உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய கல்யாண பெருமாள் கோவில் மண்டபம் சீரமைப்பு

நித்ய கல்யாண பெருமாள் கோவில் மண்டபம் சீரமைப்பு

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மகா மண்டப சேதத்தை, தொல்லியல் துறை சீரமைத்து வருகிறது.

ரசாயன பூச்சு: மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும்; உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும் வீற்றிருக்கிறார்.திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக பிரசித்தி பெற்று, பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோவில், வழிபாட்டு நிர்வாக முறை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையிடமும், தொல்லியல் பாரம்பரிய சின்னம், இந்திய தொல்லியல் துறையிடமும் உள்ளன.

கோவிலில் அறநிலையத் துறை சார்பில், திருப்பணி செய்யப்பட்டு, 2006ம் ஆண்டு, ஜூன் மாதம், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2014ம் ஆண்டு கடைசியில், தொல்லியல்துறை சார்பில், கோவிலில் ரசாயன பூச்சு, துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, சிறு சீரமைப்புகளையும் மேற்கொள்ள முடிவெடுத்ததால், அப்பணிகளை திருப்பணியாக கருதி, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது.

புதிய பீம்: இது ஒருபுறமிருக்க, கோவில் மகாமண்டபத்தில், தென்பகுதி மேல்தள தாங்கு பீம் துண்டாகி, பக்தர்கள் மேல் விழும் ஆபத்தான நிலை இருந்தது. எனவே சேதமானதை முற்றிலும் அகற்றி, புதிய பீம் அமைத்து சீரமைக்கும்படி, தொல்லியல்துறையிடம் கோவில் நிர்வாகம் வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, சீரமைப்பிற்கு வசதியாக, அங்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்த உற்சவர், ஆண்டாள் சன்னிதிக்கு மாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது. தொல்லியல் துறையும், மண்டப மேல்தள கற்களை அகற்றி, சேதமான பீம்கள், தாங்கு கற்கள் ஆகியவற்றை அகற்றி, புதிதாக பொருத்தி உள்ளது. மேலும் மண்டபத்தின் மேற்புறம், நான்கு அடி உயரம் கொண்ட மேல்தள பகுதியை, உயரம் குறைத்து சீரமைக்கவும் முடிவெடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !