மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அவிநாசி: "ஓம் சக்தி கோஷம் முழங்க, பெருமாநல்லூரில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பெருமாநல்லூர், தெற்கு வீதியில் விநாயகர், மாகாளியம்மன், முனீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோவிலில் திருப்பணி நடைபெற்று, கும்பாபிஷேக விழா கடந்த 21ல் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், அங்குரார்ப்பணம் ஆகியவற்றுக்கு பின், முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00க்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00க்கு மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றன. நிறைவு கால யாகபூஜை நேற்று காலை 7:30க்கு துவங்கியது. நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி ஆகியவற்றுக்குபின், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 10:50க்கு கோபுர கலசங்கள், விநாயகர், மாகாளியம்மன், முனீஸ்வரன் சன்னதிகளில் உள்ள மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், மகாபிஷேகம், தச தரிசனம், தச தானம், மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் முன்னிலை வகித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பெருமாநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பெருஞ்சலங்கை ஆட்டம், நாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.