உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடியும் அபாயத்தில்ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்!

இடியும் அபாயத்தில்ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்!

ராமேஸ்வரம்: ராமாயண வரலாற்றில் தொடர்புடைய, ராமேஸ்வரம், ராமர் பாதம் கோவிலின் அடித்தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கோவில் இடியும் அபாயத்தில் உள்ளது. ராவணன் சிறை பிடித்து சென்ற சீதையை மீட்க, தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு வானர சேனைகள் பாலம் அமைத்தன. அப்பணியை ராமர், கெந்தமாதன (உயரமான இடம்) பர்வதம் எனும் மணல் குண்றில் நின்று பார்வையிட்டதாக, ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. ராமரின் பாதம் பதிந்த இடத்தில், 400 ஆண்டுகளுக்கு முன் கோவில் அமைக்கப்பட்டு, அங்கு, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, இக்கோவிலின் அடித்தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், கோவில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இக்கோவிலை நிர்வகிக்கும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இணை கமிஷனர் உத்தரவுப்படி, கடந்த ஆறு மாதத்திற்கு முன், மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், மராமத்து பணிகளை துவக்க, பாலாலய பூஜை நடக்க இருந்த நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக, ராமேஸ்வரத்தில் பெய்த மழையால், ராமர் பாதம் கோவில் அடித்தளம் மேலும் சேதமடைந்து, கோவில் இடியும் தறுவாயில் உள்ளது. இதுகுறித்து, பா.ஜ., தேசிய பொது குழு உறுப்பினர் கே.முரளீ தரன் கூறுகையில், புராதன சின்னமான ராமர் பாதம் கோவிலில், மராமத்து பணிகளை துவக்க, மாநில இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பழமையான கோவில் அழிந்து விடும் அபாயம் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !