உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை இன்று திறப்பு : நான்கு நாள் விருந்துக்கு ஏற்பாடு

சபரிமலை நடை இன்று திறப்பு : நான்கு நாள் விருந்துக்கு ஏற்பாடு

சபரிமலை: ஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். பண்டிகையை ஒட்டி, நாளை முதல் செப்.,11 வரை நான்கு நாட்கள், பக்தர்களுக்கு ஓணம் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பூஜைகள் முடிந்து, செப்.,11 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள, சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காகவும், உற்சவங்களுக்காகவும் நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், வரவுள்ள ஓணம் பண்டிகைக்காக, இன்று மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் இருக்காது. மறுநாள் தந்திரி மற்றும் மேல்சாந்தி சார்பில், ஓணம் விருந்து நிகழ்ச்சி துவங்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள், இன்று மாலையிலேயே துவங்கி விடும். நாளை (செப்.,8) முதல் செப்., 11 வரை தொடர்ந்து, நான்கு நாட்களும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.
இதில், ஓணம் பண்டிகை (திருவோண நட்சத்திரத்தன்று) டாக்டர் மணிகண்டதாசன் சார்பாக விருந்து நடைபெறும். அவர் இந்நிகழ்ச்சியை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தொடர்ந்து, செப்.,10 ல் பெங்களூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது வேண்டுதலாக, ஓண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும். அதையடுத்து, சதய நட்சத்திர நாளில் (செப்.,11) திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் சார்பாக, விருந்து நடைபெற உள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி, தினமும் சகஸ்ர கலசாபிஷேகம், களாபாபிஷேகம், உதயாஸ்தமன மற்றும் படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும், வழக்கமான பூஜைகளும் நடைபெறும். வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, செப்.,11 ல் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை செப்.,16 ல் மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து,செப்., 21 இரவு நடை மீண்டும் அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !