மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
5139 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
5139 days ago
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 1. கூற்றாயின வாறு விலக்ககிலீர்கொடுமைபல செய்தன நான் அறியேன்ஏற்றாய் அடிக் கேஇர வும்பகலும்பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியேகுடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: திருவதிகையில் கெடில நதியின் பக்கத்தில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனே! வினைப் பயனால் பிணியுற்றுத் துன்புறுதல் நியதியாயினும், அத்தகைய வினையானது, யாதென நான் அறியேன். அத்துன்பமானது, எத்தகைய தீர்வுக்கும் இடம் இன்றி என் உடலின்கண் குடரோடு சேர்ந்து வருந்துகின்றது. அப்பிணியானது கூற்றுவனைப் போன்று வருத்துகின்றது. என்னால் தாங்க முடியவில்லை அதனை விலக்காதது ஏனோ! தேவரீரே! என்னைப் பீடித்துள்ள வயிற்று நோயைத் தீர்த்தருள்வீராக. நான் இப்போது உமது திருவடிக்கே ஆளாக்கப்பட்டுத் தேவரீர், என்னை ஏற்றுக் கொண்டுள்ளீர். தேவரீரைப் பகலிலும் இரவிலும் பிரிதல் இல்லாது வணங்குவேன். 2. நெஞ்சம்உமக் கேஇட மாகவைத்தேன்நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம்இது ஒப்பது கண்டறியேன்வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகிவந் தென்னை நலிவதனைநணுகாமல் துரந்து கரந்தும்இடீர்அஞ்சேலும் என்னீர் அதிகைக்கெடிலவீரட்டானத் துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அன்பிற்குரிய நாதனே! என்னுடைய நெஞ்சத்தில் உம்மையே பதித்து உள்ளேன். எல் லா நேரங்களிலும் தேவரீரையே நினைத்து இருந்தேன். தேவரீரை யன்றி வேறு ஒருவரையும் நினையாத என்மீது வந்து பற்றிக் கொண்டு நஞ்சு போன்று அச்சத்தைத் தரும் வயிற்றுப் பிணியை அகலுமாறு செய்வீர். அஞ்சாதே என்று உரைத்து அச்சத்தைப் போக்குவீர். 3. பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்துணிந்தேஉமக்கு ஆட்செய்து வாழலுற்றால்சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றம் வெண்டலைகொண்டுஅணிந்தீர்அடி கேள் அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை : திருவதிகையில் கெடிலநதிக்கரையின் கண் உள்ள வீரட்டானத்தில் உறையும் நாதனே! இறந்தவர்களை எரித்து மேவும் சாம்பலைத் திருமேனியில் பூசும் பெருமானே! தேவரீரைப் பணிந்து போற்றும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் வல்லமை யுடையவரே! பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சையேற்று உழல்பவரே! தேவரீர் எனக்கு ஆட்பட்டேன். இடபவாகனத்தில் மேவும் ஈசனே! சூலை நோய் என்னைச் சுட்டெரிக்கின்றது. அதனை விலக்குவீராக. 4. முன்னம்அடி யேன்அறி யாமையினால்முனிந்துஎன்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடி யேன்உமக்கு ஆளும்பட்டேன்சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னை அடைந் தார்வினை தீர்ப்பதன்றோதலையாயவர்தம் கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே! முன்னர், அறியாமையால் இருந்தேன். அஞ்ஞான்று எனக்குச் சூலை தந்து முனிந்து என்னை நலியுமாறு செய்தீர். இப்போது நான் தேவரீருக்கு ஆட்பட்ட அடிமை, அப்பிணி என்னைச் சுடுகின்றது. தலைவராகிய தேவரீர், அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பதன்றோ செய்யத் தகுத்த செயலாகும். அதனைப் புரிந்தருளும் வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க. 5. காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லிநீத்தாய கயம்புக நூக்கியிடநிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்வயிற்றோடு துடக்கி முடக்கியிடஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: நீர் நிறைந்த திருவதிகைக் கெடிலத்தின் வீரட்டானத் துறையில் மேவும் அம்மானே! நீரின் ஆழத்தில் சிக்கித் தடுமாறிப் பின் மீண்டு எழும் வழித்துறை அறியாது தவிப்பது போன்று நைகின்றேன். நீரில் விழுவதற்கு முன்னர் அறிவுறுத்திய மொழியைக் கேளாது இகழ்ந்தமையால் இவ்வாறு அழிகின்றேன். என்னைக் காத்தருள் புரிவீராக. 6. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்தமிழோடிசை பாடல் மறந்தறியேன்நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்உலந்தார்தலை யில்பலி கொண்டுஉழல்வாய்உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்அலந்தேன் அடியேன் அதிகைக் கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! நல்ல நீர் கொண்டு தேவரீரை அபிடேகம் செய்து, தூய மலர் சாற்றித் தூபம் காட்டி ஏத்தும் பூசை வழிபாட்டினை யார் மறந்ததில்லை; நற்றமிழால் இசைபாடிப் போற்றும் மாண்பினை மறந்ததில்லை; நன்மையை அடைந்த காலத்திலும், தீமை உற்ற காலத்திலும் தேவரீரை மறந்ததில்லை; தேவரீரின் திருநாமத்தை மறந்ததில்லை. கபாலத்தை ஏந்திப் பலி கொண்டு உழல்பவரே! எனது உடம்பில் வாட்டும் சூலை நோயால் நான் கலங்குகின்றேன். அதனைத் தவிர்த் தருள்வீராக. 7. உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்ஒருவர்தலை காவல் இலாமை யினால்வயந்தேஉமக்கு ஆட்செய்து வாழலுற்றால்வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேஎன் வயிற்றின் அகம்படியேபறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திடநான்அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! இவ்வுலகில், எனக்கு, வழி நின்று உணர்த்துபவர் இல்லாத காரணத்தால் மனைவாழ்க்கையும், போகம் தரும் செல்வங்களுமே உயர்வுடையதெனப் பொய்யாகக் கருதி யிருந்தேன். இப்போது அவை உயர்ந்தது அல்ல எனக் கருதி உமக்கு ஆட் செய்து வாழலாம் என்று நினைக்கும் போது, என் வயிற்றில் உள்ள சூலை நோயானது என்னை வாட்டிட நான் அயர்ந்தேன். அந்த நோய் என்னை வலித்திழுக்கின்றது. அதனைத் தவிர்த்தருள் வீராக. 8. வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்சலித்தால் ஒருவர்துணை யாரும்இல்லைச்சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்கலித்தேயென் வயிற்றின் அகம்படியேகலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்னஅலுத்தேன் அடியேன்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் விளங்கும் ஈசனே! பொய்மையும் சூதும் கொண்ட மனத்தின் காரணமாக நன்மையை ஆய்ந்து அறியும் தன்மை இல்லாமையினால், மனை வாழ்க்கையால் வாழும் நெறியினை உலகத்தவரின் பெரும் பேறாக வலிந்து கருதினேன். இப்போது அது பேறு ஆகாது என அறிந்தேன். வெண் குழையைக் காதில் அணிந்து விளங்கும் பெருமானே! என் வயிற்றில் பிணி இருந்து என்னை அயர்விக்கின்றது. அதனை அகற்றுவீராக. 9. பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்புரிபுன்சடை யீர்மெலியும் பிறையீர்துன்பே கவ லைபிணி என்றுஇவற்றைநணுகாமல் துரந்து கரந்தும்இடீர்என்போலிகள் உம்மை இனித் தெளியார்அடியார் படுவது இதுவேயாகில்அன்பே அமையும்அதி கைக்கெடிலவீரட்டானத் துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! பொன் போன்ற ஒளிர்வுடைய திருமேனியுடையவரே! சடை முடியும் பிறைச் சந்திரனும் உடையவரே! எனக்குத் துன்பமும் கவலையும் தரும் பிணியானது நணுகாதவாறு காத்தருள்வீர். அடியவர்கள் துன்புறுவது என ஆயின், அவர்கள் உம்மை நன்கு உணர மாட்டார்கள். எனவே சூலையைத் தீர்த்தருள்வீராக. 10. போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல்புறங்காடு அரங்காநடம் ஆடவல்லாய்ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக்கீழ்அடர்த்திட்டருள் செய்த அது கருதாய்வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்என்வேதனை யான விலக்கியிடாய்ஆர்த்தார்புனல் சூழ் அதிகைக் கெடிலவீரட்டானத் துறை அம்மானே. தெளிவுரை: வீரட்டானத்தில் மேவும் ஈசனே! யானையின் தோலை உரித்துப் போர்த்து விளங்கும் நாதனே! சுடுகாட்டினை அரங்கமாகக் கொண்டு நடனம் புரியும் பெருமானே! இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரித்துப் பின்னர் அருள் செய்த பேற்றினைக் கருது வீராயின், பிணியால் வாடுகின்ற என்னுடைய துன்பத்தையும் தீர்ப்பீர். அன்றோ! இது இராவணனின் இசை கேட்டு அருள் புரிந்த பெற்றியினை உணர்த்தியதாயிற்று. திருநாவுக்கரசர், தமது பிணியை அப் பான்மையில் தீர்த்தருளுமாறு கோருதலும் வேண்டுதலும் ஆயிற்று. திருச்சிற்றம்பலம் 2. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 11. சுண்ணவெண் சந்தனச் சாந்தும்சுடர்திங்கட் சூளா மணியும்வண்ண உரிவை யுடையும்வளரும் பவள நிறமும்அண்ணல் அரண்முரண் ஏறும்அகலம் வளாய அரவும்திண்ணன் கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம்அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், நறுமணம் கமழும் திருவெண்ணீற்றைக் குழையப் பூசுபவர்; ஒளிதரும் சந்திரனும், சூடாமணியும், அணிபவர்; அழகிய தோலை ஆடையாக உடையவர்; ஒளிவளரும் பவள வண்ணத் திருமேனியுடையவர்; அறத்தினை அரணாகக் கொண்டு விளங்கும் இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; அகன்று மேவும் படத்தையுடைய அரவத்தை ஆபரணமாக உடையவர். அப்பெருமான் நல்ல கெடில நதியில் மேவும் தீர்த்தமும் உடையவர். அத்தகைய சிறப்புடைய இறைவனுக்கு யாம் அடியவர் ஆகினோம். அதனால் யாம் அஞ்சுமாறு, உலகில் ஒரு பொருளும் இல்லை. எம்மை அஞ்சுமாறு செய்ய வருவதும் யாதும் இல்லை. 12. பூண்டதோர் கேழல் எயிறும்பொன்திகழ் ஆமை புரளநீம்டதிண் தோள்வலம் சூழ்ந்துநிலாக்கதிர் போலவெண் ணூலும்காண்தகு புள்ளின் சிறகும்கலந்தகட் டங்கங் கொடியும்ஈண்டு கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், பன்றியின் கொம்பினை அணிந்தவர்; அழகிய ஆமையோட்டினைப் பொருந்தித் தவழுமாறு வைத்தவர்; நீண்டு உறுதியுடன் மேவும் தோளில் குளிர்ந்து மேவும் நிலவின் ஒளிக் கதிர் போன்று முப்புரிநூல் விளங்கப் பெற்றவர்; கொக்கிறகு சூடியவர், மழுப்படையுடையவர், இடபக் கொடியுடையவர். அப்பெருமான் கெடில நதியைத் தீர்த்தமாகக் கொண்டு வீரட்டானத்தில் திகழ்பவர். அவருடைய அடியவர் யாம். எனவே, யாம் அஞ்சுவதற்குண்டான பொருள் எதுவும் இல்லை. எம்மை அஞ்சச் செய்யுமாறு வரக்கூடியதும் எதுவும் இல்லை. 13. ஒத்த வடத்திள நாகம்உருத்திர பட்டம் இரண்டும்முத்து வடக்கண் டிகையும்முளைத்தெழு மூவிலை வேலும்சித்த வடமும் அதிகைச்சேணுயர் வீரட்டம் சூழ்ந்துதத்தும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், நாகத்தை ஆரமாக உடையவர்; உருத்திரபட்டம் என்னும் தோளணியை உடையவர்; அம்பிகைக்குரிய இடப்பாகத்தில் முத்தும், வலப் பாகத்தில் உருத்திராக்கமும் மாலையாக உடையவர்; சூலப்படை யுடையவர். அப்பெருமான், சித்தவடம் என்னும் சைவத் திருமடம் சூழ, அதிகையில் விளங்கும் வீரட்டத்தின் அருகில் விளங்கும் கெடில நதியை உடையவர். அத்தகைய ஒப்பற்றவராகிய வீரட்டநாதருக்கு நாம் அடியவர். ஆதலால், யாம் அஞ்சுவதும் இல்லை. எம்பால் அச்சம் தருமாறு வருவதும் யாதும் இல்லை. 14. மடமான் மறிபொற் கலையும்மழுப்பாம்பு ஒருகையில் வீணைகுடமால் வரையதிண் தோளும்குனிசிலைக் கூத்தின் பயில்வும்இடமால் தழுவிய பாகம்இருநிலன் ஏற்ற சுவடும்தடமார் கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், இளமையான மான்கன்றையும் மழுவையும் கையில் ஏந்தியிருப்பவர்; பாம்பினைக் கரத்தில் அணிந்திருப்பவர்; ஒருகையில் வீணை ஏந்தியவர்; மலை போன்ற தோளையுடையவர்; மேருவை வில்லாகக் கொண்டு திருவிளையாடல் செய்தவர்; அர்த்தநாரியாய்த் திகழ்ந்து, சங்கர நாராயணனாகக் காட்சி நல்குபவர். அத்தகைய ஈசன், கெடில நதியைத் தீர்த்தமாக உடையவர். அப்பெருமானுக்கு அடியவராகிய விளங்குபவர் யாம். எனவே, யாம் அஞ்சுமாறு உள்ளது ஒன்றும் இல்லை. யாம் அஞ்சுமாறு வருவதும் ஏதும் இல்லை. 15. பலபல காமத்த ராகிப்பதைத்தெழு வார் மனத்துள்ளேகலமலக் கிட்டுத் திரியும்கணபதி என்னும் களிரும்வலமேந்து இரண்டு சுடரும்வான்கயி லாய மலையும்நலமார் கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: பற்பல விருப்பத்தை உடையவர்கள் தங்கள் மனத்தில் தோன்றுவனவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மையில், கணபதிக் கடவுளை எண்ணி வணங்க, அவர், தமது பக்தர்களின் மலத் தொகுதியை நீக்கி அவர்கள் விரும்புவனவற்றையும் தந்தருளுகின்றார். ஈசன், அத்தகைய கணபதிக் கடவுளைக் குமாரராக உடையவர்; ஒளி திகழும் சூரியன், சந்திரன், ஆகிய இரு சுடர்களையும் கண்ணாக உடையவர்; பெருமை மிகுந்த திருக்கயிலாய மலையில் விளங்குபவர்; அனைத்து நலன்களையும் நல்குகின்ற கெடில நற்புனலைத் தீர்த்தமாக உடையவர். அப்படிப்பட்ட ஒப்பற்றவராய் மேவும் சிவபெருமானாகிய வீரட்டே சுவருக்கு யாம் அடியவர் ஆயினோம். எனவே, யாம் கண்டு அஞ்சுமாறு உலகில் எந்தப் பொருளும் இல்லை. எமக்கு அச்சத்தை விளைவிக்குமாறு செய்யும் பொருளும் இல்லை. 16. கரந்தன கொள்ளி விளக்கும்கரங்கு துடியின் முழக்கும்பரந்த பதினெண் கணமும்பயின்றறி யாதன பாட்டும்அரங்கிடை நூலறி வாளர்அறியப் படாததொர் கூத்தும்நிரந்த கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: சிவபெருமான், மெல்லிய விளக்கொளியாகிய இரவில், முழவின் ஒலி திகழவும் பதினெட்டு வகையான பூதகணங்கள் சூழவும் பாடல்களை இசைத்துத் திருகூத்துப் புரிபவர். அப்பெருமான், கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் ஒப்பற்றவராகிய வீரட்டநாதர் ஆவார். அவருடைய தமர் நாம், எனவே எத்தன்மையிலும் யாம் அஞ்சுவதற்கு யாதொரு நிலையும் இல்லை. எம்மை அஞ்சுமாறு செய்ய வல்லதும் எதுவும் இல்லை. 17. கொலைவரி வேங்கை யதளும்குவவோடு இலங்குபொன் தோடும்விலைபெறு சங்கக் குழையும்விலையில் கபாலக் கலனும்மலைமகள் கைக்கொண்ட மார்பும்மணியார்ந்து இலங்கு மிடறும்உலவு கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: சிவபெருமான், கொலைத் தன்மையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; திரட்சியும் பெருமையும் உடைய தோள்களை உடையவர். காதில் தோடும் குழையும் அழகுடன் மேவி விளங்குபவர்; மதிப்பின் மிக்க பிரம கபாலத்தைப் பலியேற்கும் பாத்திரமாகக் கொண்டிருப்பவர்; உமாதேவியைத் திருமார்பில் ஒருபாகமாக வைத்திருப்பவர்; அழகுடன் ஒளிரும் நீல வண்ணமிடற்றை யுடையவர். அப்பெருமான் கெடில நதியைத் தீர்த்தமாகக் கொண்டு விளங்கும் வீரட்டநாதர். யாம் அவருடைய அடியவர். எனவே, யாம் எதற்கும் அஞ்சுவது இல்லை, எம்மை அஞ்சுமாறு செய்ய வல்லவதும் எதுவும் இல்லை. 18. ஆடல் புரிந்த நிலையும்அரையில் அசைத்த அரவும்பாடல் பயின்றபல் பூதம்பல்லா யிரங்கொள் கருவிநாடற்கு அரியதொர் கூத்தும்நன்குயர் வீரட்டம் சூழ்ந்துஓடும் கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், அழகு மிளிரத் திருநடனம் புரிந்து மேவும் நிலையில், அரவத்தை அரையில் கட்டிப் பலவகையான பூதகணங்கள் பாடலை இசைக்க விளங்குபவர். அப்பெருமானுடைய திருக்கூத்துக்கு ஆயிரக்கணக்கான வாத்தியங்களாலும் ஈடுகொடுக்க முடியாது. அத்தகைய கலை நுட்பமும் பேராற்றலும் உடைய அப்பரமன், கெடில நதிக்கரையில் உள்ள வீரட்டாத்தனத்தில் திகழ்பவர். அவ் இறைவனுக்கு, நாம் அடியவர் ஆயினோம். எனவே நாம் அஞ்சுமாறு எப்பொரும் இல்லை. எம்மை அஞ்சுமாறு செய்ய வல்லதும் ஏதும் இல்லை. 19. சூழும் அரவத் துகிலும்துகில்கிழி கோவணக் கீளும்யாழின் மொழியவள் அஞ்சஅஞ்சாது அருவரை போன்றவேழம் உரித்த நிலையும்விரிபொழில் வீரட்டம் சூழ்ந்துதாழும் கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: ஈசன், அரவத்தைத் துகிலாக உடையவர்; கோவணத்தைக் கீழுடையாகக் கொண்டு விளங்குபவர்; உமாதேவியும் வெருவி அஞ்சுமாறு யானையை அடர்த்து அழித்து, அதன் தோலை உரித்தவர். அப்பெருமான், கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். அக் கடவுளுக்கு யாம் அடியவர். எனவே நாம், அஞ்சுவது இல்லை; நமக்கு அச்சம் தரச் செய்வதும் ஏதும் இல்லை. 20. நரம்பெழு கைகள் பிடித்துநங்கை நடுங்க மலையைஉரங்களெல் லாம்கொண்டு எடுத்தான்ஒன்பதும் ஒன்றும் அலறவரங்கள் கொடுத்தருள் செய்வான்வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்துநிரம்பு கெடிலப் புனலும்உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை. தெளிவுரை: தனது வலிமையெல்லாம் திரட்டிப் பத்துத் தலைகளை உடைய இராவணன், கயிலை மலையை எடுக்க, அவனை அலறி அழுமாறு அடர்த்துப் பின்னர் வரங்கள் கொடுத்தருள் புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் கெடில நதியைத் தீர்த்தமாகக் கொண்ட வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். ஒப்பற்றவராகிய அவருக்கு அடியவர் ஆனமையால், யாம் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. எம்மை அஞ்சுமாறு செய்வதும் ஏதும் இல்லை. திருச்சிற்றம்பலம் 3. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 21. மாதர்ப் பிறைக் கண்ணி யானைமலையான் மகளொடும் பாடிப்போதொடு நீர்சுமந்து ஏத்திப்புகுவார் அவர்பின் புகுவேன்யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போதுகாதல் மடப்பிடி யோடும்களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: சிவபெருமான், அழகிய பிறைச்சந்திரனைத் தரித்திருப்பவர்; மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானைப் பூசிப்பதற்கு நன்னீரும், அருச்சிப்பதற்குப் பூக்களும் ஏந்திக் கொண்டு, புகழ்ப் பாக்களைப் பாடிச் செல்லும் அடியவர்கள் பின்னால் யானும் புகுவேன். உடல் தேய்ந்து, ஊர்ந்தும், புரண்டும் நைந்து செல்லுங்காலை, பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் சுவடு படாமல் எழுகின்ற பெரும் பேற்றை அடையும் போது, பிடியும் களிறும் போன்று, அம்பிகையுடன் விளங்கும் ஈசனைக் கண்டேன். அப்பெருமாளின் திருப்பாதங்கள் காண்பதற்கு இயலாதனவாகும். அதனை யான் காணும் பேற்றினை யுற்றேன். 22. போழிளங் கண்ணியி னானைப்பூந்துகி லாளொடும் பாடிவாழியம் போற்றிஎன் றேத்திவட்டமிட்டு ஆடா வருவேன்ஆழிவலவன் நின்று ஏத்தும்ஐயாறு அடைகின்ற போதுகோழிபெடை யொடும் கூடிக்குளிர்ந்து வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: ஈசன், பிறைச்சந்திரனை அணிந்துள்ளவர்; உமாதேவியுடன் விளங்குபவர். அப்பெருமானை, வாழ்க என ஏத்தி மகிழ்ச்சியுடன் கைத்தாளம் தட்டி வட்டம் சுற்றி ஆடி எல்லாரும் வரும் போது, திருவையாற்றை நான் அடைந்து அவ்வாறே சென்றேன். ஆங்கு, சேவல் பெடையுடன் திகழும் தன்மையில் ஈசன் அம்பிகையுடன் குலவி விளங்குதலைக் கண்டேன். காணற்கு அரிய அவர் திருப்பாதத்தைக் கண்டேன். 23. எரிப்பிறைக் கண்ணியி னானைஏந்திழை யாளொடும் பாடிமுரித்த இலயங்கள் இட்டுமுகமலர்ந்து ஆடா வருவேன்அரித்தொழு கும்வெள் ளருவிஐயாறு அடைகின்ற போதுவரிக்குயில் பேடையொடு ஆடிவைகி வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: ஈசன், ஒளி திகழும் பிறைச் சந்திரனைத் தரிசித்து உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானைத் தரிசிக்கும் அடியவர்கள் முகமலர்ச்சியுடன் செல்கின்ற போது, தூய நீர் விளங்கும் ஐயாற்றை அடைந்து நானும் மகிழ்ந்து ஆடிச் சென்றேன். ஆங்கு, குயிலானது தனது பெடையுடன் விளங்குவதைப் போன்று தேவியுடன் விளங்கும் ஈசனைக் கண்டேன். காண்பதற்கு ஒண்ணாத ஈசனின் திருப்பாதத்தைக் கண்டேன். 24. பிறையிளம் கண்ணியி னானைப்பெய்வளை யாளொடும் பாடித்துறையிளம் பன்மலர் தூவித்தோளைக் குளிரத் தொழுவேன்அறையிளம் பூங்குயி லாலும்ஐயாறு அடைகின்ற போதுசிறையிளம் பேடையொடு ஆடிச்சேவல் வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: ஈசன், பிறைச் சந்திரனைச் சூடி, உமாதேவியாரோடு வீற்றிருப்பவர். இனிய பூங்குயில் பாடுகின்ற ஐயாற்றினை அடைகின்ற போது, பல மலர்களைப் பறித்து அடியவர் பெருமக்கள் தூவிப் போற்றும் தன்மை போன்று நானும் மலர் தூவி மகிழ்ந்து தொழுவேன். அப்போது பேடையொடு வருதலைப் போன்று ஈசனும் தேவியும் விளங்குதலைக் கண்டேன். காணற்கு இயலாத அப்பெருமானின் திருப்பாதத்தை நான் கண்டேன். 25. ஏடுமதிக் கண்ணி யானைஏந்திழை யாளொடும் பாடிக்காடொடு நாடு மலையும்கைதொழுது ஆடா வருவேன்ஆடல் அமர்ந்துறை கின்றஐயாறு அடைகின்ற போதுபேடை மயிலொடும் கூடிப்பிணைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: பிறைச்சந்திரனைத் தரித்துள்ள சிவபெருமான்; உமாதேவியுடன் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் கண்டு தரிசிக்கும் தன்மையில் காடு, நாடு, மலை முதலான யாவும் கடந்து பாடிச் செல்கின்ற போது ஐயாறு என்னும் திருத்தலத்தை அடைந்தேன். ஆங்கு அப்பெருமான், தேவியோடு இருக்கும் காட்சியானது, மயில் தன் பேடையொடு சேர்ந்து இருக்கும் தன்மையுடையதெனக் கண்டேன். காணக்கிடைக்காத அவ்விறைவனுடைய திருப்பாதத்தை யான் கண்டேன். 26. தண்மதிக் கண்ணியி னானைத்தையல்நல் லாளொடும் பாடிஉண்மெலி சிந்தைய னாகிஉணரா உருகா வருவேன்அண்ணல் அமர்ந்துறை கின்றஐயாறு அடைகின்ற போது வண்ணப் பகன்றிலொடு ஆடிவைகி வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தரித்துள்ள ஈசன், தையல் நல்லாளாகிய உமாதேவியோடு விளங்குபவர். நான் உள்ளத்தில் அப்பெருமானைத் தியானம் செய்தவாறு ஐயாற்றை அடைகின்ற போது, வண்ணம் மிக உடைய பிரிதல் கொள்ளாத அன்றில் பறவை வரக் கண்டேன். அவ்விறைவனுடைய திருவடியானது யாராலும் காண்பதற்கு அரியது. அத்திருப்பாதத்தை யான் கண்டேன். 27. கடிமதிக் கண்ணியி னானைக்காரிகை யாளொடும் பாடிவடிவொடு வண்ணம் இரண்டும்வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்அடியிணை ஆர்க்கும் கழலான்ஐயாறு அடைகின்ற போதுஇடிகுரல் அன்னதோர் ஏனம்இசைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: நல்லொளியுடன் விளங்கும் பிறைச்சந்திரனைத் தரித்துள்ள சிவபெருமான், உமாதேவியோடு விளங்குபவர். அப்பெருமானது தோற்றப் பொலிவுடன் அருளாற்றலையும் இசைத்துப் போற்றி வாயினால் பாடிச் சென்று ஐயாறு அடைகின்ற போது, இடிகுரல் போன்று முழங்கும் ஏனம் தன் துணையுடன் வருதலைக் கண்டேன். அப்பெருமானுடைய திருப்பாதமானது, காணுதற்கு அரியது. நான் அதனைக் கண்டேன். 28. விரும்பு மதிக்கண்ணி யானைமெல்லிய லாளொடும் பாடிப்பெரும்புலர் காலை எழுந்துபெறுமலர் கொய்யா வருவேன்அருங்கலம் பொன்மணி யுந்தும்ஐயாறு அடைகின்ற போதுகருங்கலை பேடையொடு ஆடிக்கலந்து வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: யாவரும் விரும்பி ஏத்தும் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். பொழுது புலர்வதன் முன்னால் மலர்களைக் கொய்து பெருமானுக்கு அருச்சிக்கும் எழிலில் நான் ஐயாற்றை அடைகின்ற போது, ஆண்மான் தன் துணையோடு விளங்குதல் போன்ற ஈசனின் திருக்கோலத்தைக் கண்டேன். காணுதற்கு அரிய அப்பெருமாளின் திருப்பாதத்தைக் கண்டேன். 29. முற்பிறைக் கண்ணியி னானைமொய்குழ லாளொடும் பாடிப்பற்றிக் கயிற்றுக் கில்லேன்பாடியும் ஆடா வருவேன்அற்றருள் பெற்றுநின் றாரோடுஐயாறு அடைகின்ற போதுநற்றுணைப் பேடையொடு ஆடிநாரை வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: இளம் பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமான் உமாதேவியோடு விளங்குபவர். அப்பெருமானைப் போற்றிப் பாடிப் பந்தபாசம் முதலான இவ்வுலகத் தொடர்பினை அறுத்து நீக்கும் மாண்பில் ஆடியும் பாடியும், அருள் பெற்ற பழ அடியார் திருக்கூட்டத்தினருடன் ஐயாறு அடைகின்ற போது, நாரை தனது துணையாகிய பேடையொடு விளங்கும் செம்மையில் ஈசனைக் கண்டேன். கண்டறியாத அப்பெருமானுடைய திருப்பாதத்தைக் கண்டேன். 30. திங்கள் மதிக் கண்ணி யானைத்தேமொழி யாளொடும் பாடிஎங்கருள் நல்கும்கொல் எந்தைஎனக்கினி என்னா வருவேன் அங்கிள மங்கையர் ஆடும்ஐயாறு அடைகின்ற போதுபைங்கிளி பேடையொடு ஆடிப்பறந்து வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: குளிர்ச்சியான சந்திரனைச் சூடிய சிவபெருமான், உமாதேவியோடு வீற்றிருக்கும் பரமன். அப்பெருமான் எவ்விடத்தில் இருந்து எனக்கு அருள்புரிவாரோ எனப் பேராவல் கொண்டு, தலங்கள் தோறும் தரிசித்து, ஐயாறு என்னும் திருத்தலத்தை அடைகின்ற போது, பைங்கிளியானது தனது பேடையுடன் விளங்கும் இனிமை போன்று இறைவன் தேவியோடு விளங்குதலைக் கண்டேன். காண்பதற்கு அரியதாகிய அப்பரமனின் திருப்பாதத்தை யான், கண்டேன். 31. வளர்மதிக் கண்ணியி னானைவார்குழ லாளொடும் பாடிக்களவு படாததொர் காலம்காண்பான் கடைக்கண்நிற் கின்றேன்அளவு படாததொர் அன்போடுஐயாறு அடைகின்ற போதுஇளமண நாகு தழுவிஏறுவருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம்கண்டறி யாதன கண்டேன் தெளிவுரை: சிவபெருமான், வளரும் பிறைச் சந்திரனைச் சூடி, உமாதேவியை உடனாகக் கொண்டு திகழ்பவர். அப்பெருமானைக் கண்டு தொழ வேண்டும் என்னும் வேட்கையில் பல காலம் பாடிப் போற்றித் தோற்றம் பெறாத நிலையில், பேரன்போடு ஐயாறு என்னும் தலத்தை அடைகின்ற போது, எருதானது தன் துணையோடு பொருந்த விளங்கும் தன்மையில், ஈசன், தேவியுடன் விளங்கக் கண்டேன். அப்பெருமானுடைய, காணுதற்கரிய திருப்பாதத்தைக் கண்டேன். திருச்சிற்றம்பலம் 4. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 32. பாடிளம் பூதத்தி னானும்பவளச் செவ் வாய்வண்ணத் தானும்கூடிள மென்முலை யாளைக்கூடிய கோலத்தி னானும்ஓடிள வெண்பிறை யானும்ஒளிதிகழ் சூலத்தி னானும்ஆடிளம் பாம்பசைத் தானும்ஆரூர் அமர்ந்தஅம் மானே. தெளிவுரை: சிவபெருமான், பண்ணிசைத்துப் பாடும் பூதகணங்களை உடையவர்; பவளம் போன்ற சிவந்த திருவாய் உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் அழகுடையவர்; வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடியவர்; ஒளிதிகழும் சூலப்படையுடையவர்; ஆடுகின்ற பாம்பை அரையில் கட்டி விளங்குபவர். அவர் திரு ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரேயாவார். 33. நரியைக் குதிரைசெய் வானும்நரகரைத் தேவு செய்வானும்விரதங்கொண் டாடவல் லானும்விச்சின்றி நாறுசெய் வானும்முரசதிர்ந் தானைமுன் னோடமுன்பணிந்து அன்பர்கள் ஏத்தஅரவரைச் சாத்திநின் றானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், நரியைக் குதிரையாகச் செய்பவர்; மிகையான பாவகாரியாங்களால் நரகிடை உழல்பவர்களைத் தேவர்களாக்குபவர்; மெய்வருத்தித் தியானித்தும், பூசித்தும் வணங்கி, விரதம் மேற்கொள்ளும் அடியவர்களை விரும்புபவர்; விதை போன்ற மூலப் பொருள் ஏதும் இன்றி மணம் கமழும் செயலைத் தருவிப்பவர். அப்பெருமான், முரசு இயம்பவும் அன்பர்கள் ஏத்தித் துதிக்க அரவத்தை அரையில் கட்டி மேவும் வீதி விடங்கராய் ஆரூரில் விளங்குபவர் ஆவார். 34. நீறுமெய் பூசவல் லானும்நினைப்பவர் நெஞ்சத்து ளானும்ஏறுகந்து ஏறவல் லானும்எரிபுரை மேனியி னானும்நாறு கரந்தையி னானும்நான்மறைக் கண்டத்தி னானும்ஆறு சடைக்கரந் தானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், திருநீற்றினைத் திருமேனியில் குழையப் பூசியவர்; தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களின் நெஞ்சங்களில் விளங்குபவர்; இடப வாகனத்தின் மீது உகந்து ஏறுபவர்; எரியும் நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; நறுமணம் கமழும் சிவகரந்தை என்னும் பத்திரத்தை தரித்துள்ளவர்; நான்கு வேதங்களை விரித்து ஓதுபவர்; கங்கையைச் சடை முடியில் ஏற்றவர். அவர், ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே யாவர். 35. கொம்புநல் வேனி லவனைக்குழைய முறுவல்செய் தானும்செம்புனல் கொண்டுஎயில் மூன்றும்தீயெழக் கண்சிவந் தானும்வம்புநற் கொன்றையி னானும்வாட்கண்ணி வாட்டமது எய்தஅம்பர் ஈருரி யானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: ஈசன், மன்மதனை எரித்தவர்; முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; மணம் வீசும் கொன்றை மாலை தரித்தவர்; உமாதேவியார் அயற்சி யடையுமாறு புலித் தோலை ஆடையாகக் கொண்டு மேவுபவர். அவர், ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே ஆவார். 36. ஊழி அளக்கவல் லானும்உகப்பவர் உச்சியுள் ளானும்தாழிளம் செஞ்சடை யானும்தண்ணமர் திண்கொடி யானும்தோழியர் தூதிடை யாடத்தொழுதடி யார்கள் வணங்கஆழி வளைக்கையி னானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: ஈசன், ஊழிக்காலத்தின் தலைவனாய் இருந்து காண்பவர்; தன்னை, மகிழ்ந்து ஏத்தும் அடியவர்களுக்குத் தலையாயவராய் நின்று அருள்புரிபவர்; விரிந்து நீண்ட சிவந்த சடைமுடியுடையவர். தியாகக் கொடியுடையவர். அப்பெருமான், அடியவர்கள் வணங்கவும், தோழியர் தூதுக் குறிப்பினை நவிலவும் கையை வளைத்து ஆடும் தியாகேசராய் ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே ஆவார். 37. ஊர்திரை வேலையுள் ளானும்உலகிறந்த ஒண்பொரு ளானும்சீர்திரு பாடலுள் ளானும்செங்கண் விடைக்கொடி யானும்வார்தரு பூங்குழ லாளைமருவி யுடன்வைத் தவனும்ஆர்திரை நாளுகந் தானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், பாற்கடலில் பள்ளி கொண்டு மேவும் திருமாலாய் விளங்குபவர்; உலகம் யாவையும் கடந்து மேவும் ஒப்பற்ற விழுப்பொருளாய்த் திகழ்பவர்; ஈசனைப் போற்றும் புகழ்ப் பாடலுள் ஒளிர்பவர்; இடபக் கொடி யுடையவர்; உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், திருவாதிரை என்னும் நாளுக்கு உரியவராகி மகிழ்ந்து, ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே ஆவார். 38. தொழற்கு அங்கை துன்னிநின் றார்க்குத்தோன்றி அருளவல் லானும்கழற்கு அங்கை பன்மலர் கொண்டுகாதல் கனற்றநின் றானும்குழற்கங்கை யாளையுள் வைத்துக்கோலச் சடைக்கரந் தானும்அழற்கு அங்கை ஏந்தவல் லானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், அழகிய கரங்களைக் கூப்பித் தொழுகின்ற அடியவர்களுக்கு அருள்புரிபவர்; தனது திருவடிக்கு மலர் தூவிப் போற்றுகின்ற அன்பர்களின் உள்ளத்தில் அன்பு பெருக நின்று விளங்குபவர்; கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; அழகிய திருக்கரத்தில் நெருப்பை ஏந்தியவர். அப்பெருமான், ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே யாவார். 39. ஆயிரம் தாமரை போலும்ஆயிரம் சேவடி யானும்ஆயிரம் பொன்வரை போலும்ஆயிரம் தோளுடை யானும்ஆயிரம் ஞாயிறு போலும்ஆயிரம் நீள்முடி யானும்ஆயிரம் பேருகந் தானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: ஈசன், தாமரை போன்ற திருவடியுடையவர்; பொன் போன்று ஒளிரும் தோளழகு உடையவர்; ஒளி திகழும் சிவந்த சடை முடியுடையவர். அப்பெருமான், ஆயிரம் திருநாமங்களை உடையவராகி ஆரூரில் வீற்றிருக்கும் அன்பிற்குரிய தலைவரே யாவார். 40. வீடரங் காநிறுப் பானும்விசும்பினை வேதி தொடரஓடரங் காகவைத் தானும்ஓங்கியொர் ஊழியுள் ளானும்காடரங் காமகிழ்ந் தானும்காரிகை யார்கள் மனத்துள்ஆடரங் கத்திடை யானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், பக்குவப்பட்ட நல்ல ஆன்மாக்களுக்கு முத்திப் பேறு அளிப்பவர்; பிரமன் அன்னப் பறவையாக வடிவு கொண்டு வானில் தேடுமாறு செய்தவர்; பிரம கபாலம் ஏந்தி இருப்பவர்; ஊழிக்காலந் தோறும் நிலை பெற்றிருப்பவர்; மயானத்தை அரங்காகக் கொண்டு நடனம் புரிபவர்; தாருகவனத்தில் மேவும் மங்கையர்தம் உள்ளத்தைக் கவர்ந்தவர். அப்பெருமான், ஆரூரில் வீற்றிருக்கின்ற அன்பிற்குரிய தலைவரே யாவார். 41. பையம் சுடர்விடு நாகப்பள்ளிகொள்வான் உள்ளத் தானும்கையஞ்சு நான்குடை யானைக்கால்விர லால்அடர்த் தானும்பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்ஐயஞ்சின் அப்புறத் தானும்ஆரூர் அமர்ந்த அம்மானே. தெளிவுரை: சிவபெருமான், திருமாலின் உள்ளத்தில் விளங்குபவர்; இருபது கரம் உடைய இராவணனைத் திருப்பாத விரலால் அடர்த்தியவர்; பொய்யை விட்டு மெய்ந் நெறியைப் பேசும் அடியவர்களுக்கு அருள் புரிபவர். அப்பெருமான், இருபத்தைந்து தத்துவங்களையும் கடந்து நிற்பவராகி, ஆரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவரே ஆவார். திருச்சிற்றம்பலம் 5. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 42. மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தமேனியான் தாள்தொ ழாதேஉய்யலாம் என்றெண்ணி உறிதூக்கிஉழிதந்தென் உள்ளம் விட்டுக்கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவமயில்ஆலும் ஆரூ ரரைக்கையினால் தொழாதுஒழிந்து கனியிருக்கக்காய்கவர்ந்த கள்வ னேனே. தெளிவுரை: நெஞ்சமே! திருவெண்ணீற்றைக் குழையப் பூசிய திருமேனியராகிய சிவபெருமானுடைய திருவடியைப் பணிந்து தொழாது, பிற நெறியில் சார்ந்தனையே! மலர்ச் சோலையில் குயில் கூவ, மயில் நடனம் புரியும் ஆரூரின் கண் மேவும் பெருமானைக் கைகூப்பித் தொழுது போற்றாது, நன்மை யெல்லாம் இழந்தனையே! கனியிருக்கக் காயைக் கவர்ந்தகள்வனைப் போல் ஆயினையே! 43. என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டுஎன்னையோர் உருவம் ஆக்கிஇன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டுஎன்னுள்ளம் கோயில் ஆக்கிஅன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டுஅருள்செய்த ஆரூ ரர்தம்முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்காக்கைப்பின் போன வாறே. தெளிவுரை: இந்த உயிரானது, ஒரு தேகத்தைக் கொள்ளும் தன்மையில் எலும்பு, நரம்பு, தோல் முதலானவையால் உருவம் பெற்று, இந்த உலகில் நிலவுவதாயிற்று. பின்னர், இன்பத்தை நல்கி, வினை தீர்த்து, உள்ளமே கோயிலாக விளங்க வீற்றிருக்கின்ற ஆரூர்க் கடவுள், அன்பினைச் சொரிந்து ஆட்கொண்டவராய் இருக்கின்றார். அப்பெருமாளின் திருமுன்னர் வீற்றிருந்து ஏத்தும் செயலைப் புரியாது, நெஞ்சமே! பயனற்ற செயலிலும், துன்பத்தைத் தரும் நிலையிலும் இருக்கலாமா! இது முயல் விட்டுக் காக்கையைப் பின் தொடர்வதைப் போல் ஆகும் அல்லவா! 44. பெருகுவித்து என்பாவத்தைப் பண்டெலாம்குண்டர்கள்தம் சொல்லே கேட்டுஉருகுவித்துஎன் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கிஅருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டுபிணிதீர்த்த ஆரூரர்தம்அருகிருக்கும் விதியின்றி அறம்இருக்கமறம்விலைக்குக் கொண்ட வாறே. தெளிவுரை: பாவம் பெருகச் சமண் சொற்களையே கேட்டு, என் உள்ளத்தில் இயல்பாக விளங்கும் சிவ உணர்வை ஒதுக்கித் தள்ளிய காலத்தில் ஈசன் எனக்குப் பிணி காட்டித் தீர்த்தருளியவர். அவர் ஆரூரில் மேவும் ஈசன். அத்தகைய பெருமானின் திருவடியை அடைந்து அறநெறியில் திகழ்வதற்கு மாறாக மறநெறியில் காலத்தைப் போக்கினேனே! 45. குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்நகைநாணாது உழிதர் வேனைப்பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில்தெளித்துத்தன் பாதம்காட்டித்தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல்அருள்செய்யும் ஆரூரரைப்பண்டெலாம் அறியாதே பனிநீரால்பாவைசெயப் பாவித் தேனே. தெளிவுரை: முன்னர் நான் சமண நெறியில் இருந்தேன். என்னைப் பார்த்துப் பலரும் ஏளனமாக நகை செய்த காலத்தில், நாணம் கொள்ளாது திரிந்தேன். அத்தகைய என்னைப் பயனுள்ள பொருளாகச் செய்து, என் தலையில் பால் முதலியன கொண்டு தெளித்துத் தூய்மைப்படுத்தித் திருவடியைக் காட்டி அருள் புரிந்து திருத்தொண்டர்களின் இசையில் நனைந்து மலர வைத்தவர், ஆரூரில் வீற்றிருக்கும் பெருமான். இத்தகைய அருள் சொரியும் அப் பெருமானுடைய பெருமையை அறியாது வீணாகக் காலத்தைப் போக்கினேனே! பனி நீரால் பதுமை செய்தால் எவ்வாறு தோற்றம் அமையாதோ, அவ்வாறு அறியாமையும் பயனற்ற தன்மையும் கொண்டு வீணுக்குத் திரிந்தேனே! 46. துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டுஎன்னாகத் திரிதந்து ஈங்கு இருகையேற்றுஇடஉண்ட ஏழையே னான்பொன்னாகத்து அடியேனைப் புகப்பெய்துபொருட் படுத்த ஆரூரரைஎன்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்குஆதனாய் அகப்பட் டேனே. தெளிவுரை: கொடிய நாகத்தைப் போன்று தீயவனாகித் தீய குணத்தவருடைய சொற்களை மதித்து என்னை இழிவாக்கித் திரிந்து இரு கையாலும் உணவை ஏற்று உண்டு காலத்தைப் போக்கிய அடியவனை, பொன் போன்ற மேனியுடையவனாக்கியவர் ஆரூர்க் கடவுள். அத்தகைய பரமனை நான் நெஞ்சத்தில் இருத்தி ஏத்தாது, இழிந்தவனாகக் காலத்தைக் கழித்தனனே! குற்றம் புரியும் ஒருவனுக்கு இழந்த தன்மை யுடையவன் அகப்பட்டதைப் போன்று நான் இழிந்தவனானேனே! 47. பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொருதலையோடே திரிதர்வேனைஒப்போட ஓதவித்துஎன் உள்ளத்தின்உள்ளிருந்துஅங்கு உறுதிகாட்டிஅப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்குஆரமுதாம் ஆரூரரைஎப்போதும் நினையாதே இருட்டறையின் மலடு கறந்து எய்த்த வாறே. தெளிவுரை: பயனற்ற சொற்கள் பல கூறி சமண நெறியைச் சார்ந்து திரிந்த போது, தனது அடியவர்களுக்கு இணையாக மெய்ப் பொருளை ஓதுவித்து என் உள்ளத்தின் உள்நின்று சைவத்தின் உறுதியைக் காட்டி, எப்போதும் ஆரமுதமாய்த் திகழும் ஆரூரரை நினையாது யான் இருந்தனனே! இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கொண்டு கறந்ததைப் போன்று அறியாமையில் காலத்தைப் போக்கினேனே! 48. கதியொன்றும் அறியாதே கண்ணழலத்தலைபறித்துக் கையில் உண்டுபதியொன்று நெடுவீதிப் பலர்காமநகை நாணாது உழிதர் வேற்குமதிதந்த ஆரூரில் வார்தேனைவாய்மடுத்துப் பருகி உய்யும்விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்கமின்மினித்தீக் காய்ந்த வாறே. தெளிவுரை: நற்கதிக்குரிய பொருளை அறியாது பலரும் எள்ளி நகை செய்யுமாறு திரிந்தவனுக்குச் சிவஞானத்தின் மதியைத் தந்தருளியவர் ஆரூர் மேவும் தேன் போன்ற ஈசன். அப் பரமனின், திருவடித் தேனைத் திருநாமம் கொண்டு ஏத்தும் வாயிலாகப் பருகி உய்தி கொள்ளாது, யான் மதியற்று இருந்தேனே! தீக்காயும் நோக்கில் விளக்கினைத் தேராது, மின்மினிப் பூச்சியைக் கொண்டு முயன்ற தன்மையாய் ஆகிவிட்டதே! 49. பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்றசமண்நீசர் சொல்லே கேட்டுக்காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக்கதவடைக்கும் கள்வ னேன்றன்ஆவியைப் போகாமே தவிர்த்தென்னைஆட்கொண்ட ஆரூ ரரைப்பாவியேன் அறியாதே பாழூரிற்பயிக்கம்புக்கு எய்த்த வாறே. தெளிவுரை: வளமற்ற புறச் சமயத்தவர் கூறுவனவற்றை மனத்தில் கொண்டு அவ்வழியில் சிக்குண்ட அடியவனை, இவன் உலகிடை இருந்தது போதும் எனக் கருதி ஆவியைச் செலவிடாது, காத்து என் அறியாமையைப் போக்கிக் குற்றத்தை நீக்கி ஆட்கொண்ட பெருமான், திருவாரூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார். இது காலம் வரை அப் பெருமானின் அருள் தன்மையை அறியாது நான் இருந்தேனே! பாழடைந்து நைந்து அழிந்துள்ள ஊரில் பிச்சை ஏற்கச் சென்று அலைந்து வருந்தியது போன்று என் நிலை ஆகியதே! 50. ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்ஓரம்பின் வாயில்வீழக்கட்டானைக் காமனையும் காலனையும்கண்ணினொடு காலின்வீழஅட்டானை ஆரூரில் அம்மானைஆர்வச்செற் றக்கு ரோதம்தட்டானைச் சாராதே தவமிருக்கஅவம்செய்து தருக்கி னேனே. தெளிவுரை: சிவபெருமான், பணிந்து சாராத அசுரர்களின் மூன்று புரங்களையும் ஓர் அம்பால் வீழுமாறு செய்தவர்; மன்மதனைத் திருவிழியாலும், காலனைத் திருப்பாதத்தாலும் மாயுமாறு செய்தவர்; திருவாரூரில் விளங்கும் அன்புக்குரிய தலைவர்; ஆசையின் வயத்தால் உண்டாகும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறமை) ஆகிய ஆறு குற்றங்களும் அடியவர்களுக்கு உண்டாகாதவாறு புரிபவர். அப்பெருமானைச் சார்ந்து உய்வு பெறாது தருக்கித் திரிந்தவனாய் நான் இருந்தேனே! இது, நன்மையைத் தரும் நிலையுடைய தவநெறியை விடுத்துப் பாவத்தை உண்டாக்கும் அவமாகிய தீமையைப் புரிந்தவாறு ஆயிற்று. 51. மறுத்தானொர் வல்லரக்கன் ஈரைந்துமுடியினொடு தோளும் தாளும்இறுத்தானை எழில்முளரித் தவிசின் மிசைஇருந்தான்றன் தலையில் ஒன்றைஅறுத்தானை ஆரூரில் அம்மானைஆலாலம் உண்டு கண்டம்கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்கஇரும்புகடித்து எய்த்த வாறே . தெளிவுரை: ஈசனை வணங்கிச் செல்ல மறுத்துக் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கிய இராவணனுடைய பத்துத் தலைகளும், இருபது தோளும், தாடையும் நெரியுமாறு செய்தவர் சிவபெருமான். அவர், தாமரையின் மீது வீற்றிருக்கும் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தவர்; ஆரூரில் மேவும் அன்புக்குரிய தலைவர்; ஆலகால விடத்தை உட்கொண்டு நீலகண்டனாக விளங்குபவர். கரும்பு போன்று இனியவராகத் திகழும் அப்பெருமானைக் கருதி இனிமை கொள்ளாது இரும்பைக் கடித்துத் துன்புற்றவாறு என்னைப் பாழாக்கிக் கொண்டேனே! திருச்சிற்றம்பலம் 6. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 52. வனபவள வாய்திறந்து வானவர்க்கும்தானவனே என்கின் றாளாற்சினபவளத் திண்டோள்மேற் சேர்ந்திலங்குவெண்ணீற்றன் என்கின் றாளால்அனபனள மேகலையொடு அப்பாலைக்கப்பாலான் என்கின் றாளால்கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: திரட்சியான பவளம் விளங்குகின்ற கழிப் பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டுற்ற நங்கை ஒருத்தி, வனப்பு மிகுந்த தனது பவளவாய் திறந்து, தேவர்களுக்கு அருள் செய்யும் பெருமானே! எனவும், பவளம் போன்ற சிவந்த உறுதியான தோளின் மீது திருவெண்ணீறு அணிந்த பெருமானே! எனவும், அன்னம் போன்றவளாகிய பவளம் போன்ற மேகலை அணிந்த உமாதேவியோடு விளங்கி, யாவும் கடந்த பரம்பொருளாய் விளங்கும் நாதனே! எனவும் மொழிபவள் ஆயினளே. 53. வண்டுலவு கொன்றை வளர்புன்சடையானே என்கின் றாளால்விண்டலர்ந்து நாறுவதொர் வெள்ளெருக்கநாண்மலருண்டு என்கின் றாளால்உண்டயலே தோன்றுவதொர் உத்தரியப்பட்டுடையன் என்கின் றாளால்கண்டயலே தோன்றும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: நீர் முள்ளிச் செடிகள் விளங்கும் கழிப் பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்த நங்கையொருத்தி, வண்டு உலவும் கொன்றை மலர் தரித்த சடையுடைய நாதனே! எனவும், வெள்ளெருக்க மாலை சூடிய ஈசனே! எனவும், பட்டாடையை மேலாடையாக உடைய பரமனே! எனவும் மொழிதல் ஆயினள். 54. பிறந்திளைய திங்கள்எம் பெம்மான்முடிமேலது என்கின் றாளால்நிறங்கிளரும் குங்குமத்தின் மேனிஅவன்நிறமே என்கின் றாளால்மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்மிடற்றவனே என்கின் றாளால்கறங் கோத மல்கும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: ஒலித்து மேவும் கடலலையின் ஓதம் மல்கும் கழிப்பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்த நங்கை யொருத்தி, இளமை திகழும் பிறைச் சந்திரனை, எம்பெருமான் திருமுடியின்மேல் தரித்து விளங்குபவர் என்கின்றாள்; அப்பெருமானுடைய வண்ணத் திருமேனியானது, குங்குமத்தின் நிறமே உடையது என்கின்றாள்; உமா தேவியை ஒத்த வண்ணம் உடைய நீலகண்டத்தை உடைய நாதன் என்கின்றாளே. 55. இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியொர்வெண்மழுவன் என்கின் றாளெல்சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ணவெண்ணீற்றவனே என்கின் றாளால்பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞகவேடத்தன் என்கின் றாளால்கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: கருங்குவளை மலர் பூக்கும் கழிப்பாலையில் மேவும் சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்த நங்கை யொருத்தி, இரும்பாலாகிய பெரிய, வல்லமையுடைய சூலத்தை ஏந்தியவராய், ஒளி திகழும் மழுப்படையை உடையவரே! என்கின்றாள்; வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவர் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் குழையப் பூசி விளங்கும் பெருமானே! என்கின்றாள்; மனத்தைக் கொள்ளை கொள்ளும் வாலிபர் ஆகிச் சடை முடியை அழகுடன் விளங்கப் பெற்ற திருக்கோலத்தை உடையவரே! என்கின்றாளே. 56. பழியிலான் புகழுடையன் பால்நீற்றன்ஆனேற்றன் என்கின் றாளால்விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்லமூன்றுளவே என்கின் றாளால்சுழியுலாம் வருகங்கை தோய்ந்தசடையவனே என்கின் றாளால்கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: உப்பங்கழி சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்து நங்கை யொருத்தி, யாராலும் பழிக்கப்படாதவராகவும் புகழையுடையவராகவும் பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்து விளங்குபவராகவும், இடப வாகனத்தை உடையவராகவும் திகழ்பவர் ஈசனே! எனகின்றாள்; திருவிழியை இரண்டல்லாது மூன்று கொண்டுள்ளவர் அப்பெருமான், என்கின்றாள்; அவர் கங்கையைச் சடை முடியில் வைத்தவரே என்கின்றாள். 57. பண்ணார்ந்த வீணை பயின்றவிரலவனே என்கின் றாளால்எண்ணார் புரமெரித்த எந்தைபெருமானே என்கின் றாளால்பண்ணார் முழவதிரப் பாடலொடுஆடலனே என்கின் றாளால்கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: கண்ணுக்கு இனிய மலர்களை நல்கும் சோலைகளை உடைய கழிப்பாலையில் மேவும் ஈசனைக் கண்டு தரிசித்த நங்கை யொருத்தி, பண்ணிசை விளக்கும் வீணையை இனிது மீட்டும் விரலை உடைய நாதனே! என்கின்றாள்; நல்லறத்தை எண்ணி நோக்காத அசுரர்களுடைய மூன்று புரங்களை எரித்த எந்தை பெருமானே! என்கின்றாள்; பண்ணின் இசைக்கு ஏற்பத் தாளப் பண், தண் முழவு அதிருமாறு பாடவும், ஆடவும் வல்ல நாதனே! என்கின்றாளே. 58. முதிரும் சடை முடிமேல் மூழ்கும்இளநாகம் என்கின் றாளால்அதுகண்டு அதன்அருகே தோன்றும்இளமதியம் என்கின் றாளால்சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்மின்னிடு மேஎன்கின் றாளால்கதிர்முத்தம் சிந்தும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: ஒளி திகழும் முத்துக்களைக் கொழித்து விளங்குகின்ற கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசனைக் கண்டு தரிசித்த நங்கையொருத்தி, முதிர்ந்த சடை முடியின் மீது இளமையான நாகத்தை அணிந்தவர் என்கின்றாள்; அத்தகைய நாகத்தைக் கண்டு அச்சம் தவிர்ந்து, அருகே இளைய பிறைச்சந்திரன் விளங்கிற்று என்கின்றாள்; மேன்மையுடையதும் வெண்ணிறமாய் ஒளிரக் கூடியதுமான பளிங்கு போன்ற குழையைக் காதில் மின்னுமாறு கொண்டு மேவும் இறைவனே, என்கின்றாளே. 59. ஓரோதம் ஓதி உலகம்பலிதிரிவான் என்கின் றாளால்நீரோதம் ஏற நிமிர்புன்சடையானே என்கின் றாளால்பாரோத மேனிப் பவளம்அவன்நிறமே என்கின் றாளால்காரோத மல்கும் கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: மேகம் போன்ற குளிர்ச்சி பொருந்திய கடலின் ஓதம் மல்கும் கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசனைத் தரிசித்து மகிழ்ந்த நங்கையொருத்தி, நன்கு ஓர்ந்து கொள்ளத்தகும் வேதத்தை ஓதி, உலகத்தில் பலி கொள்ளும் பெருமானே! என்கின்றாள்; கங்கையைச் சடை முடியில் ஏற்ற நாதனே என்கின்றாள்; நீர் சூழ்ந்த இவ்வுலகில் பவளம் போன்ற வண்ணம் கொண்டு விளங்கும் இறைவனே! என்கின்றாளே. 60. வானுலாம் திங்கள் வளர்புன்சடையானே என்கின் றாளால்ஊனுலாம் வெண்தலைகொண்டு ஊரூர்பலிதிரிவான் என்கின் றாளால்தேனுலாம் கொன்றை திளைக்கும்திருமார்பன் என்கின் றாளால்கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: சோலைகள் விளங்கச் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்து மகிழ்ந்த நங்கை யொருத்தி, வானத்தில் மேவும் சந்திரனைச் சூடிய மென்மையான சடை முடியுடைய நாதனே! என்கின்றாள்; ஊன் உடைய மண்டை ஓட்டை ஏந்தி ஊர்கள்தோறும் திரிந்து பலி ஏற்ற ஈசனே! என்கின்றாள்; தேன் விளங்கும் கொன்றை மலர் தரித்து மேவும் திருமார்பனே! என்கின்றாளே. 61. அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்அடர்த்தவனே என்கின் றாளால்சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்ணீற்றவனே என்கின் றாளால்மடற்பெரிய ஆலின்கீழ் அறநால்வர்க்குஅன்றுரைத்தான் என்கின் றாளால்கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ. தெளிவுரை: கடலில் இருந்து தோன்றும் பண்டங்கள் சூழ விளங்கும் கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசனைத் தரிசித்து மகிழ்ந்த நங்கையொருத்தி, வரபலத்தில் மேம்பட்டு வெல்லுதற்கு அரியவனாக விளங்கிய இராவணனை, அருவரையாகிய கயிலையின் கீழ் நெரியுமாறு செய்த நாதனே! என்கின்றாள்; நெருப்பின் சுடர் போன்ற பெருமைக்குரிய செந்திருமேனியின் மீது திருவெண்ணீற்றினை அணிந்த இறைவனே! என்கின்றாள்; அகன்ற இலைகலையுடைய பெரிய கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்குச் சிவதருமத்தை உரைத்த பெருமானே! என்கின்றாளே. திருச்சிற்றம்பலம் 7. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்) திருச்சிற்றம்பலம் 62. கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனைஅரவாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்திஇரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், வஞ்சனையுடைய கொடிய நெஞ்சம் உடையவர்களுக்கு அரியவர்; அத்தகைய வஞ்சனையைக் கொள்ளாத அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ந்து குடிகொண்டு விளங்குபவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; அரவமானது ஆடவும், சடை முடியானது பரந்து தாழவும், அழகிய கையினில் நெருப்பை ஏந்தி, நள்ளிருளில் நடனம் புரிபவர். அத்தகைய பெருமானை நான் என் மனத்தில் வைத்து ஏத்துகின்றேன். இது, கச்சித் திருவேகம்பரைச் சுட்டியது. 63. தேனோக்கும் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளம்தானோக்கும் திருமேனி தழலுருவாம் சங்கரனைவானோக்கும் வளர்மதி சேர்சடையானை வானோர்க்கும்ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், தேனின் இன்சுவையும் கிளியின் மழலை மொழியும் கொண்டு விளங்கும் உமாதேவியின் துணைவர்; செழுமையான திரட்சியுடைய பவளம், வியந்து நோக்குமாறு மேவும் செந்தழல் வண்ணத் திருமேனியுடையவர்; சங்கரன் என்னும் திருநாமம் கொண்டவராகி, மன்னுயிர்களுக்கு இன்பத்தைப் புரிபவர்; வானில் திகழும் வளர்பிறைச் சந்திரனைச் டை முடியின் மீது சூடி விளங்குபவர்; தேவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் தலைவர். அப்பெருமானை என் மனத்தில் இருத்தி வைத்து ஏத்தினேன். 64. கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்முப்போது முடிசாய்த்துத்தொழ நின்ற முதலவனைஅப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடகத்கிஎப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், தேவர்களால் கைதொழுது மலர் தூவி விருப்பத்துடன் ஏத்தப் பெறுபவர்; மேலும் அவர்களால், மூன்று காலங்களிலும் வணங்கப்படும் முதன்மையுடையவர். அப்பெருமானை, அவ்வப்போது மலரும் பூக்களைக் கொண்டு அருச்சித்து, ஐம்புலன் வழியாகச் செல்லும் விருப்பங்களைக் கட்டுப்படுத்தி, என்னுடைய மனத்தில் வைத்து ஏத்தினேன். அக்கடவுள், எனக்கு எப்போதும் இனிமையானவர். 65. அண்டமாய் ஆதியாய் அருமறையொடு ஐம்பூதப்பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்தொண்டர்தா மலர்தூவிச் சொல்மாலை புனைகின்றஇண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், அண்டமாகவும், ஆதிப் பரம்பொருளாகவும், வேதங்களாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என்னும் ஐம்பூதப் பொருள்களாகவும் விளங்கி உலகத்திற்கு யாவும் நல்குகின்ற ஒண் பொருளாக விளங்கும் பிஞ்ஞகர். அப்பெருமானைத் தொண்டர்கள் மலர் தூவிப் போற்றிப் புகழ்ப் பாடல்களைக் கூறி ஏத்துகின்றனர். அவர், இண்டை மாலை தரித்து மேவும் சடை முடியுடையவர். அத்தகைய ஈசனை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். திருவேகம்பரை மனத்தில் வைத்த பாங்கினை இது உணர்த்துவதாயிற்று. 66. ஆறேறு சடையானை ஆயிரம்பேர் அம்மானைப்பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனைநீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவிஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் ஏற்றுத் தோயப் பெற்றவர்; ஆயிரம் திருநாமங்களையுடைய அன்புக்குரியவர்; பிரமகபாலத்தை ஏந்திப் பலிகொள்பவர்; மேலான பரம் பொருளாய் விளங்குபவர்; திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; மன்னுயிரின் மும்மல உபாதையை நீக்குபவராய் விளங்கித் தான் எம்மலமும் இல்லாதவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானை என்னுடைய மனத்தில் வைத்து ஏத்துகின்றேன். இது, திருவேகம்ப நாதரை மனத்தில் பதித்த பாங்கினை உணர்த்துதலாயிற்று. 67. தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்வாசனை மலைநிலம்நீர் தீவளிஆ காசமாம்ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், ஒளிமயமானவர்; உலகத்தாரால் தொழுது போற்றப்படும் திருமாலால் பூசிக்கப்படுபவர்; உயிர்கள் தன்னைப் பூசித்து வணங்கும் பெற்றியை உகப்பவர்; பூவின் நறுமணமாக விளங்குபவர்; மலைகளின் சிறப்புடைய நிலம் மற்றும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாகத் திகழ்பவர். அத்தகைய ஈசன் என் அன்புக்குரிய தலைவர். அப்பெருமானை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். இது திருவேகம்ப நாதனைத் தன் நெஞ்சின் கண் பதித்த பாங்கினை உணர்த்தியதாம். 68. நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்வல்லானை வல்லார்கண் மனத்துறையும் மைந்தனைச்சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், யாவர்க்கும் நலம் செய்பவர்; நன்மை விளங்கும் நான்மறையும் ஆறு அங்கமும் ஆனவர்; யாவும் வல்லவர்; ஞான வயத்தராய் விளங்குபவரின் மனத்தில் உறைபவர்; சொல்லப் பெறும் ஒலியாகத் திகழ்பவர்; சொல்லின் பொருளாக விளங்குபவர்; மாசு நீங்கிய மாண்புடையவர். அன்பிற்குரிய அப்பெருமான், எம் தலைவர் ஆவார். அவரை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். 69. விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்புரித்தானைப் பதம்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: ஈசன், சனகாதி முனிவர்கள் நால்வருக்கு அறப் பொருள் உணர்த்தியவர்; வேதங்கள் நான்கினையும் தோற்றுவித்தவர்; அவ்வேதங்களின் பொருளாகவும் விளங்குபவர்; புண்ணியமாக விளங்குபவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர். அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்தவர். என் அன்பிற்குரிய அப்பெருமானை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். 70. ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற்கு அரியானைப்பாகம்பெண் ஆண்பாக மாய்நின்ற பசுபதியைமாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சிஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: பத்து அவதாரங்களை உடைய திருமாலும், மற்றும் பிரமனும் காணுதற்கு அரியவராகிய சிவபெருமான் ஒரு பாகம் பெண்ணாகவும், இன்னொரு பாகம் ஆணாகவும் மேவும் உயிர்களுக்கெல்லாம் தலைவர். பெருமையுடைய வேதங்களை விரித்து ஓதும் அப்பெருமான், நெடிய மதில்களையுடைய கச்சி ஏகம்பத்தில் வீற்றிருப்பவர். அவரை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். 71. அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம்கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்புதொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே. தெளிவுரை: சிவபெருமான், தன்னை அடுத்துப் பாய்ந்த யானையின் தோலை உரித்தவர்; அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரத்தை அருளிச் செய்தவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு கூர்மையான அம்பு ஒன்று தொடுத்து முப்புரங்களை எரித்தவர்; சுனைகள் பெருகும் திருக்கயிலை மலையை எடுத்த இராவணனைத் தடுத்துத் தனது திருப்பாத விரலால் நெரித்தவர் ஈசன். அப் பெருமானை என் மனத்தில் வைத்து ஏத்தினேன். திருச்சிற்றம்பலம் 8. பொது திருச்சிற்றம்பலம் 72. சிவனெனும் ஓசையல்லது அறையோ உலகில்திருநின்ற செம்மை யுளதேஅவனுமொர் ஐயம்உண்ணி அதளாடையாவதுஅதன் மேலொர் ஆடல்அரவம்கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்கலனாவ தோடு கருதில்அவனது பெற்றி கண்டும் அவன்நீர்மைகண்டும்அகநேர்வர் தேவர் அவரே. தெளிவுரை: சிவசிவ என்று அரனுடைய திருநாமத்தைச் சொல்லுவதையும் அதனைச் செவி குளிரக் கேட்பதையும் விடத் திருவேறு நின்ற செம்மையுடைய பேறு உலகில் வேறு உள்ளதோ ! அத்திருச் சொல்லுக்கு உரிய சிவபெருமான், பிச்சை ஏற்று உணவினைக் கொண்டும், தோலாடையை உடுத்தியும், அதன் மீது, ஆடுகின்ற அரவத்தைக் கட்டியும் விளங்குபவர். ஒரு கவணளவு உணவு கொள்வதையும் சுடுகாட்டைக் கோயிலாகவும், கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகவும் கொண்டு மேவும் அப்பெருமானுடைய பெற்றியையும் இனிமையையும் நோக்கித் தேவர்கள் எல்லாரும் மனத்தில் ஏத்திப் போற்றுகின்றனர். 73. விரிகதிர் ஞாயிறுஅல்லர் மதியல்லர்வேதவிதியல்லர் விண்ணும் நிலனும்திரிதரு வாயுஅல்லர் செறுதீயும் அல்லர்தெளிநீரும் அல்லர் தெரியில்அரிதரு கண்ணியாளை ஒருபாக மாகஅருள்கார ணத்தில் வருவார்எரியரவுஆர மார்பர் இமையாரும் அல்லர்இமைப்பாரும் அல்லர் இவரே. தெளிவுரை: ஈசன், ஞாயிறு, சந்திரன், வேதம், ஆகாயம், நிலம், காற்று, நெருப்பு, நீர் எனப்படும் பொருள் வளமான அட்ட மூர்த்தமாக விளங்குபவராயினும் அவையே ஆயினர் எனப் புகழப்பவுபவர் அல்லர். உமாதேவியாரை உடனாகக் கொண்டு, அடியவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு வரும் அப்பெருமான், அரவத்தைத் திருமார்பில் ஆரமாகக் கொண்டு விளங்குபவர். அவர், இமைத்தல் செய்யாத தேவரும் அல்லர்; இமைக்கும் எழிலுடைய மண்ணுலகத்தவரும் அல்லர். 74. தேய்பொடி வெள்ளைபூசி அதன்மேலொர் திங்கள்திலகம் பதித்த நுதலர்காய்கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்கரிகாடர் காலொர் கழலர்வேய்உடனாடு தோளிஅவள் விம்மவெய்யமழுவீசி வேழ உரிபோர்த்தேயிவர்ஆடு மாறும்இவள் காணுமாறும்இதுதான் இவர்க்கொர் இயல்பே. தெளிவுரை: ஈசன், திருவெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; சந்திரனைத் தரித்த நெற்றி உடையவர்; சூரியனின் வெங்கதிர் மேவும் கடலின் நீல வண்ணம் போன்ற கண்டத்தை உடையவர்; மயானத்தில் நின்று நடனம் ஆடுபவர்; வீரக்கழல் அணிந்தவர். அப்பெருமான், மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவி, உடன் நடனம் ஆடி மகிழ, மழு ஆயுதத்தை வீசி, யானையின் தோலைப் போர்த்தி ஆடுகின்றவராயும், அதனைத் தேவி காணுமாறும் உடையவர். இத்தன்மையே இவ் இறைவனுக்கு உரிய அருள்தன்மை ஆயிற்று. 75. வளர்பொறி ஆமைபுல்கி வளர்கோதை வைகிவடிதோலும் நூலும் வளவக்கிளர்பொறி நாகம்ஒன்று மிளிர்கின்ற மார்பர்கிளர்காடு நாடு மகிழ்வர்நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்றுசாயல்அவள்தோன்று வாய்மை பெருகிக்குளிர்பொறி வண்டுபாடு குழலாள்ஒருத்திஉளள்போல் குலாவி யுடனே. தெளிவுரை: ஈசன், ஆமை ஓட்டினை அணிபவர்; பெருகி வளரும் கங்கையை உடையவர்; அழகிய தோலை உடுத்தியவர்; முப்புர நூல் அணிந்த திருமார்பினர்; மயானத்தில் கிளர்ந்து நடனம் புரிபவர்; மக்கள் நிலவும் நாட்டில் நனி விளங்குபவர். அப்பெருமான், மயில் போன்ற சாயலை யுடையவளும், வண்டு இசைக்கும் கூந்தலை உடையவளும் ஆகிய உமாதேவியை எக்காலத்திலும் உடன் கொண்டு மேவும் அம்மை அப்பராகி மகிழ்ந்து இருப்பவரே ஆவார். 76. உறைவது காடுபோலும் உரிதோல் உடுப்பர்விடையூர்வது ஓடு கலனாஇறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும்ஈசர்ஒருபால் இசைந்தது ஒருபால்பிறைநுதல் பேதைமாசர் உமைஎன்னு நங்கைபிறழ்பாட நின்று பிணைவான்அறைகழல் வண்டுபாடும் அடிநீழல் ஆணைகடவா தமரர் உலகே. தெளிவுரை: ஈசன், உறைவது மயானம் போலும்; அவர், தோலை உடுத்தியவர்; இடப வாகனம் உடையவர்; பிச்சை எடுக்கும் கலனாக பிரம கபாலத்தைக் கொண்டிருப்பவர். இத்தகைய வண்ணத் திருக்கோலத்தையுடைய சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமாட்டி, பாடல் இசைக்கத் தனது திருக்கழல் ஒலிக்க நடனம் புரியும் அப்பெருமானுடைய திருவடி நிழலைத் தேவர்கள் கனிந்து வணங்குவார்கள். 77. கணிவளங் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணிகழல்கால் சிலம்ப அழகார்அணிகிளர் ஆரவெள்ளை தவழ்சுண்ண வண்ணவியலார் ஒருவர் இருவர்மணிகிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலைமலையான் மகட்கும் இறைவர்அணிகிளர் அன்ன வண்ணம் அவள்வண்ண வண்ணம்அவர்வண்ண வண்ணம் அழலே. தெளிவுரை: ஈசன், புலித் தோலை உடையாகக் கொண்டவர்; சந்திரனைத் தரித்தவர்; காலில் வீரக் கழல் அணிந்தவர்; அழகிய வெண்மை நிறம் கொண்ட, அரவம், எருக்கம் பூ ஆகியவற்றை ஆரமாகக் கொண்டவர். ஒப்பற்ற ஒருவராகிய அப்பெருமான், அம்மையப்பராகிய இருவர் எனத் திகழ்பவர். நவமணிகள் விளங்கவும், மயில் நடனம் ஆடவும், மேகம் சூழ்ந்த சோலை விளங்கும் இமய மலைக்கு மன்னனின் மகளாகிய உமையவளின் தலைவர், சிவபெருமான். அப்பெருமாட்டி, எழில் அன்ன வண்ணம் கொண்டு திகழ, அப்பெருமானின் திருவண்ணமாவது தீ வண்ணமே. 78. நகைவளர் கொன்றை துன்று நகுவெண்தலையர்நளிர்கங்கை தங்கு முடியர்மிகைவளர் வேதகீதம் முறையோடும் வல்லகறைகொள் மணி செய்மிடறர்மிகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறும்எரியாடுமாறும் இவர்கைப்பகைவளர் நாகம் வீசி மதியங்குமாறும்இதுபோலும் ஈசர் இயல்பே. தெளிவுரை: ஈசன், ஒளிமிக்க கொன்றை மலரைத் தரித்தவர்; மண்டை ஓட்டை மாலையாக உடையவர்; கங்கை சடை முடியில் தோயப் பெற்று விளங்குபவர்; வேதங்களை இசைத்து ஓதுபவர்; நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். அப்பெருமான், உமாதேவியார் துடிப்புடன் நன்கு பாட, நெருப்பினைக் கையில் ஏந்தி நாகமும் ஆடுமாறு வீசி, அதுவும் ஆடுமாறு நடனம் புரியும் இயல்பு உடையவர். 79. ஒளிவளர் கங்கைதங்கும் ஒளிமால்அயன்றன்உடல்வெந்து வீய சுடர்நீறுஅணிகிளர் ஆரவெள்ளை தவழ்சுண்ணவண்ணர்தமியார் ஒருவர் இருவர்களிகிளர் வேடம்உண்டொர் கடமாஉரித்தஉடைதோல் தொடுத்த கலனார்அணிகிளர் அன்னதொல்லை அவள்பாகமாகஎழில்வேதம் ஓதும் அவரே. தெளிவுரை: ஒளி திகழ மேவும் கங்கை தரித்த செவ்வொளி படரும் சடை முடியுடைய சிவபெருமான், ஒளியின் மேம்படும் திருவெண்ணீற்றினை அணிபவர்; தமியராய் ஒப்பற்றவராகவும், அம்மை அப்பராய் இருவராகவும் விளங்குபவர்; தாருக வனத்தில் வதியும் மகளிர்தம் மனைதொறும் சென்று பலி ஏற்பவராய்ப் பிட்சாடணமூர்த்தியாய்த் திரிந்தவர்; யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாகக் கொண்டவர்; புலித் தோலை ஆடையாக உடுத்தியவர்; தொன்மையாய் மேவும் உமா தேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், எழில் சேர்க்கும் வேதத்தை விரித்து ஓதுபவரே ஆவார். 80. மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கைமணவாளராகி மகிழ்வர்தலைகல னாகஉண்டு தனியே திரிந்துதவவாணர் ஆகி முயல்வர்விலையிலி சாந்தம் என்று வெறிநீறுபூசிவிளையாடும் வேட விகிர்தர்அலைகடல் வெள்ளமுற்றம் அலறக்கடைந்தஅழல்நஞ்சம் உண்ட அவரே. தெளிவுரை: சிவபெருமான், மலைமகளாகிய உமாதேவியையும், அலை மகளாகிய கங்காதேவியையும் ஏற்று, அவர்களுக்கு மணவாளராகி மகிழ்பவர்; பிரமனுடைய தலையைப் பலியேற்கும் பாத்திரமாகக் கொண்டு, தனியே உணவு ஏற்றுத் திரிந்தவர்; தவவேந்தராய் விளங்கியவர்; பெருமை நிறைந்த மணம் தரும் திருநீறு பூசும் திருவண்ணம் உடையவர்; வேடுவராகச் சென்று அருச்சுனரிடம் திருவிளையாடல் புரிந்தவர். அப்பெருமான், பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய கொடிய நஞ்சினை உட்கொண்டவரே ஆவார். 81. புதுவிரி பொன்செய் ஓலை ஒருகாதொர் காதுசுரிசங்க நின்று புரளவிதிவிதி வேதகீதம் ஒருபாடு மோதம்ஒருபாடு மெல்ல நகுமால்மதுவிரி கொன்றை துன்று சடைபாகமாதர்குழல்பாக மாக வருவர்இதுஇவர் வண்ண வண்ணம் இவள்வண்ண வண்ணம்எழில்வண்ண வண்ணம் இயல்பே. தெளிவுரை: ஈசன், ஒளிதிகழும் தோடு ஒரு காதிலும், குழை ஒரு காதிலும் விளங்க மேவுபவர்; விதிக்கப் பெறும் வேதங்களைக் கீதமாக இசைத்து மெல்ல ஓதுகின்ற தன்மையில் அத்தோடுகளைப் பெற்றுள்ளவர்; கொன்றை மாலை தரித்தவர்; சடை முடியின் ஒரு மாதாகிய கங்கையும், திருமேனியில் ஒரு மாதாகிய உமாதேவியையும் உடையவர். இத்தன்மையில் அம்மை அப்பராயும் அர்த்தநாரியாயும் உடைய ஈசனின் எழில் வண்ணமானது திகழும் இயல்பாயிற்று. திருச்சிற்றம்பலம் 9. பொது திருச்சிற்றம்பலம் 82. தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்துதலையா லேபலி தேரும் தலைவனைத்தலையே நீவணங்காய் தெளிவுரை: சிவபெருமானை வணங்குக. அப்பெருமான் தலைகளை மாலையாகக் கொண்டவர்; பிரமனுடைய தலையைக் கலனாகக் கொண்டு பலி ஏற்றவர். எனவே ஈசனைத் தலையால் வணங்கி உய்தி பெறுக. 83. கண்காள் காண்மின்களோ கடல்நஞ்சுண்ட கண்டன்றன்னைஎண்டோள் வீசிநின்று ஆடும் பிரான் தன்னைக்கண்காள் காண் மின்களோ. தெளிவுரை: கண்களே! ஈசனைக் கண்டு தரிசியுங்கள். அப்பெருமான், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு நீலகண்டனாக விளங்குபவர்; எட்டுத்தோள்களையும் வீசி நின்று, ஆடும் பேராற்றல் உடைய பெருமான். கண்களே! அப்பெருமானைக் கண்டு தரிசித்து மகிழ்க. 84. செவிகொள் கேண்மின்களோ சிவன்எம் மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும்செவிகொள் கேண்மின்களோ. தெளிவுரை: செவிகளே! ஈசனுடைய திருப்புகழ்ப் பாடல்களையும், அருட் செயல்களையும் கேட்பீராக. அப்பெருமான், எமது இறைவன்; செம்பவள வண்ணம் உடையவர்; தீயைப் போன்ற திருமேனியுடைய தலைவர். அப்பெருமானுடைய திருவருட் செயலைப் பிறர் கூறும்போது செவிகளே! கேளுங்கள். 85. மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய். தெளிவுரை: மூக்கே! நீ, ஈசனுடைய திருவைந்தெழுத்தை திருநாமத்தைத் தியானம்செய்யும் வழியாக ஒலித்து (முரன்று) ஓதுவாயாக. அப்பெருமான், மயானத்தில் உறையும் முக்கண்ணன் ஆவார்; ஈசனின் திருவாக்கினையே நோக்கி மேவும் உமாதேவியின் மணவாளர். அப்பெருமானை ஏத்துக. 86. வாயே வாழ்த்துகண்டாய் மதயானை உரிபோர்த்துப்பேய்வாழ் காட்டகத்து ஆடும்பி ரான்றன்னைவாயே வாழ்த்து கண்டாய் தெளிவுரை: வாயே! ஈசனே வாழ்த்திப் பேசுவாயாக. அப்பெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; பேய்கள் விரித்தாடும் மயானத்தில் நடனம் புரிபவர். அப்பிரானை, வாயே! வாழ்த்துவாயாக. 87. நெஞ்சே நீ நினையாய் நிமிர்புன்சடை நின் மலனைமஞ்சாடும் மலைமங்கைம ணாளனைநெஞ்சே நீ நினையாய். தெளிவுரை: நெஞ்சே! நீ ஈசனை ஏத்துவாயாக. அப்பெருமான், புல்லிய மென்மையான சடை முடியுடையவர்; மலம் கலவப் பெறாதவர்; உமா தேவியின் மணாளர். நெஞ்சமே! அவரை நினைந்து ஏத்துக. 88. கைகாள் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்றுபைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்கைகாள் கூப்பித் தொழீர் தெளிவுரை: கைகளே! ஈசனைத் தொழுது போற்றுக. நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி நின்று ஏத்திப் பாம்பினை அரையில் கட்டிய பரமனாகிய சிவபெருமானைத் தொழுக. 89. ஆக்கை யாற்பயன்என் அரன்கோயில் வலம் வந்துபூக்கையால் அட்டிப் போற்றி என்னாதஇவ்ஆக்கையாற் பயன் என். தெளிவுரை: ஈசனின் திருக்கோயிலை வலம் வந்து வணங்க வேண்டும். மலர்கள் பறித்துக் கைகளால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும்; மலர் தூவி அருச்சித்துப் போற்ற வேண்டும் அவ்வாறு இல்லாத இத்தேகத்தால் என்ன பயன் ஏற்படும்? ஒரு பயனும் இல்லை என்பது குறிப்பு. 90. கால்களாற் பயன்என் கறைக்கண்டன் உறை கோயில்கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்கால்களாற் பயன் என். தெளிவுரை: நீலகண்டத்தராக விளங்கும் ஈசனின் திருக்கோயில்களை வலம் வரவேண்டும்; அழகிய கோகரணம் என்னும் திருத்தலத்தை வலம் வர வேண்டும். அவ்வாறு செய்யாத கால்களால் பயன் என்ன விளையும்? ஒன்றும் இல்லை என்பது குறிப்பு. 91. உற்றார் ஆருளரோ உயிர்கொண்டு போம்பொழுதுகுற்றாலத்துறை கூத்தன் அல்லால்நமக்குஉற்றார் ஆருள ரோ. தெளிவுரை: உற்றவர்கள் என்று நமக்கு இருக்கின்றார்கள்? உயிரானது இத்தேகத்திலிருந்து பிரிந்து செல்லும்போது ஈசனையன்றி வேறு யாரும் இல்லை. அப்பெருமானே உயிர்க்குத் துணையாக இருக்கக் கூடியவர். அவரே குற்றாலத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமான். எனவே, உயிர்க்குத் துணையாய் விளங்கும் ஈசனையன்றி, உயிர் நீங்கும் காலத்தில் யாரும் துணை நின்று காக்க இயலாது என்பதாம். ஈசன் உயிருக்குத் துணையாக விளங்கப் பிறவாப் பெருஞ் செல்வத்தை அருளும் பெற்றியை உணர்த்தியது. 92. இறுமாந் திருப்பன் கொலோ ஈசன்பல்கணத்து எண்ணப் பட்டுச்சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்சென்றங்குஇறுமாந்து இருப்பன் கொலோ. தெளிவுரை: இவ்வாறு, நமது தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, தேகம், கால் ஆகிய அங்கங்களைக் கொண்டு ஈசனை வணங்குதலும், அப்பெருமானின் புகழைக் கேட்டலும், உரைத்தலும், நினைத்தலும், பூக்கள் தூவி அருச்சித்தலும், திருக்கோயிலை வலம் வருதலும் ஆகிய செயல்களை மேவும் தன்மையில், பிறவியின் உறுபயன் தோற்றம் கொள்கின்றது. அதன் வழி இளைய மான் கன்றை ஏந்தி விளங்கும் சிவபெருமானுடைய திருவடி மலரின்கீழ் இருக்கும் பெருமை நிகழ்கின்றது. அது, பலவகையான சிவகணத்தினர்களுள் ஒருவராக விளங்கப் பெறும் பேறாகும். அத்தகைய பெரும் பேற்றால் மும்மலங்களும் நீங்கப் பெற்றும் பேரின்பத்தினை மாந்தியும் (நுகர்ந்தும்) திகழ்வேன். 93. தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும்தேடித் தேடொணத் தேவனை என்னுள்ளேதேடிக் கண்டுகொண்டேன். தெளிவுரை: திருமாலும் பிரமனும் தேடியும் காணப் பெறாத தலைமை உடையவர் சிவபெருமான். அப்பெருமானை நான் தேடினேன். அவர் என் உள்ளத்தில் கோயில் கொண்டு உள்ளார் என்று கண்டு கொண்டேன். திருச்சிற்றம்பலம் 10. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 94. முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. தெளிவுரை: ஈசன், ஒளி கொண்டு வளரும் பிறைச்சந்திரனைச் சூடியவர்; பெருகி வரும் கங்கை தோயும் சடை முடியுடையவர்; இனிமை திகழும் இழையோடும் மழலையுடைய வீணையுடையவர்; மிகையான மகிழ்ச்சியுடன் விளங்கும் மானைக் கையில் ஏந்தியவர். அப்பெருமான், அழகு மிளிரப் பெருகியோடும் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் வீரட்டநாதரே ஆவார். 95. ஏறினர் ஏறினை ஏழை தன்னொருகூறினர் கூறினர் வேதம் அங்கமும்ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்கீறின உடையினர் கெடில வாணரே. தெளிவுரை: ஈசன், இடப வாகனத்தில் ஏறிக் காட்சி தருபவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; வேதங்கள் நான்கினோடும் அதன் ஆறு அங்கங்களும் விரித்து ஓதுபவர்; அவ்வேதங்களாகவும் அதன் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்; எல்லாப் பக்கங்களிலும் சடை முடியிலிருந்து பரவி விளங்குமாறு திகழ்பவர்; கிழிந்த ஆடையை உடுத்தி இருப்பவர். அவர் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் வீரட்ட நாதரே ஆவார். 96. விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீறுஉடம்பழகு எழுதுவர் முழுதும் வெண்ணிலாப்படர்ந்தழகு எழுதரு சடையில் பாய்புனல்கிடந்தழகு எழுதிய கெடில வாணரே. தெளிவுரை: சிவபெருமான், பாற்கடலில் எழுந்த நஞ்சினை மிடற்றினில் திகழுமாறு புரிந்தவர்; வெண்மை திகழும் திருநீற்றின் பொலிவு கொண்டு, திருமேனியில் அழகு விளங்குமாறு செய்பவர்; நாற்புறமும் விரிந்து பரவும் சடை முடியின் மீது வேகமாய்ப் பாயும் கங்கை நீர் தோய இருத்தியவர். அவர், அழகு மிகுந்த கெடில நதிக்கரையில் மேவும் வீரட்ட நாதரே ஆவார். 97. விழுமணி அயில்எயிற்று அம்பு வெய்யதோர்கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்கெழுமணி யரவினர் கெடில வாணரே. தெளிவுரை: சிவபெருமான், உயர்ந்த மணிகள் கொண்டு வலிமையானதாகச் செய்யப்பட்ட மூன்று மதில்களை அக்கினிக் கணை தொடுத்து மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவர்; நீல மணி போன்ற மிடறுடையவர்; கொடிய நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர். அவர் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் ஈசரே ஆவார். 98. குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினைதழுவின கழுவுவர் பவள மேனியர்மழுவினர் மான் மறிக் கையர் மங்கையைக்கெழுவின யோகினர் கெடில வாணரே. தெளிவுரை: சிவபெருமான், அடியவர் திருக்கூட்டத்தினரால் வழிபடப் பெறுபவர்; அப்பெருமக்களின்பால் பற்றியுள்ள வினைகளை நீக்குபவர்; பவளம் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; மழுப்படையும், மானும் கையில் ஏந்தி உள்ளவர். அப்பெருமான், உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்கி யோக நியதியில் வீற்றிருப்பவர். அவர் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் வீரட்ட நாதரே ஆவார். 99. அங்கையில் அனல்எரி யேந்தி ஆறுஎனும்மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரைநங்கையைப் பாகமும் நயப்பர் தென்திசைக்கெங்கையது எனப்படும் கெடில வாணரே. தெளிவுரை: ஈசன், அழகிய கையில் அனல் மிக்கு எரியும் நெருப்பினை ஏந்தியவர்; கங்கையாகிய தேவியைச் சடை முடியில் வைத்த மணவாளர்; மலை மகளாகிய உமாதேவியை விரும்பி ஒரு பாகத்தில் ஏற்றவர். அப்பெருமான், தென்திசைக் கங்கை எனப்படும் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் வீரட்ட நாதரே ஆவார். 100. கழிந்தவர் தலைகலன் ஏந்திக் காடுறைந்துஇழிந்தவர் ஒருவர்என்று எள்க வாழ்பவர்வழிந்துஇழி மதுகர மிழற்ற மந்திகள்கிழிந்ததேன் நுகர்தரும் கெடில வாணரே. தெளிவுரை: சிவன் ஒருவரே எல்லாக் காலத்திலும் விளங்குபவர், ஏனைய மூர்த்திகள் எனப்படும் திருமால் ஆறு கோடியும், பிரமர் நூறு கோடியும் ஆகியவர்கள் கழிந்தவர்களாக மேவ, அவர்களுடைய மண்டை ஓடுகளைக் கோத்து மாலையாகக் கொண்டும், கையில் ஏந்தியும், இடுகாட்டில் திரிபவர் எனப் பிறரால் இழிவாகவும் பேசப்படுபவர், அப்பெருமான். அவர், வண்டுகள் நுகர்ந்து மேவ, மந்திகள் தன் கூட்டைக் கிழித்து ஆட, அது சிந்துகின்ற கெடில நதியின் கரையில் வீற்றிருக்கும் வீரட்டேஸ்வரரே ஆவார். 101. கிடந்தபாம்பு அருகுகண்டு அரிவை பேதுறக்கிடந்தபாம்பு அவளையோர் மயில்என்று ஐயுறக்கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவேகிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. தெளிவுரை: சிவன் திருமுடியில் தவழ மேவும் பாம்பானது, இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியைக் கண்டு மயில் என நினைத்து மயங்குகின்றது. உமாதேவியார் பாம்பைக் கண்டு பேதுறுகின்றாள். இந்த நிலையில் கங்கை விளங்கும் சடை முடியில் மேவும் பிறைச் சந்திரன், நாகத்தைக் கண்டு ஏங்குகின்றது. இவர்கள் செயலை எண்ணி வீரட்ட நாதராகிய கெடிலவாணர் மென்முறுவல் செய்கின்றார். 102. வெறியுறு விரிசடை புரள வீசியோர்பொறியுறு புலியுரி அரைய தாகவும்நெறியுறு குழலுமை பாக மாகவும்கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. தெளிவுரை: சிவன், நறுமணம் கமழும் சடை முடியானது விரிந்து புரளி வீசி ஆடுபவர்; புலியின் தோலை அரையில் உடுத்தியவர்; நெறிப்படுத்தி அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; தாருகவனத்து மகளிர் மயங்குமாறு பலி ஏற்றுத் திரிபவர். அவர் கெடிலவாணரே ஆவார். 103. பூண்டதேர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்தூண்டு தோளவைபட அடர்த்த தாளினார்ஈண்டுநீர்க் கமலவாய் மேதிபாய்தரக்கீண்டுதேன் சொரிதரும் கெடில வாணரே. தெளிவுரை: சிவபெருமான் தேர்மீது செல்லும் இராவணனுடைய பெருமை மிக்க மலை போன்ற தோள்கள் அழியுமாறு திருப்பாதத்தால் அடர்த்தவர். அப்பெருமான், தாமரை மலரின் மீது எருமை பால் சொரிய, அத்துடன் தேனும் சேர்ந்து பெருகும் நீரின் சிறப்புடைய கெடில நதியின் கரையில் வீற்றிருக்கும் வீரட்டேஸ்வரரே ஆவார். திருச்சிற்றம்பலம் 11. பொது திருச்சிற்றம்பலம் 104. சொற்றுணை வேதியன் சோதி வானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணையாவது நமச்சி வாயவே. தெளிவுரை: வாயினால் சொல்லப்படும் சொல்லாகிய வேதத்தின் முதல்வன் சிவபெருமான். அப்பெருமான் சோதி வடிவாக விளங்குபவர். அவருடைய ஒளி மயமான அழகிய பொலிவு மிக்கு மேவும் திருவடியின் பால், நெஞ்சைப் பதித்துத் தொழுது ஏத்த, நல்ல துணையாகி விளங்குபவர். கல்லில் கட்டிக் கடலில் என்னைத் தூக்கி எறிந்த காலத்திலும் எனக்குத் துணை நின்று காத்தருளியது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே. 105. பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரைஆவினுக்கு அருங்கலம் அரன்அஞ்சு ஆடுதல்கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லதுநாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே. தெளிவுரை: பூக்களில் சிறப்புடையது தாமரை மலர்; பசுவின் பயனுள்ள தன்மையாவது ஈசனுக்குப் பூசனையாற்றப் பஞ்சகௌவியத்தை வழங்கும் பெருமை; அரசனுக்குரிய சிறப்பாவது, நீதி வழங்குவதில் விருப்பு வெறுப்பு இன்றி ஆட்சி செய்யும் முறைமை; அவ்வாறே நாவினுக்கு உரிய தன்மையாவது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை ஓதுதலே ஆகும். 106. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகில்அவை ஒன்றும் இல்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே. தெளிவுரை: விண்ணளவு உயரத்திற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தாலும் அதனை எரிக்க அதன் அளவு நெருப்பு கொண்டு அதை எரிக்க வேண்டியதில்லை. சிறு நெருப்புப் பொறி கொண்டு அளவு கடந்த அவ்விறகுக் கட்டைகளை எரித்து, ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். அத் தன்மையில், பல பிறவிகளில் செய்து, வினை மூட்டைகளாகிய பாவங்கள் நம்மைத் தொடர்ந்து பற்றி இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தை விளைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது நண்ணி நின்று அப்பாவங்களைச் சுட்டெரிக்கின்றது. 107. இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரான்என்று வினவுவோம் அல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம்உற்றநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. தெளிவுரை: இவ்வுலகிடைத் துன்பத்தால் சூழ்ந்து இருந்தாலும், பிறரை நோக்கி, எம்மைக் காக்கும் நீவிரே தலைவர் என்று முகமன் சொல்ல மாட்டோம். மலையளவு துன்பத்தில் உழன்றாலும் அதிலிருந்து விடுவித்துக் காப்பதும், அச்சத்தைப் போக்குவதும் அருளின் வயமாகத் திகழும் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே ஆகும். 108. வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடிநங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே. தெளிவுரை: ஈசனைத் தியானித்தும், விரதம் பூண்டும் வணங்குகின்ற அடியவர்களுக்கு, அருங்கலமாக விளங்கிச் சிறப்பினை நல்குவது, திருவெண்ணீறு. அந்தணர்களுக்குச் சிறப்பினை நல்குவது வேதமும் அதன் ஆறு அங்கங்களையும் ஓதுதல் ஆகும். பிறைச் சந்திரன், ஈசனின் திருமுடியின் மீது திகழ்ந்து சிறப்புடன் மிளிர்தலே அதற்கு அருங்கலம். அத் தன்மையில் நமக்கு அருங்கலமாகக் கொள்ளத் தக்கது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே யாகும். 109. சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்நலமிலன் நாள்தொறும் நல்கு வான்நலன்குலமில ராகிலும் குலத்திற்கு ஏற்பதோர்நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. தெளிவுரை: ஈசன், வேண்டுதல் வேண்டாமை என்னும் குணத்தின்பாற் படாதவராய் யாவருக்கும் அருள் புரியும் பெற்றியுடையவர்; உயிர்களுக்கு இனிமை வழங்குபவர்; தனக்கு அடிமை பூண்டு விளங்குகின்ற அடிவர்களுக்கன்றி, ஏனையோர்க்கு நலன் கரப்பவர். அடியவர்களுக்கு எல்லாக் காலங்களிலும் நலம் புரிபவர்; ஆகம விதிப்படியும் ஆசார சீலத்திலும் ஒருங்கே திகழ்ந்து ஏத்துபவராயினும், அவ்வாறு இன்றிப் பக்தி வயத்தினால் ஈசனுக்கு அடிமை பூண்டு திகழ்பவராயினும், அவ்வவர்தம் தரத்தின் செம்மைக்கு ஏற்ப நலன்களைக் கொடுப்பவர்; அப்பெருமானின் திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய என்னும் சொல்லும் அத்தகைய செம்மையை அருளவல்லது. 110. வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்கூடினார் அந்நெறி கூடச் சென்றலும்ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. தெளிவுரை: உலகப் பற்றினை நீக்கிய திருத்தொண்டர்கள் ஒன்று கூடி, அரநாமத்தை ஓதும் நிலை கண்டு, அந்நெறியில் பற்று கொண்டு நான் விரைந்து ஓடிச்சென்றேன். ஆங்குச் சிவப்பொலிவின் அருங்காட்சியைக் கண்டேன். கண்டதும், எனது புறம்பற்றெல்லாம் அற்று, அத்தெய்வீகக் காட்சியை நாடினேன். அத் தருணத்திலேயே மகாவாக்கியமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்னை நாடிப் பற்றியது. 111. இல்லக விளக்கது இருள்கெ டுப்பதுசொல்லக விளக்கது சோதி உள்ளதுபல்லக விளக்கது பலரும் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே. தெளிவுரை: வீட்டு மனைகளில் ஏற்றி வைக்கப்படும் ஒளிவிளக்கானது, புற இருளை அகற்றுகின்ற தன்மை உடையது. திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய என்பது, அகவிளக்காக விளங்கி, மனத்தின் இருளை நீக்க வல்லது. அத் திருவைந்தெழுத்து, சொல் வடிவிலும், சோதி வடிவிலும் விளங்கிப் பயில்வோரும் கேட்போரும் ஆகிய பலராகிய உள்ளங்களிலும் இருந்து விளங்கச் செய்கிறது. பலரும் காணுமாறு விளங்குகின்ற நன்மை வழங்கும் விளக்காக உள்ளது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே. 112. முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்தன்னெறி யேசர ணாதல் திண்ணமேஅந்நெறி யேசென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்நன்னெறி யாவது நமச்சி வாயவே. தெளிவுரை: யாவற்றுக்கும் முன் விளங்கும் சிவநெறியின் முதல்வராக விளங்குபவர், முக்கண்ணராகிய சிவபெருமான். அப்பெருமானின் நெறியாகிய சைவநெறியைச் சரணம் என உறுதியுடன் பற்றி ஒழுகும் பெருமக்கள் எல்லோருக்கும் நன்னெறியை நல்கும் சொல்லாவது நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே ஆகும். 113. மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழநாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்துஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே. தெளிவுரை: பெருமையுடையவளாய்ப் பிணைந்து நிலவும் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழும் ஈசனின் திருவடியை, நாவிற்குப் பிணையாகிய நமச்சிவாயத் திருப்பதிகமாம் இத் திருப்பதிகத்தால் ஏத்தித் தொழுபவர்களுக்கு, எத்தகைய துன்பமும் இல்லை. இது, இம்மையிலும் துன்பம் இல்லை; மறுமையிலும் துன்பம் இல்லை எனவாயிற்று. திருச்சிற்றம்பலம் 12. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 114. சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரேபன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிபொன்மாலை மார்பன்என் புதுநலம் உண்டு இகழ்வானோ. தெளிவுரை: நல்லிசை கொண்டு ஈசனைப் போற்றி வாழ்கின்ற குயிலினங்களே! வண்டுகள் ரீங்காரம் செய்து பண் இசைக்கும் மாலைகள் பல வண்ணம் தரித்திருக்கும் சிவபெருமான், பழனம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; இளமையான பிறைச் சந்திரனைத் திருமுடியில் கொண்டு, பொன் போன்ற கொன்றை மலரைத் திருமார்பில் பொலிய விளங்குபவர். அப்பெருமான், என்னை அடிமை கொண்டு என் உள்ளத்தில் மேவும் அன்புத் தேனைப் பருகியவர். அவரிடம் என்னைப் பற்றிச் சொல்வீராக. அவர் உங்களை இகழவே மாட்டார். அத்தகைய பேரன்பு உடையவர் அவர். இது அகத்துறையின்பாற்பட்டுத் தலைவி, தலைவன்பால் தூது அனுப்பி நினைவூட்டும் பாங்கினில் அமைந்தது. 115. கண்டகங்காண் முண்டகங்காள் கைதைகாண் நெய்தல்காள்பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்வண்டுலாம் தடமூழ்கி மற்றவன்என் தளிர்வண்ணம்கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ. தெளிவுரை: முள்ளிச் செடி காணும் தாமரைகளே! தாழையைக் காணும் நெய்தல்காள்! ஈசன், பாண்டரங்கம் என்னும் புகழ்ப்பாடல்கள் ஓய்விலாது விளங்கும் பழன நகரில் விளங்குபவர்; பொய்கையில் மூழ்கி நீராட என் தளிர் வண்ணத்தைக் கொண்டு என்னை ஆட்கொண்டவர். அப்பெருமான் என்னை நன்கு அறிவார். எனவே என்னைக் குறித்து அருளாது இருப்பாரோ! இது மலர் விடு தூது ஆயிற்று. 116. மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்தபனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாம் பழனத்தான்நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டேசுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. தெளிவுரை: வீட்டுத் தோட்டங்களில் விளங்கும் காஞ்சி மரங்களில் வாசம் செய்யும் இளம் பறவையே! சிவபெருமான், மதம் பொருந்திய நீண்ட துதிக்கையுடைய யானையைக் கொன்று, அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர்; பல்லோராலும் பாடிப் போற்றப்படும் பழனத்தில் வீற்றிருப்பவர். நான் நினைப்பதெல்லாம் உரைப்பயோ! முன்னர் வண்டு மொய்க்கும் குவளை மலர் போன்ற கண்ணுடையாளைத் குவளை தூது சொல்ல அனுப்பினேன். அவள் மயங்கினளோ! 117. புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடுபதியாவது இதுஎன்று பலர்பாடும் பழனத்தான்மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கைவிதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. தெளிவுரை: எப்போதும் புதியதாகவும் இனிமையாகவும் நறுமணம் கமழுமாறு வீசும் தென்றலே! சிவபெருமான், மயானத்தை இடமாகக் கொண்டவர்; பலர் போற்றிப் பாடும் பழனத்தில் வீற்றிருப்பவர்; மதியாத தக்கனுடைய வேள்வியைப் பொருட்டாகக் கருதிப் பங்கேற்ற அனைவரையும் வீரபத்திரர் திருக்கோலம் தாங்கித் தண்டித்தவர்; சந்திரனையும் கங்கையையும் சடை முடியில் தரித்துத் தமது ஆக்ஞைக்கு விதித்தவர். அப்பெருமான், என் ஆன்மாவில் கலந்து திருவிளையாட்டைப் புரிந்தனரோ! 118. மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்பண்பொருந்த இசைபாடும் பழனம்சேர் அப்பனைஎன்கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவேனோ. தெளிவுரை: மண்ணுலகத்தில் இனிது வாழும் மாந்தருக்கும், சிறப்பான ஆசார சீலத்தோடு, தூய்மையான தீர்த்தம் விண்ணுலகத்தில் பொருந்தித் திகழும் தேவருக்கும் முத்திப் பேறாய் விளங்குபவர், சிவபெருமான். அப்பெருமான், பண்ணிசை ஓங்கும் பழனத்தில் வீற்றிருக்கும் என் அப்பன். அவரை நான் கண் துஞ்சி மறையும் காலத்திலும் வழிபடாமல் இருப்பனோ! நான் உயிருள்ள வரை அப் பெருமானை இறைஞ்சி ஏத்துவேன் என்பது குறிப்பு. 119. பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேரும்செங்கால்வெண் மடநாராய் செயற்படுவது அறியேனான்அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்தங்கோல நறுங்கொன்றைத் தாரருளாது ஒழிவானோ. தெளிவுரை: பொங்கி வரும் பெரிய கடலிற் புறம் சென்று இரை தேடும் சிவந்த கால்களை உடைய வெண்நாரையே! நான், என் நிலை மறந்து செயலற்றேன். அழகிய வளையலைக் கவர்ந்த, அழகிய பொழில் சூழ்ந்த பழனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மாலை அணிந்தவர். அவர் அருள் புரியாது இருப்பாரோ! 120. துணையார முயங்கிப் போய்த் துறைசேரும் மடநாராய்பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்தஇணையார மார்பன்என் எழில்நலம் உண்டு இகழ்வானோ. தெளிவுரை: துணையாக விளங்கும் பெடையுடன் நீர்த்துறை சேரும் நாரையே! பக்தி ஆரவாரமும் புகழ்ப் பாடல்களும் ஓய்வின்றி விளங்குகின்ற பழனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், விரிந்து பரந்த வானத்தில் கோட்டைகளை அமைத்திருந்து, தீயன புரிந்த மூன்று அசுரர்களையும், அவர்களுடைய கோட்டைகளையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமான் என் எழிலையும், உள்ளத்தையும் கவர்ந்த திருமார்பினை உடையவர். அவர்பால் என்னைப் பற்றிப் பேசுக. அவர் இகழ்தல் செய்யாதவர். 121. கூவையாய் மணிவரன்றிக் கொழித்தோடும் காவிரிப்பூம்பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்பூவைகாண் மழலைகாள் போகாத பொழுதுளதே. தெளிவுரை: குவியலும் திரட்சியுமாய் விளங்குகின்ற நவமணியும் முத்தும் கொழித்து மேவும் காவிரியன்னை பாயும் பழனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், கோவைக் கனி போன்ற இதழ் கொண்டு மேவும் உமாதேவியைப் பாகமாகக்கொண்டு விளங்குபவர்; வீரம் மிக்க இடபக் கொடியுடையவர். நாகணவாய்ப் பறவையே! நான் அப்பெருமானையே நினைத்து ஏங்குகின்றேன். அதனால் பொழுது போகாதது போன்று நீண்டு வளர்கின்றதே, என் செய்வேன்! 122. புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாம்கள்ளியே னானிவர்க்குஎன் கனவளையும் கடவேனோ. தெளிவுரை: அழகிய புள்ளிகளையுடைய மானும், அரவமும், மற்றும் பிரமன் திருமால் ஆகியோரும் தொழுது ஏத்த இருக்கின்றவர், திருப்பழனத்தில் மேவும் ஈசன். அப்பெருமானை நினைத்துப் போற்றும் அடியவர்களின் வினை யாவும் தீரும் என உலகமெல்லாம் உரைக்கும். கள்ளத்தன்மையுடையவளாகிய நான் என் கைவளையும் நழுவக் கலங்கி ஏங்குகின்றேன். இது அன்பின் மிகையை விதந்து ஓதுதலாயிற்று. 123. வஞ்சித்துஎன் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்பஞ்சிற்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதிகுஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. தெளிவுரை: ஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்க வைத்து வாராமல் இருப்பினும், அவர் மென்மையான சிறகுகளையுடைய அன்னப் பறவை விரிந்து திகழும் பழனத்தில் வீற்றிருப்பவர். உலகின் துன்பங்கள் யாவும் நலிந்து அஞ்சியோடு மாறு, வேள்விகளைப் புரியும் அப்பூதியடிகளின் திருமுடியின் மீது விளங்கும் மலர் என விளங்குவது, அப்பெருமானின் சேவடியே. திருச்சிற்றம்பலம் 13. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 124. விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும்இடகிலேன் அமணர்கள்தம் அறவுரைகேட்டு அலமந்தேன்தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசனைப் பிணையாகப் பற்றி நான், விடாமல் போற்றுபவன் ஆனேன். கீழ்மையுடைய நாய்த் தன்மை உடையவனாய்ப் பிறர்க்கு, அறம் செய்து ஈதலை செய்யாதவனானேன்; அமணர்கள் உரைக்கும் உரைகளைக் கேட்டு அதன்வழி நடந்து துயருற்றேன். சிவபெருமானே! இப்போது தேவரீருடைய செழுமையான திருவடியைத் தரிசிப்பதற்காகத் தொடர்ந்து செல்கின்றேன். இந்நிலையில் திருவையாற்றை அடைகின்றேன். நான் ஆங்கு எழுந்தருளியுள்ள தேவரீரின் அடியவன் ஆகி உய்ந்தேன். 125. செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்கொம்பமரும் கொடிமருங்குற் கோல்வளையாள் ஒருபாகர்வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்தஅம்பவள ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், செம்பவளம் போன்ற வண்ணத் திருமேனியுடையவர்; மனத்திற் குளிர்ச்சி நல்கும் சோதியாய்த் திகழ்பவர்; காதில் குழை அணிந்தவர்; கொடி போன்ற மெல்லிய இடையும், அழகிய வளையலும் அணிந்து விளங்கும் உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டவர்; நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடை முடியின் மீது வைத்து மகிழ்பவர். அப்பெருமான், திருவையாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவார். அப்பெருமானுக்கு நான் அடிமை கொண்டு மகிழும் ஆளாகி உய்ந்தேன். 126. நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானேமணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்அணியானே ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், அண்மையில் நண்ணி விளங்குபவர்; மிகத் தொலை தூரத்திலும் இருப்பவர்; நண்பனாய்த் திகழ்பவர்; செம்பொன்னின் சோதியானவர்; தோலை உடுத்தியவர்; திருவெண்ணீற்றுத் திருமேனியர்; மாணிக்கமாக ஒளிர்பவர்; வானவர்களுக்குத் துன்பம் ஏதும் நிகழாமல் காப்பவர்; அழகு மிக்கவர். அத்தகைய பெருமான், ஐயாற்றில் வீற்றிருப்பவர். அவருக்கு நான் ஆளாகி உய்ந்தேன். 127. ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானேபாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்ஆழித்தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன் ஊழித் தீயாய் நின்று எல்லாவற்றையும் தன்பால் ஈர்த்துப் பிரளய காலத்தில் விளங்குபவர்; உடலில் தோன்றும் மூன்று வகையான தீயாகி வாழும்படி செய்பவர்; வாழ்த்திப் போற்றும் அன்பர்தம் வாய்ச் சொல்லாக விளங்குபவர்; உலகினைப் படைக்கும் வெப்பமானவர்; படர்ந்து மேவும் சடை முடியின் மீது குளிர்ந்த பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான், கடல் போன்ற என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சுழன்று வரும் தீயாகி விளங்கும் ஐயாற்றினர். அவருக்கு நான் ஆளாகி உய்ந்தனன். 128. சடையானே சடையிடையே தவழும்தண் மதியானேவிடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனேஉடையானே உடைதலை கொண்டு ஊரூர்உண் பலிக்குழலும்அடையானே ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், சடை முடியுடையவர்; அதன் மேல் குளிர்ந்த சந்திரனைத் தரித்தவர்; இடப வாகனத்தை உடையவர்; முப்புரங்களை எரித்த வித்தகர்; என்னை ஆளாக உடையவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்க, ஊர் தோறும் திரிந்தவர். அப்பெருமான், அடைதற்கு எதுவும் இல்லாத தன்மையில், தம்பால் யாவரும் அடையுமாறு புரிபவர். ஐயாற்றில் உள்ள அவருக்கு நான் ஆளாகி உய்ந்தேன். 129. நீரானே தீயானே நெதியானே கதியானேஊரானே உலகானே உடலானே உயிரானேபேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான்என்றுஆராத ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், நீராகவும் நெருப்பாகவும் விளங்குபவர்; நற்கதியைத் தரும் தியானமாகவும் நற்கதியாகவும் விளங்குபவர்; ஊரும், உலகும், உடலும், உயிருமாக விளங்குபவர்; மொழியப் பெறும் எல்லாச் சொற்களும் குறிக்கும் பெயராகவும் திகழ்பவர். அவர், பிறைசூடும் பெருமான் ஆவார்; பிணி தீர்க்கும் பெருமானாய்த் திகழ்பவர்; அத்தகையவர் ஐயாற்றில் வீற்றிருக்கும் சிவபெருமான். நான் அவருக்கு ஆளாகி உய்ந்தனன். 130. கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனேஅண்ணான ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், கருத்தாகவும் அகத்தில் நுகர்கின்ற பொருளாகவும் விளங்குபவர்; எண்ணும் எழுத்தும் ஆனவர்; எழுதுகின்ற எழுத்துக்கும் மூலமாய் இயங்குபவர்; ஆகாயமாக விரிந்து மேவுபவர்; ஆகாயத்தில் திரிந்த மூன்று புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; வேதமாகத் திகழ்பவர்; அண்மையாய்த் தோன்றி அருள் வழங்கும் ஐயாற்றில் வீற்றிருப்பவர். அப்பெருமானுக்கு நான் ஆளாகி உய்ந்தனன். 131. மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்நின்னானார் இருவர்க்கும் காண்பரிய நிமிர்சோதிஅன்னானே ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், மின்னலை நிகர்த்த ஒளியும் அதன் உருவமும் ஆனவர்; வேதத்தின் பொருளானவர்; பொன்னும், மணியும், கடலின் முத்தும் ஆனவர்; பிரமனும் திருமாலும் காண்பரிய பெருஞ்சோதி ஆனவர். அப்பெருமானே ஐயாற்றில் மேவும் சிவபெருமான். அவருக்கு நான் ஆளாகி உய்ந்தனன். 132. முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளம் கொழித்து உந்தப்பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்தஎத்திசையும் வானவர்கள் எம்பெருமான் எனஇறைஞ்சும்அத்திசையாம் ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: முத்துக்களையும் பவளங்களையும் கொழிக்கின்ற பொன்னி நதியில் பக்தர்கள் மூழ்கி எழுந்து பணிந்து ஏத்தவும், தேவர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் எம்பெருமானே! என இறைஞ்சி வாழ்த்தவும் உள்ளனர். அவர்களுக்கு அந்த அந்தத் திசைகளில் அருள் நல்கும் பெருமான் ஐயாற்றீசர். அவருக்கு நான் ஆளாகி உய்ந்தனன். 133. கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்திருவிரலால் உதைகரணம் செய்துகந்த சிவமூர்த்திபெருவரைசூழ் வையத்தார் பேர்நந்தி என்றேத்தும்அருவரைசூழ் ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே. தெளிவுரை: ஈசன், இராவணனின் தீய கருத்தானது அழியுமாறு, திருப்பாத விரலால் அடர்த்து உகந்த சிவமூர்த்தியாய் விளங்குபவர்; மலைகள் சூழ்ந்த இவ்வையத்தில் அன்பர்களால் நந்தி என ஏத்தப் பெறுபவர். அவர், அருமையாக ஏத்தப் பெறும் மூங்கில்கள் சூழ்ந்து விளங்கும் ஐயாற்று ஈசன் ஆவார். அவருக்கு நான் ஆளாகி உய்ந்தனன். திருச்சிற்றம்பலம் 14. பொது தச புராணத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் 134. பருவரை யொன்றுசுற்றி அரவங்கைவிட்டஇமையோர்இரிந்து பயமாய்த்திருநெடு மால் நிறத்தை அடுவான் விசும்புசுடுவான் எழுந்து விசைபோய்ப்பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரம் ஒன்றைஅருளாய் பிரானே எனலும்அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்டஅவன் அண்டர் அண்டர் அரசே. தெளிவுரை: தேவர்கள், மேரு மலையை மத்தாகக் கொண்டு, வாசுகி என்னும் அரவத்தை நாணாகப் பற்றிப் பாற்கடலைக் கடைந்த போது கொடிய நஞ்சானது வெளிப்பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாது தேவர்கள் அஞ்சிச் சிதறி ஓடினர். திருமால் தனது நிறம் மாறி வெதும்பினார். இத் துன்பத்திலிருந்து நீங்குமாறு அருள் புரிவீராக! என அனைவரும் ஏத்த, அக்கொடிய நஞ்சினைத் தமது கண்டத்தில் தேக்கி வைத்துப் பாதுகாத்தவர் ஈசன். அவரே, அண்டங்கள் யாவற்றுக்கும் அரசர் ஆவார். 135. நிரவொலி வெள்ளம் மண்டி நெடுஅண்டமூடநிலநின்று தம்ப மதுவப்பரமொர தெய்வம்எய்த இதுஒப்பதில்லைஇருபாலு நின்று பணியப்பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்அறியாமை நின்ற பெரியோன்பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்திஅவனா நமக்கொர் சரணே. தெளிவுரை: பிரமனும் திருமாலும் தமக்குள் பெரியவர் யார் என வாதிட்டு முரணும் காலத்தில் சிவபெருமான் பெருந்தூணாகத் தோன்றி, அடிமுடி காண முடியாதவாறு அமைந்தனர். பின்னர் அவ்விருவரும் ஈசனின் இருபுறமும் நின்று பணிந்தனர். அத்தகைய ஈசனே சிவமூர்த்தியாவர். யாம் அப் பெருமானைச் சரணம் அடைந்தனம். 136. காலமும் நாள்கள்ஊழி படையாமுன்ஏகஉருவாகி மூவர் உருவில்சாலவும் ஆகிமிக்க சமயங்கள் ஆறின்உருவாகி நின்ற தழலோன்ஞாலமு மேலை விண்ணோடு உலகேழும் உண்டுகுறளாய் ஓர் ஆலின் இலைமேல்பாலனும் ஆயவற்கொர் பரமாய மூர்த்திஅவனா நமக்கொர் சரணே. தெளிவுரை: உலகமும் காலமும் தோன்றுவதற்கும், யாவும் படைக்கப்படுவதற்கும் முன்னால் ஏகனாக விளங்கியவர் சிவபெருமான். பின்னர் அயன், அரி, அரன் என மூன்று வடிவினர் ஆயினர். எல்லாமாய் விளங்கும் அப்பெருமான் ஆறு சமயங்களாகவும் விளங்குபவர். உலகேழும் உண்ட திருமால், ஆலிலையின் மேல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்க அவருக்குப் பரம் பொருளாக விளங்குபவர், அவர். நாம் அவரைச் சரண் அடைந்தோம். 137. நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலை குன்றொடுஉலகேழும் எங்கு நலியச்சூடிய கையராகி இமையோர் கணங்கள்துதியோதிநின்று தொழலும்ஓடிய தாரகன்றன் உடலம் பிளந்தும்ஒழியாத கோபம் ஒழியஆடிய மாநடத்தெம் அனலாடி பாதம்அவையா நமக்கொர் சரணே. தெளிவுரை: வானுலகத்தினரும் மண்ணுலகத்தினரும் மற்றும் ஏழு உலகங்களும் நலியுமாறு செய்தவன் தாருகாசூரன். அஞ்சான்று எல்லாரும் சிவபெருமானைத் துதி செய்து காத்து அருளுமாறு வேண்டினர். ஈசன் தன்னை அழித்து விடுவரோ என்று ஓடிய தாருகாசூரனின் உடலைக் கிழித்து பெரிய நடனத்தைப் புரிந்து சினத்தையும் அழிவையும் அடக்கிக் காத்தருளினார். அப்பெருமானுடைய ஆடிய பாதமே நமக்குச் சரண் ஆகும். 138. நிலைவலி இன்றிஎங்கும் நிலனோடு விண்ணும்நிதனம்செய் தோடு புரமூன்றுஅலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்அரணம் புகத்தன் அருளால்கொலைநலி வாளிமூள அரவங்கைநாணும்அனல்பாய நீறு புரமாமலைசிலை கையில்ஒல்க வளைவித்த வள்ளல்அவையா நமக்கொர் சரணே. தெளிவுரை: தனக்கு நிகர் யாரும் இல்லாத வகையில் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அழித்துத் துன்புறுத்திய மூன்று கோட்டைகளையுடைய அசுரர்களை; மேருவை வில்லாகக் கொண்டு வாசுகி என்ற அரவத்தைக் கயிறாகப் பற்றி அக்கினிக் கணை தொடுத்து எரித்துச் சாம்பலாக்கிக் காத்தருளியவர் சிவபெருமான். அவ் வள்ளலைச் சரண மடைவோம். 139. நீலநன்மேனி செங்கண் வளைவெள் ளெயிற்றன்எரிகேச நேடிவருநாள்காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்அளவின் கண் வந்து குறுகிப்பாலனை யோட ஓடப் பயம் எய்துவித்தஉயிர்வவ்வு பாசம் விடும்அக்காலனை வீடு செய்த கழல் போலும் அண்டர்தொழுது ஓதுசூடு கழலே. தெளிவுரை: நீல மேனியும் சிவந்த கண்ணும் வளைந்த வெண்பல்லும் நெருப்புப் போன்ற தலைமுடியும் உடையவன், காலன். காலையும் மாலையும் வழிபாடு செய்யும் மார்க்கண்டேயரை அணுகி அஞ்சுமாறு விரட்டிய அக்காலனைத் திருப்பாதத்தால் அழித்தவர் சிவபெருமான். அத்திருக்கழலே உலகத்தவர் தொழுது போற்றவும் ஓதி ஏத்தவும் முடியின்கண் சூடப் பெறுவதும் ஆகும். 140. உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்அவியுண்ண வந்த இமையோர்பயமுறும் எச்சன் அங்கி மதியோனும் உற்றபடிகண்டு நின்று பயமாய்அயனொடு மாலும்எங்கள் அறியாமையாதிகமியென்று இறைஞ்சி அகலச்சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன்எந்தைகழல்கண்டு கொள்கை கடனே. தெளிவுரை: உயர்ந்ததாகிய தவத்தினைப் புரிந்தவன் தக்கன். அவன் புரிந்த வேள்வியில், அவிர்ப்பாகத்தினை நாடி வந்த தேவர்களும் எச்சன் அக்கினி முதலானோரும் ஈசனுக்கு அஞ்சி ஓடினர்; பிரமனும் திருமாலும் அறியாமையைப் பொறுத்தருளுமாறு வேண்டினர். அத்தகைய ஆற்றல் மிக்க தழல் வண்ணனாகிய ஈசனின் திருக்கழலைக் கண்டு தரிசித்தலே எமக்குக் கடமையாகும். 141. நலமலி மங்கை நங்கை விளையாடி ஓடிநயனத் தலங்கள் கரமாஉலகினை ஏழுமுற்றும் இருள்மூடமூடஇருள்ஓட நெற்றி யொருகண்அலர்தர வஞ்சிமறை நயனங்கைவிட்டுமடவாள் இறைஞ்ச மதிபோல்அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்அவனா நமக்கொர் சரணே. தெளிவுரை: நலங்களை வழங்கும் உமாதேவியார் விளையாட்டின் பாங்காக ஈசனின் இரு திருவிழிகளையும் திருக்கரங்களால் புதைப்ப உலகம் யாவும் இருள் மயமாகியது. அப்போது அவ்விருளை நீக்கும் தன்மையில் ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்து உலகின் இருள் கெடுமாறு ஒளியை உண்டாக்கினார். அவ்வெப்பத்தைக் கண்டு அஞ்சிய அம்பிகை ஈசனை ஏத்த அது மதியைப் போல் குளிர்ந்தது. அத்தகைய முக்கண் மூர்த்தியை நாம் சரண் அடைந்தனம். 142. கழைபடு காடு தென்றல் குயில்கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும்மழைவடி வண்ணன்எண்ணி மகவோனைவிட்டமலரான தொட்ட மதனன்எழில்பொடி வெந்துவீழ இமையோர்கள் கணங்கள்எரியொன்று இறைஞ்சி யகலத்தழல்படு நெற்றி யொற்றை நயனம் சிவந்ததழல்வண்ணன் எந்தை சரணே. தெளிவுரை: இனிமையுடைய கரும்பு வில்லைக் கொண்டு மலர்க் கணை தொடுத்து ஈசன்பால் ஏவுமாறு திருமால், இந்திரன், பிரமன் ஆகியோர் மன்மதனைப் பணித்தனர். அவ்வாறு மன்மதன் செயற்படுத்த, ஈசனின் நெற்றிக் கண்ணால் எரியுண்டு அழிந்தான். அத்தகைய ஆற்றல் மிகுந்த சிவபெருமான், எம் தந்தை. நாம் அவரிடம் சரணம் அடைந்தோம். 143. தடமலர் ஆயிரங்கள் குறைஒன்றதாகநிறைவென்று தன்கண் அதனால்உடன்வழி பாடுசெய்த திருமாலை எந்தைபெருமான் உகந்து மிகவும்சுடரடி யான்முயன்று சுழல்வித்து அரக்கன்இதயம் பிளந்த கொடுமைஅடல்வலி ஆழியாழி அவனுக்களித்தஅவனா நமக்கொர் சரணே. தெளிவுரை: ஆயிரம் தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்த திருமால், ஒரு மலர் குறைவாக இருக்கக் கண்டு, தன்னுடைய கண்ணை இடந்து அருச்சித்தார். அவ்வழிபாட்டில் உகந்த சிவபெருமான், சலந்தராசுரனை அழிப்பதற்காகத் தனது திருப்பாத விரலால் தோற்றுவித்த ஆழிப்படையைத் திருமால் மகிழுமாறு அளித்தார். அத்தகைய பெருமைக்குரிய ஈசன்பால் நாம் சரணம் அடைந்தோம். 144. கடுகிய தேர்செலாது கயிலாய மீதுகருதேல் உன்வீரம் ஒழிநீமுடுகுவ தன்று தன்மம் எனநின்று பாகன்மொழிவானை நன்று முனியாவிடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்வரையுற் றெடுக்க முடிதோள்நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதநினைவுற்றது என்றன் மனமே. தெளிவுரை: விரைந்து செல்லக் கூடிய விமானத்தைக் கயிலாய மலையின் மீது செலுத்தக் கருதேல் என பாகனானவன் இராவணனுக்கு உரைக்க, அவன் செவிமடுக்காது முனிவுற்று விரைந்து சென்று கயிலையை எடுக்கலுற்றான். அதனால் அவனது தோளும் முடியும் இற்று அழுந்துமாறு ஈசன் திருப்பாத விரலால் ஊன்றின். அத்தகைய திருவடியை என் மனமானது ஏத்துதல் ஆயிற்று. திருச்சிற்றம்பலம் 15. பொது பாவநாசத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் 145. பற்றற்றார்சேர் பழம்பதியைப் பாசூர்நிலாய பவளத்தைச்சிற்றம்பலத்தெம் திகழ்கனியைத் தீண்டற்கரிய திருவுருவைவெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்தஒற்றியூர்எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே. தெளிவுரை: ஈசன், புறப்பற்றற்ற அடியவர்கள் சேரும் பழம் பதியாக விளங்கும் திருப்புனவாயில் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்; திருப்பாசூரில் விளங்கும் பவளம் போன்றவர்; சிற்றம்பலத்தில் வீற்றிருந்து திகழ்பவர்; தீண்டுதற்கு அரியவராய்த் தீண்டாத் திருமேனியாக விளங்குபவர்; வெற்றியூரில் விளங்கும் விரிசுடரானவர்; விமலர்; யாவருக்கும் தலைவர்; கடல் சூழ்ந்த திருஒற்றியூரில் மேவும் உத்தமர். அப்பெருமானை நான் என் உள்ளத்துள்ளே வைத்து ஏத்துகின்றேன். 146. ஆனைக்காவில் அணங்கினை ஆரூர்நிலாய அம்மானைக்கானப்பேரூர்க் கட்டியைக் கானூர்முளைத்த கரும்பினைவானப்பேரார் வந்தேத்தும் வாய்மூர்வாழும் வளம்புரியைமானக்கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே. தெளிவுரை: ஈசன், திருவானைக்காவின் தெய்வமாய் விளங்குபவர்; திருவாரூரில் நிலவும் அன்புக்குரியவர்; கானப்பேரில் வீற்றிருப்பவர்; திருக்கானூரில் திகழ்பவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் திருவாய்மூரில் வீற்றிருப்பவர்; பெருமை மிக்க கயிலை மலையில் விளங்குபவர்; அப்பெருமான், அழகிய களிறு போன்றவர்; திங்களும் கதிரவனும் போன்ற சுடர் ஒளி உடையவர். அவரை நான் எக்காலத்திலும் மறவேன். 147. மதியங்கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினைஅதிகை மூதூர் அரசினை ஐயாறுஅமர்ந்த ஐயனைவிதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினைநெதியைஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே. தெளிவுரை: சிவபெருமான், சந்திரனைச் சடைமுடியில் சூடியவர்; சூரியன் போன்று ஒளி மிக்கவர்; அஞ்ஞானத்தைத் தீர்க்கும் அருமருந்து ஆகுபவர்; திருவதிகையில் வீற்றிருந்து பாதுகாப்பவர்; திருவையாற்றில் விளங்கும் தலைவர்; ஊழாக உள்ளவர்; பெரும் புகழாக விளங்கும் வேதநாயகர்; தேவர்கள் விரும்பி ஏத்தும் ஒளிச் சுடராகியவர்; பெருஞ்செல்வமாகத் திகழ்பவர்; ஞானக் கொழுந்தாக விளங்குபவர். அப்பெருமானை நினைத்து ஏத்திய என் உள்ளம் பூரணமாக நிறைவு கொண்டது. 148. புறம்பயத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினைஉறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்கறங்குமருவிக் கழுக்குன்றிற் காண்பார்காணும் கண்ணானைஅறஞ்சூழ்அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே. தெளிவுரை: ஈசன், புறம்பயத்தில் விளங்கும் முத்துப் போன்றவர்; திருப்புகலூரில் மேவும் பொன் போன்றவர்; உறையூரில் ஓங்குபவர் ; சிராப்பள்ளியில் மேவும் ஞாயிறு போன்றவர்; திருக்கழுக்குன்றில் மேவிக் கண்டு தரிசிக்கும் அன்பர்களுக்குக் கண் போன்று விளங்குபவர்; அறநெறி திகழும் திருவதிகையில் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் சிங்கம் போன்ற பெருமையுடையவர்; அப் பெருமானை நான் சரணம் என அடைந்தேன். 149. கோலக்காவிற் குருமணியைக் குடமூக்குறையும்ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்பாலில்திகழும் பைங்கனியைப் பராய்த்துறைஎம் பசும்பொன்னைச்சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத்தொழுதேனே. தெளிவுரை: ஈசன், திருக்கோலக்காவில் குருமணியாய்த் திகழ்பவர்; குடமூக்கில் விளங்கும் திருநீலகண்டர்; திருவாலங்காட்டில் விளங்கும் தேன் போன்றவர்; தேவர்கள் தலையின் மீது விளங்கும் மலர் ஆகியவர்; பாலின் சுவையாய் விளங்குபவர்; திருப்பராய்த் துறையில் விளங்கும் பொன் போன்றவர்; சூலத்தை ஏந்தியவர். அப்பெருமான் யாருடைய துணையும் இன்றித் தனித்து மேவுபவர். நான், அவருடைய திருத்தோளைக் கண்டு மனம் குளிரத் தொழுதேன். 150. மருகல்உறைமா ணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற்கரிய கதிரொளியைப்பெருவேளூர்எம் பிறப்பிலியைப் பேணுவார்கள் பிரிவரியதிருவாஞ் சியத்து எம்செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே. தெளிவுரை: ஈசன், திருமருகலில் வீற்றிருக்கும் மாணிக்க வண்ணர்; திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் பெருமை உடையவர்; திருக்கருகாவூரில் கற்பகம் போன்று அருள்புரிபவர்; காட்சிக்கு அரிய ஒளிமயமாகியவர்; பெருவேளூரில் வீற்றிருக்கும் பிறவாப் பெருந்தகையாய் அருள் புரிபவர்; திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் செல்வர். அப்பெருமானை, என் சிந்தையுள் நிலவப் பதித்தேன். 151. எழிலார்இராச சிங்கத்தை இராமேச்சுரத்துஎம் எழிலேற்றைக்குழலார்கோதை வரைமார்பிற் குற்றாலத்துஎம் கூத்தனைநிழலார்சோலை நெடுங்களத்து நிலாயநித்த மணாளனைஅழலார்வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்துவைத்தேனே. தெளிவுரை: ஈசன், எழில் மிக்க சிங்கராசனைப் போன்றவர்; இராமேச்சுரத்தில் ஏறுபோன்று கம்பீரமாக வீற்றிருந்து அருள் புரிபவர்; உமாதேவியை, மலை போன்ற திருமார்பில் பாகமாகக் கொண்டு, குற்றாலத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமானாய்த் திகழ்பவர்; வளம் பெருகும் சோலை திகழும் நெடுங்களத்தில் நிலவும் மணாளர்; நெருப்புப் போன்ற செவ்வண்ணம் மேவும், அன்பிற்குரியவர். அப்பெருமானை நான் அன்புடன் அணைத்துக் கொண்டேன். 152. மாலைத்தோன்றும் வளர்மதியை மறைக்காட்டுறையு மணாளனைஆலைக் கரும்பின் இன்சாற்றை அண்ணாமலைஎம் அண்ணலைச்சோலைத்துருத்தி நகர்மேய சுடரில்திகழும் துளக்கிலியைமேலைவானோர் பெருமானை விருப்பால் விழுங்கி இட்டேனே. தெளிவுரை: சிவபெருமான், வளர்ந்து மேவும் சந்திரனைப் போன்று நாளும் பெருகி அருள் நல்குபவர்; திருமறைக்காட்டில் உறையும் மணவாளர்; ஆலைக் கரும்பின் சாற்றைப் போன்று, பருகுவார் நெஞ்சில் இனிமையாய் விளங்குபவர்; திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் அண்ணல்; சோலை சூழ்ந்த துருத்தியில், மேவும் சுடர் போன்றவர்; அசைவற்று மேவுபவர்; மேன்மையுடைய தேவர்களின் தலைவர். அப்பெருமானை நான் விரும்பி என் நெஞ்சிற்குள் விழுங்கிப் பேரின்பத்தை ஆன்மாவிற்கு அளித்தேன். 153. சோற்றுத்துறைஎம் சோதியைத் துருத்திமேய தூமணியைஆற்றிற்பழனத்து அம்மானை ஆலவாய்எம் மருமணியைநீற்றிற்பொலிந்த நிமிர்திண்டோள் நெய்த்தானத்தென் நிலாச்சுடரைத்தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே. தெளிவுரை: ஈசன், திருச்சோற்றுத் துறையில் விளங்கும் சோதியானவர்; திருப்பூந்துருத்தியில் மேவும் தூமணியாய்த் திகழ்பவர்; திருப்பழனத்தில் வீற்றிருக்கும் அன்பிற்குரியவர்; ஆலவாயில் திகழும் மணி போன்றவர்; திருவெண்ணீறு பொலியத் திகழும் திண்தோள் கொண்டு, திருநெய்த்தானத்தில் விளங்கும் நிலவொளியைப் போன்றவர்; கடல் போன்று யாங்கணும் விரிந்து திகழ்பவர். அப்பெருமானைக் கண்டு மனம் குளிரத் தொழுதேன். 154. புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்துஎம் போரேற்றைவித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடிஎம் வேதியனைப்பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின்மேய புராணனைவைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர்மேய மருந்தையே. தெளிவுரை: ஈசன், புத்தூரில் உறையும் புனிதர்; திருப்பூவணத்தில் மேவும் அடலேறு போன்றவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர்; திருவேள்விக்குடியில் மேவும் வேதநாயகர்; மாயைத் தன்மையுடைய மூன்று அசுரர் புரங்களையும் எரித்தவர்; பொதிய மலையில் மேவும் தொன்மையானவர். அப்பெருமான் மாத்தூரில் விளங்கும் அருமருந்தானவர்; அவரை என் மனத்தகத்தே இருத்தி ஏத்தினேன். 155. முந்தித்தானே முளைத்தானை மூரிவெள்ளேறு ஊர்ந்தானைஅந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்சிந்தைவெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல்மாலை அடிச்சேர்த்திஎந்தை பெம்மான் எம் எம்மான் என்பார் பாவநாசமே. தெளிவுரை: ஈசன், தானே தோன்றியவர்; வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; அந்திச் செவ்வானம் போன்ற குளிர்ந்த சிவந்த வண்ணத்தினர்; இராவணனுடைய ஆற்றலை அழித்தவர். அத்தகைய சிவபெருமானைச் சிந்தையில் தேக்கியும் மனம் குளிரச் சொல் மாலையால் திருவடியைத் தொழுது போற்றியும், எந்தையே! என் பெருமானே! என்று கசிந்து ஏத்துபவர்களுடைய பாவம் கெடும். திருச்சிற்றம்பலம் 16. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 156. செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்கையர் கனைகழல் கட்டிய காலினர்மெய்யர் மெய்ந் நின்றவர்க்கல்லா தவர்க்கென்றும்பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: ஈசன், சிவந்த வண்ணத்தினர்; வெண்மையான முப்புரி நூல் அணிந்த திருமார்பினர்; மான் கன்று ஏந்திய கையினர்; வீரக் கழலைக் காலில் கட்டியுள்ளார்; மெய்ந்நெறியாய் விளங்குபவர்; மெய்ம்மையுடன் மேவும் அடியவர்க்கு அல்லால் பொய்மையுடைவர்களுக்குத் தோன்றாதவர். அவர் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 157. மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்பாக மதிநுத லாளையொர் பாகத்தர்நாக வளையினர் நாக உடையினர்போகர் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: ஈசன், மால்விடையை வாகனமாக உடையவர்; மின்னலைப் போன்று ஒளிரும் சடை முடியுடையவர்; பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இருப்பவர்; நாகத்தை வளைத்து ஆரமாகக் கட்டி இருப்பவர்; யானையின் தோலை மேலே போர்த்தி இருப்பவர்; சிவமும் சக்தியும் ஆகி உயிர்களுக்குப் போகத்தை வழங்குபவர். அப்பெருமான், புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 158. பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்கருந்தாழ் குழலியும் தாமும் கலந்துதிருந்தா மனமுடை யார்திறத் தென்றும்பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாராய் மேவும் சிவபெருமான், சடை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடி, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாகி விளங்குபவர். அவர் பக்தி கொண்டு ஈசனைப் பணியாதவர்பால் எக்காலமும் பொருந்தாதவராகித் தன்னை வணங்கும் அன்பர்கள் பால் எப்போதும் குடிகொள்வர். 159. அக்குஆர் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்நக்கார் இளமதிக் கண்ணியர் நாள்தொறும்உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும்புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: சிவபெருமான், அழகிய திருமேனியில் உத்திராக்க மாலையை அணிந்தவர்; நாகத்தை அணிந்தவர்; இளமையான சந்திரனைத் தரித்தவர்; பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி ஊர் தொறும் சென்று பலியேற்றவர் . அப்பெருமான் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 160. ஆர்த்தார் உயிர்அடும் அந்தகன் தன்னுடல்பேர்த்தார் பிறைநுதற் பெண்ணினல் லாள்உட்கக்கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற்று ஈருரிபோர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: சிவபெருமான், உயிர்களைத் துன்புருத்தி ஆரவாரம் செய்து திரிந்த அந்தகாசுரனுடைய உடலைக் கூறாக்கி அழித்தவர்; பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியார் வெருவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அவர் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 161. தூமன் கறவம் துதைந்த கொடியுடைக்காமன் கணைவலம் காய்ந்தமுக் கண்ணினர்சேம நெறியினர் சீரை யுடையவர்பூமன் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: வலிமையான சுறா மீனைக் கொடியாக உடைய மன்மதன் கணைதொடுத்த போது, அவனை எரிந்து சாம்பலாகுமாறு செய்த முக்கண்ணுடைய சிவபெருமான், உயிர்களைப் பாதுகாக்கும் நெறியுடையவர்; பெரும் புகழையுடையவர். அவர், பூவுலகத்தில் பெருமையுடன் மேவும் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 162. உதைத்தார் மறலி உருளவொர் காலால்சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்விபதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: ஈசன், மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்தவர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்து, அவிர்ப்பாதத்தை ஏற்க வேண்டும் என்று பங்கேற்ற அக்கினி, சூரியன் முதலானோரின் கரம், சிரம், கண், முதலாக அழியுமாறு வீரம் விளைவித்தவர். அவர் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 163. கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றும்தெரிந்தார் கணைகள் செழுந்தழல் உண்ணவிரிந்தார் சடைமேல் விரிபுனல் கங்கைபுரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: ஈசன், இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உடையவர்; முப்புர அசுரர்களின் மதில்களை எரித்துச் சாம்பலாக்குமாறு கணை தொடுத்தவர்; விரிந்து பரவும் சடையின் மீது பெருகும் புனலாகிய கங்கையைத் தோய வைத்தவர்; அப்பெருமான் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே ஆவார். 164. ஈண்டார் அழலின் இருவரும் கைதொழநீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்சமாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: பிரமன், திருமால் ஆகிய இருவரும் கைதொழுது ஏத்தும் தன்மையில் பெரும் சோதி வடிவாகி ஆதியும் அந்தமும் காணாதவாறு ஓங்கிய ஈசன், இறந்தவர்களின் எழும்பையும், பிரணவ புட்பமாகிய கொன்றை மலர் மாலையையும் தரித்தவர். அப்பெருமான் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே. 165. கறுத்தார் மணிகண்டம் கால்விரல் ஊன்றிஇறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்அறுத்தார் புலன்ஐந்தும் ஆயிழை பாகம்பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. தெளிவுரை: ஈசன், தேவர்கள் உய்யும் தன்மையில், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கறுத்த கண்டத்தினர்; இலங்கையின் வேந்தனாகிய இராவணனைத் தனது திருப்பாத விரலை ஊன்றி கயிலை மலையின் கீழ் அவனுடைய பத்துத் தலையும் நலியுமாறு செய்தவர். ஐம்புலன்களை அறுத்து யோகியாய் நிலவியவர்; உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய் விளங்குபவர். அவர் புகலூரில் வீற்றிருக்கும் புரிசடையாரே. திருச்சிற்றம்பலம் 17. திருவாரூர் அரநெறி (அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில், திருவாரூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 166. எத்தீ புகினும் எமக்குஒரு தீதுஇலைதெத்தே எனமுரன்றுஎம்முள் உழிதர்வர்முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்துஅத்தீ நிறத்தார் அரநெறி யாரே. தெளிவுரை: தீங்கு செய்ய வேண்டும் என்று யார் கருதினாலும் எமக்கு ஒரு தீங்கும் இல்லை; ஈசன், என் உள்ளத்தில் ஒலித்து நின்று திருக்கூத்து புரிபவர், அவர் மூன்று தீயைப் போன்று விளங்கும், மூன்று இலைகளை உடைய சூலத்தைக் கையில் பற்றிக் கொண்டு, அத்தகைய தீவண்ணத்துடன் அரநெறியில் வீற்றிருப்பவரே ஆவார். 167. வீரமும் பூண்பர் விசயனொ டாயதொர்தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிர்அரவுஆரமும் பூண்பர் அரநெறி யாரே. தெளிவுரை: ஈசன், விசயனோடு போர் செய்து வீரம் காட்டும் இயல்பினர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு அம்மையப்பராய் விளங்குபவர்; அன்பு கொண்டு மேவும் அடியவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிக் காத்தருள் புரிபவர்; ஒளிரும் அரவத்தை ஆரமாகப் பூண்டு திகழ்பவர். அப்பெருமான் அரநெறியில் வீற்றிருப்பவரே ஆவார். 168. தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமுமொர்வஞ்ச வண்ணத்தர் வண்டார்குழ லாளொடும்துஞ்ச வண்ணத்தர் துஞ்சாதகண் ணார்தொழும்அஞ்ச வண்ணத்தர் அரநெறி யாரே. தெளிவுரை: ஈசன், தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களைக் காத்தருளும் அருள் வண்ணத்தினர்; சடை முடியுடையவர்; பிறரால் அறியப் பெறாத திருக்குறிப்பின் வண்ணத்தினர்; உமாதேவியோடு விளங்குகின்ற எழில் வண்ணத்தினர்; தேவர்கள் தொழுது ஏத்த அஞ்சேல் எனக் காக்கும் பெருவண்ணத்தினர். அப்பெருமான் அரநெறியில் வீற்றிருப்பவரே ஆவார். 169. விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்றுஇழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே. தெளிவுரை: ஈசன், மன்மதனை விழித்து நோக்கி எரித்தவர்; கங்கையை மண்ணுலகில் பரவுமாறு, பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்திற்கு இசைந்து அருள் புரிந்தவர்; தன்னை வணங்கி ஏத்தும் அடியவர்களின் பாவத்தைத் தீர்ப்பவர்; முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், ஆரூர் அரநெறியில் வீற்றிருப்பவரே ஆவார். 170. துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம்தற்றவர் தம்வினை யானவெலாம் அறஅற்றவர் ஆரூர் அரநெறி கைதொழஉற்றவர் தாம்ஒளி பெற்றனர் தாமே. தெளிவுரை: ஈசன், பிரம கபாலத்தைக் கொண்டு பலி ஏற்று உணவு கொண்டவர்; வேதத்தைக் கோவண ஆடையாகக் கொண்டு கட்டியவர்; தம்மை ஏத்தும் அடியவர்களுடைய வினை யாவும் அறுமாறு செய்பவர். அப்பெருமான் ஆரூர் அரநெறியில் வீற்றிருக்க, அவரைத் தொழுது ஏத்துபவர்கள் பிறவியில் ஒளியைப் பெற்றவர்களே ஆவார். 171. கூடர வத்தர் குரற்கிண் கிணியடிநீடர வத்தர்முன் மாலை யிடையிருள்பாடர வத்தர் பணம்அஞ்சு பைவிரித்துஆடர வத்தர் அரநெறி யாரே. தெளிவுரை: ஈசன், அரவத்தைத் தரித்திருப்பவர்; கிண்கிணி எனும் ஒலியையுடைய சிலம்பினைத் திருப்பாதத்தில் அணிந்துள்ளவர்; மயானத்தின் இருளில் பாடி ஆடும் பேரொளியுடையவர். ஐந்து படங்களையுடைய நாகம் ஆடுமாறு அணிந்து மேவும் அப்பெருமான், அரநெறியில் வீற்றிருப்பவரே ஆவார். 172. கூடவல் லார்குறிப் பில்உமை யாளொடும்பாடவல் லார்பயின்று அந்தியும் சந்தியும்ஆடவல் லார்திரு வாரூர் அரநெறிநாடவல் லார்வினை வீடவல் லாரே. தெளிவுரை: ஈசன், உமாதேவியாரோடு இணைந்து அம்மையப்பராய் விளங்குபவர்; பாடுபவர்; அந்தியும் சந்தி நேரங்களிலும், ஆடல் புரிய வல்லவர்; அப்பெருமான், திருவாரூர் அரநெறியில் வீற்றிருப்பவர்; அவரை நாடி வணங்குபவர்களுக்கு வினை யாவும் தீரும். 173. பாலை நகுபனி வெண்மதி பைங் கொன்றைமாலையும் கண்ணியும் ஆவன சேவடிகாலையும் மாலையும் கைதொழுவார் மனம்ஆலையம் ஆரூர் அரநெறி யார்க்கே. தெளிவுரை: ஈசன், பால் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; கொன்றை மாலை தரித்தவர். அப்பெருமானுடைய சேவடியைக் காலையும் மாலையும் கைதொழுது போற்றுபவர்களின் மனமே ஆலயம் ஆகும். அது ஆரூரில் நிலவும் அரநெறியில் வீற்றிருக்கும் பெருமானுக்கு உரியது. 174. முடிவண்ணம் வானமின் வண்ணம்தம் மார்பின்பொடிவண்ணம்தம் புகழ் ஊர்தியின் வண்ணம்படிவண்ணம் பாற்கடல் வண்ணம் செய்ஞாயிறுஅடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே. தெளிவுரை: ஈசன், வானத்தில் தோன்றும் மின்னரின் வண்ணம் போன்று திருமுடியின் வண்ணம் கொண்டவர். ஊர்ந்து செல்லும் அவரது வெள்விடை போன்று, திருமார்பில் குழையப் பூசும் திருநீற்றின் வண்ணம் வெண்மை உடையது. அவர், பாற்கடலின் உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டுள்ளவர். அப்பெருமானுடைய திருவடியின் வண்ணமானது, செஞ்ஞாயிறு போன்ற ஒளி வண்ணம் உடையதே. அத்தகைய வண்ணங்களையுடையவர் ஆரூரில் மேவும் அரநெறியில் வீற்றிருக்கும் பெருமானே ஆவார். 175. பொன்கவில் புன்சடை யானடி யின்நிழல்இன்னருள் சூடிஎள் காதும்இ ராப்பகல்மன்னவர் கின்னரர் வானவர் தாம்தொழும்அன்னவர் ஆரூர் அரநெறி யாரே. தெளிவுரை: அழகு நவிலும் மென்மையான, நீண்டு விரிந்து பரந்த ஒளி திகழும் சடை முடியுடைய ஆரூரின் அரநெறியில் வீற்றிருக்கும் பெருமானின் திருவடி ஒளியின் கீழ் இருந்து, இனிய அருளைப் பருகி மன்னர்களும், தேவர்களும், கின்னரர்களும் இரவும் பகலும் தொழுகின்றனர். 176. பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்டமருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்துகருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சுண்டஅருள் மன்னர் ஆரூர் அரநெறி யாரே. தெளிவுரை: குபேரனிடமிருந்து புட்பக விமானத்தைக் கவர்ந்த இராவணன், கயிலையைப் பெயர்த்த போது அவனைத் திருப்பாதத்தால் அடர்த்தி, வீரம் மிக்க வாளை வழங்கியவர், சிவபெருமான். அவர், தேவர்களையும் மாந்தர்களையும் காத்தருளும் அருளின் அழகராயும் வேந்தராயும் திகழ்பவர்; தமது கண்டமானது கருமை கொண்டு திகழுமாறு நஞ்சினை உண்டவர். அப்பெருமான் ஆரூர் அரநெறியாரே. திருச்சிற்றம்பலம் 18. பொது விடம் தீர்த்த திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் 177. ஒன்றுகொ லாம்அவர் சிந்தை யுயர்வரைஒன்றுகொ லாம்உய ரும்மதி சூடுவர்ஒன்றுகொ லாம்இடு வெண்டலை கையதுஒன்றுகொ லாம்அவர் ஊர்வதுதானே. தெளிவுரை: அன்பர்களுடைய சிந்தையில் ஒன்றி இருந்து ஓங்கி உயரும் திருக்கயிலாய மலையை உடையவர், சிவபெருமான். அஃது ஒன்றே ஒன்று; அப்பெருமான், சந்திரனை வளர்ந்து திகழுமாறு சூடிக் காத்தருளியவர். அதுவும் ஒன்றே; பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினைக் கொய்து, அதனை ஏந்திப் பலி ஏற்றவர், ஈசன். அத்திருவோடு ஒன்றே ஆகும். அப்பெருமான் வாகனமாக ஊர்ந்து செல்வது ஒற்றை எருதே. 178. இரண்டுகொ லாம்இமை யோர்தொழு பாதம்இரண்டுகொ லாம்இலங் கும்குழை பொண்ணாண்இரண்டுகொ லாம்உரு வம்சிறு மான்மழுஇரண்டுகொ லாம்அவர் எய்தின தாமே. தெளிவுரை: ஈசன், தேவர்கள் தொழுது போற்றும் பரஞானம், அபர ஞானம் ஆகிய இரண்டு திருப்பாதங்களை உடையவர்; இலங்குகின்ற குழை இரண்டினைக் காதில் அணிந்திருப்பவர்; பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு அம்மையப்பராய்த் திருமேனியுடையவர். அவர் மான், மழு ஆகிய இரண்டையும் ஏந்திய கையினரே ஆவார். 179. மூன்றுகொ லாம்அவர் கண்ணுத லாவனமூன்றுகொ லாம்அவர் சூலத்தின் மொய்யிலைமூன்றுகொ லாம்கணை கையது வில்நாண்மூன்றுகொ லாம்புரம் எய்தன தாமே. தெளிவுரை: ஈசன், மூன்று கண்களையுடையவர், அப்பெருமான், மூவிலை வேல் போன்ற சூலத்தை ஏந்தியவர். அவர் வில், நாண், அம்பு என மூன்றும் கொண்டு முப்புரம் எரித்தவர். அவர் வாயு, திருமால், அக்கினி ஆகிய மூவரைக் கணையாகக் கொண்டு எய்து, மூன்று புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர் எனவும் உணர்த்தும். 180. நாலுகொ லாம்அவர் தம்முகம் ஆவனநாலுகொ லாம்சன னம்முதல் தோற்றமும்நாலுகொ லாம்அவர் ஊர்தியின் பாதங்கள்நாலுகொ லாம்மறை பாடின தாமே. தெளிவுரை: ஈசனுக்குத் திருமுகம் நான்காகும். பிறப்பின் வகை நான்காம். ஈசன் ஏறுகின்ற இடபத்தின் பாதங்கள் நான்கு. அப்பெருமான் பாடும் வேதம் நான்கு. 181. அஞ்சுகொ லாம்அவர் ஆடர வின்படம்அஞ்சுகொ லாம்அவர் வெல்புலனாவனஅஞ்சுகொ லாம்அவர் காயப்பட்டான்கணைஅஞ்சுகொ லாம்அவர் ஆடின தாமே. தெளிவுரை: ஈசன் ஆபரணமாகப் பூண்டு விளங்கும் அரவம் ஐந்து தலைகளை உடையது. அப்பெருமான் வெற்றி கண்டது ஐம்புலன்கள். அவர் நெற்றிக் கண் கொண்டு எரித்தது, மன்மதனுடைய தேகமாகும். அவர் கொண்டிருந்த கணையானது, தாமரை அசோகு, மா, முல்லை, கருங்குவளை ஆகிய ஐந்து மலர்களால் ஆகியது. ஈசன் பூசனையால் அபிடேகிக்கப்படுவது பசுவின் பஞ்ச கௌவியம் ஆகும். 182. ஆறுகொ லாம்அவர் அங்கம் படைத்தனஆறுகொ லாம்அவர் தம்மக னார்முகம்ஆறுகொ லாம்அவர் தார்மிசை வண்டின்கால்ஆறுகொ லாம்சுவை யாக்கின தாமே. தெளிவுரை: ஈசன் வகுத்த வேதத்தின் அங்கம் ஆறு; அப்பரமனின் திருக்குமாரராகிய முருகக் கடவுளுக்குத் திருமுகம் ஆறு; ஈசன் அணிந்திருக்கும் மாலையைச் சுழன்று விளங்கும் வண்டின் கால்கள் ஆறு. உணவின் சுவை ஆறு. 183. ஏழுகொ லாம்அவர் ஊழி படைத்தனஏழுகொ லாம்அவர் கண்ட இருங்கடல்ஏழுகொ லாம்அவர் ஆளும் உலகங்கள்ஏழுகொ லாம்இசை யாக்கின தாமே. தெளிவுரை: ஈசன் ஊழிதோறும் படைக்கும் தன்மை ஏழு பிறவிகள் ஆகும். அவர், கண்ட கடல்கள் ஏழு, உலகங்கள் ஏழு; இசை ஏழு. 184. எட்டுகொ லாம்அவர் ஈறில் பெருங்குணம்எட்டுகொ லாம்அவர் சூடும் இனமலர்எட்டுகொ லாம்அவர் தோளிணை யாவனஎட்டுகொ லாம்திசை யாக்கின தாமே. தெளிவுரை: ஈசன் எண் குணத்தையுடையவர். அவர் சூடுகின்ற இனமலர்கள் எட்டு ஆகும். அப்பெருமான் எண் தோள் உடையவராய் வீசி நின்று ஆடுபவர். அவரால் படைக்கப் பெற்ற திசைகள் எட்டாகும். 185. ஒன்பது போல்அவர் வாசல் வகுத்தனஒன்பது போல்அவர் மார்பினில் நூலிழைஒன்பது போல்அவர் கோலக் குழற்சடைஒன்பது போல்அவர் பாரிடம் தானே. தெளிவுரை: ஈசன் மன்னுயிர் கொண்டு மேவும் இத்தேகத்திற்கு ஒன்பது துவாரங்களை வகுத்தவர். அப்பெருமான் முப்புரி நூலில் ஒவ்வொரு புரியும் மூன்று இழைகளாக ஒன்பது புரிகளை அணிந்து விளங்குபவர். அவர் ஒன்பது சடைகளை விரித்து ஆடுபவர். அவர் ஒன்பது கண்டங் கொண்டருள் பரப்பு உடையவர். 186. பத்துக்கொ லாம்அவர் பாம்பின்கண் பாம்பின்பல்பத்துக்கொ லாம்எயி றும்நெரிந்து உக்கனபத்துக்கொ லாம்அவர் காயப்பட்டான் தலைபத்துக்கொ லாம்அடி யார்செய்கை தானே. தெளிவுரை: ஈசன் அணிந்திருக்கும் ஐந்து தலை கொண்ட பாம்பின் கண்ணும் பல்லும் பத்து; இராவணன் ஈசனால் கயிலையின் கீழ் நெரிப்பட்டு விழுந்த பல்லும் நலிந்த முடியும் பத்து. அடியவர்கள் பத்து நற்குணங்களால் செய்யப்படுவன பக்தியே. திருச்சிற்றம்பலம் 19. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 187. சூலப்படையானைச் சூழாக வீழருவிக்கோலத் தோள் குங்குமம்சேர் குன்றுஎட்டு உடையானைப்பால்ஒத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காயஆலத்தின் கீழானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், சூலப்படையினர்; குன்றிலிருந்து வீழும் அருவி போன்று, அழகிய குங்குமம் போன்ற சிவந்த, குன்று அன்ன எட்டுத் தோள்களை உடையவர்; பால் போன்ற இனிமையும், சத்தும் உடைய, மென்மையான மொழி பேசும் உமாதேவியைப் பாகம் கொண்டவர்; ஆல் நிழலின் கீழ் இருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உணர்த்தியவர். அப்பெருமானை நான் திருவாரூரிலே கண்டேன். 188. பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்புக்கவூர்ப் பிச்சையேற்று உண்டு பொலிவுடைத்தாய்க்கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோடுஅக்கணிந்த அம்மானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், பூதகணங்கள் பக்கத்தில் சூழ விளங்குபவர்; மண்டை ஓட்டை ஏந்தி ஊர் தோறும் சென்று பிச்சை ஏற்று உண்டவர்; பொலிவு உடையவராய்க் கொக்கின் இறகைச் சூடியவர்; கோவண ஆடையுடையவர்; பாசி மணியணிந்தவர். அப்பெருமானை நான் ஆரூரில் கண்டேன். 189. சேய உலகமும் செல்சார்வும் ஆனானைமாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பானைவேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்ஆயத் திடையானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், இவ்வுலகம் மட்டும் அல்லாது தொலைவில் உள்ள எல்லா உலகங்களும் ஆனவர்; அருள் நலம் மேவிச் செல்லுகின்ற சார்வாகிய இறுதியுடைய முத்தியுலகமும் ஆனவர். மாயையில் வல்லவர்களாகிய முப்புர அசுரகளை வென்றவர். நீண்ட மாலைகளை அணிந்த திருமார்பினர்; மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராகிக் காட்சி தருபவர். அப்பெருமானை நான் ஆரூரில் கண்டேன். 190. ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படரமாறேற்றர் வல்லரணம் சீறி மயானத்தில்நீறேற்ற மேனியனாய் நீள்சடைமேல் நீர்ததும்பஆறேற்ற அந்தணனை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறி எண்கணத்தவரும் ஏத்துமாறு திகழ்பவர்; மாற்றுக் கொள்கையுடையவராகித் தீமை விளைவித்த முப்புர அசுரர்களைச் சீறி எரித்தவர்; மயானத்தில் விழைந்து ஆடுபவர்; சடை முடியின் மீது கங்கை நீரை ஏற்றவர்; திருநீறு பூசிய திருமேனியர். அந்தணராய் மேவும் அப்பெருமானை நான் ஆரூரில் கண்டேன். 191. தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்பாங்கான ஊர்க்கெல்லாம் செல்லும் பரமனார்தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில்பூங்கோயில் உண்மகிழ்ந்து போகாதிருந்தாரே. தெளிவுரை: சிவபெருமான், அழகிய வெள்ளெலும்பு மாலை அணிந்தவர். இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து எல்லா ஊர்களுக்குச் செல்லும் பரமன். அப்பெருமான் திருவாரூர் என்னும் தென்னகரில் மேவும் பூங்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருப்பவர். 192. எம்பட்டம் பட்டம் உடையானை ஏர்மதியின்நும்பட்டம் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்செம்பட்டு உடுத்துச் சிறுமான் உரியாடைஅம்பட்டு அசைத்தானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: ஈசன், பெருமையுடைய நெற்றியில் வீரப்பட்டத்தைக் கட்டி உள்ளவர்; அழகிய சந்திரனைச் சூடியவர்; பட்டும் தோலுடையும் உடுத்தியவர்; மான் ஏந்திய கரத்தினர். அப்பெருமானை நான் ஆரூரில் கண்டேன். 193. போழொத்த வெண்மதியம் சூடிப் பொலிந்திலங்குவேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்ஆழித்தேர் வித்தகனை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: ஈசன், பிறைச் சந்திரனைச் சடை முடியின் மீது சூடிப் பொலிந்து விளங்குபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; தனது திருவிளையாடல்களைப் புரியும்போது, உமாதேவியும் வெருவுமாறு ஆற்றும் தன்மையுடையவர்; ஊழித் தீயைப் போன்று வெப்பம் உடையவர்; பேரொலி திகழ ஆர்க்க விளங்கிச் செலுத்தப்படும் தேரின் மீது நிலவி உலா வரும் வித்தகர். அப்பெருமானை, நான் ஆரூரில் கண்டேன். 194. வஞ்சனையா ரார்பாடும் சாராத மைந்தனைத்துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்துஅம்சுடராய் நின்றானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: ஈசன், வஞ்சனையாகப் பாடும் தன்மையை உடையவர்பால் சாராதவர்; அடர்ந்த நள்ளிருளில் நடனத்தை உகந்து ஆடுபவர்; தொண்டர் தம் உள்ளத்தில், துன்பம் சூழ்ந்து வருந்தும் போது, தண்ணொளி தந்து அருஞ்சுடராய் விளங்கி இனிமை தருபவர். அப்பெருமானை, நான் ஆரூர் என்னும் தலத்தில் கண்டேன். 195. காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்னநீரமுது கோதையோடு ஆடிய நீள்மார்பன்பேரமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல்நஞ்சுஆரமுதா உண்டானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், கார் காலத்தில் அமுதம் போன்று செழிப்புடன் மேவும் நறுமணம் கமழும் கொன்றை மலரைத் திருமார்பில் தரித்தவர்; நீரமுதாக விளங்கும் கங்காதேவியைச் சடைமுடியில் தரித்தவர்; தேவர் அமுதம் உண்டு நன்கு வாழும் தன்மையில் பெருங் கடலில் முதற் கண் விளைந்த நஞ்சினை அமுதம் என உட்கொண்டவர். அப்பெருமானை நான் ஆரூரில் கண்டேன். 196. தாடழுவு கையன் தாமரைப்பூஞ் சேவடியன்கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனைஆடும்தீக் கூத்தனை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், நீண்ட கைகளை உடையவர்; தாமரை மலர் போன்ற திருவடியை உடையவர்; கோடுதல் இல்லாத திருப்பொலிவுடன் மேவுபவர்; வீணையைக் கையில் ஏந்தியவர்; ஆடுகின்ற அரவத்தைப் பூண்கின்ற ஆரமாகவும், கிண்கிணி என ஒலிக்கின்ற நாதத்தை உடைய வீரக்கழலும், சிலம்பும், காலில் அணிந்திருப்பவர்; பெருமையுடன் திகழ்பவர்; நெருப்பினைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; அப் பெருமானை, நான் ஆரூரில் கண்டேன். 197. மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலால்துஞ்சாப் போர் வாளரக்கன் தோள்நெரியக் கண்குருதிச்செஞ்சாந்து அணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்றுஅஞ்சாந்து அணிந்தானை நான்கண்டது ஆரூரே. தெளிவுரை: சிவபெருமான், மேகம் தவழும் கயிலை மலையை அழகு திகழும் திருப்பாத விரலால் ஊன்றி, இராவணனுடைய தோள்கள் நெரியவும், கண்கள் குருதியைப் பெருக்கவும் அடர்த்தவர். அவர், பால் போன்ற திருவெண்ணீற்றைக் குழைத்துத் திருமார்பில் பூசியவர். அப்பெருமானை, நான் ஆரூரில் கண்டேன். திருச்சிற்றம்பலம் 20. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 198. காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன்மனம் புகுந்தாய் கழலடிபூண்டு கொண்டு ஒழிந்தேன்புறம்போயினால் அறையோஈண்டுமாடங்கள் நீண்டமாளிகைமேல்எழுகொடிவான் இளம்மதிதீண்டிவந்து உலவும்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: மாட மாளிகைகளும், மாளிகையின் மீது சந்திரனைத் தீண்டுமாறு விளங்கும் உயர்ந்து எழும் வண்ணக் கொடிகளும் நிலவும் திருவாரூரில் மேவும் அன்புக்குரிய தலைவனே! தேவரீரைக் கண்டு தரிசித்து மகிழ்தலையே நான் நோக்கமாகக் கருதி இருந்தேன். தேவரீர், என் மனத்தில் புகுந்தீர். தேவரீருடைய திருவடி நெஞ்சில் பதிய, என் வினைகள் நீங்கின. தேவரீரை இனிப் புறத்தே விடேன். யான் புறம் செல்லலாகாது. உரைப்பீராக. காப்பீர் என்பது குறிப்பு. 199. கடம்படந் நடம் ஆடினாய் களைகண்ணினக்கொரு காதல் செய்தடிஒடுங்கிவந்து அடைந்தேன்ஒழிப்பாய் பிழைப்பவெல்லாம்முடங்கிறால் முதுநீர் மலங்கிளவாளை செங்கயல் சேல்வ ரால்களிறுஅடைந்த தண்கழனிஅணியாரூர் அம்மானே. தெளிவுரை: இறால், வாளை, கயல், சேல் முதலானவை திகழும் குளிர்ச்சியும் நீர்வளமும் கொண்ட கழனிகளையுடைய அழகிய ஆரூரில் மேவும் அன்பிற்குரிய தலைவனே! அஜபா நடனம் புரியும் தியாகேசனே! அடியவர்களின் துன்பத்தைத் தீர்க்கும் ஈசனே! பெருங்காதல் கொண்டு தேவரீரின் திருவடியில் நான் ஒடுங்குமாறு அடைந்தேன். என் பிழைகள் யாவையும் தீர்த்தருள்வீராக. 200. அருமணித்தடம் பூண்முலைஅரம்பையரொடு அருளிப் பாடியர்உரிமையில் தொழுவார்உருத்திர பல்கணத்தார்விரிசடை விரதிகள் அந்தணர் சைவர்பாசுபதர் கபாலிகள்தெருவினிற் பொலியும்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: அழகிய மணிகளையுடைய அரம்பையரோடு அருளிப் பாடியவர், உரிமையில் தொழுபவர், உருத்திர பல்கணத்தார், விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், காபாலிகள் ஆகிய எண் கணத்தினரும் (பாடல் வ.எண் 190) தெருவில் பொலிந்து தொடரத் திருவாரூரில் மேவும் ஈசன் திருவுலா வருபவராவார். 201. பூங்கழல் தொழுதும் பரவியும்புண்ணியா புனிதாஉன் பொற்கழல்ஈங்கிருக்கப் பெற்றேன்என்னகுறை யுடையேன்ஓங்குதெங்கிலை யார்கமுகுஇளவாழைமாவொடு மாதுளம்பலதீங்கனி சிதறும்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: ஓங்கி வளரும் தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், வாழை, மா, மாதுளம் மற்றும் தீங்கனிகள் சிதறும் வளமுடைய திருவாரூரில் மேவும் அன்புக்குரிய தலைவனே! தேவரீருடைய பூங்கழலைத் தொழுதும் பரவிப் போற்றியும், புண்ணியனே! புனிதனே! என ஏத்தியும் நான் இருக்கப் பெற்றேன். ஆதலால், என்ன குறை எனக்கு உள்ளது? குறை ஏதும் இல்லை என்பது குறிப்பு. 202. நீறுசேர்செழு மார்பினாய் நிரம்பாமதியொடு நீள்சடை யிடைஆறுபாய வைத்தாய்அடியே அடைந் தொழிந்தேன்ஏறி வண்டொடு தும்பியஞ்சிறகுஊன்றவிண்ட மலரிதழ்வழிதேறல்பாய்ந்து ஒழுகும்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: வண்டும் தும்பியும் அழகிய சிறகுகளை ஊன்றிப் பதித்தலால் மலர்ந்த பூக்களிலிருந்து வழிந்து பெருகும் தேன் ஊறும் திருவாரூரில் வீற்றிருக்கும் அன்புடைய தலைவனே! திருவெண்ணீறு குழையப் பூசும் திருமார்பினையுடைய ஈசனே! பிறைச் சந்திரனைச் சடை முடியில் திகழக் கங்கையைத் தரித்த பரமனே! தேவரீரின் திருவடியை அடைந்து எனது வினை யாவும் நீங்கப் பெற்றேன். 203. அளித்து வந்தடி கைதொழுமவர்மேல்வினைகெடும் என்றி வையகம்களித்துவந் துடனேகலந்தாடக் காதலராய்க்குளித்துமூழ்கியும் தூவியும் குடைந்துஆடு கோதையர் குஞ்சியுட்புகத்தெளிக்கும் தீர்த்தம் அறாத்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: திருவாரூரில் வீற்றிருக்கும் அன்புக்குரிய தலைவனே! இத்திருத்தலமானது தீர்த்தச் சிறப்பு உடையது. அன்பு மிக்கவராய்க் குளித்து மூழ்கியும், குடைந்து ஆடியும் தூவித் தெளித்தும் இத்தீர்த்தத்தை ஆடவரும் மகளிரும் பெறுகின்றனர். அந்நிலையில் தேவரீரின் திருவடியைப் பணிந்து கைதொழுது ஏத்துகின்றனர். அதன் பயனாக அடியவர்கள் வினை நீங்கப் பெறுகின்றனர். 204. திரியு மூவெயில் தீயெழச் சிலைவாங்கிநின்றவ னேயென் சிந்தையுள்பிரியுமாறு எங்ஙனேபிழைத்தேயும் போகலொட்டேன்பெரியசெந்நெற் பிரம்புரிகெந்தசாலிதிப்பிய மென்றி வையகத்துஅரியும் தண்கழனிஅணிஆரூர் அம்மானே. தெளிவுரை: பெரிய செந்நெல், பிரம்புரி, சாலி முதலான நெல் வகைகளின் வளப்பம் கொண்ட ஆரூரில் வீற்றிருக்கும் அன்பிற்குரிய தலைவனே! திரிந்து சென்று தீயன புரிந்த மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு வில்லேந்திக் கணை தொடுத்த ஈசனே! என் சிந்தையிலிருந்து தேவரீர் எங்ஙனம் பிரிய இயலும். நான் தவறியும் தேவரீரைப் போகுமாறு செய்ய மாட்டேன். 205. பிறத்தலும் பிறந் தாற்பிணிப்படவாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்றுஇறக்குமாறு உளதேஇழிந்தேன் பிறப்பினைநான்அறத்தை யேபுரிந்த மனத்தனாய்ஆர்வச்செற்றக் குரோதம் நீக்கியுன்திறத்தனாய் ஒழிந்தேன்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: திருவாரூரில் வீற்றிருக்கும் அன்பிற்குரிய தலைவனே! பிறவி எடுத்தலும், பிறந்து எடுத்த பிறவியில் நோயுற்று உடல் நலிந்தும் தளர்ச்சியுற்றும் இறக்குமாறு உடையது இவ்வாழ்க்கை. தேவரீரை அடைந்த யான் தேவரீரின் கருணையால் இத்தன்மையை ஒழித்தேன்; பிறப்பினை நீத்தேன்; அறத்தையே புரியும் மனத்தினன் ஆனேன்; உணர்வைக் களைந்தேன். இவை யாவும் தேவரீரின் அருள் வல்லமையால் நிகழ்ந்தது. 206. முளைத்த வெண்பிறை மொய்சடையுடையாய்எப் போதும்என் நெஞ்சிடம் கொள்ளவளைத்துக் கொண்டிருந்தேன்வலிசெய்து போகலொட்டேன்அளைப் பிரிந்த அலவன்போய்ப்புகுந்தகாலமும் கண்டு தன்பெடைதிளைக்கும் தண்கழனித்திருவாரூர் அம்மானே. தெளினுரை: சேற்றிலிருந்து வெளியே ஆண் நண்டானது வளைக்குள் புகுந்து, தன்பெடை கண்டு மகிழும் குளிர்ச்சி மிக்க வளங் கொழிக்கும் கழனிகளையுடைய திருவாரூரில் மேவும் அன்பிற்குரிய தலைவனே! இளமையான வெண்பிறைச் சந்திரனைத் தரித்த பெருமானே! தேவரீரை என் நெஞ்சில் வளைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் வலிமையாகப் பிடித்துக் கொண்டேன். தேவரீரை வெளியே செல்ல விடமாட்டேன். 207. நாடினார்கம லம்மலர்அய னோடுஇரணியன் ஆகம் கீண்டவன்நாடிக் காண மாட்டாத்தழலாய நம்பானைப்பாடுவார்பணி வார்பல்லாண்டிசைகூறு பத்தர்கள் சித்தத் துள்புக்குத்தேடிக் கண்டு கொண்டேன்திருவாரூர் அம்மானே. தெளிவுரை: திருவாரூர் மேவும் அன்பிற்குரிய தலைவனே! மலர் மேல் உறையும் பிரமனும், இரணியன் உடலைக் கிழித்த திருமாலும் காண முடியாதவாறு பெருந் தழலாகி ஓங்கிய நம்பனே! தேவரீரைப் பாடுபவர்களும், பணிபவர்களும், பல்லாண்டு கூறுபவர்களும் ஆகிய பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவரே நீவிர் எனத் தேடிக் கண்டு கொண்டேன். திருச்சிற்றம்பலம் 21. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 208. முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலேபத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னேவித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்அத்தன்ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம். தெளிவுரை: முத்துக்களைக் கோர்வையாகக் கட்டிய மேல் விதானத்தில், மணிகளும் பொன்னும் இழைக்கப் பெற்ற கவரி விளங்க, முறைப்படி பக்தர்களும் பாவையர்களும் சூழ, ஈசன் பொலிபவர். அவர் பின்னே வித்தகத் திருக்கோலத்தில், எண் கணத்தினருள் ஒருவராகிய விரதிகள் தலைமாலை ஏந்தியுள்ளனர். அத்தகைய எழில் வண்ணம் உடையது ஆரூரில் மேவும் ஈசனின் திருவாதிரை நாளின் சிறப்பாகும். 209. நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்பிணிதான் தீரும்என்று பிறங்கிக் கிடப்பாரும்மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்குஅணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அனைவரும், நாள் தோறும் வந்து ஏத்திப் பிணி தீர்த்து அருள்வீராக, என வேண்டுகின்றனர். மணியே! பொன்னே! மைந்தா! மணாளா! எனப் போற்றித் தொழுகின்றனர். அவ்வாறு ஏத்தும் அடியவர்களுக்கு அண்மையாய் மேவி அருள் நல்குபவர் ஆரூர் ஈசன். அது ஆதிரைத் திருநாளின் வண்ணம் ஆயிற்று. 210. வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்சோதிகள் விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்சாதிகளாய் பவளமு முத்துத் தாமங்கள்ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: வீதிகள் தோறும் வெண் கொடிகளும் விதானத்தில் சுடர் விடும் மணிகளும் ஒளி தோன்ற அலங்கரிக்கப்பட்டுப் பவளமும் முத்தும் பொலிய விளங்கும் மாலைகளும் திகழத் திருவாதிரை நாளில் வண்ணம் கொண்டுள்ளது. 211. குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்பிணங்கித்தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்அணங்கன்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: திருத்தொண்டர்கள், ஈசனின் எண்குணச் சிறப்புக்களைப் பேசியும், திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியும் ஏத்துகின்றனர்; பக்தி வயத்தினால் தம் தம் நிலை மறந்து, அர நாமத்தை ஓதுகின்றனர்; வணங்கி நின்று தொழுகின்றனர். தேவர்கள் நாள்தோறும் வந்து துதிக்கின்றனர். இத்தகைய வண்ணம் உடையது, ஈசன் விளங்கும் ஆரூரில் நிலவும் திருவாதிரை நாள். 212. நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்கலவ மஞ்ஞை கார்என்று எண்மிக் களித்துவந்துஅலமர்ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம். தெளிவுரை: நிலவைப் போன்ற வெண் சங்கும் பறையும் ஆர்த்து எழவும் பலரும் எழுப்பும் நடனத்திற்குரிய வாத்தியங்கள் முழங்கவும், மயில்கள் அவ்வொலிகளைக் கேட்டு இடி முழங்கும் ஒலியெனக் கருதி, மழை வரும் என எண்ணிக் களித்தும் நடனம் புரிகின்றன. அத்தகைய எழுச்சியுடையது ஆதிரை நாளின் எழில் வண்ணம். 213. விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்எம்மான் ஈசன் எந்தைஎன் அப்பன் என்பார்கட்குஅம்மான் ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம். தெளிவுரை: பக்தியால் விம்மியும், வெருவியும், விழித்து நோக்கித் தன்னிலை தளர்ந்தும் இருக்கும் அடியவர்களுக்குத் தலைவனாய் விளங்கும் சிவபெருமான், பேரருள் புரிபவர். அத்தகைய அன்பின் வண்ணத்தை உடையது ஆதிரை நாள். 214. செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்இந்திரனாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: மகளிர் ஈசனின் திருவடியைச் சிந்தித்து ஏத்துகின்றனர். ஆடவரும் பெண்டிரும் கூடி இருந்து தொழுது பக்தி வயப்படுகின்றனர். இந்திரன் முதலான தேவர்களும் சித்தர்களும் ஏத்தி வணங்குகின்றனர். அத்தகைய நிலைப்பாடு உடையது, திருவாரூரில் விளங்கும் ஈசனின் திருவாதிரைத் திருநாளின் எழில் வண்ணம் ஆகும். 215. முடிகள் வணங்கி மூவாதார்கள் முன்செல்லவடிகொள் வேய்த்தோள் வானரமங்கையார் பின்செல்லப்பொடிகள் பூசிப் பாடும் தொண்டர்புடைசூழஅடிகள் ஆரூர் ஆதிரø நாளால் அதுவண்ணமே. தெளிவுரை: தேவர்கள், தலைகளைத் தாழ்த்தி வணங்கி முன் செல்கின்றனர். அழகிய மூங்கில் அன்ன தோளுடைய பெருமையுடன் விளங்கும் மங்கையர்கள் பின் செல்கின்றனர். திருவெண்ணீறு முகத்திலும் சரீரத்திலும் பொலியப் பூசிப் பாடுகின்ற திருத் தொண்டர்கள் புடை சூழத் திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமானின் ஆதிரைத் திருநாள், வண்ணம் உடையதாய்த் திகழ்வதாகும். 216. துன்பநும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்இன்ப நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: எல்லார்க்கும் அன்பனாய் விளங்கும் ஆரூர் நாயகனின் திருவாதிரை நாளில் தரிசிக்கும் அடியவர்கள், ஈசனே! தேவரீரைத் தொழாத நாள்கள் துன்பம் உள்ள நாள்கள் எனவும், தேவரீரை ஏத்தித் தொழும் நாள்கள் இன்பம் பயக்கும் நாள்கள் எனவும், தேவரீர் எம்மைத் திருத்தொண்டராய் ஆட்கொண்டு பணி கொள்வீராக எனவும் ஏத்துகின்றனர். 217. பாரூர் பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்துஓரூர் ஒழியாது உலகம்எங்கும் எடுத்தேத்தும்ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம். தெளிவுரை: பாரில் விளங்கும் கடல் போன்றவர், சிவபெருமான். அவர், பக்தர்களால் புகழ்ந்து ஏத்தப்படுபவர்; ஓர் ஊர் என்று அமையாது உலகம் எங்கிலும் திகழ்ந்து விளங்குபவர். அப்பெருமான் ஆரூரில் வீற்றிருப்பவர். அவர் காணும் திருவாதிரை நாளின் வண்ணம் மிகப் பொலிவுடையது. திருச்சிற்றம்பலம் 22. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 218. செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா வெறிக்கும் சென்னிநஞ்சடை கண்டனாரைக் காணலா நறவநாறுமஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம்பலத்தேதுஞ்சடை இருள்கிழியத் துளங்குஎரி ஆடுமாறே. தெளிவுரை: சிவபெருமான், சிவந்த ஆடை போன்ற ஒளி திகழும் சடை முடியின் மீது இளமையான நிலவைத் தரித்தவர். நஞ்சு தேங்கிய நீல மணி கண்டத்தை உடையவர்; மேகத்தைத் தொடும் நறுமணம் கமழும் தேன் விளங்கும் சோலை மல்கும் தில்லைச் சிற்றம்பலத்தில், உற்ற இருள் அகலத் திருக்கரத்தில் நெருப்பெந்தித் திருநடனம் புரிபவர். 219. ஏறனார் ஏறுதம்பால் இளநிலா வெறிக்கும் சென்னிஆறனார் ஆறுசூடி ஆயிழை யாளோர் பாக நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்பலத்தேநீறுமெய் பூசிநின்று நீண்டெரி யாடுமாறே. தெளிவுரை: சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறுபவர்; இளமையான பிறைச் சந்திரனைத் திருமுடியில் தரித்தவர்; கங்கையைத் தரித்தவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; நறுமணம் கமழும் பூஞ்சோலை திகழும் தில்லைச் சிற்றம்பலத்தில் திருநீறு பூசிய திருமேனியுடையவராய்த் திகழ்கின்ற நீண்டு சுடர் விடும் நெருப்பேந்தி ஆடல் புரிபவர். 220. சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா வெறிக்கும் சென்னிஉடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சையேற்றுக்கடிகொள்பூந் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தேஅடிகழல் ஆர்க்க நின்று அனலெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், சடை முடியுடையவர்; சாந்தம் நல்கும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; ஒப்பற்ற நிலவினைத் திருமுடியின் மீது சூடியவர்; பிரமனுடைய கபாலத்தை ஏந்தி அதைப் பலி ஏற்கும் பாத்திரமாகக் கொண்டு, பிச்சை ஏற்று உண்பவர்; நறுமணம் கமழும் பூந்தில்லைச் சிற்றம்பலத்துள் வீரக்கழல் ஆர்க்க ஒலித்து நின்று, எரியேந்தி ஆடுபவர். 221. பையரவு அசைத்த அல்குல் பனிநிலா வெறிக்கும் சென்னிமையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாகமாகிச்செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்தசிற் றம்பலத்தேகையெரி வீசிநின்று கனலெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், படம் கொண்ட பாம்பை அசைத்துக் கட்டியவர்; குளிர்ந்த நிலவைச் சென்னியில் தரித்தவர்; உமாதேவியை ஒருபாகமாக உடையவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; வயல்களின் வளம் மிகுந்த தில்லையின் கண் திகழ்ந்து மேவும் சிற்றம்பலத்தில் கைகளை வீசிக் கனலை ஏந்தி ஆடுபவர். 222. ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா வெறிக்கும் சென்னிபூதனார் பூதம்சூழப் புலியுரி அதள னார்தாம்நாதனார் தில்லைதன்னுள் நவின்றசிற்றம் பலத்தேகாதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், வேதங்களை விரித்து ஓதியவர்; ஒளி மேவும் நிலவைச் சென்னியில் சூடியவர்; ஐம்பூதங்களாகத் திகழ்பவர்; பூதப்படைகள் சூழ்ந்து பொலிய விளங்குபவர்; புலித்தோலை ஆடையாக உடையவர்; எல்லாருக்கும் நாதனாக விளங்குபவர். அப்பெருமான், தில்லையின்கண் மிளிரும் சிற்றம் பலத்தில் காதில் வெண்குழைகள் விளங்கக் கையில் நெருப்பை ஏந்தித் திருநடனம் புரிபவர். 223. ஓருடம்பு இருவர்ஆகி ஒளிநிலா வெறிக்கும் சென்னிப்பாரிடம் பாணிசெய்யப் பயின்றஎம் பரம மூர்த்திகாரிடம் தில்லைதன்னுள் கருதுசிற்றம் பலத்தேபேரிடம் பெருகநின்று பிறங்கெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், ஓருடம்பை உடையவர் என்பராய்ச் சிவசக்தியாய் அர்த்தநாரி என இருவண்ணத்தில் திருக்கோலம் தாங்கியவர்; ஒளி திகழும் நிலவைச் சென்னியின் மீது சூடியவர்; பூதகணங்கள் தாளம் இட அதற்கு ஏற்றவாறு நடனம் புரிபவர்; பரம்பொருளாய் விளங்கும் திருமூர்த்தி. அப்பெருமான், கார் மேகம் சூழ்ந்து திகழும் தில்லையுள் யாவரும் கருதி ஏத்தும் சிற்றம்பலத்தில் எரியேந்தித் திருநடனம் புரிபவர். 224. முதல்தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா வெறிக்கும் சென்னிமதக்களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணலாகுமதர்த்து வண்டு அறையும்சோலை மல்குசிற் றம்பலத்தேகதத்ததோர் அரவம் ஆடக் கனலெரி யாடுமாறே. தெளிவுரை: தனிச் சிறப்புடைய சிவபெருமானுடைய திருச்சடை முடியை மூழ்கச் செய்யும் தன்மையில், நிலவொளியானது முகிழ்த்து விளங்கும் மாண்பில் திகழ்கின்றது. மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்து மேவும் ஈசன், வண்டு ஒலிக்கும் சோலை மல்கும் சிற்றம்பலத்தில், அரவம் ஆடக்கையில் எரியேந்தி ஆடுபவர். 225. மறையனார் மழுவொன்றுஏந்தி மணிநிலா வெறிக்கும் சென்னிஇறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்சிறைகொள் நீர்த்தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தேஅறைகழல் ஆர்க்கநின்று அனல்எரி ஆடுமாறே. தெளிவுரை: ஈசன், வேதமாக விளங்குபவர்: மழுப்படை உடையவர்: ஒளி மிகும் சந்திரனைச் சென்னி மிசைச் சூடியவர்; எம் இறைவனாகியவர்; எம் தலைவர்; ஏத்தி வழிபடும் அடியவர்களுடைய இடர்களைத் தீர்ப்பவர்; பொய்கைகளும் நீர்நிலைகளும் விளங்கும் தில்லையில் திகழும் சிற்றம்பலத்தில் வீரக்கழல் ஒலிக்க ஆர்த்து நின்று கையில் நெருப்பேந்தித் திருநடனம் புரிபவர். 226. விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா வெறிக்கும் சென்னிநிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக்கருத்தனார் தில்லைதன்னுள் கருதுசிற் றம்பலத்தேஅருத்தமா மேனிதன்னோடு அனலெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், விருத்தனாகவும், பாலனாகவும் விளங்குபவர்; ஒளி திகழும் நிலவினைச் சென்னியில் ஒளிரப் பெற்றவர்; திருநடனத்தினர்; திருநடம்புரியும் தன்மையில் நீண்ட மென்மையான சடை முடிகள் தாழுமாறு விளங்குபவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் உமாதேவியாரோடு திகழ்ந்து, கையில் நெருப்பு ஏந்தி நடனம் புரிபவர். 227. பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னிக்காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன்றேறிஞாலமாம் தில்லைதன்னுள் நவின்றசிற் றம்பலத்தேநீலஞ்சேர் கண்டனார்தான் நீண்டெரி யாடுமாறே. தெளிவுரை: ஈசன், பாலனாகியும் விருத்தனாகியும் திருக்கோலம் தாங்கித் திருவிளையாடல் புரிபவர்; குளிர்ந்த நிலவொளி வீசுகின்ற பிறைச்சந்திரனைச் சென்னியில் சூடியவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்துக் காய்ந்த கடவுள்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; நீலகண்டத்தை உடையவர்; ஞானத்தின் சிறப்பாம் தில்லைச் சிற்றம்பலத்தில் திகழ்பவர். அப்பெருமான், நீண்டு சுடர்விடும் நெருப்பினை ஏந்தித் திருநடனம் புரிபவர். 228. மதியிலா அரக்கன்ஓடி மாமலை எடுக்க நோக்கிநெதியன்தோள் நெரியவூன்றி நீடிரும்பொழில்கள் சூழ்ந்தமதியந்தோய் தில்லைதன்னுள் மல்குசிற்றம்பலத்தேஅதிசயம் போலநின்று அனலெரி யாடுமாறே. தெளிவுரை : தனது பாதையின் குறுக்கே தோன்றியதென்று கருதிய மதியில்லாத இராவணன், கயிலை மலையை எடுக்கத் தொடங்கினான். அஞ்ஞான்று, பெரும் செல்வனாகிய ஈசன், அவ் அரக்கனின் தோள் நெரியுமாறு திருப்பாத விரலால் அடர்த்தனர். நீண்ட பொழில் சூழ்ந்த தில்லையில் மேவும் சிற்றம்பலத்தில் அதிசயம் போன்று கையில் எரியேந்தி அப்பெருமான், நடனம் புரிபவர். திருச்சிற்றம்பலம் 23. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 229. பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீஎத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழ வேண்டாமுத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்றஅத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே. தெளிவுரை : பரம்பொருளே ! மேலான யோகத்தின் நாயகனாய் விளங்கும் ஈசனே ! நான், பக்தி உணர்வுடன் பாடுவதில்லை. உள்ளத்தில் ஒரு வேட்கையை வைத்துப் பக்தி செய்கின்றேன். ஆயினும், என்னை இகழ்ச்சி புரியாது அருள் புரிவீராக. முத்தனே ! முதல்வனே ! தில்லையம்பலத்தில் நடனம் புரிகின்ற அத்தனே ! தேவரீரின் திருக்கூத்தினைக் காணும் பொருட்டு, அடியேன் வந்துற்றனன். 230. கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளிபங்காஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடைசோதீதிருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்தசிற்றம் பலத்தேநிருத்தநான் காண்வேண்டி நேர்பட வந்தவாறே. தெளிவுரை : மூங்கில் போன்ற மென்மையான தோள் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மேவும் திருவடிவத்தையுடைய சோதியே ! உயர்ந்ததாகிய தேவரீரின் திருவுள்ளக் குறிப்பினை அறிந்து, அக் கருத்தில் யான் ஏத்திப் பாடுகின்றிலேன் ஆயினும், மலம் நீக்கி மன்னுயிர்களைத் திருத்தி, ஞானத் தெளிவினை நல்குகின்ற தில்லையுள் விளங்கும் சிற்றம் பலத்தில் புரியும் திருநடனத்தினைக் காணும் எண்ணத்துடன் யான் வந்துற்றனன். 231. கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில்நாட்டினேன் நின்றன்பாத நடுப்பட நெஞ்சினுள்ளேமாட்டினீர் வாளைபாயு மல்குசிற் றம்பலத்தேகூட்டமாம் குவிமுலை யாள்கூடத் ஆடுமாறே. தெளிவுரை : ஈசனே ! தேவரீரின் திருநடனச் சிறப்பினை முன்னர் கேட்டிலேன். பின்னர் அடியவர்களைப் பிரியாதும், திருப்பாதத்தை நெஞ்சில் பதித்தும் தேவரீர் திருநடனத்தைக் காண வேண்டும் என்று கொண்டனன். நீர்வளம் மிகுந்த சிற்றம்பலத்தில் தேவரீர் திருக்கூட்டத்தினர் பக்கம் திகழவும் உமாதேவியார் உடன் திகழவும் ஆடும் அத்திருக்காட்சியானது என்பால் குடி கொண்டது. 232. சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை யடிமைசெய்யஎந்தைநீ யருளிச் செய்யா யாதுநான் செய்வதென்னேசெந்தியார் வேள்வி யோவாத்தில்லைச் சிற்றம்பலத்தேஅந்தியும் பகலும்ஆட அடியிணை அலசுங் கொல்லோ. தெளிவுரை : ஈசனே ! செறிந்த நல்லடிமை கொண்டு தேவரீரை ஏத்துவதற்கு என் சிந்தையைத் திகைக்க வைக்காது அருள் புரிவீராக. தேவரீர் அருளாது இருந்தால் யான் என் செய்வது ? செம்மை தரும் தீ வளர்க்கும் அந்தணர்கள், வேள்வியை ஓய்வு இல்லாது புரிய விளங்கும் தில்லையும், சிற்றம்பலத்தில் நடம் புரியும் திருவடிகள் வருந்தும் தன்மையதோ ! திருவடி வருந்தாது என்பதும் அருள்வீராக என்று வேண்டுதலும் குறிப்பு. 233. கண்டவா திரிந்துநாளும் கருத்தினால் நின்றன் பாதம்கொண்டிருந்தது ஆடிப்பாடிக் கூடுவன் குறிப்பினாலேவண்டுபண் பாடும் சோலை மல்குசிற் றம்பலத்தேஎண்டிசை யோரும்ஏத்த இறைவநீ யாடுமாறே. தெளிவுரை : ஈசனே ! தேவரீருடைய திருப்பாதங்களைக் கருதியும், நெஞ்சில் பதித்தும், தன்னிச்சை கூடக் கண்டவாறு திரிந்தும், ஆடியும், பாடியும், ஏத்தி மகிழ்வேன். வண்டு பாடும் சோலை மல்கும் சிற்றம்பலத்தில் எட்டுத் திசையிலும் உள்ள அடியவர் ஏத்த விளங்கும் இறைவனே ! தேவரீரின் நடனம் பேருவகை அளிக்கும் தன்மையது. 234. பார்த்திருந்து அடியனேனான் பரவுவன் பாடியாடிமூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச்சிற் றம்பலத்துக்கூத்தாஉன் கூத்தக் காண்பான் கூடநான் வந்தவாறே. தெளிவுரை : ஈசனே ! அடியவனாகிய நான், தேவரீரைத் தரிசித்துப் பரவிப் போற்றுவேன்; பாடியும் ஆடியும் மூர்த்தியே என ஏத்துவேன்; மும்மூர்த்திகளின் தலைவன் என்று போற்றுவேன். ஏத்தி வழிபடும் அன்பர்களுடைய இடர்களைத் தீர்த்தருளும் தில்லைச் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமானே ! தேவரீருடைய திருக்கூத்தினைக் காண அடியேன் வந்துற்றேன். 235. பொய்யினைத் தவிரவிட்டுப் புறமலா அடிமைசெய்ஐயநீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதிமூர்த்திவையகந் தன்னில் மிக்க மல்குசிற் றம்பலத்தேபையநுன் னாடல்காண்பான் பரமநான் வந்தவாறே. தெளிவுரை : நித்தியம் அல்லாத பொருள்களின்பால் உள்ள பற்றினைக் களைந்து நீக்கிப் புறம் போகல் ஓட்டாதபடி அடிமை செய்வதற்கு, என் ஐயனே ! ஆதியே ! ஆதிமூர்த்தீ ! அருள் புரிவீராக. எல்லாச் சிறப்புகளும் மிகுந்து இப்பூவுலகில் திகழும் சிற்றம்பலத்தில் தேவரீரின் திருநடனத்தைக் காண்பதற்காக நான் வந்தேன். 236. மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலேகனைப்பரால் என்செய்கேனோ கறையணி கண்டத்தானே தினைத்தனை வேதங்குன்றாத் தில்லைச்சிற் றம்பலத்தேஅனைத்துநின் னிலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே. தெளிவுரை : மனமானது, மருட்சி அடைந்து அஞ்ஞானத்தில் மூழ்கி மாண்பற்ற நெறிகளில் தாவி நின்று வருந்தினால் நான் என் செய்வனோ ! நீலகண்டனாக இருந்து அருள் நல்கும் பெருமானே ! வேத நெறியிலிருந்து சிறிதளவும் தவறாது விளங்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் நாதனே ! தேவரீரின் நடனக் காட்சியில் விளங்கும் அருளின் இலயத்தைக் காண்பதன் பொருட்டு யான் வந்தேன். அருள் புரிவீராக என்பது குறிப்பு. 237. நெஞ்சினைத் தூய்மைசெய்து நினைக்குமா நினைப்பியாதேவஞ்சமே செய்தியாலோ வானவர்தலைவனேநீமஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம் பலத்தேஅஞ்சொலாள் காணநின்று அழகநீ ஆடுமாறே. தெளிவுரை : தேவர்களின் தலைவனே ! என் நெஞ்சானது தூய்மையாக இருந்து தேவரீரை நினைத்து ஏத்த வேண்டும். அவ்வாறு நினைய ஒட்டாது வஞ்சனையாய் இருப்பீராயின், யான் என் செய்வேன் ! மேகம் சூழும் சோலையுடைய தில்லையில் திகழும் சிற்றம்பலத்தில் மேவும் நடராசப் பெருமானே ! தேவரீரானவர், அழகிய சொல் உரைக்கும் உமாதேவியார் காண, ஆடுகின்ற அழகர் அல்லவா ! 238. மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காணமாட்டார்திண்ணுண்ட திருவேமிக்க தில்லைச்சிற்றம் பலத்தேபண்ணுண்ட பாடலோடும் பரமநீ யாடுமாறே. தெளிவுரை : திருமாலும், பிரமனும் வானுயர எழுந்த (ஈசனின்) திருவுருவத்தைக் காண விரும்பினர். ஆயினும் தோற்றம் கொள்ளாது மேவிய உறுதி மிக்க திருவே ! தில்லைச் சிற்றம்பலத்தில் பண்ணிசைந்த பாடலுக்கு உகந்து ஆடும் பரமனே ! தேவரீருடைய நடனக் காட்சியினைக் காணுமாறு வந்தேன். அருள் புரிவீராக என்பது குறிப்பு. திருச்சிற்றம்பலம் 24. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 239. இரும்புகொப் பளித்தயானைஈருரி போர்த்தஈசன்கரும்புகொப் பளித்தஇன்சொல்காரிகை பாகமாகச்கரும்புகொப் பளித்தகங்கைத்துவலைநீர் சடையில்ஏற்றஅரும்புகொப் பளித்தசென்னிஅதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், கருத்த இரும்பு போன்ற பலம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; கருப்பஞ்சாறு போன்ற இனிய தன்மையில் மொழிபுகலும் உமாதேவியைப் பாகமாக உடையவர்; வண்டு உதிர்க்கும் தேன் மலர் போன்ற இனிய கங்கையைச் சடையில் ஏற்றவர். அப்பெருமான், சென்னியில் மலர்கள் சூடி விளங்கும் அதிகை வீரட்டனாரே. 240. கொம்புகொப் பளித்ததிங்கள்கோணல்வெண் பிறையும்சூடிவம்புகொப் பளித்தகொன்றைவளர்சடை மேலும்வைத்துச் செம்புகொப் பளித்தமூன்றுமதிலுடன் சுருங்கவாங்கிஅம்புகொப் பளிக்கஎய்தார்அதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், வளைந்த கொம்பு போன்ற கோணு தலையுடைய பிறைச் சந்திரனைச் சூடியவர்; மணம் கமழும் கொன்றை மலரை நீண்டு விரிந்த சடை முடியின் மீது தரித்தவர்; செம்பினால் ஆக்கப் பெற்ற அசுரர்களின் மூன்று மதில்கலும் எரிந்து சாம்பலாகுமாறு அம்பு தொடுத்தவர். அப்பெருமான் அதிகை வீரட்டனாரே ஆவார். 241. விடையும்கொப் பளித்தபாதம்விண்ணவர் பரவியேத்தச்சடையும்கொப் பளித்ததிங்கள்சாந்தம்வெண் ணீறுபூசிஉடையும்கொப் பளித்தநாகம்உள்குவார் உள்ளத்தென்றும்அடையும்கொப் பளித்தசீரார்அதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தில் வீற்றிருந்து அருள் புரிபவர்; தேவர்களால் பரவி ஏத்தப்படுபவர்; சடை முடியின் மீது சந்திரனைத் தரித்துள்ளவர்; சாந்தம் திகழ வழங்கும், மணம் கமழ் திருவெண்ணீற்றை திருமேனியில் பூசி விளங்குபவர்; நாகத்தை அரையில் கட்டி விளங்குபவர்; நினைத்து ஏத்தும் அடியவரின் உள்ளத்தில் எக்காலத்திலும் விளங்குபவர். அப் பெருமான், சிறப்பு மிக்க அதிகை வீரட்டனாரே ஆவார். 242. கறையும்கொப்ப ளித்தகண்டர்காமவேள் உருவமங்கஇறையும்கொப் பளித்தகண்ணார்ஏத்துவார் இடர்கள்தீர்ப்பார்மறையும்கொப் பளித்தநாவர்வண்டுண்டு பாடும்கொன்றைஅறையும்கொப் பளித்தசென்னிஅதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், நஞ்சின் கறை பதிந்த நீலகண்டத்தை உடையவர்; மன்மதனின் உடலானது, ஒரு நொடிக்குள் வெந்து சாம்பலாகுமாறு எரித்த நெருப்புக் கண்ணுடையவர். ஏத்திப் போற்றும் மெய்யன்பர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவர்; நான்கு வேதங்களையும் விரித்து ஓதும் நாவினர்; வண்டுகள் தேனை உண்டு ரீங்காரம் இசைத்துப் பாடி வட்டமிடும் கொன்றை மலரைச் சென்னியின் மீது தரித்தவர். அப்பெருமான், அதிகை வீரட்டனாரே ஆவார். 243. நீறுகொப் பளித்தமார்பர்நிழல்திகழ் மழுவொன்று ஏந்திக்கூறுகொப் பளித்த கோதைத்கோல்வளை மாதோர்பாகம்ஏறுகொப் பளித்தபாகம்இமையவர் பரவி யேத்தஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீரட் டனாரே. தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு பூசிய திருமார்பினர்; ஒளி திகழும் மழுப்படை ஏந்தியவர்; அழகிய வளையலை அணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; இடபவாகனத்தில் ஏறி அமர்ந்து காட்சி நல்குபவர்; தேவர்களால் பரவி ஏத்தப் பெறுபவர்; பொங்கி எழும் கங்கையைச் சென்னியின் மீது தரித்தவர்; அப்பெருமான், அதிகை வீரட்டனாரே. 244.வணங்குகொப் பளித்தபாதம்வானவர் பரவி யேத்தப்பிணங்குகொப் பளித்த சென்னிச்சடையுடைப் பெருமை யண்ணல்சுணங்குகொப் பளித்த கொங்கைச்சுரிகுழல் பாகமாகஅணங்குகொப் பளித்த மேனிஅதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், எல்லாத் தேவர்களுக்கும் செய்கின்ற வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தாமே ஏற்கும் திருப்பாதம் உடையவர். தேவர்களால் ஏத்தப்படுபவர்; ஒன்றுக்கொன்று பிணைந்து விளங்கும் சடை முடியுடைய அண்ணல்; மெல்லிய இடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர்; அழகிய திருமேனியுடையவர். அப்பெருமான், அதிகை வீரட்டனாரே ஆவார். 245. சூலம்கொப் பளித்த கையர்சுடர்விடு மழுவாள் வீசிநூலும்கொப் பளித்த மாரபில்நுண்பொறி அரவம் சேர்த்திமாலும் கொப் பளித்த பாகர்வண்டுபண் பாடும் கொன்றைஆலங்கொப் பளித்த கண்டத்துஅதிகைவீ ரட்டனாரே. தெளிவுரை : ஈசன், சூலத்தை கரத்தில் ஏந்தி விளங்குபவர்; சுடர் விடும் மழுவாள் உடையவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; படம் கொண்டு ஆடும் அரவத்தை ஆபரணமாக உடையவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; வண்டு இசை பாடும் கொன்றை மலர் மாலை சூடியவர்; நஞ்சினைத் தேக்கிய நீலகண்டத்தினர். அப்பெருமான், அதிகை வீரட்டனாரே ஆவார். 246. நாகம்கொப் பளித்த கையர்நான்மறை யாய பாடிமேகங்கொப் பளித்த திங்கள்விரிசடை மேலும் வைத்துப்பாகங்கொப் பளித்த மாதர்பண்ணுடன் பாடி யாடஆகங்கொப் பளித்த தோளார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், நாகத்தைக் கங்கணமாகக் கட்டிய கையினர்; நான்கு வேதங்களையும் பாடிய திருவாயினர்; மேகத்தில் தவழும் சந்திரனைச் சடைமுடியில் திகழ வைத்தவர், உமாதேவியானவர் தளிர் இள வளர் ஒளி வைத்தவர்; உமாதேவியானவர் தளிர் இள வளர் ஒளி எனத் தாளம் இட்டுப் பாடத் திருநடனம் புரிந்தும், அத்தகையை தேவியைப் பாகமாகக் கொண்டு அர்த்த நாரியாகவும், ஆகி இரு நிலைகளிலும் வேறாகித் தனித்தும், ஒன்றாகி இணைந்தும் திகழ்பவர். அப்பெருமான் அதிகை வீரட்டனாரே ஆவார். 247. பரவுகொப் பளித்த பாடல்பண்ணுடன் பத்தர் ஏத்தவிரவுகொப் பளித்த கங்கைவிரிசடை மேவ வைத்துஇரவுகொப் பளித்தகண்டர்ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்அரவுகொப் பளித்த கையர்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், பக்தர்கள் பரவி ஏத்தும் இசை மிக்க பாடல்களை ஏற்று அருள் புரிபவர்; விரிந்த சடையில் கங்கையைத் தரித்து மேவுபவர்; கரிய நஞ்சினைப் பதித்த கண்டத்தை உடையவர்; ஏத்தும் அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர்; அரவத்தைக் கங்கணமாக உடையவர். அப்பெருமான், அதிகை வீரட்டனாரே. 248. தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்துடியிடைப் பரவை யல்குல்கொண்டைகொப் பளித்த கோதைக்கோல்வளை பாக மாகவண்டுகொப் பளித்த தீந்தேன்வரிக்கயல் பருகி மாந்தக்கொண்டைகொப் பளித்த தெண்ணீர்க்கெடிலவீ ரட்ட னாரே. தெளிவுரை : பவள வாயும் துடியிடையும் கெண்டை விழியும் நீண்ட கூந்தலும் அழகிய வளையலும் கொண்ட உமாதேவியைப் பாகமாக ஏற்று விளங்கும் சிவபெருமான், வண்டு அறையும் மலரில் உள்ள தேனைப் பருகும் கயல்களையுடைய கெடில நதியின் கரையில் விளங்கும் வீரட்டானரே ஆவார். திருச்சிற்றம்பலம் 25. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 249. வெண்ணிலா மதியந் தன்னைவிரிசடை மேவ வைத்துஉண்ணிலாப் புகுந்து நின்றங்குஉணர்வினுக்கு உணரக் கூறிவிண்ணிலார் மீயச்சூரார்வேண்டுவார் வேண்டி லார்க்கேஅண்ணியார் பெரிதும் சேயார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : சிவபெருமான், வெண்மையான பிறைச் சந்திரனை, விரிந்த சடை முடியின் மீது திகழுமாறு செய்தவர்; மெய்யன்பர்களின் உள்ளத்தில் புகுந்து நின்று உணர்வினுக்கு உணர்வாய் மேவி உணர்த்தி அருள்பவர்; தேவர் உலகம் போன்று விளங்கும் மீயச்சூரில் திகழ்பவர்; விரும்பி ஏத்துபவர்களுக்கு அண்மையராகவும், ஏத்தாதவர்களுக்குப் தொலைவிலும் இருப்பவர். அவர், அதிகை வீரட்டனாரே. 250. பாடினார் மறைகள் நான்கும்பாய்இருள் புகுந்துஎன் உள்ளம்கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றைசூடினார் சூடல் மேவிச்சூழ்சுடர் சுடலை வெண்ணீறுஆடினார் ஆடல் மேவிஅதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் ஓதி விரித்தவர்; என் வஞ்ச மனத்திடைப் புகுந்து கூடினவர்; கூடல் ஆலவாயில் விளங்குபவர்; பிரணவ புட்பமாகிய கொன்றை மலரைச் சூடியவர்; சுடலையில் விளங்கும் வெண் சாம்பலைப் பூசி மகிழ்பவர்; நடனம் புரிபவர். அவர் அதிகை வீரட்டனாரே ஆவார். 251. ஊனையே கழிக்க வேண்டில்உணர்மின்கள் உள்ளத் துள்ளேதேனைய மலர்கள் கொண்டுசிந்தையுள் சிந்திக் கின்றஏனைய பலவுமாகிஇமையவர் ஏத்தநின்றுஆனையின் உரிவை போர்த்தார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஊனாகிய இவ் உடம்பினைக் கொண்டு இருக்கும் இப்பிறவித் துன்பத்திலிருந்து நீங்க வேண்டுமானால், உள்ளத்தில் மேவும் அன்புத்தேன் மலர்கள் கொண்டு ஏத்தி ஈசனைப் பரவுமின். அப்பெருமான், சிந்தையுள் கோயில் கொண்டு விளங்குபவர்; சிந்திக்கின்ற எல்லாப் பொருள்களாகவும் ஏனைய பலவுமாகவும் விளங்குபவர்; தேவர்களால் ஏத்தப் பெறுபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அவர், அதிகை வீரட்டனாரே ஆவார். 252. துருத்தியாங் குரம்பை தன்னில்தொண்ணூற்றங்கு அறுவர் நின்றுவிருத்திதான் தருக என்றுவேதனை பலவும் செய்யவருத்தியால் வல்லவாறுவந்துவந் தடைய நின்றஅருத்தி யார்க்கு அன்பர் போலும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : உணவு முதலானவற்றால் துருத்தி வளர்க்கப்படும் இவ்வுடம்பானது 96 தத்துவங்களால் மேவி விருத்தி செய்யப்படுகிறது. மேலும் தனக்குத் தேவையெனவும், தருக எனவும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வருத்தத்தினையும் தருகின்றது. ஈசன், வல்லவாறு வந்த அன்புகாட்டி அருள் செய்பவர். அத்தகைய அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர் அதிகை வீரட்டனாரே ஆவார். 253. பத்தியால் ஏத்தி நின்றுபணிபவர் நெஞ்சத் துள்ளார்துத்தியைந் தலையநாகம்சூழ்நடை முடிமேல் வைத்துஉத்தர மலையர் பாவைஉமையவள் நடுங்க அன்றுஅத்தியின் உரிவை போர்த்தார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : சிவபெருமான், பக்தியால் ஏத்தும் அன்பர்களின் நெஞ்சத்தில் குடி கொண்டு இருப்பவர்; ஐந்து தலைகளையுடைய நாகத்தைச் சடை முடியில் திகழ வைத்தவர்; உத்தர மாலையாகிய இமாசல மன்னனின் மகளாகிய உமாதேவி வெருவுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அவர், அதிகை வீரட்டனாரே. 254. வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்து நெஞ்சேகரியுரி மூடவல்லகடவுளைக் காலத் தாலேசுரிபுரி விரிகு ழலாள்துடியிடைப் பரவை யல்குல்அரிவையோர் பாகர்போலும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : அழகிய பாடல்களைப் பாடி நெஞ்சத்தை ஈசன்பால் பதித்து ஏத்துக. யானையின் தோலைப் போர்த்திக் கொள்ளும் வல்லமையுடைய கடவுள் ஈசன். அவர் சுருண்ட கூந்தலும் துடி இடையும் கொண்ட உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அவர், அதிகை வீரட்டனாரே. 255. நீதியால் நினைசெய் நெஞ்சேநிமலனை நித்த மாகப்பாதியாம் உமைதன் னோடும்பாகமாய் நின்று எந்தைசோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்சுண்ணவெண் ணீற தாடிஆதியும் ஈறும் ஆனார்அகதிகை வீரட்ட னாரே. தெளிவுரை : ஈசனை ஏத்தி வணங்க வேண்டும் என்பது மன்னுயிர்க்கு உரிய விதி. அதனை நினைத்து நெஞ்சே ! வணங்குக. ஈசன் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய்த் திகழ்பவர். சோதியாகவும் சுடராகவும் விளங்குபவர். திருவெண்ணீற்றினைப் பூசி விளங்குபவர்; ஆதியாகவும் முடிவாகவும் ஆகி, உயிர்களைக் காப்பவர். அவர் அதிகை வீரட்டனாரே. 256. எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சு வேற்கு ஒருவர் வந்துபுல்லி மனத்துக் கோயில் புக்கனர் காமன் என்னும்வில்லியங் கணையி னானைவெந்துக நோக்கி யிட்டார்அல்லியம் பழனவேலிஅதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : அஞ்ஞானத்தால் இரவும் பகலும் உறங்கி இருந்த என் மனத்திற்குள்ளே புகுந்து கோயில் கொண்டவர் சிவபெருமான். அப் பெருமான், மன்மதனை வெந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர், அல்லி மலர்களும் வயல்களும் திகழும் அதிகையில் வீற்றிருக்கும் வீரட்டனாரே. 257. ஒன்றவே உணர்தி ராகில்ஓங்காரத்து ஒருவன் ஆகும்வென்றஐம் புலன்கள் தம்மைவிலக்குதற்கு உரியீர் எல்லாம்நன்றவன் நாரணனும்நான்முகன் நாடிக் காண்குற்றுஅன்றவர்க்கு அரியர் போலும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசனோடு ஒன்றி இருந்து மகிழ வேண்டும் என்னும் உணர்வினைக் கொள்வீரானால் ஓங்காரத்திற்கு உரிய ஒருவனாகிய சிவபெருமானை ஏத்த வேண்டும். அவர் ஐம்புலன்களை வென்றவர். அவரை நினைத்து ஏத்த நீங்களும் புலன்களை வெல்லுவதற்கு உரியவர் ஆவீர். அப்பெருமான், திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவராகி ஓங்கி உயர்ந்தவர். அவர் அதிகை வீரட்டனாரே ஆவார். 258. தடக்கையால் எடுத்து வைத்துத்தடவரை குலுங்க ஆர்த்துக்கிடக்கையால் இடர்கள் ஓங்கக்கிளர்மணி முடிகள் சாயமுடக்கினார் திருவி ரலான்முருகமர் கோதை பாகத்துஅடக்கினார் என்னை யாளும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : தனது பெரிய கைகளால் கயிலை மலையை எடுத்து ஆர்த்த இராவணனுடைய முடிகள் துன்புறுமாறு தன் திருப்பாத விரலால் அழுத்தியவர் ஈசன். அவர் அழகும் இளமையும் திகழும் உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு அம்மையப்பராக வீற்றிருந்து என்னை ஆள்பவர். அப்பெருமான் அதிகை வீரட்டனாரே. திருச்சிற்றம்பலம் 26. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 259. நம்பனே எங்கள் கோவேநாதனே ஆதி மூர்த்திபங்கனே பரம யோகீஎன்றென்றே பரவி நாளும்செம்பொனே பவளக் குன்றேதிகழ்மலர்ப் பாதம் காண்பான்அன்பனே அலந்து போனேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : நம்பனே ! எங்கள் தலைவரே ! காக்கும் அரசே ! ஆதிமூர்த்தியாய் விளங்குபவரே ! எல்லாப் பொருள்களிலும் பங்குற்றுத் திகழ்பவரே ! யோகத்தில் விளங்கும் பரமரே ! எனத் தேவரீரைப் பரவித் துதித்துப் போற்றி நாள்தோறும் ஏத்துகின்றேன். பொன் போன்ற அழகுடையவரே ! பவளக் குன்று போன்ற செம்மேனியரே ! தேவரீரின் மலர்ப்பாதத்தைக் காண வேண்டும் என்று அலைந்து வாடினேன் அன்புக்குரிய பெருமானே ! அதிகை வீரட்டத்தில் வீற்றிருப்பவர் நீவிரே ! 260. பொய்யினால் மிடைந்த போர்வைபுரைபுரை அழுகி வீழமெய்யனாய் வாழ மாட்டேன்வேண்டிற்று ஒன்று ஐவர்வேண்டார்செய்ததா மரைகள் அன்னசேவடி இரண்டும் காண்பான்ஐயநான் அலந்து போனேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! இத்தேகமானது பொய்த் தன்மை உடையது. நிலையில்லாதது. அழுகிப் பாழ் கொள்ளக் கூடியது. இத்தகைய தேகத்தைக் கொண்டு மெய்யன் என்னும் பெயருடையவனாய் நான் வாழ மாட்டேன். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் ஐம்புலன்கள் இணங்காது. எனவே இதிலிருந்து மீள வேண்டும் என்னும் கருத்தில் தேவரீருடைய சேவடிகள் இரண்டையும் காணுமாறு அலைந்து வருந்தினேன் ஐயனே ! நீவிர் அதிகை வீரட்டத்தில் உள்ளவரே ! 261. நீதியால் வாழ் மாட்டேன்நித்தலும் தூயே னல்லேன்ஓதியும் உணர மாட்டேன்உன்னையுள் வைக்க மாட்டேன்சோதியே சுடரே உன்றன்தூமலர்ப் பாதம் காண்பான்ஆதியே அலந்து போனேன்அதிகைவீர ட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! நான், அற நூல்களில் விதித்த நியதிப்படி வாழாதவன் ஆனேன்; தூய்மையுடைய நெஞ்சினேன் இல்லை; பிறர் நற்கருத்துக்களை ஓதி உரைத்தாலும் ஏற்று நடந்ததில்லை; தேவரீரை யான் உள்ளத்தில் பதிய வைத்தேனில்லை. சோதியும் சுடருமாய் மேவும் பெருமானே ! உமது தூய மலர்ப் பாதங்களைக் காணும் தன்மையில், பொருளில்லாது அலைந்து வருந்தினேன். ஆதியே ! நீவிர் அதிகை வீரட்டத்தில் உள்ளவரே. 262. தெருளுமா தெருள மாட்டேன்தீவினைச் சுற்றம் என்னும்பொருள்உளே அழுந்தி நாளும்போவதோர் நெறியும் காணேன்இருளுமா மணிகண் டாநின்இணையடி இரண்டும் காண்பான்அருளுமாறு அருள வேண்டும்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! நான் தெளிந்த ஞானம் உடையவனாகவும் இல்லை; எத்தனையோ பிறவிகளில் செய்த தீய வினைகள் யாவும் சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம் என என்னைச் சுற்றி இருக்கும் சுற்றமாகப் பெற்றுள்ளேன்; நற்பொருளைத் தேர்ந்து அறிந்து நன்னெறியில் செல்வதற்கும் இல்லாது மாயையால் தள்ளப்பட்டு அழுந்துகின்றேன். நீலகண்டராய் விளங்கும் பெருமானே ! தேவரீருடைய திருவடிகள் இரண்டினையும் காண வேண்டும் என விழைகின்றேன். தேவரீர் எனக்கு எவ்வகையில் அருள வேண்டுமோ அவ்வாறு அருள் புரிய வேண்டும். தேவரீர் அதிகையில் வீற்றிருக்கும் வீரட்டரே அன்றோ ! 263. அஞ்சினால் இயற்றப் பட்டஆக்கைபெற் றதனுள் வாழும்அஞ்சி னால் அடர்க்கப் பட்டிங்குஉழிதரும் ஆத னேனைஅஞ்சினால் உய்க்கும் வண்ணம்காட்டி னாய்க்கு அச்சம் தீர்ந்தேன்அஞ்சினாற் பொலிந்த சென்னிஅதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : இந்தச் சரீரமானது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களால் யாக்கப் பெற்றது. இத்தேகத்திற்குள் ஐம்புலன்களாகிய மெய், வாய், மூக்கு, கண் செவி ஆகியவற்றால் ஈர்க்கப் பெற்று இடருற்று இழிந்தேன். அத்தகைய அடியவனேனைத் தேவரீர், திருவைந்தெழுத்தால் உய்த்துக் கடைத் தேறும் வண்ணம் காட்டினீர் ! யான் அச்சம் தீர்ந்தேன். அதிகை வீரட்டத்தில் வீற்றிருக்கும் தேவரீர், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகௌவியத்தைப் பூசைப் பொருளாகச் சென்னியில் ஏற்று உகந்தவரே ! 264. உறுகயிறு ஊசல் போலஒன்றுவிட்டு ஒன்று பற்றிமறுகயிறு ஊசல் போலவந்துவந்து உலவு நெஞ்சம்பெறுகயிறு ஊசல் போலப்பிறைபுல்கு சடையாய் பாதத்துஅறுகயிறு ஊசல் ஆனேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : கயிறு ஊசல், ஒரு நிலையில் நில்லாது ஆடிக் கொண்டு இருத்தல் போல, என் மனமானது ஒன்றினைப் பற்றியது. பின்னர் அதனை விடுத்து மறுபக்கம் செல்வது போல நெஞ்சமானது உலவித் தாவிச் சென்றது. தேவரீருடைய திருப்பாதத்தில் நெஞ்சத்தைப் பதித்தேன். தேவரீரின் பெருமைமிகு சடைமுடியை என் நெஞ்சமானது ஊசற்கயிறு எனப் பெற்றது. என் மனமானது அறுந்த ஊசல் போன்று நிலத்தில் வீழ்ந்தது மனம் அமைதியுற்றது. அத்தகைய நிலையில் அதிகை வீரட்டத்தில் மேவும் நீவிரே ஆக்கித் தேற்றியவர் என்பது குறிப்பு. 265. கழித்திலேன் காம வெந்நோய்காதன்மை என்னும் பாசம்ஒழித்திலேன் ஊன்கண் நோக்கிஉணர்வெனும் இமைதி றந்துவிழித்திலேன் வெளிறு தோன்றவினையெனும் சரக்குக் கொண்டேன்அழித்திலேன் அயர்த்துப் போனேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! காமம் என்னும் வெம்மை மிகுந்த நோயிலிருந்து யான் விடுபடவில்லை. பாசத்தை ஒழிக்கவில்லை. உடலைப் பாதுகாக்கும் எண்ணத்தில் திளைத்து நல்லுணர்வு என்னும் ஞானக் கண் கொண்டு எதனையும் நோக்கவில்லை. வாழ்க்கையில் மெலிந்தேன். தீயவினைச் சுமையை நிரம்ப ஏற்றேன். அவ்வினைகளை அழிக்கும் தன்மையில் மேவாது வினையின் சுமை அழுத்திக் கொண்டிருக்க நான் அயற்சியடைந்தேன். அதிகையில் வீற்றிருக்கும் வீரட்டன் நீவிரே ! என்னைக் காத்தருள்வீராக என்பது குறிப்பு. 266. மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரம் எய்திஒன்றினால் உணர மாட்டேன்உன்னையுள் வைக்க மாட்டேன் கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கேஅன்றினான் அலமந் திட்டேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! ஊரின் நடுவிலே விளங்கும் நிழல் தரும் புன்னை மரமானது பலராலும் தாக்கப்பட்டுத் துயர் உறுதல் போல, நான், புலன்கள், தீவினைகள் காம வெந்நோய், பசம் முதலானவற்றால் தாக்கப் பட்டுத் துயரம் எய்தினேன். இத்தகைய துயருள் ஆழ்ந்து வருந்தினாலும் நான் நல்லுணர்வு கொள்ளாதவனானேன். தேவரீரை நெஞ்சள் பதிக்கவில்லை. கனன்று சினந்து விளங்கும் காலன் வந்து உயிரைக் கவர்ந்து, மீண்டும் பிறவியைக் கொடுக்கும் தன்மையிலும் கருக்குழியில் விழுவதிலும் எண்ணி வருந்துகின்றேன். அதிகையில் மேவும் வீரட்டன் நீவிரே ! அருள்புரிவீராக ! என்பது குறிப்பு. 267. பிணிவிடா ஆக்கை பெற்றேன்பெற்றம்ஒன்று ஏறு வானேபணிவிடா இடும்பை என்னும்பாசனத்து அழுந்து கின்றேன்துணிவிலேன் தூயன் அலலேன்தூமலர்ப் பாதம் காண்பான்அணியனாய் அறிய மாட்டேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! நான் நோயினால் பீடிக்கப்படும் தேகத்தைப் பெற்றேன். இடப வாகனத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! என்னைப் பணிவிப்பதிலிருந்து நீங்காத கன்ம வினையைச் சுற்றமாகப் பற்றித் துன்பத்திற்கே ஆளாகி அழுந்துகின்றேன். புலன்களை வென்று மீளும் துணிவு அற்றவனாகவும், நெஞ்சம் தூய்மையில்லாதவனாகவும் உள்ளேன். தேவரீருடைய திருப்பாத மலர்களைக் காண்பதற்கு அண்மையில் இருந்தும் அதனை உணராதவனானேன். அதிகை வீரட்டத்தில் மேவும் பெருமானே ! தேவரீர், உணர்த்தினாலன்றி உணர முடியாது என்பது குறிப்பு. 268. திருவினாள் கொழுந னாரும்திசைமுகம் உடைய கோவும்இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்இணையடி காண மாட்டாஒருவனே எம்பி ரானேஉன்திருப் பாதம் காண்பான்அருவனே அருள வேண்டும்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் முறையே கீழ் நோக்கித் தாழ்ந்தும் மேல் நோக்கிப் பறந்தும் சென்று தேடியும் இணையடியைக் காண் மாட்டாத ஒருவனாகிய ஈசனே ! எம் தலைவனே வீரட்டனே ! தேவரீர், திருப்பாத மலரை காட்டி உய்யுமாறு புரிவீராக. திருச்சிற்றம்பலம் 27. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 269. மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகம் கச்சாமுடக்கினார் முகிழ்வெண் திங்கள்மொய்சடைக் கற்றை தன்மேல்தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்அடக்கினார் கெடில வேலிஅதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : சிவபெருமான், புலியின் தோலை உடையாக மடித்துக் கட்டியவர்; பெருமை மிக்க மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் நாகத்தைக் கச்சாக இறுக்கிக் கட்டியவர்; வெள்ளொளியை முகிழ்க்கும் பிறைச் சந்திரனைச் சடை முடியின் மீது சூடியவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அவர் கெடில நதியின் கரையில் உள்ள அதிகை வீரட்டனாரே. 270. சூடினார் கங்கை யாளைச்சூடிய துழனி கேட்டங்குஊடினாள் நங்கை யாளும்ஊடலை ஒழிக்க வேண்டிப்பாடினார் சாம வேதம்பாடிய பாணி யாலேஆடினார் கெடில வேலிஅதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : சிவபெருமான், கங்காதேவியைச் சடை முடியில் தரித்தவர். அப்பெருமான் கங்கை தரிக்கும் ஒலியைக் கேட்டு, இடப்பாகத்தில் விளங்கிய உமாதேவி சினமுற்று ஊடினார். ஈசன், அவ்வூடலைத் தீர்க்கும் தன்மையில், சாம் வேதத்தை இசைத்துப் பாடித் தாளம் இட்டுத் திருநடனம் புரிந்தார். அப்பெருமான், கெடில நதியின் கரையில் விளங்கும் அதிகை வீரட்டனாரே. 271. கொம்பினார் குழைத்த வேனல்கோமகன் கோல நீர்மைநம்பினார் காண லாகாவகைய தோர் நடலை செய்தார்வெம்பினார் மதில்கள் மூன்றும்வில்லிடை எரித்து வீழ்த்தஅம்பினார் கெடில வேலிஅதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : மன்மதன், தன் மலர்க்கணைகளால் ஈசனின் தவத்தைக் கலையச் செய்து பார்வதி வேதியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு புரிய வேண்டும் என நம்பி இருந்த நிலையில், அந்த நம்பிக்கையானது காணலாகாத தன்மையில் ஈசன், அவனுக்குப் பெருந் துன்பத்தைச் செய்யுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கி எரித்தார். அவர் தீயவர்களாகிய முப்புர அசுரர்களையும் கேட்டைகளையும் எரித்து வீழ்த்தி அம்பினர். அப்பெருமான் கெடில நதிக்கரையில் மேவும் அதிகை வீரட்டனாரே. 272. மறிபடக் கிடந்த கையர்வளரிலா மங்கை பாகம்செறிபடக் கிடந்த செக்கர்ச்செழுமதிக் கொழுந்து சூடிப்பொறிபடக் கிடந்த நாகம்புகையு மிழந்து அழல வீக்கிக்கிறிபட நடப்பர் போலும்கெடிலவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், மான் ஏந்திய கையுடையவர்; இளசை வளரும் எழில் மிக்க உமாதேவியாரைப் பாகமாக உடையவர்; சிவந்து ஒளிறும் சடை முடியின் மீது பிறைச்சந்திரனைச் சூடியவர்; நாகத்தை அறையிற் கட்டி விளங்குபவர். பிறர் மயங்குமாறு பித்தர் போலும் நடையுடையவர். அவர் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் வீரட்டனாரே. 273. நரிவரால் கவ்வச் சென்றுநற்றசை யிழந்தது ஒத்ததெரிவரான் மால்கொள் சிந்தைதீர்ப்பதோõர் சிந்தை செய்வார்வரிவரால் உகளும் தெண்ணீர்க்கழலிசூழ் பழன வேலிஅரிவரால் வயல்கள் சூழ்ந்தஆதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : நரியானது, தண்ணீரில் துள்ளித் திரியும் வரால் மீனைக் கவ்வும் நோக்கத்தில் செயல்படத் தன் வாயில் முன்னரே பெற்றிருக்கும் ஊனை (நல்தசை) இழக்கும். அத்தன்மையில் மயங்கிய நிலையில் உள்ள மாந்தர்களின் சிந்தையைச் செம்மையாக்கி, ஞானமும் தெளிவும் நல்குபவர், சிவபெருமான். அவர், வயல்கள் சூழ்ந்த அதிகை வீரட்டனாரே. 274. புள்ளலைத் துண்ட வோட்டில்உண்டு போய்ப் பலாசங் கொம்பின்கள்ளலைச் சுடலை வெண்ணீறுஅணிந்தவர் மணிவெள் றேற்றுத்துள்ளலைப் பாகன் றன்னைத்தொடர்ந்திங்கே கிடக்கின் றேனைஅள்ளலைக் கடப்பித் தாளும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், பிரம கபாலத்தில் பலி ஏற்று உணவு பெற்று உட்கொண்டவர்; மயானத்தில் உள்ள சாம்பலைப் பூசியவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்தவர். அப்பெருமானை நினைந்து ஏத்தி இங்கே, நான், என் செயலற்றுக் கிடக்கின்றேன். அதிகை வீரட்டனாரே ! நாகத்திலிருந்து கடந்து செல்வதற்கு எனக்குத் துணை புரிவீராக. இது பிறவாமையை வேண்டும் குறிப்பாயிற்று. 275. நீறிட்ட நுதலர் வேலைநீலஞ்சேர் கண்டர் மாதர்கூறிட்ட மெய்யராகிக்கூறினார் ஆறு நான்கும்கீறிட்ட திங்கள் சூடிக்கிளர்தரு சடையி னுள்ளால்ஆறிட்டு முடிப்பர் போலும்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், நெற்றியில் திருவெண்ணீறு அணிந்தவர்; கடல் நஞ்சினை உண்ட நீலகண்டர்; திருமேனியின் ஒரு கூறாக உமாதேவியை உடையவர்; நான்கு வேதமும் அதன் ஆறு அங்கமும் விரித்தவர்; பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியின் மீது கங்கையைத் தரித்து விளங்குபவர். அவர், அதிகை வீரட்டனாரே. 276. காணிலார் கருத்தில் வாரார்திருத்தலார் பொருத்த லாதார்ஏணிலார் இறப்பும் இல்லார்பிறப்பிலார் துறக்க லாகார்நாணிலார் ஐவ ரோடும்இட்டுஎனை விரவி வைத்தார்ஆணலார் பெண்ணும் அல்லார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், காட்சிக்கு உட்படாதவர்; கருத்தினைக் கடந்து நின்ற பெருமையுடையவர்; அவருடைய திருக்குறிப்பிலிருந்து யாராலும் மாற்றுதற்கு ஒல்லாதவர்; அவரவர்களுக்கு வேண்டியவாறு, மாறாதவர்; வளர்தல், இறத்தல், பிறத்தல், துறத்தல் என இல்லாதவர். நாணத்தை அற்றவராகிய ஐம்புலக் கூட்டாக விளங்கும் இத்தேகத்தில் என்னை நிலவச் செய்தவர்; ஆண், பெண் என எதுவும் இல்லாதவர். அவர் அதிகை வீரட்டனாரே. 277. தீர்த்தமா மலையை நோக்கிச்செருவலி அரக்கன் சென்றுபேர்த்தலும் பேதை அஞ்சப்பெருவிரல் அதனை யூன்றிச்சீர்த்தமா முடிகள் பத்தும்சிதறுவித் தவனையன்றுஆர்த்தவாய் அலற வைத்தார்அதிகைவீ ரட்ட னாரே. தெளிவுரை : புனிதமாகிய கயிலை மலையை இராவணன் பெயர்த்தலும், உமாதேவி அஞ்சி வெருவத் திருப்பாதப் பெருவிரலை ஊன்றி, அவனுடைய புகழ் மிக்க பத்து முடிகளும் துன்புற்று அலறுமாறு செய்தவர் ஈசன். அவர் அதிகை வீரட்டனாரே. திருச்சிற்றம்பலம் 28. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 278. முன்பெலாம் இளைய காலமூர்த்தியை நினையா தோடிக்கண்கண இருமி நாளும்கருத்தழிந்து அருத்தம் இன்றிப்பின்பகல் உணங்கல் அட்டும்பேதைமார் போன்றேன் உள்ளம்அன்பனாய் வாழ மாட்டேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : அதிகை வீரட்டனீரே ! இளமைக் காலத்தில் தேவரீரை நினைத்து ஏத்தாதவனாகி, இளமையின் துடிப்புடன் கணீர் என்னும் ஒலி பெருக்கிக் கருத்து அழிந்து, மெய்ப் பொருளை நாடாதவனாய் இருந்தேன். முற்பகலில் எல்லாருக்கும் உணவை அளித்துப் பிற்பகலில் வற்றிப் போன சுவை அற்ற உணவைக் கொள்ளும் மகளிர் போன்று, முதுகைக் காலத்தில் உள்ளேன். அன்புடையவனாகவும் வாழ மாட்டேன். இறைவனே ! 279. கறைப் பெருங் கண்டத் தானேகாய்கதிர் நமனை அஞ்சிநிறைப்பெருங் கடலும் கண்டேன்நீள்வரை உச்சி கண்டேன்பிறைப்பெரும் சென்னி யானேபிஞ்ஞகா இவைய னைத்தும்அறுப்பதோர் உபாயம் காணேன்அதிகைவீ ரட்ட னீரே. தெளிவுரை : அதிகை வீரட்டனீரே ! கறை போன்ற நீலகண்டத்தை உடைய பெருமானே ! சினங் கொண்டு நோக்கும் நமனை எண்ணி அஞ்சிக் கடலில் நீராடினால் புண்ணியம் நல்கும் என அவ்வாறு செய்தேன் ; மலையின் உச்சியில் இருந்து தவம் புரிந்தேன. பிறைச் சந்திரனைத் தரித்த சடை முடியுடைய நாதனே ! யாது செய்தும் வினை அறுப்பதற்கு உரிய உபாயத்தைக் காணாதவனானேன். ஈசனை அன்றி அருள்பவர் வேறில்லை என்பது குறிப்பு. 280. நாதனார் என்ன நாளும்நடுங்கின ராகித் தங்கள்ஏதங்கள் அறிய மாட்டார்இணையடி தொழுதோம் என்பார்ஆதனான் அவன்என்று எள்கிஅதிகைவீ ரட்ட னேநின்பாதநான் பரவாது உய்க்கும்பழவினைப் பரிசி லேனே. தெளிவுரை : அதிகை வீரட்டனே ! தானே யாவற்றுக்கும் தலைவன், நாதன் என எண்ணிச் செருக்குற்றுக் குற்றங்களைச் செய்பவராயினர். மனம் பதியாதவராகி, நற்கருத்தும் இன்றி, இறைவனை வணங்குகின்றோம் என்பார். பரிசு உடையவனாதலின், தேவரீரின் பாத மலர்களைப் பணிந்து ஏத்திலன்; என்னைக் காத்து அருள் புரிபவர் ஈசனே, என்பது குறிப்பு. 281. சுடலைசேர் சுண்ண மெய்யர்சுரும்புண விரிந்த கொன்றைப்படலைசேர் அலங்கன் மார்பர்பழனம்சேர் கழனித் தெங்கின்மடலைநீர் கிழிய ஓடிஅதனிடை மணிகள் சிந்தும் கெடிலவீ ரட்ட மேயகிளர்சடை முடிய னாரே. தெளிவுரை : ஈசன், மயானத்தில் இருக்கும் சுட்ட சாம்பலைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; வண்டுகள் தேனுண்டு சுற்றும் கொன்றை மலரை, விரிந்த மார்பில் மாலையாக அணிந்திருப்பவர். அவர், நீர் நிலைகளும் கழனிகளும் நிறைந்து விளங்கத் தென்னை மரங்கள், வளமுடன் திகழ மேவும் கெடில நதிக்கரையில், வீற்றிருக்கும் சடை முடியுடைய நாதரே. 282. மந்திரம் உள்ளதாகமறிகடல் எழுநெய் யாகஇந்திரன் வேள்வித் தீயில்எழுந்ததோர் கொழுந்தின் வண்ணம்சிந்திர மாக நோக்கித்தெருட்டுவார் தெருட்ட வந்துகந்திர முரலும் சோலைக்கானலம் கெடிலத் தாரே. தெளிவுரை : மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு இந்திரன் முதலான தேவர்கள் பாற்கடலைக் கடைய முனைந்து ஆற்றிய போது, நஞ்சு வெளிப்பட்டது. ஈசன், அத்தகைய அச்சத்தைத் தோற்றுவித்து வெருட்டச் செய்பவர். அவர் மேகம் சூழ்ந்த சோலையுடைய கெடில நதிக்கரையில் விளங்கும் வீரட்டனாரே. 283. மைஞ்ஞலம் அனைய கண்ணாள்பங்கன்மா மலையை யோடிமெய்ஞ்ஞரம்பு உதிரம் பில்கவிசைதணிந்து அரக்கன் வீழ்ந்துகைஞ்ஞரம்பு எழுவிக் கொண்டுகாதலால் இனிது சொன்னகிஞ்ஞரம் கேட்டு கந்தார்கெடிலவீ ரட்ட னாரே. தெளிவுரை : மையின் நலத்தினையுடைய உமாதேவியைப் பாகமாக உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையை, மெய்யின் நரம்புகள் புடைக்க எடுத்த இராவணன், தன்னுடைய வேகம் தணியுமாறு உடல் தளர்ந்து வீழ்ந்தனன். அப்போது அவன் கைந் நரம்பு எடுத்து, வீணையாக மீட்டி ஈசனை ஏத்த, அவர் மகிழ்ந்தனர். அப்பெருமான் கெடில வீரட்டனாரே. திருச்சிற்றம்பலம் 29. திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 284. ஊனினுள் உயிரை வாட்டிஉணர்வினார்க்கு எளியர் ஆகிவானினுள் வான வர்க்கும்அறியலா காத வஞஅசர்நான்எனில் தானே என்னும்ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்தேனும்இன் னமுதும் ஆனார்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : சிவபெருமான், இவ்வுடம்பினை விரதம் தவம் முதலானவற்றால் மேவச் செய்து இறை உணர்வுடைய அன்புடையவர்களுக்கு, எளிமையாக விளங்கி அருள் நல்குபவர்; வானுலகத்தில் மேவும் தேவர்களுக்கும் அறிப்படாதவராக விளங்குபவர்; நான் என்னும் அகந்தையின் உணர்வின்றி, எல்லாம் ஈசனே என்னும் தெளிந்த ஞானம் கொண்டு மேவும் பக்தர்கள் நெஞ்சில், தேனும் அமுதும் ஆக விளங்கி, இனிமை சேர்ப்பவர். அப் பெருமான் திருச் செம்பொன்பள்ளியாரே. 285. நொய்யவர் விழுமி யாரும்நூலின் நுண் ணெறியைக் காட்டும்மெய்யவர் பொய்யும் இல்லார்உடல்எனும் இடிஞ்சில் தன்னில்நெய்யமர் திரியும் ஆகிநெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்செய்யவர் கரிய கண்டர்திருச் செம்பொன் பள்ளியாரே. தெளிவுரை : ஈசன், நொய் போன்று நுண்மையானவர்; பெருமையுடையவர்; வேத நூல்களின் நுட்பங்களைக் காட்டும் மெய்ம்மையுடையவர்; பொய்மை அற்றவர்; உடலாகிய அகல் விளக்கில் நெய்யில் விளங்கிச் சுடர் விடும் திரிபோன்றவர்; நெஞ்சின் விளக்காகத் திகழ்பவர்; சிவந்த திருமேனி உடையவர்; கரிய தன்மையுடைய நஞ்சினைக் கழுத்தில் தேக்கி, நீலகண்டராக விளங்குபவர். அவர் திருச்செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனே. 286. வெள்ளியர் கரியர் செய்யர்விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்ஒள்ளியர் ஊழியூழிஉலகமது ஏத்த நின்றபள்ளியர் நெஞ்சத் துள்ளார்பஞ்சமம் பாடி யாடும்தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : ஈசன், வெண்மையர்; கரியர்; செம்மையானவர்; தேவர்களின் உள்ளத்தில் ஒளிர்பவர்; ஊழிகள் தோறும் உலகத்தாரால் ஏத்தப் பெறும் நிலைத்த தன்மையுடையவர்; நெஞ்சில் விளங்குபவர்; பஞ்சமம் என்னும் பண் இசைத்துப் பாடியாடும் மாண்பினர். அவர் தெளிந்த ஞானியாய் விளங்கி, உள்ளத்தில் தோன்றும் அஞ்ஞான இருளை அகலச் செய்யும் திருச்செம்பொன்பள்ளியாரே. 287. தந்தையும் தாயு மாகித்தானவன் ஞான மூர்த்திமுந்திய தேவர் கூடிமுறை முறை இருக்குச்சொல்லிஎந்தைநீ சரணம் என்றங்குஇமையவர் பரவி யேத்தச்சிந்தையுட் சிவம தானார்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : ஈசன், தந்தையும் தாயுமாகித் தானே உயிர்க்கு உயிராகி இயக்குபவர்; ஞானத்தின் மூர்த்தியாய்த் திகழ்பவர்; தேவர்கள் எல்லாம் கூடி, வேதங்கள் ஓதிப் போற்றிச் சரணம் அடைந்து எந்தையே ! என ஏத்தப் பெறுபவர்; அவர்களுடைய சிந்தையுள் சிவமாய் விளங்குபவர். அவர் திருச்செம்பொன்பள்ளி யாரே. 288. ஆறுடைச் சடையர் போலும்அன்பருக்கு அன்பர் போலும்கூறுடை மெய்யர் போலும்கோளரவு அரையர் போலும்நீறுடை அழகர் போலும்நெய்தலே கமழு நீர்மைச்சேறுடைக் கமல வேலித்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : ஈசன், கங்கையணிந்த சடை முடியுடையவர்; அன்பு செலுத்தும் அடியவர்கள்பால் அன்பாகத் திகழ்பவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு அம்மையப்பராய் விளங்குபவர்; வலிமையான அரவத்தை அரையில் கட்டியவர்; திருவெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; அவர், நெய்தல் பூக்களும் தாமரை மலர்களும் விளங்கும் வயல் வளம் மிகுந்த திருச்செம்பொன்பள்ளியாரே. 289. ஞாலமும் அறிய வேண்டில்நன்றென வாழ லுற்றீர்காலமும் கழிய லானகள்ளத்தை ஒழிய கில்லீர்கோலமும் வேண்டா ஆர்வச்செற்றங்கள் குரோத நீக்கில்சீலமும் நோன்பும் ஆவார்திருச் செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : உலகத்தில் திகழும் நன்மக்களே ! இவ்வுலகில் நன்கு வாழலாம். கள்ளத் தனம், வஞ்சனை ஆகியவற்றை நீக்குவீராக. பகையும் குரோதமும் நீக்குக. புனைதல், அலங்கரித்தல் முதலான திருக்கோலமும் தேவையில்லை. நல்லொழுக்கமும் ஈசனை வழிபடும் நோன்பும் கொண்டு வழிபடுக. ஈசன், அத்தகைய சீலமும் போன்பும் ஆகி விளங்குபவர். அவர், திருச் செம்பொன்பள்ளியாரே. 290. புரிகாலே நேசம் செய்யஇருந்தபுண் டரீகத் தாரும்எரிகாலே மூன்றும் ஆகிஇமையவர் தொழநின் றாரும்தெரிகாலே மூன்று சந்திதியானித்து வணங்க நின்றுதிரிகாலம் கண்ட எந்தைதிருச்செம் பொன் பள்ளியாரே. தெளிவுரை : நன்கு தியானம் செய்து அன்பு கொண்டு ஏத்த உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமான் நெருப்பு காற்று மற்றும் மூன்றாகிய நிலம், நீர், ஆகாயம் என ஐம்பூதங்களாகி விளங்குபவர். தேவர்களால் தொழு ஏத்தப் பெறும் அப்பெருமான், காலை,மதியம், மாலை ஆகிய முப்போதுகளிலும் ஏத்தப்படுபவர். அவர் மூன்று காலங்களிலும் மேவும் எந்தை திருச்செம்பொன்பள்ளியாரே. 291. காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும்நீருடைச் சடையுள் வைத்தநீதியார் நீதி யுள்ளார்பாரொடு விண்ணு மண்ணும்பதினெட்டுக் கணங்கள் ஏத்தச்சீரொடு பாட லானார்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : சிவபெருமான், கார்காலத்தில் திகழும் கொன்றை மாலை சூடியவர்; ஒளி வீசுகின்ற சந்திரனும், அரவமும், கங்கையும் சடை முடியில் வைத்து மிளிர்பவர்; நீதியாய் விளங்குபவர்; பூவுலகமும் விண்ணுலகமும் ஏத்தும் பெருமையுடையவர்; பதினெண் கணங்களால் ஏத்தப் பெறுபவர். சீர்பாடும் பாடலாகவும் அதன் பொருளாகவும் விளங்கும் அப்பெருமான், திருச்செம்பொன்பள்ளியாரே. 292. ஓவாத மறைவல் லானும்ஓதநீர் வண்ணன் காணாமூவாத பிறப்பி லாரும்முனிகளா னார்கள் ஏத்தும்பூவான மூன்று முந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தைதேவாதி தேவர் என்றும் திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : சிவபெருமான், எக்காலத்திலும் நிலைத்து விளங்கும் வேதங்களை ஓதுகின்ற பிரமனும், கடல் வண்ணனாக விளங்கும் திருமாலும் காணாதவாறு ஓங்கித் திகழ்ந்தவர். அப்பெருமானுக்கு மூப்பும் இல்லை, பிறப்பும் இல்லை. அவர், முனிவர்களால் ஆயிரத்து எண்பது மலர் கொண்டு ஏத்தப்படுபவர்; எந்தை தேவாதி தேவராகிய அவர், திருச்செம்பொன் பள்ளியாரே. 293. அங்கங்கள் ஆறு நான்கும்அந்தணர்க்கு அருளிச் செய்துசங்கங்கள் பாட ஆடும்சங்கரன் மலையெ டுத்தான்அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்செங்கண்வெள் ளேறது ஏறும்திருச்செம்பொன் பள்ளி யாரே. தெளிவுரை : ஈசன், நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் அந்தணர்களுக்கு ஓதியருளியவர்; சூழ்ந்து சங்கமித்து மேவும் பூத கணங்கள் பாடுகின்ண பாடல்களுக்கு ஏற்ப, நடனம் புரிபவர்; அருள் வழங்கும் இனிமையைப் புரிபவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய அங்கங்கள் நலியுமாறு அடர்த்தவர்; வெள்ளை இடப வாகனத்தில் வீற்றிருப்பவர். அவர் திருச்செம்பொன்பள்ளியாரே. திருச்சிற்றம்பலம் 30. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 294. நங்கையைப் பாதம் வைத்தார்ஞானத்தை நவில வைத்தார்அங்கையில் அனலும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார்தங்கையில் யாழும் வைத்தார்தாமரை மலரும் வைத்தார்கங்கையைச் சடையுள் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; ஞானத்தை அருளிச் செய்பவர்; அழகிய கையில் நெருப்பு ஏந்தியவர்; யானையின் தோலை போர்த்திக் கொண்டுள்ளவர்; யாழினைக் கரத்தில் ஏந்தியவர்; தாமரை மலரை வைத்திருப்பவர்; கங்கையைச் சடையில் தோயத் தரித்தவர்; அவர், திருக்கழிப்பாலையில் பொருந்தி மேவுபவரே. 295. விண்ணினை விரும்ப வைத்தார்வேள்வியை வேட்க வைத்தார்பண்ணினைப் பாட வைத்தார்பத்தர்கள் பயில வைத்தார்மண்ணினைத் தாவ நீண்டமாலினுக்கு அருளும் வைத்தார்கண்ணினை நெற்றி வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், உயர்ந்ததாகிய வானுலகத்தை யாவரும் விரும்புமாறு செய்தவர்; வேள்வியில் எல்லாப் பேறுகளையும் தோற்றுவித்து, அதனை யாவரும் விரும்பி ஏத்தும் தன்மையில் செய்தவர்; அன்பர்களைப் பண்ணின் இசை கொண்டு பாடி மகிழுமாறு அருள் புரிபவர்; மன்னுயிர்களைப் பக்தி செய்து இன்பம் கொள்ளும் தன்மையில் பயிலச் செய்தவர்; திருமால் நெடிது உயர்ந்து, உலகினைத் தாவி அளக்கும் வல்லமையை அருளிச் செய்தவர்; அக்கினிக் கண்ணைத் தனது நெற்றியில் வைத்தவர். அவர் காழிப்பாலையில் மேவி அருள் வழங்கும் சிவபெருமானே. 296. வாமனை வணங்க வைத்தார்வாயினை வாழ்த்த வைத்தார்சோமøன் சடைமேல் வைத்தார்சோதியுள் சோதி வைத்தார்ஆமனெய் யாட வைத்தார்அன்பெனும் பாசம் வைத்தார்காமனைக் காய்ந்த கண்ணார்கழிப்பாலைச் சேர்ப்பனாரே. தெளிவுரை : ஈசன், திருமாலாகிய வாமனன் பூசித்து வணங்குமாறு செய்தவர்; வாயால் நன்கு வாழ்த்து மாறு செய்தவர்; சந்திரனைச் சடைமுடியின் மீது சூடியவர்; சோதியைத் தருகின்ற மூலச்சுடராய்த் திகழ்பவர்; பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் நெய் முதலான பஞ்சகௌவியத்தால் பூசித்து அபிடேகிக்கப் படுபவர்; அன்பு என்னும் பிணித்தலை ஈர்க்கும் தன்மையை அருள் புரிபவர்; மன்மதனை எரித்தவர். அவர் கழிப்பாலையில் மேவும் பெருமானே. 297. அரியன அங்கம் வேதம்அந்தணர்க்கு அருளும் வைத்தார்பெரியன புரங்கள் மூன்றும்பேரழல் உண்ண வைத்தார்பரியதீ வண்ண ராகிப்பவளம்போல் நிறத்தை வைத்தார்கரியதோர் கண்டம் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், அரிய பொருளாக விளங்குகின்ற நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் அந்தணர்கள் ஓதுகின்றவாறு அருளைப் புரிந்தவர்; சாம்பலாகுமாறு செய்தவர்; தீவண்ணராகிப் பவள நிறத்தின் எழிலாய் விளங்குபவர்; நீலகண்டத்தை உடையவர்; அவர் காழிப்பாலையில் வீற்றிருக்கும் பெருமானே. 298. கூரிருள் கிழிய நின்றகொடு மழுக் கையில் வைத்தார்பேரிருள் கழிய மல்குபிறைபுனல் சடையில் வைத்தார்ஆரிருள் அண்டம் வைத்தார்அறுவகைச் சமயம் வைத்தார்காரிருள் கண்டம் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், அடர்த்த இருளையும் விலகச் செய்யும் ஒளி திகழும் மழுப்படையைக் கையில் வைத்திருப்பவர்; இருளை வெருட்டும் பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடையின் மீது வைத்தவர்; மாயையால் சூழப்பட்ட அண்டங்களைத் தோற்றுவித்து அறுவகைச் சமயங்களுக்கும் மூலமாய்த் திகழ்பவர்; இருள் போன்ற கரிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்து நீலகண்டராய் விளங்குபவர். அவர் கழிப்பாலையில் சேர்ந்து விளங்கும் பரமனே. 299. உள்தங்கு சிந்தை வைத்தார்உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்விண்தங்கு வேள்வி வைத்தார்வெந்துயர் தீர வைத்தார்நள்தங்கு நடமும் வைத்தார்ஞானமும் நாவில் வைத்தார்கட்டங்கம் தோள்மேல் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், உள்ளத்தில் பொருந்தும் சிந்தனையைத் தந்தவர்; உயர்ந்த நிலையை அளிக்க வல்ல வேள்வியை யாத்து அருளியவர்; மன்னுயிர்களின் துயர் தீருமாறு புரிபவர்; நள்ளிருளில் நடனம் பயிலும் இயல்பினர்; ஞாலத்து உயிர்கள் நல்லொலிச் சொல்லாம் திருவைந்தெழுத்தை நாவினால் ஓதி ஞானம் பெறச் செய்பவர்; மழுவாயுதத்தைத் தோளின் மீது தரித்திருப்பவர். அவர் கழிப்பாலையில் மேவும் பரமனே. 300. ஊனப்பேர் ஒழிய வைத்தார்ஓதியே உணர வைத்தார்ஞானப்பேர் நவில வைத்தார்ஞானமும் நடுவும் வைத்தார்வானப்பேர் ஆறு வைத்தார்வைகுந்தற்கு ஆழி வைத்தார்கானப்பேர் காதல் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், இத் தேகத்திற்கு வைக்கப் பெற்ற பெயர் மறந்து, தன்னிலையற்றுப் பற்றற்று வாழும் தன்மையை அருளிச் செய்பவர்; திருவைந்தெழுத்தினை ஓதுமாறு செய்து உணரச் செய்தவர்; ஞானத்தின் கருத்தினை அறிய வைத்தவர்; ஞானபூசையாகிய நற்பொருளை ஓதுதல், ஓதுவித்தல், கேட்ட, கேட்பித்தல், சிந்தித்தல் ஆகியவற்றினைப் புரிவிப்பவர்; கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; திருமாலுக்கு ஆழிப் படையை அருளிச் செய்தவர்; கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; அவர் கழிப்பாலையில் மேவும் இறைவரே. 301. கொங்கினும் அரும்பு வைத்தார்கூற்றங்கள் கெடுக்க வைத்தார்சங்கினுள் முத்தம் வைத்தார்சாம்பரும் பூச வைத்தார்அங்கமும் வேதம் வைத்தார்ஆலமும் உண்டு வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன, மலர்களில் மகரந்தங்களைக் கமழுமாறு வைத்தவர்; கூற்றங்களால் அழியப்பட்டுக் கெடுதல் நேராதவாறு காப்பவர்; சங்கினுள் முத்து பிறக்குமாறு புரிபவர்; சாம்பலைப் பூசி நற்கதியடையுமாறு புரிபவர்; வேதமும் அங்கமும் ஓதி உய்யும் வகையை வகுத்தவர்; நஞ்சினை உண்டு விண்ணுலகையும் மண்ணுலகையும் காத்தவர்; இரவும் பகலும் ஆக மாறி வரும் நியதியை வகுத்தவர். அவர் கழிப்பாலையில் சேர்ந்து மேவும் பரமரே. 302. சதுர்முகன் தானும் மாலும்தம்மிலே இகலக்கண்டுஎதிர்முகம் இன்றி நின்றஎரியுரு அதனை வைத்தார்பிதிர்முகன் காலன் றன்னைக்கால்தனில் பிதிர வைத்தார்கதிர்முகம் சடையில் வைத்தார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : ஈசன், பிரமனும் திருமாலும் தம்மில் மாறுபட்டு வாதம் புரிய அவர்களுக்குத் தோன்றாத வாறு எரியுருவாகி ஓங்கி உயர்ந்தவர்; விழித்துச் சினத்தைக் காட்டும் காலனைத் திருப்பாத மலரால் உதைத்து அடர்த்தவர்; ஒளியைத் தனது தண்மையான கதிர்களால் வழங்கும் பிறைச் சந்திரனைச் சடை முடியின் மீது வைத்தவர். அப்பெருமான், கழிப்பாலையில் மேவி இருந்து அருள் வழங்கும் பரமரே. 303. மாலினாள் அணங்கை அஞ்சமதில்இலங் கைக்கு மன்னன்வேலினான் வெகுண்டு எடுக்கக்காண்டலும் வேத நாவன்நூலினான் நோக்கி நக்குநொடிப்ப தோர் அளவில் வீழக்காலினால் ஊன்றி யிட்டார்கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. தெளிவுரை : பெருமையுடைய உமாதேவியானவர் அஞ்சுமாறு, இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, முப்புரிநூல் அணிந்த திருமார்பினரும் வேதம் ஓதும் திருநாவினை உடையவராகிய ஈசன், நொடிப் பொழுதில் அவ்வரக்கன் வீழ்ந்து நையுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர். அப்பெருமான் கழிப்பாலையில் மேவும் பரமரே ஆவார். திருச்சிற்றம்பலம் 31. திருக்கடவூர் வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 304. பொள்ளத்த காய மாயப்பொருளினைப் போக மாதர்வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்விரும்புமின் விளக்குத் தூபம்உள்ளத்த திரியொன்று ஏற்றிஉணருமாறு உணர வல்லார்கள்ளத் தைக் கழிப்பர் போலும்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : இவ்வுடலானது பல துவாரங்களை உடையது, மாயத்தின் வகையில் பற்றியதாக உள்ளது, இவற்றை நீக்க வேண்டுமானால், உள்ளத்தின் உள்ளே விளங்குகின்ற இறையுணர்வைத் திரியாகக் கொண்டு ஏற்ற வேண்டும். அப்போது மெய்யுணர்வு தோன்றும்; ஞானம் பெருகும்; மாயை அகலும்; அத்தகைய செயலைப் புரிபவர் கடவூர் வீரட்டனாரே. 305. மண்ணிடைக் குரம்பை தன்னைமதித்துநீர் மையல் எய்தில்விண்ணிடைத் தரும ராசன்வேண்டினால் விலக்கு வார்ஆர்பண்ணிடைச் சுவைகள் பாடிஆடிடும் பத்தர்க் கென்றும்கண்ணிடை மணியர் போலும்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : இவ்வுலகத்தில் இந்த மானிட தேகம் பெருமை உடையது எனக் கருதி, அத் தேகத்தின் வளர்ச்சிக்கும் சுகத்திற்கும் உரிய ஊட்டத்தைக் கொடுத்தீராயின், எமதருமன் உயிரைக் கவருமாற்றல் நாடினால் விலக்குபவர் யார் ? எனவே, பண்ணின் இசை விளங்கும் ஈசனின் புகழைப் பாடிப் போற்றுமின். பக்தி வயத்தால் உணர்வு கொண்டு மகிழ்ந்து ஆடுமின். அத்தகைய பக்தர்களுக்கு கண்மணி போன்று அருள் புரிபவர், கடவூர் வீரட்டனாரே. 306. பொருத்திய குரம்பை தன்னுள்பொய்ந்நடை செலுத்து கின்றீர்ஒருத்தனை உணர மாட்டீர்உள்ளத்திற் கொடுமை நீக்கீர்வருத்தின களிறு தன்னைவருந்துமா வருத்த வல்லார்கருத்தினில் இருப்பர் போலும்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : இத்தேகத்தின் மீது மும்மலத்தில் குவியலாகக் கருதப்படும் பொய்ந்நடை கொண்டு செலுத்தி வளர்க்கின்றீர். உடலுக்குள் விளங்கும் ஆன்மாவையும், அதனைக் கோயிலாகக் கொண்டு மேவும் ஈசனையும் உணராதவர் ஆனீர். உள்ளத்தில் குரோதம் முதலான கொடுமையான பண்பினையும் நீக்காதவர் ஆனீர். இவ்வளவுக்கும் காரணம் ஐம்புலன் ஆகிய யானைகள் வருத்திக் கொண்டிருப்பதேயாகும். அத்தகைய களிற்றை, வருத்தும் தன்மையில் வருத்த வல்லவர் ஈசன் ஆவார். அவர் கடவூர் வீரட்டனாரே. அவரை ஏத்துமின். 307. பெரும்புலர் காலை மூழ்கிப்பித்தர்க்குப் பத்தர் ஆகிஅரும்பொடு மலர்கள் கொண்டாங்குஆர்வத்தை உள்ளே வைத்துவிரும்பிநல் விளக்குத் தூபம்விதியினால் இடவல் லார்க்குக்கரும்பினிற் கட்டி போல்வார்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : பொழுது புலர்வதற்கு முன்னர், அதிகாலை (உஷகாலம்)யில் உடல் தூய்மை செய்து நீராடி, ஈசனுக்குப் பக்தி உணர்வுடன், அரும்பும், மலர்களும் கொண்டு பெரு விருப்பத்துடன் விளக்கும், தூபமும் ஏத்தி, விதிப்படி இட்டு வணங்குகின்ற பக்தர்களுக்குக் கரும்பின் கட்டி போல் நெஞ்சுள் நின்று இனிமை தருபவர் கடவூர் வீரட்டனாரே. 308. தலக்கமே செய்து வாழ்ந்துதக்கவாறு ஒன்றும்இன்றிவிலக்குவார் இலாமை யாலேவிளக்கத்திற் கோழி போன்றேன்மலக்குவார் மனத்தின் உள்ளேகாலனார் தமர்கள் வந்து கலக்க நான் கலங்கு கின்றேன்கடவூர்வீ ரட்ட னீரே. தெளிவுரை : இழிந்த செயல்களைச் செய்தும், தகுந்தது என எதுவும் இன்றியும், செய்யும் இழி செயலைச் செய்ய வொட்டாது தடுப்பாரும் எவரும் இன்றி, நான் வாழ்ந்தேன். கோழியின் விளக்கத்திற் போன்று கட்டுப்பாடு எதுவும் இல்லாமையானேன். காலனின் தூதுவர்கள் என் உள்ளத்தில் புகுந்து கலக்க, நான் கலங்குகின்றேன். கடவூர் வீரட்டத்தில் மேவும் ஈசனே ! என்னைக் காப்பீராக என்பது குறிப்பு. 309. பழியுடை யாக்கை தன்னில்பாழுக்கே நீர்இ றைத்துவழியிடை வாழ மாட்டேன்மாயமும் தெளிய கில்லேன்அழிவுடைத் தாய வாழ்க்கைஐவரால் அலைக்கப் பட்டுக்கழியிடைத் தோணி போன்றேன்கடவூர்வீ ரட்ட னீரே. தெளிவுரை : பிணி முதலியவற்றால் நொந்து பழிக்கப்படக் கூடியது இந்த சரீரம் ஆகும். இத்தகைய சரீரத்துக்கு ஊட்டம் கொடுப்பது போன்ற செயல்களில் மேவி, நல்வழியின்படி வாழாதவனாய் ஆனேன். அத்தகைய வாழ்வானது மாயையுடையது என, அழியாதவனானேன். இத்தகைய அழிவுக்குரிய வாழ்க்கையில் ஐம்புலன்களால் அலைக்கப்பட்டேன். கழியிடைத் தோணி போன்று வெறுமனாய் உள்ளேன். கடவூர் வீரட்டத்தில் மேவும் ஈசனே ! நீவிரே எனக்குக் கதி அளிப்பீர் ! என்பது குறிப்பு. 310. மாயத்தை அறிய மாட்டேன்மையல்கொள் மனத்த னாகிப்பேயொத்துக் கூகை யானேன்பிஞ்ஞகா பிறப்பொன்று இல்லீநேயத்தால் நினைக்க மாட்டேன்நீதனேன் நீச னேநான்காயத்தைக் கழிக்க மாட்டேன்கடவூர்வீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசனே ! மண்ணுலக வாழ்க்கை நிலை யற்றது என நான் அறியாதவனானேன். இதில் மையல் கொண்டு, பேய் போன்று அஞ்ஞானமாகிய இருளில் கூகை போன்று கிடந்தேன். அழகிய சடை முடியுடைய நாதனே! பிறவா யாக்கைப் பெரியோனே ! நான் நேயம் கொண்டு நினைக்கவில்லை; தாழ்ந்தவனானேன். பிறவியை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லாது உள்ளேன். கடவூர் வீரட்டத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! என்னைக் கனிந்தருள் புரிந்து காக்க என்பது குறிப்பு. 311. பற்றிலா வாழ்க்கை வாழ்ந்துபாழுக்கே நீர் இறைத்தேன்உற்றலால் கயவர் தேறார்என்னும்கட் டுரையோடு ஒத்தேன்எற்றுளேன் என்செய் கேனான்இடும்பையால் ஞானம் ஏதும்கற்றிலேன் களைகண் காணேன்கடவூர்வீ ரட்ட னீரே. தெளிவுரை : ஈசன் திருவடியைப் பற்றி நில்லாது, வாழ்க்கையைக் கழித்தேன். பாழுக்கே நீர் பாய்ச்சினாற் போன்று, உடலை மட்டும் பயனின்றி வளர்த்தேன். கெட்டால் அன்றிக் கயவர் தேரார் என்னும் சொல்லுக்கு இலக்கானேன். நான் என் செய்வேன் ! துன்பம் கொண்டேன். ஞானம் அற்று அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழல்கின்றேன். இதற்குப் பற்றுக்கோடு ஏதும் காணேன். கடவூர் வீரட்டத்தில் மேவும் பெருமானே ! நீவிரே கனிந்து அருள் புரிவீராக ! என்பது குறிப்பு. 312. சேலினேர் அனைய கண்ணார்திறம்விட்டுச் சிவனுக்கு அன்பாய்ப்பாலுநல் தயிர் நெய் யோடுபலபல ஆட்டி என்றும்மாலினைத் தவிர நின்றமார்க் கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர் போலும்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : மனத்தில் தோன்றும் காம எண்ணங்களை அழித்து, ஈசனுக்கு அன்பாகி, நெய்யும் பாலும் தயிரும், மற்றும் கனிகள், வாசனைப் பொடிகள் முதலான பலபல பூசைப் பொருள்களைக் கொண்டு பூசித்து வணங்கி, மயக்கத்தினை நீக்கி நின்ற மார்க்கண்டேயருக்காக அன்று காலனை உதைத்தவர் கடவூர் வீரட்டனாரே. 313. முந்துரு இருவ ரோடுமூவரும் ஆயினாரும்இந்திர னோடு தேவர்இருடிகள் இன்பம் செய்யவந்திரு பதுகள் தோளால்எடுத்தவன் வலிமைய வாட்டிக்கந்திரு வங்கள் கேட்டார்கடவூர்வீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், பிரமன் திருமால் ஆகிய இருவர் உருவத்திலும் விளங்குபவர். உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகிய மூவருடைய உருவமாகவும் திகழ்பவர். இந்திரன் முதலான தேவர்களும், முனிவர்களும் ஈசனைப் போற்றி வணங்கி இருக்கின்ற நிலையில் இருபது தோள்களையுடைய இராவணன் கயிலையை எடுத்தனன். அவனது வலிமை எல்லாம் கெடுமாறு அடர்த்தி வருத்திய ஈசன், அவ்அரக்கன் பாடிய இசையைக் கேட்டு வீற்றிருப்பவர் ஆயினார். அவர் கடவூர் வீரட்டனாரே. திருச்சிற்றம்பலம் 32. திருப்பயற்றூர் (அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 314. உரித்திட்டார் ஆனை யின்தோல்உதிரஆறு ஒழுகி யோடவிரித்திட்டார் உமையாள் அஞ்சிவிரல்விதிர்த்து அலக்கல் நோக்கித்தரித்திட்டார் சிறிது போதுதரிக்கிலர் ஆகித் தாமும்சிரித்திட்டார் எயிறு தோன்றத்திருப்பயற்று ஊர னாரே. தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்தவர்; இரத்தம் கசிய அத்தோலை விரித்து, உமாதேவி அஞ்சுமாறு தன் தோளில் போர்த்துக் கொண்டவர்; அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு சிரித்தவர். அவர் திருப்பயற்றூர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமானே. 315. உவந்திட்டு அங்கு உமையோர் பாகம்வைத்தவர் ஊழி ஊழிபவந்திட்ட பரம னார்தான்மலைசிலை நாகம் ஏற்றிக்கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும்கனலெரி யாகச் சீறிச்சிவந்திட்ட கண்ணார் போலும்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியாரை உவப்புடன் ஒரு பாகத்தில் வைத்தவர்; மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும் கொண்டு, கனன்று எரியும் அக்கினியைக் கணையாகச் செலுத்தி அசுரர்களுடைய மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர், திருப்பயற்றூரில் மேவும் பெருமானே ஆவார். 316. நங்களுக்கு அருள தென்றுநான்மறை ஓதுவார்கள்தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னைஎங்களுக்கு அருள்செய் என்னநின்றவன் நாகம் அஞ்சும்திங்களுக்கு அருளிச் செய்தார்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன், தங்களுக்கு அருள் புரிபவர் என்னும் கருத்தில் நான்கு மறைகளையும் ஓதுகின்ற அந்தணர்களுக்கு அருள் புரியும் தத்துவன்; தழல் வண்ணராக விளங்குபவர்; மன்னுயிர்களால் எங்களுக்கு அருள் புரிவீராக என ஏத்தப் பெறுபவர்; இராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு அஞ்சும் இயல்பினையுடைய சந்திரனுக்கு அருள் செய்து, சடை முடியில் வைத்தவர். அவர், திருப்பயற்றூரில் மேவும் பரமரே ஆவார். 317. பார்த்தனுக்கு அருளும் வைத்தார்பாம்பரை ஆட வைத்தார்சாத்தனை மகனா வைத்தார்சாமுண்டி சாம வேதம்கூத்தொடும் பாட வைத்தார்கோளரா மதிய நல்லதீர்த்தமும் சடையில் வைத்தார்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன், அர்ச்சுனனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; ஐயனாரைத் திருமகனாகப் பெற்றவர்; காளியை நடனம் புரியவும் வேதம் பாடவும் வைத்தவர்; நாகம், சந்திரன், கங்கை ஆகியனவற்றைச் சடை முடியில் திகழுமாறு வைத்தவர். அவர் திறுப்பயற்றூரில் மேவும் பரமரே ஆவார். 318. மூவகை மூவர் போலும்முற்றுமாம் நெற்றிக் கண்ணர்நாவகை நாவர் போலும்நான்மறை ஞானம் எல்லாம்ஆவகை ஆவர் போலும்ஆதிரை நாளர் போலும்தேவர்கள் தேவர் போலும்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன், முத்தொழிலை மேவும் மும்மூர்த்திகளாக விளங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; நாமுதலான புலன் வழிகளில், நாவினால் மேவி நான்மறைகளை ஓதி, ஞானம் பெருகும் அருளைப் புரிபவர்; ஆதிரை நன்னாளுக்கு உரியவர்; தேவர்களின் தலைவர். அவர் திருப்பயற்றூரில் மேவும் இறைவரே. 319. ஞாயிறாய நமனும் ஆகிவருணனாய்ச் சோமனாகித்தீயறா நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகிப்பேயறாக் காட்டில் ஆடும்பிஞ்ஞகன் எந்தை பெம்மான்தீயறாக் கையர் போலும்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன் சூரியன், இயமன், வருணன், சந்திரன், அக்கினி, நிருதி, வாயு, சாந்தன் என அட்டதிக்குப் பாலகராக விளங்குபவர்; பேய்கள் நிலவும் சுடுகாட்டில் நடனம் புரிபவர்; அழகிய சடைக் கோலத்தராகிய எந்தை பெருமான்; நெருப்பினைக் கையில் ஏந்தி உள்ளவர். அவர் திருப்பயற்றூரில் மேவும் பரமரே ஆவார். 320. ஆவியாய் அவியும் ஆகிஅருக்கமாய்ப் பெருக்கமாகிப்பாவியர் பாவம் தீர்க்கும்பரமனாய்ப் பிரமனாகிக்காவியங் கண்ண ளாகிக்கடல்வண்ண மாகி நின்றதேவியைப் பாகம் வைத்ததிருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன், வேள்வியாகவும் அதன் அவிர்ப்பாகமாகவும் திகழ்பவர்; அரிதாகி இன்மை எனப்படுபவராகவும், பெருகி வளரும் இயல்பினராகவும் உள்ளவர்; பாவம் சேர்ந்து விளங்கும் உயிர்களின் பாவத்தைத் தீர்க்கின்ற பரமனாகவும், பரப்பிரமமாகவும் திகழ்பவர்; இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள காவியங் கண்ணி என்னும் அம்பிகையாக விளங்குபவர்; கடல் வண்ணத்தினராகிய உமாதேவியைப் பாகம் கொண்டு திகழ்பவர். அவர் திருப்பயற்றூரில் மேவும் பரமரே. 321. தந்தையாய்த் தாயும் ஆகித்தரணியாய்த் தரணியுள்ளார்க்குஎந்தையும் என்னநின்றஏழுல குடனும் ஆகிஎந்தையும் பிரானே என்றென்றுஉள்குவார் உள்ளத்து என்றும்சிந்தையும் சிவமும் ஆவார்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : ஈசன், தந்தையாகவும் தாயாகவும் இருந்து காத்தருள்பவர்; மண்ணுலகம் ஆகியவர்; இவ்வுலகத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் எந்தை பிரானாக விளங்குபவர்; ஏழுலகும் ஆகி விளங்குபவர்; எல்லாராலும் ஏத்தப் பெறுபவர்; உள்ளத்தில் ஒரு மனத்துடன் ஏத்தும் அன்பர்களின் சிந்தையும் சிவமும் ஆகிப் பேதமில்லாது விளங்குபவர். அவர் திருப்பயற்றூரில் மேவும் பரமரே. 322. புலன்களைப் போக நீக்கிப்புந்தியை ஒருங்க வைத்துஇல்லங்களைப் போக நின்றுஇரண்டையும் நீக்கி ஒன்றாய் மலங்களை மாற்ற வல்லார்மனத்தினுள் போகமாகிச்சினங்களைக் களைவர் போலும்திருப்பற் றூர னாரே. தெளிவுரை : ஐம்புலன்களின் ஆசை வழியே போகங்களைத் துய்க்க வேண்டும் என்னும் தலைமையை நீக்கிச் சிந்தையைத் தெளிவுடையதாக்கி, இலங்கள் எனப்படும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களைக் கடந்து நின்று; நான், எனது எனப்படும் அகப்பற்றும் புறப்பற்றும் ஆகிய இரண்டையும் நீக்கி, அவனே தானோயாகிய ஒரு நிலையுடையவராக விளங்கி, மும்மலங்களை மாற்றுபவர்களுடைய மனத்தில் சூடிக்கொண்டு வெளிப்படுபவர், சிவபெருமான். அவர் மனத்தினுள் நன்கு விங்கி மேவ சினம் காமம் யாவும் தாமே விலகும். அத்தகைய பெருமான், திருப்பயற்றூரில் மேவும் இறைவரே. 323. மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்பார்த்துத்தான் பூம் மேலாற்பாய்ந்துடன் மலையைப் பற்றிஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் அரிவை அஞ்சத் தேத்தெத்தா என்னக் கேட்டார்திருப்பயற் றூர னாரே. தெளிவுரை : சிவமூர்த்தியாகிய ஈசன் திகழ்கின்ற கயிலை மலையின் மீது ஏன் போகக் கூடாது எனச் சினமுற்று நோக்கிய இராவணன், அதனைப் பெயர்க்க முனைந்தான். அப்போது அவ்வரக்கன் முடிகள் பத்தும் நெரிய அடர்த்தியவராய், உமாதேவியாரின் அச்சத்தைப் போக்கியவர் சிவபெருமான். இராவணன் தன் தவற்றை உயர்ந்து இசைத்துப் பாட அதனை மகிழ்ந்து கேட்ட பெருமான், திருப்பயற்றூரில் மேவும் பரமரே. திருச்சிற்றம்பலம் 33. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 324. இந்திர னோடு தேவர்இருடிகள் ஏத்து கின்றசுந்தர மானார் போலும்துதிக்கலாம் சோதி போலும்சந்திர னோடும் கங்கைஅரவையும் சடையுள் வைத்துமந்திர மானார் போலும்மாமறைக் காட னாரே. தெளிவுரை : ஈசன், இந்திரன் முதலான தேவர்களும் ரிஷிகளும் ஏத்தும சிறப்புடையவர்; ஏத்திப் போற்றும் துதிகளுக்கெல்லாம் சோதியாய் விளங்குபவர்; சந்திரனும் கங்கையும் அரவமும் சடை முடியில் திகழுமாறு வைத்தவர்; மறையின் மந்திரமாக விளங்குபவர். அவர் பெருமையுடைய மறைக்காட்டில் விளங்குபவரே. 325. தேயன நாட ராகித்தேவர்கள் தேவர் போலும்பாயன நாடு அறுக்கும்பத்தர்கள் பணிய வம்மின்காயன நாடு கண்டங்குஅதனுளார் காள கண்டர்மாயன நாடர் போலும்மாமறைக் காட னாரே தெளிவுரை : ஈசன், பெரும் சிறப்புக்குரிய முத்தி உலகத்தின் தலைவராகுபவர்; தேவர்களுக்கெல்லாம் மகாதேவர்; சுற்றியுள்ள புறப் பற்றுகளை அறுக்கும் பக்தர்களே ! அப் பெருமானைப் பணிந்து ஏத்த வாருங்கள். தேவர்கள், கொடிய நஞ்சினைக் கண்டு வருந்தி அச்சம் கொண்டு ஓட, அதனைக் கண்டு அவர்களுக்கு அபயம் அளித்து அருள் புரிந்து அக் கொடிய நஞ்சினைப் பருகிக் கரிய கண்டத்துடன் விளங்குபவர் ஈசன். அப்பெருமானைத் திருமால் போற்றி வணங்குபவர். அவர் பெருமையுடைய மறைக்காட்டில் மேவும் பரமரே. 326. அறுமைஇவ் வுலகு தன்னைஆம்எனக் கருதி நின்றுவெறுமையின் மனைகள் வாழ்ந்துவினைகளால் நலிவு ணாதேசிறுமதி அரவு கொன்றைதிகழ்தரு சடையுள் வைத்துமறுமையும் இம்மையாவார்மாமறைக் காடனாரே. தெளிவுரை : இவ்வுலகமானது நிலையில்லாதது. இதனை நிலையுடையது எனக் கருதி வெறுமை உடையதாய் எத்தகைய நற்பயனையும் தராதமனை வாழ்க்கையுடன் வாழ்ந்து, வினைகளால் நலியப் பெறாதீர். பிறைச் சந்திரனும், அரவமும், கொன்றை மலரும் சடையின் மீது திகழத் தரித்திருக்கும் ஈசனை ஏத்துமின். இம்மைக்கும் மறுமைக்கும் அவரே துணையாய் விளங்குபவர். அத்தகைய பெருமான், பெருமையுடன் மேவும் மறைக்காடனாரே. 327. கால்கொடுத்து இருகை யேற்றிக்கழிநிரைத்து இறைச்சி மேய்ந்துதோல்படுத்து உதிர நீரால்சுவரெடுத்து இரண்டு வாசல்ஏல்உடைத் தாஅ மைத்தங்குஏழுசா லேகம் பண்ணிமால்கொடுத்து ஆவி வைத்தார்மாமறைக் காட னாரே. தெளிவுரை : சூடிமேவும் வீட்டிற்குக் கால் கொடுத்தல், கையால் ஏற்றுதல், கழிகளை வரிசைப் படுத்துதல், மேற்கூரை வேய்தல், சேறு நீர் கொண்டு பூசுதல், சுவர் வைத்தால் வாசல் வைத்தல், சாலேகம் (ஜன்னல்) அமைத்தல் முதலானவை அமைத்தல் போன்று இந்த தேகத்திற்கும், கால், கை, ஊன் (இறைச்சி), தோல், கழி (எலும்பு), இரண்டு வாசல், ஏழு சாலேகம் (ஆக 9 துவாரங்கள் குறித்தது) இவற்றை வைத்து மயக்கத்தைக் கொடுத்து, ஆவி (உயிர்)யைத் தந்தவர் மாமறைக் காடரே. 328. விண்ணினார் விண்ணின் மிக்கார்வேதங்கள் விரும்பி ஓதப்பண்ணினார் கின்ன ரங்கள்பத்தர்கள் பாடி யாடக்காண்ணினார் கண்ணின் உள்ளேசோதியாய் நின்ற எந்தைமண்ணினார் வலங்கொண்டு ஏத்துமாமறைக் காட னாரே. தெளிவுரை : சிவபெருமான், விண்ணாகவும் அதனினும் மிகுந்தவராகவும் விளங்குபவர்; வேதங்கள் விரும்பி ஏத்துமாறு புரிந்தவர்; இனிய இசை கொண்டு பக்தர்கள் பாடியாடுமாறு புரிந்தவர்; கண்ணாகவும், கண்ணின் ஒளியாகவும் விளங்குபவர்; எனக்குத் தந்தையானவர்; மண்ணுலகத்தினார் வலம் கொண்டு ஏத்தும் மாண்பினர்; அவர் மாமறைக் காடரே. 329. அங்கையுள் அனலும் வைத்தார்அறுவகைச் சமயம் வைத்தார்தங்கையில் வீணை வைத்தார்தம்மடி பரவ வைத்தார்திங்களைக் கங்கையோடுதிகழ்தரு சடையுள் வைததார்மங்கையைப் பாகம் வைத்தார்மாமறைக் காட னாரே. தெளிவுரை : ஈசன், கையில் நெருப்பு ஏந்தியவர்; ஆறு சமயங்களைத் தோற்றுவித்தவர்; கையில் வீணை ஏந்தியவர்; மன்னுயிர்களையும் மற்று தேவாதி தேவர்களையும் தமது அடியைத் தொழுமாறு புரிபவர்; சந்திரனையும் கங்கையையும் சடை முடியின் மீது வைத்தவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டவர். அவர் மாமறைக் காடரே. 330. கீதராய்க் கீதம் கேட்டுக்கின்னரம் தன்னை வைத்தார்வேதராய் வேதம் ஓதிவிளங்கிய சோதி வைத்தார்ஏதராய் நட்டம் ஆடிஇட்டமாய்க் கங்கையோடுமாதையோர் பாகம் வைத்தார்மாமறைக் காட னாரே. தெளிவுரை : ஈசன், இசைப் பாடல்களில் விருப்பம் உடையவராய்க் கின்னரங்களைத் தோற்றுவித்தவர்; வேதமாகவும் வேதம் ஓதும் மாண்பினராகவும் சோதியாகவும் திகழ இருப்பவர்; ஒரு காரண கர்த்தராய் நடனம் புரிந்தவர்; கங்கையை விருப்பத்துடன் சடை முடியில் வைத்தவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அவர் மாமறைக் காடனாரே. 331. கனத்தினார் வலியு டையகடிமதில் அரணம் மூன்றும்சினத்தினுட் சினமாய் நின்றுதீயெழச் செற்றார் போலும்தனத்தினைத் தவிர்ந்து நின்றுதம்மடி பரவு வார்க்குமனத்தினுள் மாசு தீர்ப்பார்மாமறைக் காட னாரே. தெளிவுரை : ஈசன், வலிமையும் பெரும் சிறப்பும் உடையவர்; வலிமையுடைய முப்புரங்களைத் தீக்கணை செலுத்தி எரித்துச் சாம்பலாக்கியவர்; தான் என்னும் அகந்தையைத் தவிர்த்து நின்று ஏத்தும் அடியவர்களுடைய மன மாசைத் தீர்த்தருள்பவர். அவர் மாமறைக் காடனாரே. 332. தேசனைத் தேசன் றன்னைத்தேவர்கள் போற்றி சைப்பார்வாசனை செய்து நின்றுவைகலும் வணங்கு மின்கள்காசினைக் கனலை என்றும்கருத்தினிஙல் வைத்த வர்க்குமாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காட னாரே. தெளிவுரை : சிவபெருமான், ஒளி மயமானவர்; தேவர்களால் போற்றி செய்யப்படுபவர்; அப் பெருமானைத் தூப தீபங்களால் ஏத்தி வழிபடுவீராக; பொன் மயமாகவும் கனல் மயமாகவும் மேவும் அப்பெருமானைக் கருத்தில் பதிக்கும் அன்பர்களுடைய குற்றங்களைத் தீர்ப்பவர், அவர்; அவர் மாமறைக்காடரே. 333. பிணியுடை யாக்கை தன்னைப்பிறப்பறுத்து உய்ய வேண்டில்பணியுடைத் தொழில்கள் பூண்டுபத்தர்கள் பற்றி னாலேதுணிவுடை அரக்கன் ஓடிஎடுத்தலும் தோகை அஞ்சமணிமுடிப் பத்து இறுத்தார்மாமறைக் காட னாரே. தெளிவுரை : இந்த யாக்கையானது நோய்த் தன்மை உடையது. வினையால் பிணிக்கப்பட்டது. இத்தகைய கட்டு விலகுமாறு, பிறப்பினை அறுத்து நீக்கி உய்ய வேண்டுமானால், ஈசனுக்குத் தொண்டு புரியும் பணிகளைப் பூண்டு, பக்தர்கள் பற்றி நிற்பார்களாக. அத்தகைய ஈசன் அரக்கனாகிய இராவணனுடைய முடியை நெரித்த வல்லமை உடையவர். அவர் மாமறைக்காடரே. திருச்சிற்றம்பலம் 34. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 334. தேரையு மேல்க டாவித்திண்ணமாத் தெழித்து நோக்கிஆரையு மேலு ணராஆண்மையான் மிக்கான் றன்னைப்பாரையும் விண்ணும் அஞ்சப்பரந்த தோள் முடிய டர்த்துக்காரிகை அஞ்சல் என்பார்கலிமறைக் காட னாரே. தெளிவுரை : தேரை வானில் செலுத்தி இராவணன், தனக்கு மேலாக யாரும் இல்லை என்று செருக்குற்று ஆணவத் தன்மையுடையவனாய் ஆரவாரிக்க, பூவுலகும் வானுலகும் அஞ்சுமாறு பரந்த வலிமையுடைய அவனுடைய தோளும் முடியும் அடர்த்து, உமாதேவியை அஞ்சற்க என்று உரைத்தவர் மறைக் காட்டில் விளங்கும் ஈசனே. 335. முக்கிமுன் வெகுண்டு எடுத்தமுடியுடை யரக்கர் கோனைநக்கிருந்து ஊன்றிச் சென்னிநாள்மதி வைத்த எந்தைஅக்கரவுஆமை பூண்டஅழக னார் கருத்தினாலேதெக்குநீர்த் திரைகள் மோதும்திருமறைக் காட னாரே. தெளிவுரை : முயற்சி செய்து கயிலை மலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு ஊன்றிய ஈசன், சடை முடியில் சந்திரனைத் தரித்தவர்; எலும்பு, அரவம், ஆமை ஓடு ஆகியவற்றை மாலையாகக் கொண்ட அழகர்; அவர் கடலலை மோதும் திருமறைக்காட்டில் மேவும் பரமனே ! 336. மிகப்பெருத்து உலாவ மிக்கான்நக்கொடு தேர் கடாவிஅகப்படுத் தென்று தானும்ஆண்மையான் மிக்க ரக்கன்உகைத்தெடுத் தான்ம லையைஊன்றலும் அவனையாங்கேநகைப் படுத் தருளினான் ஊர்நான்மறைக் காடு தானே. தெளிவுரை : தனக்கு இணை யாரும் இல்லை என இறுமாந்து இருந்து உலவிய இராவணன் தேரில் செல்லும் போது, கயிலை மலையை உந்தி எடுக்க, ஈசன் திருப்பாதத்தால் ஊன்றி, அவ்வரக்கனைப் பிறர் நகைக்குமாறு செய்தவர். அப்பெருமான், நான்கு வேதங்களின் சிறப்புடைய மறைக்காட்டில் மேவியவரே. 337. அந்தரத் தேர்க டாவியாரிவன் என்று சொல்லிஉந்தினான் மாமலையைஊன்றலும் ஒள்அ ரக்கன்பந்தமாம் தலைகள் பத்தும்வாய்கள்விட் டலறிவீழச்சிந்தனை செய்து விட்டார்திருமறைக் காட னாரே. தெளிவுரை : வானத்தில் தேர் செலுத்திய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவனுடைய பத்துத் தலைகளும் வாய் விட்டு அலறி வீழுமாறு திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்தவர், திருமறைக் காட்டில் மேவும் பரமனே. 338. தடுக்கவும் தாங்க வொண்ணாத்தன்வலி யுடையய னாகிக்கடுக்கவோர் தேர்க டாவிக்கையிரு பதுக ளாலும்எடுப்பன்நான் என்ன பண்டம்என்றெடுத் தானை ஏங்கஅடுக்கவே வல்லன் ஊராம்அணிமறைக் காடு தானே. தெளிவுரை : தனது வலிமையை எவராலும் தடுக்க முடியாதவனாய் விளங்கிய இராவணன், வானத்தில் தேரில் சென்ற போது, தனது இருபது கரங்களாலும் கயிலை மலையை எடுத்தனன். ஒரு பண்டத்தை எடுப்பது போன்று செயற்பட்ட அவ்வரக்கனைத் தனது திருப்பாத விரலால் அடர்த்து நலியச் செய்து விளங்கியவர், ஈசன். அவருடைய ஊர், அழகு மிளிரும் திருமறைக்காடே. 339. நாள்முடிக் கின்ற சீரான்நடுங்கியே மீது போகான்கோள்பிடித் தார்த்த கையான்கொடியன் மா வலியன் என்றுநீள்முடிச் சடையர் சேருநீள்வரை எடுக்க லுற்றான்தோள்முடி நெரிய வைத்தார்தொல்மறைக் காட னாரே. தெளிவுரை : இராவணனுக்கு அஞ்சி, சூரியன் இல்ஙகையின் மீது வெப்பம் காட்டாதவன். கிரகங்களை அடக்கி ஆள்பவன், இராவணன். அவன் கொடியவன். அவன் வலிமை உடையவன் தானே என்னும் சிந்தையால், நீண்ட சடை முடியுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாய மலையை எடுக்கலுற்றான். அத்தருணத்தில் அவனுடைய தோளும் முடியும் நெரியச் செய்தவர், ஈசன். அத்தகையவர் மறைக்காடரே. 340. பத்துவாய் இரட்டிக் கைகள்உடையன் மா வலியன் என்றுபொத்திவாய் தீமை செய்தபொருவலி அரக்கர் கோனைக்கத்திவாய் கதற அன்றுகால்விரல் ஊன்றி யிட்டார்முத்துவாய் திரைகள் மோதும்முதுமறைக் காட னாரே. தெளிவுரை : இராவணன், பத்து வாய் இருபது கை உடையவர்; பெரு வலிமையுடையவன் எனச் செருக்குற்றவன். அவனை வாயால் கதறி அழுமாறு, திருப்பாத விரலால் ஊன்றியவர், ஈசுன், அவர் அழுமாறு, திருப்பாத விரலால் ஊன்றியவர், ஈசன். அவர் முத்துப் போல் வெண்மையான கடல் அலைகள் மோதும் மறைக்காட்டில் மேவும் பரமனே. 341. பக்கமே விட்ட கையான்பாங்கிலா மதிய னாகிப்புக்கனன் மாமலைக் கீழ்ப்போதுமாறு அறிய மாட்டான்மிக்கமா மதிகள் கெட்டுவீரமும் இழந்த வாறேநக்கன பூதம் எல்லாம்நான்மறைக் காட னாரே. தெளிவுரை : இராவணன், பக்கங்களில் தொடர்ச்சியாகக் கைகளை உடையவனாய், நன் மதியற்றவனாய்க் கயிலை மலையை எடுக்கப் புக, தான் மலைக்குள் புகுந்து அழுந்துவோம் என அறிகிலாது, மதி கெட்டு, வீரமும் இழந்தான். பூதகணங்கள் எல்லாம் அவ்வரக்கனை நகை செய்ய, ஈசன் விளங்கும் இடமாவது மறைக்காடே. 342. நாணஞ்சு கையன் ஆகிநன்முடி பத்தி னோடுபாணஞ்சு முன் னிழந்துபாங்கிலா மதியனாகிநீணஞ்சு தானு ணராநின்றெடுத் தானை அன்றுஏணஞ்சு கைகள் செய்தார்எழில்மறைக் காட னாரே. தெளிவுரை : இராவணன், தன் வலிமை இழந்து நாண் ஏற்றிப் போர் தொடுக்க அஞ்சும் தன்மையானாய் வீரம் கெட்டுப் பக்திப் பெருக்கு தோன்ற பண் இசைக்கும் பாங்குடன், நீண்டு அருளும் திருவைந்தெழுத்து ஓதுபவனாய் மேவ, அருள் புரிந்தவர் மறைக்காடனாரே. 343. கங்கைநீர் சடையுள் வைக்கக்காண்டலும் மங்கை யூடத்தென்கையான் தேர் கடாவிச்சென்றெடுத் தான்ம லையைமுன்கைமா நரம்பு வெட்டிமுன்னிருக்கு இசைகள்பாடஅங்கைவாள் அருளி னானூர்அணிமறைக் காடு தானே. தெளிவுரை : ஈசன், கங்காதேவியைச் சடையுள் வைத்த செயலைக் கண்டு உமாதேவி ஊடல் செய்தார். அத்தருணத்தில் இராவணன் கயிலையை எடுக்க அத் திருமலையைத் திருப்பாத விரலால் மலை அசையாது நிலைத்துது. உமையவளின் ஊடல் தீர்ந்தது. இராவணன் நரம்பினை எடுத்து இசை பாட, ஈசன் வாளும் வாழ்நாளும் அளித்தருளினார். அப் பெருமானுடைய ஊர் மறைக்காடு ஆகும். திருச்சிற்றம்பலம் 35. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 344. காடுடைச் சுடலை நீற்றர்கையில்வெண் டலையர் தையல்பாடுடைப் பூதம் சூழப்பரமனார் மருத வைப்பில்தோடுடைக் கைதை யோடுசூழ்கிடங் கதனைச் சூழ்ந்தஏடுடைக் கமல வேலிஇடை மருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், மயானத்தில் திகழும் சுடலை நீற்றினைத் திருமேனியில் பூசுபவர்; கையில் கபாலம் ஏந்தியவர்; உமாதேவியார் அருகில் விளங்கப் பூதகணங்கள் சூழ விளங்கும் பரமர்; இதழ்களை உடைய தாழை விளங்கத் தாமரை மலர் சூழ மேவும் இடைமருதில் வீற்றிருப்பவர். 345. முந்தையார் முந்தி யுள்ளார்மூவர்க்கு முதல்வ ரானார்சந்தியார் சந்தி யுள்ளார்தவநெறி தரித்து நின்றார்சிந்தையார் சிந்தை யுள்ளார்சிவநெறி யனைத்தும் ஆனார்எந்தையார் எம்பி ரானார்இடைமருது இடங் கொண்டாரே. தெளிவுரை : ஈசன் முன்னைப் பழம் பொருட்கும் பழம் பொருளாய் விளங்குபவர்; மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவர்; சந்திக்கால வழிபாட்டிலும், தவநெறியிலும் மேவுபவர்; சிந்தையாகவும் சிந்திக்கும் பொருளாகவும் உள்ளவர்; சிவநெறி அனைத்தும் ஆகியவர்; எந்தை பிரானாய் விளங்குபவர்; அவர் இடை மருதில் விளங்கும் பெருமானே. 346. காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவி னோடுநீருடைச் சடையுள் வைத்தநீதியார் நீதியாயபோருடை விடையொன் றேறவல்லவர் பொன்னித் தொன்பால்ஏருடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடங் கொண்டாரே. தெளிவுரை : ஈசன், கார் காலத்தில் விளங்கும் கொன்றை மலர் மாலையும், ஒளி திகழும் மாணிக்கத்தையுடைய அரவத்தையும், கங்கையையும் சடைமுடியின் மீது கொண்டுள்ளவர்; நீதியுடையவர்; நீதியின்பாற்படும் இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர். காவிரியின் தென்பால் சிறப்புடைய தாமரை மலர் பெருகி ஓங்கும் இடை மருதில், அப்பெருமான் வீற்றிருப்பவரே. 347. விண்ணினார் விண்ணின் மிக்கார்வேதங்கள் நான்கும் அங்கம்பண்ணினார் பண்ணின் மிக்கபாடலார் பாவம் தீர்க்கும்கண்ணினார் கண்ணின் மிக்கநுதலினார் காமற் காய்ந்தஎண்ணினார் எண்ணின் மிக்கஇடை மருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், விண்ணாகவும், அதனின் மிக்கவராகவும் விளங்குபவர்; நான்கு வேதங்களையும் அதன் அங்கங்களையும் விரித்தவர்; பண்ணில் அமையப் பெற்ற இசைப் பாடல்களைப் பாடும் பக்தர்களின் பாவத்தைத் தீர்க்கும் பொருளாகி, உடன் மேவி விளங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; மன்மதனை எரித்தவர்; எண்ணத்தில் நிறைந்து மிகுந்து மேவும் இடை மருதில், அப்பெருமான் வீற்றிருப்பவரே. 348. வேதங்கள் நான்கும் கொண்டுவிண்ணவர் பரவி யேத்தப்பூதங்கள் பாடி யாடல்உடையவன் புனிதன் எந்தைபாதங்கள் பரவி நின்றபத்தர்கள் தங்கள் மேலைஏதங்கள் தீர நின்றார்இடைமருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், தேவர்களால் வேதங்களைக் கொண்டு பரவி ஏத்தப்படுபவர்; பூதங்கள் பாடிப் போற்ற ஆடல் புரிபவர்; புனிதராகத் திகழ்பவர்; எந்தையாகிய திருப்பாதங்களைப் பரவி ஏத்தி நிற்கும் தீர அருள் புரிபவர்; அத்தகு அருள் தன்மையுடைய அவர், இடைமருதில் வீற்றிருப்பவரே. 349. பொறியரவு அரையில் ஆர்த்துப்பூதங்கள் பலவும் சூழமுறிதரு வன்னி கொன்றைமுதிர் சடை மூழ்க வைத்துமறிதரு கங்கை தங்கவைத்தவர் எத்தி சையும்எறிதரு புனல்கொள் வேலிஇடைமருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், அரவத்தை அரையில் அசைத்துக் கட்டியவர்; பூதகணங்கள் சூழ விளங்குபவர்; வன்னிப் பத்திரம், கொன்றை மலர் ஆகியவற்றை முற்றிய சடை முடியில் மூழ்கவைத்துக் கங்கையைத் தங்க வைத்தவர்; அவர் எத் திசையும் நீர் வளத்தால் சூழப் பெற்ற இடை மருதில் இடம் கொண்டவரே. 350. படரொளி சடையின் உள்ளால்பாய்புனல் அரவி னோடுசுடரொளி மதியம் வைத்துத்தூவொளி தோன்றும் எந்தைஅடரொளி விடையொன் றேறவல்லவர் அன்பர் தங்கள்இடர்அவை கெடவு நின்றார்இடைமருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், படர்ந்து ஒளி திகழ மேவும் சடை முடியின் உள்ளே, பாய்கின்ற கங்கையைத் தோய வைத்தவர்; அரவத்துடன், பிறைச் சந்திரனையும் திகழ வைத்தவர்; தூய ஒளியாய் விளங்குபவர்; இடப வாகனத்தில் ஏறித் திகழ்பவர்; அன்பர்களுடைய இடர்கள் யாவையும் தீர்த்து அருள் புரிபவர் அவர் இடை மருதில் இடம் கொண்டு மேவுபவரே. 351. கமழ்தரு சடையின் உள்ளாற்கடும்புனல் அரவி னோடுதவழ்தரு மதியம் வைத்துத்தன்னடி பலரும் ஏத்தமழுவது வலங்கை யேந்திமாதொரு பாக மாகிஎழில்தரு பொழில்கள் சூழ்ந்தஇடைமருது இடங்கொண் டாரே. தெளிவுரை : ஈசன், நறுமணம் கமழும் சடை முடியுள் கங்கையைத் தரித்தவர்; அரவும் சந்திரனும் சூடியவர்; தனது திருவடியைப் பலரும் ஏத்துமாறு மழுப் படையை வலக்கையில் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அப்பெருமான், எழில் தரும் பொழில்கள் சூழ்ந்த இடை மருதினை, இடமாகக் கொண்டவரே ஆவார். 352. பொன்திகழ் கொன்றை மாலைபுதுப்புனல் வன்னி மத்தம்மின்திகழ் சடையில் வைத்துமேதகத் தோன்று கின்றஅன்றவர் அளக்க லாகாஅனல்எரி யாகி நீண்டார்இன்றுடன் உலகம் ஏத்தஇடைமருது இடங் கொண்டார். தெளிவுரை : ஈசன், பொன் போன்ற திகழும் பிரணவ புஷ்பமாகிய கொன்றை மாலையும், தூய நீராகிய கங்கையும், மற்றும் வன்னிப் பத்திரமும் ஊமத்தம் பூவும் மின்னலைப் போன்று திகழும் சடை முடியில் வைத்து, மேன்மைத் தகவுடையவராய் விளங்குபவர்; திருமாலும், பிரமனும் காணாதவாறு சோதி வடிவாக நீண்டு விளங்கியவர். அப்பெருமான், உலகம் யாவும் ஏத்த, இடைமருதில் இடம் கொண்டவரே. 353. மலையுடன் விரவி நின்றுமதியிலா அரக்க னூக்கத்தலையுடல் அடர்த்து மீண்டேதலைவனாய் அருள்கள் நல்கிச்சிலையுடை மலையை வாங்கித்திரிபுரம் மூன்றும் எய்தார்இலையுடைக் கமல வேலிஇடைமருது இடங்கொண் டாரே. தெளிவுரை : கயிலை மலையுடன் கலந்து நின்ற இராவணன், மதியில்லாதவனாய்த் தூக்க, அவனுடைய தலையும் உடலும் அடர்த்தவர், ஈசன். தலைவராய் மேவும் அவர், பின்னர் அவ்வரக்கனுக்கு அருள் புரிந்தனர். அப்பெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு பகைத்துப் பொருத, முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர். அத்தகைய ஈசன், தாமரை மலர்கள் நாற்புறமும் சூழ்ந்து மணங் கமழும் இடைமருதில் இடம் கொண்டவரே ஆவார். திருச்சிற்றம்பலம் 36. