ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை பெருந்தீப வழிபாடு!
திருச்சி:ஸ்ரீரங்கம் கோவிலில் பெருந்தீப வழிபாடு நாளை நடக்கிறது.இதையொட்டி, உற்சவர் இரவு, 8 மணிக்கு கதிர் அலங்காரம் எனப்படும், மூலிகைகள் கொண்ட தனிப்பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கார்த்திகை கோபுர பகுதிக்கு செல்கிறார். இரவு 8. 30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.இதையடுத்து, பெருமாள் நந்தவனம் வழியாக தாயார் சன்னதி பகுதிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு திருவந்தி காப்பு எனப்படும் திருஷ்டி கழித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, 9.30 மணிக்கு பெருமாள் மூலஸ்தானம் முன்புரணம் உள்ள சந்தனு மண்டபம் சேருகிறார். அங்கு வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து திருமுக பட்டயம் படிக்கப்படும். பிறகு, 10.15 மணிக்கு பெருமாள் மூலஸ்தானம் செல்கிறார். மேலும், நாளை காலை, 9.15 மணிக்கு பெருமாளுக்கு, சந்தனு மண்டப்பத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவில் தங்க கொடிமரம் அருகில், உத்தநம்பி ஸ்வாமிகள் இடை விளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.