திருமுல்லை வாயில் திருவிண்ணப்பம்
கலி விருத்தம்
1. தாயின் மேவிய தற்பர மே! முல்லை
வாயில் மேவிய மாமணியே உன்றன்
கோயில் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயில் மேவி இருந்தன னென்னையே!
2. தில்லை வாய்ந்த செழுங்கனி யே! திரு
முல்லை வாயில் முதற்சிவ மூர்த்தியே!
தொல்லை யேனுன்றன் தூய்த்திருக் கோயிலின்
எல்லை சேரவின் றெத்தவஞ் செய்ததே!
3. வளங்கொ ளும்முல்லை வாயிலின் மேவிய
குளங்கொ ளுங்கட் குருமணி யே! உனை
உளங்கொ ளும்படி உன்றிருக் கோயிலிக்
களங்கொள் நெஞ்சினன் கண்டதுங் கண்டேத!
4. மலைவி லாமுல்லை வாயிலின் மேவிய
விலையி லாமணி யே! விளக் கேசற்றும்
கொலையி லாதவர் கூடுநின் கோயிலின்
தலைநி லாவத் தவமென்கொல் செய்ததே!
5.சீர்சி றக்குந் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயல்மணியே! கொன்றைத்
தார்சி றக்குஞ் சடைக்கனி யே! உன்றன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே?
6. சேற்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலிற்
பாற்கொள் வண்ணப் பரஞ்சுட ரே! விடை
மேற்கொள் சங்கர னே! விமலா! உன்றன்
காற்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ?
7. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லே! அமுதே! நுதற்
கண்ணனே! உன்னைக் காணவந் தோர்க்கெலாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ?
8. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
கண்ணுள் மாமணியே! கரும்பே உனை
எண்ணும் அன்பர் இழிவடைந் தாலது
பண்ணு நின்னருள் பாரிடை வாழ்கவே
9. தீதி லாத திருமுல்லை வாயில் வாழ்
கோதி லாத குணப்பெருங் குன்றமே!
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லாரென் றிருப்பதும் என்கொலோ?
10. தேசு லாவியசீர் முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யே! மருந் தே! சற்றும்
கூசி டாமனின் கோயில்வந் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே!