ராமேஸ்வரம் பர்வதத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் எழுந்தருளியதால் கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணவிழா ஆக.7ல் துவங்கியது. ஆக 18ல் திருக் கல்யாணம் நடந்தது. 17ம் நாள் விழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிகலிங்கம், காலை பூஜைகள் நடந்தன. இதன்பின் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகியதைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப் பட்டது. கெந்தமாதன பர்வதம் ராமர் பாதம் கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளி யதும் தீபாராதனை, பூஜைகள் நடந்தது. சுவாமி, அம்மன் அங்கிருந்து புறப் பாடாகி கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டு இரவு பூஜை நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.