மருதமலையில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தைப்பூசத்திருவிழா துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. சேவற்கொடி வரையப்பட்ட, 200 மீ., நீளம் கொண்ட, பிரம்மாண்ட கொடியை, மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள், கொடி மரத்தில் ஏற்றினர்.
பக்தர்கள், முருகனுக்கு, அரோகரா, என்று பக்தி கோஷம் எழுப்பினர். சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக, கற்பகவிருட்ச வாகனத்தில், கோவிலை சுற்றி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். தைப்பூசத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவான இன்று, சூரிய பிரபை வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்குகிறார். காலை, 10:00 மணிக்கு, அவினாசிலிங்கம் பல்கலை கழக இசைத்துறை தலைவர் ஜனகமாயாதேவி மற்றும் மாணவியரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தைப்பூசத்திருவிழாவின், 10 நாட்களிலும், அன்றாடம், காலை, மாலை நேரங்களில், சுவாமி திருவீதி உலா வருவதும், பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கும், அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.