கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை விழா
கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய அக்னி சட்டிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா ஏப்ரல் 21 ல் சாட்டுதல் செய்யப்பட்டு ஏப்ரல் 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கம்பராயப்பெருமாள் கோயிலில் வைக்கப்பட்ட உற்சவர் அழைக்கப்பட்டு கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கொம்பு மற்றும் கரத்துடன் ஊர்வலம் நடந்தது. ஏப்ரல் 22 முதல் மே 12 வரை நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. நாட்டுக்கல், வரதராஜபுரம், வடக்குபட்டி, மணிநகரம், பார்க்ரோடு, கம்பமெட்டு ரோடு, காந்திஜிவீதிகளில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் அக்னி சட்டிகள் எடுத்துவரத்துவங்கினர். இரவு 10 மணிக்கு மேல் அதிகளவில் அக்னிசட்டிகள் எடுத்துவரப்பட்டது. நேற்று காலை பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆயிரம் கண்பானை, பால்குடம் எடுத்தல், உருண்டு கொடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை மஞ்சள்நீராட்டம் நடக்கிறது. மே 6 ல் பெருந்திருவிழா நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் அக்னிச்சட்டி, பொங்கல் வைத்தல், அலகுகுத்துதல், ஆயிரம் கண்பானை போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.