முத்துப்பேட்டையில் சந்தனக்கூடு ஊர்வலம்!
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூத் ஆண்டவர் தர்ஹா உலகப் புகழ்பெற்றது. இந்த தர்ஹாவுக்கு, இந்தியாவின், பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு என்பதால், தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த ஆண்டின், 713வது பெரிய கந்தூரி விழா சென்ற மாதம், 20ம் தேதி அன்று துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் இரவு, 10.30 மணிக்கு, தர்ஹா முதன்மை அறங்காவலர் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனம் நிரப்பிய குடங்களை தர்ஹாவிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி, சிறப்பு பிராத்தனையுடன் நடைபெற்றது.
நள்ளிரவு ஒரு மணிக்கு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று அதிகாலை புனித சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவு இரவு, 2.30 மணிக்கு, தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் தமிம்அன்சாரி உட்பட டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்ததும் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. சந்தனக்கூடு ஊர்வலம் ஆற்றங்கரை பாவா தர்ஹா, அம்மா தர்ஹா பகுதிக்கு சென்று மீண்டும் தர்ஹாவை, மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. அப்போது, பக்தர்கள், பூக்களை சந்தனக்கூடு மீது வீசி பிரார்த்தனை செய்தனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி., ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்., அனார்கலி பேகம் ஆகியோர் மேற்பார்வையில், முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.