உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்நாடக ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி!

கர்நாடக ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி!

மேட்டூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, கர்நாடகாவிலுள்ள ஸ்ரீமலை மாதேஸ்வரன் சுவாமி கோவிலில், லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலம், கொள்ளேகால் தாலுகா, ஸ்ரீமலையில், பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மற்றும் யுகாதி பண்டிகை சிறப்பாக நடக்கும். மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று, மாதேஸ்வரன் கோவிலில், கர்நாடக பக்தர்கள் மட்டும் இல்லாமல், தமிழகத்தின் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும், லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக, குடிநீர் வசதி, தங்கும் வசதி உட்பட, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று, தேர்பவனி, இரவு சேவார்த்த பூஜை நடந்தது. இன்றிரவு, விசேஷ சேவை, உற்சவ நிகழ்ச்சியும், 19ம் தேதி காலை, 8:30 மணிக்கு மஹாரதோற்சவம், காலை 9:30 மணிக்கு, குரு பிரம்மோற்சவம், 10:00 மணிக்கு அன்ன பிரம்மோற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சீரமைக்கப்பட்ட சாலை வழியே செல்லலாம்:சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, 56 கி.மீ., தூரத்தில் மாதேஸ்வரன் மலை கோவில் உள்ளது. இதில், பாலாறு முதல், மாதேஸ்வரன் மலை வரையிலான மலைரோடு, குண்டும் குழியுமாக மிக மோசமாக நிலையில் இருந்தது; தற்போது கர்நாடக அரசு, 8 கோடி ரூபாய் செலவில், சாலையை சீரைமைத்து, இரு வழி சாலையாக மாற்றி வருகிறது. பணிகள் அடுத்த மாதம் முழுமையாக முடிவடைந்து விடும். சேலம், தர்மபுரி, ஈரோடு பகுதிகளில் இருந்து, மேட்டூர் வழியாக, மாதேஸ்வரன் மலைக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பின் மலைசாலை சீரமைக்கப்பட்டதால், பஸ்கள் மட்டுமின்றி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் எளிதாக செல்ல முடிவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !