கெங்கயம்மன் சிரசு ஊர்வல திருவிழா!
வேலூர்: குடியாத்தத்தில் நடந்த, கெங்கயம்மன் சிரசு ஊர்வல திருவிழாவில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில், நேற்று சிரசு அம்மன் ஊர்வலத் திருவிழா நடந்தது. குடியாத்தம் தர்ணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து, அம்மன் சிரசுக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 5.30 மணிக்கு, சிரசு ஊர்வலம் புறப்பட்டது. நீல கோவிந்தப்பசெட்டி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் நேரு ரோடு வழியாக, பக்தர்கள் வெள்ளத்தில், சிரசு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அம்மன் குடை ஊர்வலம் வந்தது. அம்மன், காளி, புலி வேடங்களில் வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். காலை, 9. 30 மணிக்கு சிரசு கோவிலை சென்றடைந்தது. அங்கு, சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் வைக்கப்பட்ட அகண்ட தீபத்தை பக்தர்கள் வழிபட்டனர். இதில், லிங்கமுத்து எம்.எல்.ஏ., சப் கலெக்டர் வசந்தி, தாசில்தார் ஜோதி, நகராட்சி சேர்மன் அமுதா, அ.தி.மு.க., நகர செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில், இரண்டு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்திற்கு, உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வேலூர், சித்தூர், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெங்களூர், திருப்பதியில் இருந்து, 200க்கும் மேற்பட்ட, சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று (மே, 16) மஞ்சள் நீராட்டு விழா, 17ம் தேதி பூப்பல்லக்கு ஊர்வலம், 22ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சிவாஜி, உதவி கமிஷனர் பாரிவள்ளல், துணை கமிஷனர் தனபால், தக்கார் வடிவேல், கோவில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தர்மகர்த்தா குப்புசாமி, நாட்டாண்மை சம்பத் ஆகியோர் செய்தனர்.