உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டுமாரியம்மன் கோவிலில் நாளை பூச்சட்டி ஊர்வலம்!

தண்டுமாரியம்மன் கோவிலில் நாளை பூச்சட்டி ஊர்வலம்!

கோவை : தண்டுமாரியம்மன் கோவில் பூச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை பூச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. காலை 7.௦௦ மணிக்கு கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், ஒப்பணக்காரவீதி, லிங்கப்ப செட்டிவீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ்பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோட்டை அடைந்து, அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ்ப்பகுதி வழியாக, தண்டுமாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை காலை 6.௦௦ முதல் மதியம் 1.௦௦ மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாநகர போலீசாரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து, வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பேரூர் பைபாஸ் ரோடு வழியாகவும் செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் வாகனங்கள் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் செல்ல வேண்டும்.அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அண்ணா சிலை சந்திப்பு அல்லது ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி ஒசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் வழியாக செல்ல வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் அல்லது திருச்சி ரோடு வழியாகவும் செல்லலாம். ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கியமான வீதிகளை கடக்கும்போது போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். காலை 6.௦௦ மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வல பாதையிலுள்ள பகுதிகளில், லாரிகள் நுழைய தொடர்ந்து தடை உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !