கோவில் நகைகளை சரிபார்க்க வேறு துறை அதிகாரிகள் நியமனம்?
கோவில் நகைகளை சரிபார்க்க, அறநிலைய துறை அல்லாத, வேறு துறை அதிகாரிகள் குழுவை பணி அமர்த்த வேண்டும் என, தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சுவாமி நகைகளும், சிலைகளும் காணாமல் போவது வாடிக்கையாகி விட்டது. இதற்காக, பல ஆன்மிக அமைப்புகளும், அறநிலைய துறைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இந்நிலையில், கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு, அறநிலைய துறை ஆணையரிடம், ஒரு மனு கொடுத்துள்ளார்.மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவில்களுக்கு சொந்தமான நகைகள், பத்திரமாக உள்ளதா என்பதை கண்டறியும் பொறுப்பு, அறநிலைய துறையின் நகை சரிபார்ப்பு அதிகாரிகளின் பணி. அந்த அதிகாரிகளோ, கோவில் செயல் அலுவலருடன் கூட்டு சேர்ந்து, போலி நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது வழக்கமாகி விட்டது.
இதை கருத்தில் கொண்டு தான், கடந்த காலங்களில், அறங்காவலர்களின் பதவிக் காலம் முடிந்தவுடன், உண்டியல் திறப்பு, தங்க நகைகளை எடுப்பதற்கு பெட்டக சாவிகளில் ஒன்று, வேறு துறையை சேர்ந்த அதிகாரியிடம் வழங்கப்பட்டு, அவருக்கு, இரட்டை பூட்டு அலுவலர் என, பெயரிட்டு அழைத்து வந்தனர்; தற்போது, இந்த நிலை இல்லை. அதற்கு மாறாக, கோவில் செயல் அலுவலர், தக்காராக நியமிக்கப்பட்டு உண்டியலை திறப்பதால், உண்டியல் நகைகளில் பல முறைகேடுகள் ஏற்படுகின்றன. எனவே, நகை சரிபார்ப்பு அதிகாரியாக, அறநிலைய துறையை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நகை சரிபார்ப்பு அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும். கோவில் நகைகளை, ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது சரிபார்க்க வேண்டும்; இதற்கு, ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் வருவாய் துறை, பத்திர பதிவுத்துறை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, ஒருவரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -