பஞ்சவடீ கோவிலில் விநாயகர் சதுர்த்தி
புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் உள்ள மகா கணபதி சன்னதியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 31ம் தேதி துவங்கியது. காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், காலை 9 மணி, மாலை 4 மணிக்கு கணபதி மூலமந்திர ஜபம், ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி மூலமந்திர ஜபம் மற்றும் ஹோமம் செய்து, 10 மணிக்கு சிறப்பு சங்காபிஷேகம், பூர்ணாஹுதி நடந்தது. 11 மணிக்கு சுவாமிக்கு விசேஷ பூஜை செய்து, பிரசாதம் வினியோகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டியினர் செய்திருந்தனர்.