பூவராக சுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ஆர்.கே.பேட்டை : ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் இன்று, சேஷ வாகனத்தில் உலா வருகிறார். பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூர் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.மாலை, 6:00 மணிக்கு, விஸ்வக்சேனர் மற்றும் உற்சவர் பெருமாள், ராஜ வாத்தியத்துடன் வீதியுலா எழுந்தருளினர். இன்று, மாலை 4:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் உற்சவர் எழுந்துஅருளுகிறார். இரவு, 10:00 மணிக்கு, நையாண்டி மேளத்துடன் கரகாட்டம் நடைபெற உள்ளது.நாளை, சனிக்கிழமை, மாலை 4:00 மணிக்கு, கருட வாகனத்தில் பூவராக சுவாமி எழுந்தருளுகிறார். செண்டை மேளம் மற்றும் கரகாட்டம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாலை, அனுமந்த வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடக்கிறது. 28ம் தேதி சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவ திருவிழா நிறைவடைகிறது.