70 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 10 மாதங்களாக, உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது, மேலும் பல லட்சம் ரூபாய் அதிகரித்திருக்க வாய்ப்பிருப்பதால், உதவி ஆணையர் முன்னிலையில் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் தரப்பினர் கூறுகையில், உதவி ஆணையர் முன்னிலையில், அடுத்த மாதம் 9ம் தேதி, உண்டியல் திறக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.