உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூரில் குண்டம் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பூமிதித்து நேர்ச்சை!

பாரியூரில் குண்டம் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பூமிதித்து நேர்ச்சை!

கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி,  நேர்த்திகடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு  தோறும், ஜனவரி மாதம், குண்டம், தேர்த்திருவிழா நடக்கும். நடப்பாண்டு திருவிழா, டிச., 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 6ம் தேதி  அம்மனுக்கு, விசேஷ சந்தனக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக, குண்டம் திருவிழா, நேற்று அதிகாலை நடந்தது.

கோவிலின் முன், 50 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டு, நெருப்பு மூட்டினர். அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அம்மை  அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்புள்ள கருடகம்பத்தில், திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. குண்டத்துக்கு பூஜை நடக்கும்  முன், உற்சவ மூர்த்தியான, எழுந்தருள் நாச்சியம்மன் மேற்கு பார்த்து, இருகரம் ஏந்திய நிலையில், குண்டம் அருகே எழுந்தருளினார். தலைமை பூ சாரி புதுப்பாளையம் சண்முகம், குண்டத்துக்கு கற்பூர தீபம் காண்பித்து, சிறப்பு பூஜை செய்தார். பூசாரி, தனது இரு கரங்களால், குண்டத்தில் உள்ள  நெருப்பை எடுத்து, வானத்தை நோக்கி, மூன்று முறை இறைத்தார். பின், பூ, பழம், எலுமிச்சை கனிகளை வானத்தை நோக்கி வீசினார். கூடி இருந்த  பக்தர்கள், அதை பிடித்தனர். பூ, பழம், கனி தங்கள் கையில் கிடைப்பதை அதிர்ஷ்டம் என கருதுவர். தலைமை பூசாரி குண்டம் இறங்கியதை  தொடர்ந்து, மற்ற பூசாரிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், குண்டம் இறங்கி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பெண் பக்தர்கள் பலரும்,  தங்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர். கடந்த இரு வாரமாக விரதம் இருந்த பக்தர்கள், நேற்று முன்தினம் மதியம் முதல், பாரியூர் கோவி லில், வரிசையில் நிற்கத்துவங்கினர். விடியவிடிய கொட்டும் பனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அதிகாலை குண்டம்  இறங்கினர். கோவிலில் இருந்து, பதி என்ற கிராமம் வரை, ஒரு கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இன்று (9ம் தேதி) மாலை, 4  மணிக்கு தேரோட்டமும், 10ம் தேதி இரவு, 12 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !