தர்மபுரி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி விழா
தர்மபுரி: தர்மபுரி, அன்னசாகரம், சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர, தேர் திருவிழா நேற்று தொடங்கியது. தர்மபுரி அன்னசாகரம், சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு, நேற்று புற்று மண் எடுத்தல், வாஸ்து சாந்தியுடன், விழா தொடங்கியது. இன்று காலை, 8 மணிக்கு, கொடியேற்றம், இரவு, 8 மணிக்கு, ஆட்டு கிடா வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. 29ம்தேதி முதல், 31ம் தேதி வரை, ஸ்வாமிக்கு காலையில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல், 1ம் தேதி காலை, 9 மணிக்கு பால் குட ஊர்வலம், இரவு, 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத, சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 12 மணிக்கு, மயில் வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. 2ம் தேதி, மாலை, 4.30 மணிக்கு, விநாயகர் ரதமும், இரவு, 8.30 மணிக்கு, யானை வாகன உற்சவமும் நடக்கிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 3ம் தேதி காலை, 6 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், 9 மணிக்கு, ஸ்வாமி ரதம் ஏறுதலும் நடக்கிறது. தொடர்ந்து, பெண்கள் மட்டும், தேரை வடம் பிடித்து, நிலை பெயர்த்தல் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள், மஹா ரதத்தை வடம் பிடித்து, இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 11 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 4ம் தேதி, வேடர் பரி உற்சவம், 5ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா, கொடியிறக்கம், இரவு, பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி, சயன உற்சவம், 7ம் தேதி, விடையாற்றி, உற்சவம் நடக்கிறது.