உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பேட்டை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

மேட்டுப்பாளையம்: புனரமைக்கப்பட்ட, பேட்டை மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மேட்டுப்பாளையம், எல்.எஸ்.புரத்தில் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில், குபேரவிநாயகர், பாலமுருகன், மகாமாரியம்மன், சிவன் மற்றும் நவநாயகர்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன. இக்கோவில் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியோடு, புதிதாக சீரமைக்கப்பட்டது.

இதன் மகாகும்பாபிஷேகம் விழா, கடந்த, 29ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் இரவு முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. 30ம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், கோபுர கலசங்கள் அமைத்து, மூலவர் மகாமாரியம்மன் உட்பட அனைத்து விக்கிரகங்கள் அமைத்து, அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. மாலை மூன்றாம் கால யாக பூஜை செய்யப்பட்டது.

நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், திரவிய ஆகம பூர்ணாகுதியும், தீபாராதனையும் செய்யப்பட்டன. காலை, 6:00 மணிக்கு புனித தீர்த்த கும்பங்களை ஆலய வளாகத்தில், ஊர்வலமாக எடுத்து வந்து, விநாயகர், சிவன், முருகன், நவநாயகர்கள், பேட்டை மகாமாரியம்மன் ஆகிய சுவாமிகளின் கோபுரங்களுக்கு, புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து அனைத்து மூலஸ்தான சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றிய பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை, 9:00 மணிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. காரமடை ஞானசுவாமிநாத பண்டித குருஸ்வாமி தலைமையில் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் திருப்பணி விழாக்குழுவினர், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !