புனித மரிய மதலேனாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ராசிபுரம்: வெண்ணந்தூர் அருகே, சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் நள்ளிரவில் நடந்த, தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் யூனியனுக்கு உட்பட்ட, மதியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது சவுரிபாளையம். இங்கு, ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட புனித மரிய மதலேனாள் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் திருத்தேர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 17ம் தேதி திருப்பலி நிகழ்ச்சியும், 18ம் தேதி நவநாள் திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. 21ம் தேதி நள்ளிரவு நான்கு திருத்தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருப்பலி வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டுப் பாடல் திருப்பலி, இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடும் நடந்தது. தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மெழுகுவர்த்தி, புனித எண்ணெய் விளக்கு வைத்தும் புனித மரிய மதலேனாளை வழிபட்டனர். தொடர்ந்து புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங் சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மனசு ஆகிய சிலைகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த தேரில் அமர்த்தப்பட்டது.
நேற்று முன்தினம், நள்ளிரவு, 1 மணிக்கு புனித அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங் சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மனசு உள்ளிட்ட ஐந்து தேர்கள், மின் விளக்கு மற்றும் வண்ண காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேர் ஆலயத்தை சுற்றி பவனி வந்தது. ஆலய விழாவில், பொதுமக்கள் தங்களுக்குள் உள்ள மனக்குறைகள், மனகுழப்பம், பில்லி, சூனியம், பேய் பிசாசு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் திருவிழாவிற்கு வந்து பங்கு தந்தையின் ஆசீர்வாதம் பெற்றால் உடனே அருள்வந்து பேய் ஓடிவிடும் என்பது ஐதீகம். ஒரு காரியத்தை நினைத்து கொண்டு, இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டி கொண்டால் உடனே நிறைவேறும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் பேய் ஆடியதால், பரபரப்பு ஏற்பட்டது. பேய் ஆடியவர்களிடம் இருந்து தீய சக்திகளை விரட்டி அடிக்கப்பட்டது. விழாவில், கிறிஸ்தவ பக்தர்கள் தவிர, ஹிந்துக்களும் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.