உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆய்வு!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆய்வு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளின் சுகாதாரம் பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற குழுவினர் கடந்த ஆண்டு பலமுறை ஆய்வு செய்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் குறித்து ஆய்வுசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வழக்கறிஞர்கள் சுந்தர், கிருஷ்ணவேணி, சீனிவாச ராகவன் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது. இக்குழுவினர் நேற்று ராமேஸ்வரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், சுற்றுலாதுறை துணை இயக்குனர் வேணுகோபால், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா, இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி, சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் பங்கேற்றனர். பின் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள், சுற்றுலாதுறை ஏற்படுத்திய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை ஓரிரு தினங்களில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளிக்க உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். சுற்றுலாவில் முறைகேடு: சுற்றுலா மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 6 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சுற்றுலாதுறை அதிகாரி வேணுகோபாலிடம், சுற்றுலா ஆர்வலர்கள் புகார் செய்தனர். உயர்நீதிமன்ற குழுவிடம் புகார் செய்யுங்கள், எனக்கு ஒன்றும் தெரியாது என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !