விடிய விடிய ஒலித்த ஓம் நமசிவாய: திருப்பூர் பக்தர்கள் பரவசம்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் மற்றும் அவிநாசி வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில், விடிய விடிய "ஓம் நமசிவாய கோஷத்தை பக்தர்கள் பாராயணம் செய்து, வழிபட்டனர். திருப்பூர் அருகே, நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், அதிகாலை வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. வில்வம், தாழம்பூ, துளசி உள்ளிட்ட பூக்களால், அர்ச்சனை நடந்தது.
* எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை வரை, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, மூலவர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரருக்கு நடந்த அபிஷேகம், அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர்.
* திருப்பூர், டி.பி.ஏ., காலனி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பூஜை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கியது. பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும், புது வஸ்திரங்களில் சுவாமிக்கு அலங்காரமும் நடைபெற்றது.
* கும்பாபிஷேகம் நடைபெற உள்ள, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், திருப்பணி நடந்து வருவதால், நேற்று முன்தினம், 7:00க்கு துவங்கி, இரவு, 10:00 மணிக்கு, சிவராத்திரி பூஜைகள் நிறைவு பெற்றன. இன்று சூரிய கிரகணத்தை ஒட்டி, காலை, 7:30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும்.
* ஈஷா அறக்கட்டளை திருப்பூர் மையம் சார்பில், மகா சிவராத்திரி விழா, வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. குருபூஜையை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை, 5:40 மணி முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, மந்திர உச்சாடனை நிகழ்ச்சி நடந்தது; ஏராளமானோர் தியானம் செய்தனர். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரவு, 11:40 முதல், நள்ளிரவு, 12:20 மணி வரை, சந்தியா காலத்தில் மகா மந்திர உச்சாடனம்; "சம்போ "நமசிவாய தியான நிகழ்வில் பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு காலத்தின் போதும், லிங்கத்திருமேனிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, திருமுறை, வேத பாராயணம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. அன்னதான மண்டபத்தில், சிவனடியார்கள் விடிய விடிய சிவபூஜை மேற்கொண்டனர். கோவில் பிரகாரத்தில், திருப்பூர் சாய் கிருஷ்ணா நாட்டியாலயா மாணவியரின், சிவ தாண்டவம் உள்ளிட்ட பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் ராஜஸ்தானி சங்க குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெற்றது. பக்தர்கள் வசதிக்காக, உற்சவ மூர்த்திக்கு திருக்கல்யாண மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்றது. சிவனடியார்கள், பக்தர்கள் எழுப்பிய, "ஓம் நமசிவாய கோஷம், விடிய விடிய கோவில் முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
* அவிநாசி விஸ்வநாதர் கோவில் வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, சிவபுராணம் உள்ளிட்டவை பாராயணம் செய்யப்பட்டன. குரு க்ருபா பக்த ஜனசபா மற்றும் பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை சோளீஸ்வர சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், குட்டகம் மொக்கனீஸ்வரர் கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீச்சுரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும், மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.
* ஈஷா பவுண்டடேஷன் சார்பில், "ஈசனுடன் ஒரு ராத்திரி என்ற தலைப்பில், மகா சிவராத்திரி விழா, அவிநாசி கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த ஈஷா யோக மைய உறுப்பினர்கள், "நமசிவாய மந்திரத்தை பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. - நமது நிருபர் குழு -