36 ஆண்டுக்கு பின் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்!
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தில், 36 ஆண்டுகளுக்கு பின், அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் தேரோட்டம், வெகுவிமரிசையாக நடந்தது. வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தில், பழமையான அத்தனூரம்மன் கோவில் மட்டுமின்றி மாரியம்மன் மற்றும் அய்யனாரப்பன் கோவில்களும் அமைந்துள்ளது. திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த, 36 ஆண்டுகளாக தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்தவில்லை. இந்நிலையில், கிராம மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த மாதம் 15ம் தேதி, பெருமாள் ஸ்வாமிக்கு அவரை கொட்டை படைத்தும், அத்தனூரம்மனுக்கு பூச்சாட்டியும் தேர்த்திருவிழாவுக்கு காடியேற்றப்பட்டது. நேற்று, கேரள செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கை முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அத்தனூர்பட்டி, புதூர், குமாரசாமியூர், வேட்டைக்காரனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.