செபஸ்தியார் திருவிழா: இரவில் அன்னதானம்!
திண்டுக்கல் : முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் விழாவில் ஆடு, கோழிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டது. இவற்றைக்கொண்டு இரவு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஒருவாரம் தொடர்ந்து நவநாள் திருப்பலி நடந்தது. நற்கரு ணை, ஆராதனை, மறையுரை வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வாணவேடிக்கையுடன் மின்தேர் பவனி நடந்தது. நேற்று காலை புனிதருக்கு காணிக்கை பவனி நடந்தது. இதில், 450 ஆடுகள், 1200 கோழி, 150 மூடை அரிசி காணிக்கையாக செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஆரோக்கியசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பூசை, புனிதரின் மன்றாட்டு ஜெபம் நடத்தப்பட்டு அன்னதானம் துவங்கியது. காணிக்கையாக பெறப்பட்ட ஆடு, கோழி, அரிசியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. இரவு முழுவதும் அன்னதானம் தொடர்ந்து நடந்தது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயவில்சன், உதவி பங்குத்தந்தை சார்லஸ் மைக்கேல்ராஜ், ஊர் பெரியதனக்காரர்கள், ஊர் டிரஸ்டி உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.