பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேக பெருவிழா!
பவானி: பவானி, காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், 7ம் ஆண்டு கார்த்திகை மாத சோமவார ஸஹஸ்ர, 1,008 சங்காபிஷேக விழா நடந்தது.கார்த்திகை மாதங்களில் வரும் சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அனைத்து கோவில்களிலும், சங்காபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்படும்.இறைவன் கார்த்திகை மாதம், அக்னி பிழம்பாக இருப்பார். எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகங்கள் செய்வது உண்டு.இதன்படி, பவானி, காவிரி வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில், 7ம் ஆண்டு கார்த்திகை மாத சோமவார ஸஹஸ்ர, 1,008 சங்காபிஷேக பெருவிழா, காலை, 9 மணியளவில் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. பின் கலச பூஜை, 1,008 சங்கு பூஜைகள் செய்யப்பட்டு, வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்து, மஹா தீபாராதனை நடந்தது. இரவு, 7 மணியளவில், 108 விஷேச திரவிய ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, சுவாமிகளுக்கு சங்காபிஷேம், மஹா தீபாராதனை நடத்தி, அன்னதானம் நடந்தது. சிவா சிவாச்சாரியார், ரவி கங்காதரன், செந்தில்நாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், சங்கு பூஜை, திரவிய ஹோமங்கள் போன்றவைகளை நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் முக்கிய பிரமுகர்களான பழனிசாமி, அக்னி ராஜா, சௌண்டப்பன், ரவி, வாசுதேவன் ஆகியோர் செய்தனர்.