உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 118 ஏக்கர் நிலம் ஏப்பம்!

சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 118 ஏக்கர் நிலம் ஏப்பம்!

ஓமலூர் தாலுகாவில், 118 ஏக்கர் கோவில் நிலத்தை, கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய் யாமல், வருவாய்துறையினர், போக்குகாட்டி வருகின்றனர். எனவே, அந்நிலத்தை, முறைகேடாக விற்கும் பகீரத முயற்சியில், ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பாகல்பட்டி கிராமத்தில், மிகவும் பிரசித்தி பெற்றது சென்றாய பெருமாள் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில், 15 நாள் விழா நடக்கும். விழா முத்தாய்ப்பாக, வைகுண்ட ஏகாதசியன்று, தேரோட்டம் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.இக்கோவில், நிர்வாகத்துக்கு உட்பட்டது புஜங்கீஸ்வரர் என்ற சிவன் கோவில். இரு கோவில்களும், 200 ஆண்டுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 286 ஏக்கர் நிலம், ஓமலூர் தாலுகாவின், பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதில், 168 ஏக்கர் நிலங்கள் மட்டுமே, கோவில் பெயருக்கு, பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 118.33 ஏக்கர் நிலம், இன்னமும், கோவில் பெயருக்கு மாற்றம் செய்யவில்லை.

இந்நிலங்கள், 2012ல், 40 நபர்களுக்கு, மேல் மகசூல், உரிம குத்தகைக்கு விடப்பட்ட அதே நேரத்தில், கோவில் நிலங்களை, தனி நபர், நிறுவனம் மற்றும் எந்தஒரு அமைப்புக்கும், பத்திரப்பதிவு, பட்டா, கட்டுமான வரைபடம் மற்றும் மின் இணைப்பு எதுவும் வழங்கக்கூடாது என, மாவட்ட கலெக்டர் முதல், டி.ஆர்.ஓ., மேட்டூர் ஆர்.டி.ஓ., ஓமலூர் தாசில்தார் ஆகியோர், முறையே, அனைத்து அதிகாரிகளுக்கும், அடுத்தடுத்து, கடிதம் அனுப்பப்பட்டது.சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, இந்த கடிதத்தை அனுப்பினார். அதேபோல் இந்நிலங்களை, கோவில் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யக்கோரியும், தொடர்ந்து, கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை சாதகமாக பயன்படுத்தி, கோவில் நிலங்களை முறைகேடாக விற்கும் நடவடிக்கையில், சிலர், தீவிரமாக களமிறங்கி இருப்பதாக, "பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வைத்தீஸ்வரன் கூறியதாவது: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலமும், முத்துநாயக்கன்பட்டி, பாலப்பட்டி கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் இருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து, பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த, 13 ஏக்கர் நிலம், கோவில் கணக்கில் கொண்டு வராமல் விடுபட்டுள்ளது. இந்த விவரம் தெரிந்தும், கண்டுகொள்ளாத அதிகாரிகள், முறைகேடு விற்பனைக்கு துணையாக உள்ளனர்.எனினும், அந்த இடத்துக்கு, பட்டா வழங்கவில்லை. அதேபோல், கோவிலுக்கு சொந்தமான, 118.33 ஏக்கர் நிலத்தை, கோவில் பெயருக்கு பட்டா வழங்காமல், போக்குகாட்டும் வருவாய்துறையினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இது தொடர்பாக, இணை ஆணையர் பலமுறை கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

சென்றாயபெருமாள் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன்- ஹேமலதா தம்பதி, கோவில் நிலத்தை முறைகேடாக விற்றதால், 2000ம் ஆண்டில் சீனிவாசன், 2008ல் ஹேமலதா ஆகியோர், பரம்பரை தர்மகர்த்தா பதவியில் இருந்து, "டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேல்முறையீடு வழக்கில், அவர்களுக்கு, எதிராகவே, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.எனினும், அவர்களது தாத்தா, மறைந்த சவுந்திரராஜன் பெயரில், கோவில் உள்ளது. அவர்கள், கோவில் நிலத்தை முறைகேடாக விற்கும், பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, கோவில் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !