உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் தேரோடும் வீதியில் கேமரா

அவிநாசியில் தேரோடும் வீதியில் கேமரா

அவிநாசி: அவிநாசியில் தேரோட்டம் நடக்கும் வீதிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, போலீசார் வலியுறுத்தினர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 12ல் துவங்கி, 23 வரை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது; தாசில்தார் சண்முகம் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலை வகித்தார். போலீசார் பேசுகையில், "தேர் வலம் வரும் நான்கு வீதிகளிலும், பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். தேரோட்டம் நடக்கும் இரண்டு நாளிலும், தேருக்கு முன் அல்லது பின், யாரும் அன்னதானம் வினியோகிக்கக் கூடாது; பொதுவான இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும் என்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், ""பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார ஏற்பாடு, தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். தேரோட்டம், அன்னதானம் முடிந்ததும், நான்கு ரத வீதிகளிலும் உடனுக்குடன் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்படும், என்றார். தேர் ஓடும் வீதிகளில் குறுக்காக உள்ள மின்கம்பிகளை தற்காலிகமாக கழற்றி, மீண்டும் பொருத்தவும், கேபிள் "டிவி நிர்வாகத்தினர், தங்களது கேபிள்களை மாற்றிக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. தேர் ஜன்னை, சக்கரத்துக்கு கட்டை கொடுப்போர், பலகை இழுப்போர் ஆகியோருக்கு "பேட்ஜ் வழங்க முடிவு செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் தற்காலிக தீயணைப்பு நிலையம், மருத்துவமனை அமைக்கப்படுகிறது. கோவில் செயல் அலுவலர் அழகே சன், எஸ்.ஐ., விஜயபாஸ்கர், முன்னாள் அறங்காவலர்கள் ராமசாமி, நடராஜன், மின்வாரிய உதவி பொறியாளர்கள் சிவக்குமார், நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) நவீந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி, சிவாச்சார்யார்கள் சிவக்குமார், திருநாவுக்கரசு, ராயம்பாளை யம், புதுப்பாளையம் ஜன்னை மிராஸ்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !