ஐதராபாத்தில் ரூ.600 கோடியில்அமைகிறது ராமானுஜர் கோவில்!
திருப்பதி:தெலுங்கானா மாவட்டம், ஐதராபாத்தில், 600 கோடி ரூபாய் மதிப்பில், ராமானுஜர் கோவில் கட்ட உள்ளனர்.உலக மக்கள் அனைவரும், ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய, வைணவ குரு, ஸ்ரீமத் ராமானுஜர், மண்ணுலகில் அவதரித்து, 2017ம் ஆண்டுடன், 1,000 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. அதை கொண்டாடும் வகையில், ஐதராபாத் அருகில், த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள், 216 அடி உயரமுள்ள, ராமானுஜரின் சிலையை, ஏற்படுத்த உள்ளார். இதற்கு, 600 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடபட்டு உள்ளது.
இந்த சிலையை, சீனாவில் செதுக்கிவருகின்றனர்.மேலும், ராமானுஜர் சிலையை சுற்றி, 108 திவ்யதேச மாதிரி கோவில்; ராமானுஜர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற, மேல்கோட்டை, சிம்மாசலம், ஸ்ரீகூர்மம், பூரி உள்ளிட்ட கோவிலின் மாதிரிகள்; ஆன்மிக நுாலகம், த்ரி டி அரங்கம், தியான மண்டபம், ராமானுஜரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள்; இதை காண வரும் பக்தர்களுக்கு, இவற்றை விளக்கும், ஆடியோ விஷூவல் கிளிப்ஸ், உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உள்ளனர்.