உலகளந்த பெருமாள் கோவிலில் திருமூல மகோற்சவம்!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நடந்தது. தொடர்ந்து, மணவாள மாமுனிகள் ஆஸ்தானத்தில் இருந்து தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதிகளில் மங்களாசாசனம் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னதியில், மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமறை, நான்காயிர திவ்யபிரபந்த துவக்கம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சன்னதி வீதி புறப்பாடு நடந்தது. கோவிலை அடைந்தவுடன் வாகன மண்டபத்தில் எழுந்தருளி, சேவை சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.