வடபத்ரசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: மே. 22-ல் நடத்த முடிவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை மே 22ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2000 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டிய நிலையில் 2012ல் கும்பாபிஷேகம் நடந்திருக்கவேண்டும். விமான கோபுரத்தினை தங்க கோபுரமாக மாற்றும் பணி முடியாததால் இது வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை.
இருந்தபோதிலும் கோயில் திருப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.இந்நிலையில் கடந்த மார்ச் 29ல் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, காமராஜ், அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து திருப்பணிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து வடபத்ரசயன சன்னதியில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டு மேலிட அனுமதிக்காக காத்திருந்தனர். இதனிடையே வடபத்ர சயன சன்னதியில் திருப்பணிகளும் துரிதமாக நடந்தன. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் மே 22ல் கும்பாபி@ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.