திருச்செந்தூரில் வைகாசி விசாகவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் ஆறுபடைகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூப தீபாரதனை. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் கடற்கரையில் அதிகாலையில் பனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம். சண்முகருக்கு சிறப்பு அபஷேகமும் நடந்தது. மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடந்தது. விசாக தினத்தில் தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தந்தனர் பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன்களை செலுத்தினர். விவசாயிகள் முருகன் கோயிலுக்கு தானியங்களை வழங்கி வழிபட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டன. கோயில் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விசாக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்ககார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொன்சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.