சிவகாசி கோயில் முன்பு ஆக்கிரமிப்புகள்: சிரமத்திற்கு ஆளாகும் பக்தர்கள்
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் முன்பு வாகனங்கள், தள்ளு வண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால் கோயிலுக்கு செல்ல முடியாமல் தினமும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளா கின்றனர். சிவகாசியில் மிகவும் நெருக்கடியான பகுதி சிவன் கோயிலும் அதன் சுற்றுபுறமும் தான். பூக்கடைகள், மளிகை கடைகள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் கோயிலை சுற்றி அமைந்துள்ளன. இதுதவிர பிரசித்தி பெற்ற மூன்று கோயில்கள் அவ்விடத்தில் உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக சிவன் கோயில் சுற்று மாட பகுதிகள் அமைந்துள்ளன. போலீசார்: நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தள்ளு வண்டி, டூவீலர்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இப்பகுதி டவுன் போலீஸ் ஸ்டேஷனிற்கு போலீஸ் அதிகாரிகள் யார் மாறுதலாகி வந்தாலும் முதலில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை, சிவன் கோயில் முன்பு உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதுதான். முதலில் அனல்பறக்கும் அளவு ஆக்கிரப்பபை அகற்றும் போலீசார் அதன் பின் கண்டுகொள்வதில்லை.
பழைய நிலை: போக்குவரத்து போலீசாரும் தனக்கென பாணியில் சிவன் கோயில் முன்புள்ள காலி இடத்தில் தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்புகளை காலி செய்வது, குறுக்கும் நெருக்குமாக டூவீலர்கள் நிறுத்தி செல்வோர் மீது நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்துவார்கள். இந்த நடவடிக்கையும் கொஞ்சம் நாள் தொடரும் அதன்பின் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஆள் பற்றாக்குறை:சிவகாசி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""சிவன் கோயில் முன்பு வாகனங்களின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. குறிப்பிட்ட சில கடைகளும் போக்குவரத்திற்கு இடையூறு தரும் வகையில் ரோட்டை ஆக்கிரமித்து உள்ளன . கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கின்றனர். போலீசாரும் வேலை பளூ, ஆள் பற்றாக்குறை காரணம் கூறி விதிமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றனர்,என்றார்.