மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை
ADDED :3708 days ago
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, மழை வேண்டி வருண பகவானுக்கு, பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து, ஆடுகளை பலியிட்டு வழிபட்டனர். பர்கூர் சுற்று வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய பர்கூரை அடுத்த மல்லப்பாடி பஞ்சாயத்து மக்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் நிகழ்ச்சி, பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊர் எல்லையில் நடந்தது. மல்லப்பாடியில் இருந்து, ஊர்பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஆடுகள் பலியிடப்பட்டு வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.