நாமக்கல் சிவன் கோவிலில் பரிகாரம் செய்து வழிபாடு!
நாமக்கல்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளான பக்தர்கள் பங்கேற்று பரிகாரம் செய்ததுடன், ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.நாமக்கல், ரங்கர் சன்னதி அருகில், கோட்டை கார்னேஷன் சத்திரம் உள்ளது. இங்கு தட்சிணா மூர்த்தி ஸ்வாமிகள் உள்ளார். இவருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை, 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், ஸங்கல்பம், ஸகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 10 மணிக்கு மேல் சிறப்பு ஹோமம், மகா பூர்ணாகுதியும், மாலை, 5 மணிக்கு, 108 பால்குட ஊர்வலமும், ஸங்கல்பம் மகா அபிஷேகமும் நடந்தது. இரவு, 8 மணிக்கு, மகா கோடி தீபராதனையும், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.இரவு, 10.55 மணிக்கு, குரு கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இந்நிகழ்ச்சியில், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
* மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. நேற்று கோவிலில், சிறப்பு யாக வேள்வி, அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர்.
* ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், நவக்கிரக சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா, நேற்று மாலை, 6 மணிக்கு துவங்கியது. இரவு, 7.30 மணிக்கு, சிறப்பு ஆராதனை, 108 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இரவு, 9 மணிக்கு, 60 ஸ்வாமி சன்னதிகளிலும், 1,008 அகல் விளக்கு ஏற்றப்பட்டது.அதை தொடர்ந்து, இரவு, 10 மணிக்கு குரு பகவான் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 11 மணிக்கு, குருபெயர்ச்சியை அடுத்து ஸ்வாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், திருச்செங்கோடு கைலாசநாதர், அர்த்தநாரீஸ்வரர், ப.வேலூர் காசி விஸ்வநாதர் கோவில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர், கொல்லிமலை அறப்பளீஸ்வரர், மோகனூர் அசலதீபேஸ்வரர், சீராப்பள்ளி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம், ஏளூர் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.