கும்பமேளாவில் 550 கண்காணிப்பு கேமராக்கள்!
மும்பை: கோதாவரி நதி தோன்றுமிடமான, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகில் உள்ள, திரிம்பகேஷ்வர் சிவன் கோவிலில் நடைபெற உள்ள கும்பமேளா விழாவில், 550 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் இருந்து, 28 கி.மீ.,யில் உள்ள, திரிம்பகேஷ்வர் சிவன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில், கடந்த முறை, 3 கோடி பேர் பங்கேற்றனர். வரும், ஜூலை, 14ல், நாசிக் கும்பமேளா துவங்குகிறது. இந்த முறை, 8 கோடி பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாசிக் போலீசார் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, நாசிக் நகரிலும், கும்பமேளா நடைபெறும் திரிம்பகேஷ்வர் சிவன் கோவில் வளாகத்திலும், 550க்கும் மேற்பட்ட, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த கோவிலில் உள்ள குண்டம் எனப்படும் புனித குளத்திலிருந்து தான், கோதாவரி நதி உற்பத்தியாகிறது. நாட்டின் மிக நீளமான நதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புனித குளத்தில் நீராடி, சிவனை வணங்குவது தான், திரிம்பகேஷ்வர் கும்பமேளா நிகழ்ச்சி.