உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாகாளியம்மன் திருவிழா: எருமை கிடா எடுக்கும் நிகழ்ச்சி!

கோட்டை மாகாளியம்மன் திருவிழா: எருமை கிடா எடுக்கும் நிகழ்ச்சி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையத்தில், எருமை கிடா எடுக்கும் நிகழ்ச்சியுடன் கோட்டை மாகாளியம்மன் கோவில் திருவிழா  நடந்தது.  பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி ஊராட்சிக்குட்பட்டது காளிபாளையம் கிராமம். இங்கு அமைந்துள்ள கோட்டை மாகாளியம்மனை,  பல நூற்றாண்டுகளாக அப்பகுதி மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில்  திருவிழா  நடத்துவது வழக்கம்.  இந்தாண்டு நேற்று முன்தினமும்,  நேற்றும் திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 21ம் தேதி, அருகிலுள்ள அய்யன்  கோவில் எனப்படும் சிவன் கோவிலில் அபிேஷகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து 22ம் தேதி காலை சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இருந்து  தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அன்று மாலை, ஊர் விநாயகர் கோவிலில் அபிேஷகம்  நடந்தது.  நேற்றுமுன்தினம் இரவு, சக்தி கும்பம் மற்றும் சக்தி  பூவோடு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து திருப்பட்டு பரிவட்டம் கொண்டு வரப்பட்டது. நேற்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்  நடந்தது. தொடர்ந்து பக்தர்களால் நேர்த்தி கிடா, மதியம் நேர்த்தி பூவோடு எடுக்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு மேல், மகிஷாசுர மர்த்தினி  வடிவமான அம்னுக்கு, அலங்கரிக்கப்பட்ட எருமைக்கிடாவை ஊர் பெரிய கிணற்றில் குளிப்பாட்டி, அலங்கரித்து, மேள தாளங்களுடன்  ஊர்வலமாக அலங்கரித்து அழைத்து வரப்பட்டு படைக்கப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு மேல் பூவோடு கங்கையில் விடப்பட்டது. நள்ளிரவு, 12:00  மணிக்கு, ஊரை காக்கும் முனிக்கு, ஊரை சுற்றி சோரெறியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இன்று மஞ்சள் நீராடி, மகா அபிேஷகம் செய்வதுடன் விழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !