மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் விமான காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான, திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால் குடம், பூமாலை தோரணம், அலகு குத்துதல், விமான காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோட்டை மாரியம்மன் கோவில், சேலத்து மாரியம்மன் கோவில், சந்தை வீதி மாரியம்மன் கோவில், தேர்ப்பேட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.