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 354. ஆடினார் ஒருவர் போலும்அலர்கமழ் குழலினாளைக்கூடினார் ஒருவர் போலும்குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினார் ஒருவர் போலும்தூயநன் மறைகள் நான்கும்பாடினார் ஒருவர் போலும்பழனத்தெம் பரமனாரே. தெளிவுரை : ஈசன், திருநடம் புரிந்த பெருமான்; மலர் போன்ற நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் ஒப்பற்ற சந்திரனையும் சடையின் மீது சூடியவர்; தூய நெறியை நவிலும் நன்மறைகள் நான்கினையும் விரித்து ஓதியவர். அவர், பழனத்தில் மேவும் எம் பரமனாரே ! 355. போவதோர் நெறியும் ஆனார்புரிசடைப் புனிதனார் நான்வேவதோர் விளையிற் பட்டுவெம்மைதான் விடவுங் கில்லேன்கூவல்தான் அவர்கள் கேளார்குணமிலா ஐவர் செய்யும்.பாவமே நீர நின்றார்பழனத்து எம் பரமனாரே. தெளிவுரை : ஈசன், நற்கதிக்கு அழைத்துச் செல்லும் நெறியாக விளங்குபவர்; அந்நெறியில் சேர்க்கும் புனிதராய் விளங்கும் புரிசடைநாதர்; நான், துன்பத்தால் நைந்து வாடுகின்ற வினையுடையவனானேன்; துன்பத்தை விடாதவனானேன்; கூவிச் சொன்னாலும், ஐம்புலன்கள் என் சொல்லைக் கேளாதவை ஆயின. நற்குணங்கள் மேவாத இவர் ஐவர் செய்யும் பாவங்கள் யாவும் தீர வேண்டும் என்று உறுதி பூண்டு வீற்றிருப்பவர். பழனத்தில் திகழும் எம் பரமனாரே. 356. கண்டராய் முண்ட ராகிக்கையில்ஓர் கபாலம் ஏந்தித்தொண்டர்கள் பாடி யாடித்தொழுகழல் பரம னார்தாம்விண்டவர் புரங்கள் எய்தவேதியர் வேத நாவர்பண்டைஎன் வினைகள் தீர்ப்பார்பழனத்து எம்பரம னாரே. தெளிவுரை : ஈசன், நீல கண்டராய் விளங்குபவர்; ஒளிதிகழ் கண்ணுடைய அழகிய நுதலை (நெற்றி) உடையவர்; கையில் கபாலம் ஏந்தியவர்; தொண்டர்கள் பக்தியுடன் பாடியும் ஆடியும் ஏத்திப் போற்றப்படும் திருக்கழலை உடையவர்; பரம் பொருளாகியவர்; பகைவர்களின் மும்மதில்களை எரித்தவர்; வேதநாயகர்; வேதம் ஓதி விரிப்பவர்; என்னுடைய பண்டைய வினைகளாகிய சஞ்சிதம். பிராரத்தம் ஆகிய வினைகளைத் தீர்ப்பவர். அவர் பழனத்தில் வீற்றிருக்கும் எம் பரமனாரே. 357. நீரவன் தீயினோடு நிழலவன் எழில தாயபாரவன் விண்ணின் மிக்கபரமவன் பரம யோகிஆரவன் அண்ட மிக்கதிசையி னோடு ஒளிக ளாகிப்பாரகத்து அமிழ்தம் ஆனார்பழனத்தெம் பரம னாரே. தெளிவுரை : ஈசன் நீரும், நெருப்பும், ஒளியும், எழில் மிக்க பூவுலகமும் ஆகியவர்; விண்ணுலகத்தினும் மிகுந்த பரம் ஆகவும், பரமயோகியாகவும் மற்றும் எல்லாமாகவும், அண்டங்களகவும், திசைகளாகவும் விளங்குபவர்; சூரியன், சந்திரன், விண்மீன்கள் என எல்லா ஒளிகளும் ஆகியவர். அத்தகைய பெருமான், இம் மண்ணுலகத்தின் அமுதமாகியவர். அவர், பழனத்தில் வீற்றிருக்கும் எம் பரமனாரே. 358. ஊழியார் ஊழி தோறும்உலகினுக்கு ஒருவர் ஆகிப்பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம தாயஆழியான் அன்னத் தானும்அன்றவர்க்கு அளப்பரியபாழியார் பரவி யேத்தும்ழநத்துஎம் பரம னாரே. தெளிவுரை : ஈசன், ஊழியின் முதல்வராய் விளங்குபவர்; ஊழிகள்தோறும் பாவம் புரியும் மன்னுயிர்களின் பாவத்தைத் தீர்க்கும் பராபரர்; பரத்துவம் உடைய சக்கரப் படையுடைய திருமாலும், அன்னமாகிய பிரமனும், அளப்பரியவாறு ஓங்கி உயர்ந்த பெருமை உடையவர். அடியவர்கள் பரவி ஏத்தும் பழனத்தில் மேவும் அவர், எம் பரமனாரே. 359. ஆலின்கீழ் அறங்கள் எல்லாம்அன்றவர்க்கு அருளிச் செய்துநூலின்கீழ் அவர்கட் கெல்லாநுண்பொருள் ஆகி நின்றுகாலின்கீழ் காலன் றன்னைக்கடுகத்தான் பாய்ந்து பின்னும்பாலின்கீழ் நெய்யும் ஆனார்பழனத்து எம்பரம னாரே. தெளிவுரை : ஈசன், கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் முதலானோர்க்கு உபதேசித்தவர்; நூற்களைக் கண்டு அறிபவர்க்கு நுண்பொருளாகியவர்; காலனைக் காலால் உதைத்து அழித்தவர். அத்தகைய பெருமான் பாலில் நெய் போல் மறைய நின்றுள்ளவர். அவர் பழனத்தில் மேவும் எம் பரமனாரே. 360. ஆதித்தன் அங்கி சோமன்அயனொடு மால் புதனும்போதித்து நின்றுலகில்போற்றிசைத் தாரி வர்கள்சோதித்தார் ஏழுலகும்சோதியுள் சோதி யாகிப்பாதிப்பெண் உருவம் ஆனார்பழனத்து எம்பரம னாரே. தெளிவுரை : சூரியன், அக்கினி, சந்திரன், பிரமன், திருமால், புதன் ஆகிய இவர்கள் ஈசனைத் தோத்திரம் செய்தவர்களாகி உலகில் போதனை செய்தவர்கள். இவர்கள் ஈசனைக் காண வேண்டும் என்று ஏழுலகத்திலும் தேடினர். ஆயினும் அப்பெருமான், காண்பதற்கு அரியவராகிச் சோதியுள் சோதியாக விளங்கியவர். அவர் உமாதேவியைப் பாகம் கொண்டு, அம்மையப்பராய்க் காட்சியுறுபவர். அவர், பழனத்தில் மேவும் எம் பரமனாரே. 361. கால்தனால் காலற் காய்ந்துகாருரி போர்த்த ஈசர்தோற்றனார் கடலுள் நஞ்சைத்தோடுடைக் காதர் சோதிஏற்றினார் இளவெண் திங்கள்இரும்பொழில் சூழ்ந்த காயம் பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம்பரம னாரே. தெளிவுரை : ஈசன், காலால் காலனை உதைத்து அழித்தவர்; கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; கடலில் தோன்றிய நஞ்சுக்கும் காரணமாகி, அதனை உட்கொண்டு தேவர்களையும் காத்தவர்; தோடுடைய செவியர்; சோதியாய் மேவும் வெள்விடையை வாகனமாக உடையவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சூடி, அதனை வளருமாறு செய்து காத்தவர்; என் வினைகள் யாவையும் அழித்தவர். அவர் பழனத்தில் மேவும், எம் பரமனாரே. 362. கண்ணனும் பிரம னோடுகாண்கில ராகி வந்தேஎண்ணியும் துதித்தும் ஏத்தஎரியுறு வாகி நின்றுவண்ணநன் மலர்கள் தூவிவாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்பண்ணுளாம் பாடல் கேட்டார்பழனத்துஎம் பரம னாரே. தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண வேண்டும் என்று முனைந்தும் காண்கிலராகி, எண்ணியும் துதித்தும் ஏத்தப் பேரழல் ஆகி விளங்கும் பெருமான், ஈசன். அப்பெருமான் வண்ணம் திகழும் நல் மலர்களால் தூவி வாழ்த்தப்படுபவர்; புகழ்ப் பாடல் களால் இனிது ஏத்தப்படுபவர்; அவர், பழனத்தில் மேமும் எம் பரமனாரே. 363. குடையுடை அரக்கன் சென்றுகுளிர்கயி லாய வெற்பின்இடைமிட வரலை அஞ்சஎடுத்தலும் இறைவன் நோக்கிவிடையுடை விகிர்தன் தானும்விரலினால் ஊன்றி மீண்டும்படை கொடை அடிகள் போலும்பழனத்து எம் பரம னாரே. தெளிவுரை : இராவணன், கயிலாய மலையை எடுக்க உமாதேவி மலை அசைவைக் கண்டு அங்ச, இறைவன் திருப்பாத விரலால் ஊன்றி, அவனை அடர்த்தார். அவ் அரக்கன் ஏத்திப் பாட, வீரவாள் அருளிச் செய்தவர், அப்பெருமான். அவர், பழனத்தில் மேவும் எம் பரமனே. திருச்சிற்றம்பலம் 37. திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 364. காலனை வீழச் செற்றகழலடி இரண்டும் வந்தென்மேலவா இருக்கப் பெற்றேன்மேதகத் தோன்று கின்றகோலநெய்த் தானம் என்னும்குளிர்பொழிற் கோயில் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே. தெளிவுரை : சிவபெருமான், காலனை அழியுமாறு செற்ற திருக்கழல் உடையவர். அவர் அத்திருப்பாதங்கள் இரண்டினையும் என் தலைமீது இருக்கப் பெற்றுப் புனிதம் கொண்டேன். மேன்மைத் தகவு உடைய அழகிய நெய்த் தானத்தில், குளிர்ந்த பொழில்களையுடைய கோயிலில், வீற்றிருக்கும் நீல கண்டராகிய அப்பெருமானைத் தற்போதம் அற்ற நிலையில், நினைத்து ஏத்துகின்றேன். 365. காமனை அன்று கண்ணாற்கனலெரி யாக நோக்கித்தூமமும் தீபம் காட்டித்தொழுமவர்க்கு அருள்கள் செய்துசேமநெய்த் தானம் என்னும்செறிபொழிற் கோயில் மேயவாமனை நினைந்த நெஞ்சம்வாழ்வுற நினைந்த வாறே. தெளிவுரை : ஈசன், மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; தூப தீபம் காட்டி ஏத்தித் தொழுகின்ற அடியவர்களுக்கு அருள் புரிபவர்; மன்னுயிர்க்குப் பாதுகாப்பாக விளங்கும் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் என்னும் கோயிலில் வீற்றிருப்பவர். அப் பெருமானை நினைத்து ஏத்துகின்ற நெஞ்சமானது, வாழ்க்கையில் மேன்மையுற நினைக்கும் பெருமைக்கு உரியதாகும். 366. பிறைதரு சடையின் மேலேபெய்புனற் கங்கை தன்னைஉரைதர வைத்த எங்கள்உத்தமன் ஊழி யாயநிறைதரு பொழில்கள் சூழநின்றநெய்த் தானம் என்றுகுறைதரும் அடிய வர்க்குக்குழகனைக் கூட லாமே. தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; கங்கையை அச் சடையின்மீது உறையுமாறு வைத்தவர்; பொழில் சூழ்ந்த நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர்; குறைவற்ற தன்மையில் அடியவர்களுக்கு அருள் புரிபவர். அப் பெருமானை நாடி ஏத்துவீராக. 367. வடிதரு மழுவொன்று ஏந்திவார்சடை மதியம் வைத்துப்பொடிதரு மேனி மேலேபுரிதரு நூலர் போலும்நெடிதரு பொழில்கள் சூழநின்றநெய்த் தானமேவிஅடிதரு கழல்கள் ஆர்ப்பஆடும்எம் அண்ண லாரே. தெளிவுரை : ஈசன், வடித்துக் கூராக்கிய மழுப் படையுடையவர்; நீண்ட சடையின் மீது பிறைச் சந்திரனைச் சூடியவர்; திருவெண்ணீறு தரித்த திருமேனியில் முப்புரி நூல் திகழ அணிந்தவர்; நெடிய பொழில்கள் சூழும் நெய்த்தானத்தில் மேவி விளங்குபவர். அப்பெருமான் திருப்பாதங்களில் கழல்கள் ஆர்க்க, நடனம் புரியும் அண்ணலாரே. 368. காடிட மாக நின்றுகனலெரி கையில் ஏந்திப்பாடிய பூதம் சூழப்பண்ணுடன் பலவும் சொல்லிஆடிய கழலர் சீரார்அந்தண் நெய்த் தானம் என்றும்கூடிய குழக னாரைக்கூடுமாறு அறிகி லேனே. தெளிவுரை : ஈசன், சுடுகாட்டை இடமாகக் கொண்டு எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திப் பூத கணங்கள் சூழ நின்று பண்ணுடன் இசைத்துப் பாடத் திருக்கூத்து புரிபவர். திருநடனம் புரியும் அப்பெருமான், அழகிய குளிர்ச்சி மிக்க நெய்த்தானத்தில் எக்காலத்திலும் வீற்றிருப்பவர். அவரைச் சேர்ந்து விளங்கி மகிழ்ந்திருக்கும் நெறியை அறிகிலேனே. 369. வானவர் வணங்கி யேத்திவைகலும் மலர்கள் தூவத்தானவர்க்கு அருள்கள் செய்யும்சங்கரன் செங்கண் ஏற்றன்தேனமர் பொழில்கள் சூழத்திகழு நெய்த் தான மேயகூனிள மதியி னானைக்கூடுமாறு அறிகி லேனே. தெளிவுரை : ஈசன், தேவர்களால் வணங்கப் பெற்று மலர் தூவி, நாள்தோறும் ஏத்தப்படுபவர்; அவர்களுக்கு அருள் புரிபவர்; இடப வாகனத்தையுடையவர்; தேன் மணக்கும் பொழில் சூழ்ந்த நெய்த் தானத்தில் மேயவர்; வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமானைச் சார்ந்து மேவி கூடுகின்ற நெறியை அறிகிலேனே. 370. கால்அதிர் கழல்கள் ஆர்ப்பக்கனலெரி கையில் வீசிஞாலமும் குழிய நின்றுநட்டமது ஆடு கின்றமேலவர் முகடு தோயவிரிசடை திசைகள் பாயமாலொரு பாக மாகமகிழ்ந்த நெய்த்தான னாரே. தெளிவுரை : ஈசன், திருக்காலில் அதிர்ந்து ஒலிக்கும் கழலை அணிந்தவராய் , எரிகின்ற நெருப்பினைக் கையில் ஏந்தி, வீசி நின்று நடனம் புரிபவர்; அவர் ஆடுகின்ற போது, மண்ணுலகம் நனி விளங்கி மேவ, மேலுலகத்தின் முகடானது தோய, விரிந்த சடைகள் பரவி விளங்கத் திருமால் ஒரு பாகமாக இருந்து மகிழுமாறு திகழ்பவர். அப்பெருமான் நெய்த் தானத்தில் வீற்றிருப்பவரே. 371. பந்தித்த சடையின் மேலேபாய்புன லதனை வைத்துஅந்திப் போதுஅனலும் ஆடிஅடிகளை ஆறு புக்கார்வந்திருப்பார் வணங்கி நின்றுவாழ்த்துவார் வாயின் உள்ளார்சிந்திப்பார் சிந்தை யுள்ளார்திருந்து நெய்த்தான னாரே. தெளிவுரை : ஈசன், சேர்த்துக் கட்டிய சடை முடியில் மீது, கங்கையை வைத்தவர்; மாலை வேளையில், அனல் ஏந்தி ஆடுபவர்; அவர் வந்துதித்து வணங்கவும், வாழ்த்திப் போற்றவும் சிந்தித்துத் தியானம் செய்யவும் அருள் புரிபவர். அப்பெருமான், மன்னுயிர்களைத் தீநெறியிற் செல்லாது, திருந்திய நன்னெறியில் மேவுமாறு புரியும் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே. 372. சோதியாய்ச் சுடரும் ஆனார்சுண்ணவெண் சாந்து பூசிஓதிவாய் உலகம் ஏத்தஉகந்துதாம் அருள்கள் செய்வார்ஆதியாய் அந்தம் ஆனார்யாவரும் இறைஞ்சி யேத்தநீதியாய் நியமம் ஆகிநின்றநெய்த் தான னாரே தெளிவுரை : ஈசன், சோதியாய் விளங்குபவர்; சுடராய் நின்று ஒளிர்பவர்; திருவெண்ணீற்றைக் குழையப் பூசுபவர்; கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தவர் ஏத்த, உகந்து அருள் செய்பவர்; ஆதியும் அந்தமும் ஆனவர்; எல்லாரும் இறைஞ்சி ஏத்த, நீதியும் நியமமும் ஆகி நின்று விளங்குபவர். அப்பெருமான், நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே. 373. இலையுடைப் படைகை யேந்தும்இல்கையர் மன்னன் றன்னைத்தலையுடல் அடர்த்து மீண்டேதான்அவற்கு அருள்கள் செய்துசிலையுடன் கணையைச் சேர்த்துத்திரிபுரம் எரியச் செற்றநிலையுடை அடிகள் போலும் நின்றநெய்த் தானனாரே. தெளிவுரை : வேல் என்னும் படையை ஏந்திய இராவணனுடைய தலையும் உடலும் அடர்த்து, மீண்டும் அவனுக்கு அருள்களைச் செய்தவர், ஈசன். அவர், மேரு மலையை வில்லாகக் öõண்டு கணை தொடுத்துத் திரிபுரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமான், எக்காலத்திலும் நிலைத்து மேவி அருள் புரியும் பேறாளர். அவர் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவரே. திருச்சிற்றம்பலம் 38. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 374. கங்கையைச் சடையுள் வைத்தார்கதிர்பொறி அரவும் வைத்தார்திங்களைத் திகழ வைத்தார்திசைதிசை தொழவும் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார்மான்மறி மழுவும் வைத்தார்அங்கையுள் அனலும் வைத்தார்ஐயன் ஐயாற னாரே. தெளிவுரை : ஈசன், கங்கை, அரவம், சந்திரன் ஆகியவற்றைச் சடை முடியில் திகழுமாறு வைத்தவர்; உலகத்தில், எல்லாத் திசைகளிலும் வாழ்பவர்கள், தன்னை ஏத்திப் போற்றி வணங்குமாறு செய்தவர்; உமாதேவியை ஒருபாகத்தில் வைத்து அம்மையப்பராய் மேவுபவர்; மான் கன்றும் மழுவும் கையில் ஏந்தியவர்; அழகிய உள்ளங்கையில் நெருப்பேந்தியவர். அப்பெருமான் என் ஐயாற்றில் மேவும் தலைவரே. 375. பொடிதனைப் பூச வைத்தார்பொங்குவெண் ணூலும் வைத்தார்கடியதோர் நாகம் வைத்தார்காலனைக் கக்க வைத்தார்வடிவுடை மங்கை தன்னைமார்பி லோர் பாகம் வைத்தார்அடியிணை தொழவும் வைத்தார்ஐயன் ஐயாற னாரே. தெளிவுரை : ஈசன், திருநீறு பூசியவர்; முப்புரி நூலணிந்தவர்; கடுமையான விடம் கொண்ட நாகத்தைத் தரித்தவர்; காலனின் உயிரைப் போக்கியவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; தமது திருவடியை அனைவரும் தொழுது ஏத்தி, நற்கதி பெறுமாறு செய்பவர், அவர், ஐயாற்றில் மேவும் தலைவரே. 376. உடைதரு கீளும் வைத்தார்உலகங்கள் அனைத்தும் வைத்தார்படைதரு மழுவும் வைத்தார்பாய்புலித் தோலும் வைத்தார்விடைதரு கொடியும் வைத்தார்வெண்புரி நூலும் வைத்தார்அடைதர அருளும் வைத்தார்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், கீழ் உடையாகக் கோவணத்தை அணிந்தவர்; எல்லா உலகங்களையும் படைத்தவர்; மழுப்படையை ஏந்தியுள்ளவர்; புலித்தோலை உடுத்தியவர்; இடபக் கொடி யுடையவர்; வெண்மையான முப்புரிநூல் திருமார்பில் திகழுமாறு அணிந்துள்ளவர்; உலகுயிர்கள் ஏத்தி வணங்கித் திருவடிக்கண் சரணம் அடையுமாறு அருள் புரிபவர். அவர், ஐயாற்றில் மேவும் தலைவரே. 377. தொண்டர்கள் தொழவும் வைத்தார்தூமதி சடையில் வைத்தார்இண்டையைத் திகழ வைத்தார்எமக்கென்றும் இன்பம் வைத்தார்வண்டுசேர் குழலி னாளைமருவி யோர் பாகம் வைத்தார்அண்டவா னவர்கள் ஏத்தும்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், தொண்டு செய்யும் அன்பர்களால் தொழுது ஏத்தப்படுபவர்; தூய சந்திரனைச் சடை முடியில் வைத்தவர்; இசையும் பூவும் சேர்த்துத் தொடுக்கப் பெற்று மேவும் இண்டை மாலையைத் தரித்திருப்பவர்; எமக்குப் பேரின்பம் திகழுமாறு புரிய வைத்தவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; அண்டத்தில் உள்ள வானவர்கள் ஏத்தும் தலைவர்; அவர் ஐயாற்றில் வீற்றிருப்பவரே. 378. வானவர் வணங்க வைத்தார்வல்வினை மாய வைத்தார்கானிடை நடமும் வைத்தார்காமனைக் கனலா வைத்தார்ஆனிடை ஐந்தும் வைத்தார்ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், தேவர்களால் ஏத்தப்படுபவர்; கொடிய வினைகளைத் தீர்ப்பவர்; மயானத்தில் திருக்கூத்து புரிபவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; பசுவினிடம் உயர்ந்ததாகிய பஞ்சகௌவியத்தை விளங்கி மேவுமாறு படைத்தவர்; அத்தகைய பஞ்ச கவ்வியத்தைக் கொண்டு, அபிடேகம் செய்து பூசிக்கும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாகப் போர்த்திக் கொண்ட தலைவர். அவர் ஐயாற்றில் வீற்றிருப்பவரே. 379. சங்கணி குழையும் வைத்தார்சாம்பர்மெய் பூச வைத்தார்வெங்கதிர் எரிய வைத்தார்விரிபொழில் அனைத்தும் வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார்கடுவினை களைய வைத்தார்அங்கமது ஓத வைத்தார்ஐயன் ஐயாற னாரே. தெளிவுரை : ஈசன், சங்கினால் இழைக்கப் பெற்ற குழையணிந்தவர்; திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; வெங்கதிர் எனப்படும் சூரியனுக்கு ஒளியைத் தந்து, அதன் ஒளிச் சத்தியால் விரிந்து மேவும் பொழில்களைப் பெருகச் செய்தவர்; இரவும் பகலும் ஆக்கியவர்; கடுமையுடைய வினைகள் தீருமாறு செய்பவர்; வேதமும் அதன் ஆறு அங்கமும் ஓதுமாறு செய்தவர். அவர் ஐயாற்றில் வீற்றிருக்கும் தலைவரே யாவர். 380. பத்தர்கட்கு அருளும் வைத்தார்பாய்விடை யேற வைத்தார்சித்தத்தை ஒன்ற வைத்தார்சிவமதே நினைய வைத்தார்முத்தியை முற்ற வைத்தார்முறைமுறை நெறிகள் வைத்தார்அத்தியின் உரிவை வைத்தார்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், பக்தர்களுக்கு அருள் புரிபவர்; இடப வாகனத்தை உடையவர்; அடியவர்களுடைய சித்தத்தைத் தன்பால் ஒன்றுமாறு செய்பவர்; சிவத்தையே நினையுமாறு புரிபவர்; முத்திப் பேற்றை இனிது அடையுமாறு செய்பவர்; ஒழுக்க நெறிகளும் ஆக நெறிகளும் தோன்றச் செய்து அவ்வழியாகிய மெய்ந் நெறிகளில் மாந்தர்கள் ஒழுகுமாறு புரிபவர்; யானையின் தோலை உடையவர். அவர் ஐயாற்றில் மேவும் தலைவரே. 381. ஏறுகந்து ஏற வைத்தார்இடைமருது இடமும் வைத்தார்நாறுபூங் கொன்றை வைத்தார்நாகமும் அரையில் வைத்தார்கூறுமை பாகம் வைத்தார்கொல்புலித் தோலும் வைத்தார்ஆறுமோர் சடையில் வைத்தார்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உகந்து ஏறுபவர்; திருவிடை மருதூர் என்னும் திருத்தலத்தில் மேவுபவர்; நுறுமணம் கமழும் கொன்றை மலர் மாலை தரித்தவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர்; புலித்தோலை உடுத்தியவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; அவர் ஐயாற்றில் வீற்றிருக்கும் தலைவரே. 382. பூதங்கள் பலவும் வைத்தார்பொங்குவெண் ணீறும் வைத்தார்கீதங்கள் பாட வைத்தார்கின்னரம் தன்னை வைத்தார்பாதங்கள் பரவ வைத்தார்பத்தர்கள் பணிய வைத்தார்ஆதியும் அந்தம் வைத்தார்ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், பல்வகையான பூதகணங்களையுடையவர்; ஒளிர்ந்து மேவி அருள் வழங்கும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் உடையவர்; சாமகானம் முதலான கீதங்களையும் இசைத்துப் பாடும் புகழ்ப் பாடல்களையும் தோற்றுவித்தவர். மண்ணுயிர்கள் பரவி ஏத்தி நற்கதியுற்று உய்யுமாறு புரிபவர்; பக்தர்கள் பணிந்து ஏத்த அருள் புரிபவர்; ஆதியும் அந்தமும் தோற்றுவிப்பவராய்க் கர்த்தா ஆகுபவர். அவர், ஐயாற்றில் வீற்றிருக்கும் தலைவரே. 383. இரப்பவர்க்கு ஈய வைத்தார்ஈபவர்க்கு அருளும் வைத்தார்கரப்பவர் தங்கட் கெல்லாம்கடுநர கங்கள் வைத்தார்பரப்புநீர்க் கங்கை தன்னைப்படர்சடைப் பாகம் வைத்தார்அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே. தெளிவுரை : ஈசன், யாசிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் தயையை மாந்தர்களுக்குத் தோற்றுவித்தவர்; அவ்வாறு அறம் புரியும் நல்லோர்கள், நன்மையுறுமாறு அருள்புரிபவர்; தருமம் செய்யாது உலோபியாய் இருப்பவர்களுக்குக் கொடுமையான நரகங்களை வைத்து, அதில் ஆழ்ந்து துன்புறுமாறு செய்பவர்; கங்கையைச் சடை முடியில் தரித்து விளங்குபவர்; கயிலை மலையைப் பெயர்த்த இராவணன், ஏத்திப் போற்றி அவனுக்கு அருள் புரிந்தவர். அவர் ஐயாற்றில் வீற்றிருக்கும் தலைவராவர். திருச்சிற்றம்பலம் 39. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 384. குண்டனாய்ச் சமண ரோடேகூடிநான் கொண்ட மாலைத்துண்டனே சுடர்கொள் சோதீதூநெறி யாகி நின்றஅண்டனே அமரர் ஏறேதிருவையாறு அமர்ந்த தேனேதொண்டனேன் தொழுதுன் பாதம்சொல்லிநான் திரிகின் றேனே. தெளிவுரை : நான், சமணத்தில் இருந்தபோது மதி மயக்கத்தைத் துண்டித்த சுடர் மிகும் சோதியே ! தூய நெறியாக விளங்கி மேவி அண்டமாய் விளங்கும் ஈசனே ! தேவர்கள் தலைவனே ! திருவையாற்றில் வீற்றிருக்கும் தேன் போன்ற இனிமையானவனே ! நான் தொண்டு செய்பவனாய்த் தேவரீருடைய திருப்பாதத்தைத் தொழுதும் திருவைந்தெழுத்தைத் தியானித்தும் திரிகின்றவனானேன். 385. பீலிகை இடுக்கி நாளும்பெரியதோர் தவம்என்று எண்ணிவாலிய தறிகள் போலமதியிலார் பட்ட தென்னேவாலியர் வணங்கி யேத்தும் திருவையாறு அமர்ந்த தேனோடுஆலியா எழுந்த நெஞ்சம்அழகிதா எழுந்த வாறே. தெளிவுரை : மயிற் பீலியைக் கைக் கொண்டு இருத்தலையே தவம் என்று எண்ணி, வாலிபத்தின் மதர்ப்பினால் அழிதல் போன்று, மதியற்றவர் பால்சேர்ந்து நைந்தேன் ! வாலி வணங்கியேத்தும் பெருமானே ! திருவையாற்றில் வீற்றிருக்கும் தேனே ! தேவரீருடன் இணைந்து மகிழ்ந்த நெஞ்சமானது மிகவும் செம்மையுற்றது. 386. தட்டிடு சமண ரோடேதருக்கிநான் தவம்என்று எண்ணிஒட்டிடு மனத்தி னீரேஉம்மையான் செய்வ தென்னேமொட்டிடு கமலப் பொய்கைத்திருவையாறு அமர்ந்த தேனோடுஒட்டிடும் உள்ளத் தீரேஉம்மைநான் உகந்திட்டேனே. தெளிவுரை : சமணத்தில் இருந்ததைத் தவம் என்று எண்ணிய என் மனத்திலும் பதிந்து விளங்கும் பெருமானே ! தேவரீரை யான் எவ்வாறு புகழ்வேன் ! தாமரை மலர் விளங்கும் பொய்கையுடையது திருவையாற்றில் அமர்ந்த தேனே ! உன் உள்ளத்தில் ஒட்டி உள்ள ஈசனே ! உம்மை நான் உகந்து ஏத்தினன். 387. பாசிப்பல் மாசு மெய்யர்பலமிலாச் சமண ரோடுநேசத்தால் இருந்த நெஞ்சைநீக்குமாறு அறிய மாட்டேன்தேசத்தார் பரவி யேத்தும்திருவையாறு அமர்ந்த தேனைவாசத்தால் வணங்க வல்லார்வல்வினை மாயு மன்றே. தெளிவுரை : சமணத்தில் நேயம் கொண்டு இருந்த எம் நெஞ்சினை, ஈசன் தன்பால் நாட்டி, நீக்க முடியாதவாறு செய்தேன். எல்லா உலகத்தினரும் பரவியேத்தும் ஈசனே ! திருவையாற்றில் அமர்ந்த தேன் போன்றவரே ! தேவரீருடைய திருப்பாத மலர்களை அன்புடன் தொழ வல்லவர், வல்வினையி லிருந்து நீங்கப் பெறுவர். 388. கடுப்பொடி யட்டி மெய்யில்கருதியோர் தவம்என்று எண்ணிவடுக்களோடு இசைந்த நெஞ்சேமதியிலீ பட்ட தென்னேமடுக்களில் வாளை பாயும் திருவையாறு அமர்ந்த தேனைஅடுத்தநின்று உன்னு நெஞ்சேஅருந்தவம் செய்த வாறே. தெளிவுரை : சமணரோடு இருந்து உழன்ற நெஞ்சமே ! நீ அடைந்த நன்மைதான் யாது ! ஒன்றும் இல்லை. மடுக்களில் வாளை பாயும் சிறப்புடைய திருவையாற்றில் அமர்ந்த தேன் போன்ற ஈசனைச் சார்ந்து நின்று ஏத்துக. அதுவே அரிய தவத்தைப் புரிந்த மாண்புடையதாகும். 389. துறவியென்று அவமது ஓரேன்சொல்லிய செலவு செய்துஉறவினால் அமண ரோடும்உணர்விலேன் உணர்வொன்று இன்றிநறவமார் பொழில்கள் சூழ்ந்ததிருவையாறு அமர்ந்த தேனைமறவிலா நெஞ்ச மேநல்மதியுனக்கு அடைந்த வாறே. தெளிவுரை : நெஞ்சமே ! துறவு என்னும் பெயரிலே அவமே கொண்டு இருந்தனை. அவத்தின்பால் உள்ளனை என்னும் உணர்வும் இன்றி இருந்தனை. பொழில் சூழ்ந்த திருவையாற்றில் அமர்ந்த தேன் போன்ற ஈசனை மறவாத நெஞ்சமே ! இப்போது தான் உனக்கு நல்ல அறிவு ஏற்பட்டது. 390. பல்லுரைச் சமண ரோடேபலபல காலம் எல்லாம்சொல்லிய செலவு செய்தேன்சோர்வன் நான் நினைந்த போதுமல்லிகை மலரும் சோலைத்திருவையாறு அமர்ந்த தேனைஎல்லியும் பகலும் எல்லாம்நினைந்த போது இனிய வாறே. தெளிவுரை : சமணருடன் பலகாலம் இருந்து என் வாழ்க்கையைக் கழித்தேன். மல்லிகை மலரும் சோலையுடைய திருவையாற்றில் அமர்ந்த தேன்போன்ற இனிய ஈசனை, நான் நினைத்த போது எனக்குச் சோர்வு நீங்கியது. இரவும் பகலும் இனிமை தோன்றிய நிலையில் ஆயினேன். 391. மண்ணுளார் விண்ணு ளாரும்வணங்குவார் பாவம் போகஎண்ணிலாச் சமண ரோடேஇசைந்தனை ஏழை நெஞ்சேதெண்ணிலா எறிக்கும் சென்னித்திருவையாறு அமர்ந்த தேனைக்கண்ணினாற் காணாப் பெற்றுக்கருதிற்றே முடிந்த வாறே. தெளிவுரை : ஒளி மிகுந்த பிறைச் சந்திரனைச் சென்னியில் சூடித் திருவையாற்றில் வீற்றிருக்கும் தேன் போன்ற இனிய சிவபெருமானை, மண்ணுலகத்தினரும், தேவர்களும் வணங்கிப் பாவத்தைப் போக்கிக் கொள்கின்றனர். எண்ணற்ற காலம் சமணருடன் இருந்து காலத்தைக் கழித்த நெஞ்சமே ! அப்பெருமானைக் கண்ணாற் கண்டு தரிசித்து ஏத்துக,. நீ வேண்டும் என்று கருதும் முத்திப் பேறு, நினக்கு வாய்த்தது என்று முடிவாகக் கொள்க. இது, முத்திப் பேற்றின் உறுதிப் பாட்டினை ஓதுதலாயிற்று. 392. குருந்தமது ஒசிந்த மாலும்குலமலர் மேவி னானும்திருந்துநல் திருவ டியும்திருமுடி காண மாட்டார்அருந்தவ முனிவர் ஏத்தும்திருவையாறு அமர்ந்த தேனைப்பெருந்த நின்று உன்னுநெஞ்சேபொய்வினை மாயும் அன்றே. தெளிவுரை : திருமாலும், பிரமனும் திருவடியையும், திருமுடியையும் முறையே தேடியும் காணப் பெறாதவராகிய ஈசன் முனிவர்களால் ஏத்தும் திருவையாற்றில், தேன் என இனிமையுடையவராய் வீற்றிருப்பவர். நெஞ்சமே ! அப்பெருமானுடைய திருவடிகள் மனத்தில் பொருந்துமாறு பதித்து நினைப்பாயாக. மும்மலக் கட்டும் இருவினைப் பாசமும் நின்னை விட்டு நீங்கும். 393. அறிவிலா அரக்கன் ஓடிஅருவரை எடுக்க லுற்றுமுறுகினான் முறுகக் கண்டுமூதறி வாளன் நோக்கிநிறுவினான் சிறுவி ரலால்நெரிந்துபோய் நிலத்தில்வீழஅறிவினால் அருள்கள் செய்தான்திருவையாறு அமர்ந்த தேனே. தெளிவுரை : இராவணன், கயிலை மலையை எடுக்க முனையக் கண்டு, ஈசன் திருப்பாத விரலால் நெரித்து, அவனை நிலத்தில் அழுத்தினார். அவ்வரக்கன் நல்லறிவு கொண்டு பாடி ஏத்த, அருள் புரிந்தவர், அப்பெருமான். அவர் திருவையாற்றில் அமர்ந்த தேன் போன்ற இனியவரே. திருச்சிற்றம்பலம் 40. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 394. தானலாது உலகமில்லை சகமலாது அடிமையில்லைகானலாது ஆடல்இல்லை கருதுவார் தங்களுக்குவானலாது அருளும்இல்லை வார்குழல் மங்கையோடும்ஆனலாது ஊர்வது இல்லை ஐயன்ஐயாற னார்க்கே. தெளிவுரை : சிவபெருமான், தானே உலகமானவர். உலகம் அவருக்கு அடிமையாகும். அவர், சுடுகாட்டில் ஆடுபவர்; கருதி ஏத்தும் அடியவர்களுக்கு வான் போன்ற சிறப்புடன் அருள் புரிபவர்; உமாதேவியோடு வீற்றிருப்பவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து செல்லுபவர். அத்தகைய பெருமையுடைய தலைவர், ஐயாற்றில் மேவும் ஈசனே. 395. ஆலலால் இருக்கையில்லை அருந்தவ முனிவர்க்கன்றுநூலலால் நொடிவதில்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டுமாலுநான் முகனும்கூடி மலரடி வணங்க வேலைஆலலால் அமுதம்இல்லை ஐயன்ஐயாற னார்க்கே. தெளிவுரை : திருவையாற்றில் மேவும் தலைவருக்கு, கல்லால மரத்தின் நீழலே இருக்கையாகும்; அருந்தவ முனிவர்களாகிய சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த அறம், கைவிரலால் நொடிக்கும் பாவனையைக் காட்டும் சின் முத்திரையாகும்; திருமால் நான்முகன் முதலியோர் கூடித் திருவடியை வணங்கி ஏத்த அவர் உட்கொண்ட உணவாவது கடல் நஞ்சு ஆகும். 396. நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்றல் இல்லைசுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கை இல்லைதெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளும் இல்லைஅரிபுரி மலர்கொடு ஏத்தும் ஐயன்ஐ யாறனார்க்கே. தெளிவுரை : ஈசன், நரிகள் திரியும் மயானத்தில் நடனம் புரிபவர்; சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ளவர்; தெளிந்த ஞானியர்களுக்கு ஞானமே அருளாகத் திகழ விளங்கும் அப்பெருமான். திருமாலால் மலர் கொண்டு ஏத்தப் படுபவர். அவர், ஐயாற்றில் மேவும் தலைவராவார். 397. தொண்டலால் துணையும் இல்லை தோலாது உடையும் இல்லைகண்டலாது அருளும் இல்லை கலந்தபின் பிரிவதில்லைபண்டைநான் மறைகள்காணாப் பரிசினன் என்றென்று எண்ணிஅண்டவா னவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாற னார்க்கே. தெளிவுரை : ஈசனுக்குத் திருத் தொண்டர்களே துணையாய் விளங்குபவர்கள்; அவர் தோலுடையை உடுத்துபவர். அப்பெருமானைக் கண்டு தரிசித்துப் போற்றுதலே அருளாகும். அவரைக் கண்டு தரிசித்து உள்ளத்தில் நிறுத்திய பின்னர் பிரிவு என்பது இல்லை. நான் மறைகளாலும் காணுதற்கு அரியவர் என்று எல்லா அண்டங்களிலும் உள்ள தேவர்கள் அப்பெருமானை ஏத்துகின்றர். அத்தகைய பெருமையுடைய தலைவர், ஐயாற்றில் மேவும் ஈசனாவார். 398. எரியலால் உருவம்இல்லை ஏறலால் ஏறம்இல்லைகரியலால் போர்வையில்லை காண்பகுசோதியார்க்குப்பரிவிலா அமர்கூடிப் பெருந்தகைப் பிரான்என்று ஏத்தும்அரியலால் தேவி யில்லை ஐயன்ஐ யாற னார்க்கே. தெளிவுரை : ஈசன், நெருப்பின் வண்ணம் உடையவர்; இடபத்தில் ஏறுபவர்; யானையின் தோலைப் போர்வையாக உடையவர்; தேவர்கள் எல்லாரும் கூடிப் பெருந்தகையே என்று ஏத்தும் திருமால், தேவியாக விளங்குபவர். அத்தகைய தலைவர், திருவையாற்றில் மேவும் பெருமானே. 399. என்பலால் கலனும்இல்லை எருதலால் ஊர்வதில்லைபுன்புலால் நாறுகாட்டிற் பொடியலால் சாந்தும்இல்லைதுன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழுது ஆடிப்பாடும்அன்பலாற் பொருளும் இல்லை ஐயன்ஐயாற னார்க்கே. தெளிவுரை : ஈசன், எலும்பினை அணிகலனாக உடையவர்; இடபவாகனத்தில் ஏறுபவர்; மயானத்தில் விளங்கும் சாம்பலைப் பூசுபவர்; திருத்தொண்டர்கள் கூடித் தொழுது போற்றி ஆடிப்பாடும் அன்பினையே பொருளாக உடையவர். அத்தகைய தலைவர், ஐயாற்றில் வீற்றிருக்கும் பெருமானே. 400. கீளலால் உடையும்இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்தோளலால் துணையும் இல்லை தொத்தவர் கின்றவேனில் வேளலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளாஆளலாற் கைம்மாறு இல்லை ஐயன்ஐ யாறனார்க்கே. தெளிவுரை : ஈசன், கோவண ஆடையுடையவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; மன்மதனை எரித்தவர். மீளா ஆளாக இருப்பது அப்பெருமானுக்குச் செய்யும் கைம்மாறு ஆகும். அத்தலைவர் ஐயாற்றில் மேவும் ஈசனே. 401. சதமலாது அடிமையில்லை தானலால் துணையும் இல்லைநகமெலாம் தேயக்கையால் நாள்மலர்தொழுது தூவிமுகமெலாம் கண்ணீர்மல்க முன்பணிந்து ஏத்தும் தொண்டர்அகமலால் கோயில்இல்லை ஐயன்ஐ யாறனார்க்கே. தெளிவுரை : ஈசனுக்கு உலகம் அடிமையாகும். அப்பெருமானுக்குத் துணைவர் என்று சொல்லப்படுவர் தானேயன்றி வேறில்லை. நாள்தோறும் மலர் பறித்துத் தூவித் தொழுது, பக்தியால் கசிந்து உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கப் பணிந்து ஏத்தும், தொண்டர்களின் உள்ளத்தில், கோயில் கொண்டு விளங்குபவர், அப்பரமன். அத்தகைய மாண்பினை உடைய தலைவர், ஐயாற்றில் மேவும் பெருமானே. 402. உமையலாது உருவம்இல்லை உலகலாது உடையது இல்லைநமையெலாம் உடையராவர் நன்மையே தீமையில்லைகமையெலாம் உடையராகிக் கழலடி பரவும் தொண்டர்க்குஅமைவிலா அருள்கொடுப்பார் ஐயன்ஐ யாறனார்க்கே. தெளிவுரை : ஈசன் உருவமாகத் தோற்றுவிப்பது உமாதேவியின் (அருளது சக்தியாகும்) வடிவம்; உடையவர்; யாகத் கொள்வது உலகமே; அவர் நம்மை உடையவர்; நன்மை புரிபவர் அன்றித் தீமை புரியாதவர்; பொறுமை யுடையவராய்த் திருவடி பணியும் அடியவர்களுக்கு, அளவற்ற செல்வங்களை வழங்கி அருள்புரிபவர். அத்தகைய ஐயன், ஐயாற்றில் மேவும் பரமனே. 403. மலையலால் இருக்கை யில்லை மதித்திடா அரக்கன் தன்னைத்தலையலால் நெரித்ததில்லை தடவரைக் கீழடர்த்துநிலையிலார் புரங்களவேவ நெருப்பலால் விரித்ததில்லைஅலையினார் பொன்னி மன்னும் ஐயன்ஐ யாறனார்க்கே. தெளிவுரை : ஈசன், கயிலை மலையை இருப்பிடமாகக் கொண்டு விளங்குபவர்; மதியாத இராவணனுடைய தலையை நெரித்தவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை நெருப்பால் எரித்தவர். அலைகளையுடைய காவிரியாற்றின் கரையில் மன்னும் ஐயாற்றில் அப் பெருமான் வீற்றிருப்பவர். திருச்சிற்றம்பலம் 41. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 404. பொய்விரா மேனி தன்னைப்பொருளெனக் காலம் போக்கிமெய்விரா மனத்தன் அல்லேன்வேதியா வேத நாவாஐவரால் அலைக்கப் பட்டஆக்கைகொண்டு அயர்த்துப் போனேன்செய்வரால் உகளும் செம்மைத்திருச் சோற்றுத் துறையனாரே. தெளிவுரை : ஈசனே ! பொய்மை விரவி மேவும் இவ்வுடம்பை, உயர்ந்த பொருளாகக் கருதிக் காலத்தை வீணாகப் போக்கினேன். நான், மெய் விளங்குகின்ற மனத்தை உடையவனல்ல; வேதத்தின் தலைவராகவும் வேதத்தை விரித்து ஓதுபவராகவும் விளங்கும் நாதனே ! ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட யாக்கையால் யான் அயர்ச்சி அடைந்தேன். வயல்களில் வரால் (மீன்கள்) உகளும் நீர்வளம் நிறைந்த செம்மை மிகும் திருச்சோற்றுத் துறையில் மேவும் பெருமானே ! அருள் புரிவீராக, என்பது குறிப்பு. 405. கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டாஎட்டவாம் கைகள் வீசிஎல்லிநின் றாடு வானைஅட்டகா மலர்கள் கொண்டேஆனஞ்சும் ஆட்ட ஆடிச்சிட்டாய் அருள்கள் செய்வார்திருச்சேற்றுத் துறையனாரே. தெளிவுரை : நல்ல உடற்கட்டு இருக்கிறது என்று கருதி நீங்கள், வாழ்நாள் காலத்தை வீணாகக் கழிக்க வேண்டாம். ஈசன், எட்டுக் கைகளை வீசி இரவில் நின்று நடனம் ஆடுபவர். அப்பெருமானை, அட்ட மலர்களாகிய புன்னை வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வர்த்தம், நீலோற்பவம் (குவளை), பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய மலர்கள் கொண்டு தூவிப் போற்றி வணங்குவீராக. பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பஞ்சகௌவியத்தைக் கொண்டு அப்பெருமானைப் பூசித்து ஏத்துவீராக. இவ்வாறு தொழுது ஏத்த, பெருந்தகையாய் மேவும் சிவபெருமான், அருள்களைப் புரிவார். அத்தகைய ஈசன், திருச்சோற்றுத் துறையனாரே. 406. கல்லினால் புரமூன்று எய்தகடவுளைக் காதலாலேஎல்லியும் பகலும் உள்ளேஏகாந்த மாக ஏத்தும்பல்லில்வெண் தலைகை யேந்திப்பல்இலம் திரியும் செல்வர்சொல்லுநன் பொருளும் ஆவார்திருச் சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களைக் கணை தொடுத்து எய்து எரித்துச் சாம்பலாக்கிய கடவுள், சிவபெருமான். அப்பெருமானை, இரவும் பகலும் உள்ளத்தில் பதித்து ஏகாந்தமாக இருந்து, தியானம் செய்வீராக. அவர், பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பல இல்லங்களில் திரிந்து, பலிகொள்ளும் செல்வர். சொல்லும், அதன் பொருளுமாய் எங்கும் வியாபித்து இருப்பவர். அத்தகைய ஈசன், திருச்சேற்றுத்துறை நாதரே. 407. கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்இறையராய் இனிய ராகித்தனியராய்ப் பனிவெண் திங்கள்பிறையராய்ச் செய்த எல்லாம்பீடராய்க் கேடில் சோற்றுத்துறையராய்ப் புகுந்துஎன் உள்ளச்சோர்வு கண்டு அருளினாரே. தெளிவுரை : ஈசன், கறை பொருந்திய கண்டத்தைக் கொண்டு நீலகண்டர் என விளங்குபவர்; நெற்றியில் கண் கொண்டு முக்கண்ணர் ஆவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பராய் விளங்குபவர்; உள்ளத்தில் இருந்து பக்தர்கள் பால் இனிமை வழங்குபவர்; தனித்தத்துவ யோகியாய் விளங்குபவர்; குளிர்ந்த வெண்பிறைச் சந்திரனைச் சூடிச் சந்திரசேகரன் எனத் திகழ்பவர்; யாவும் நிகழ்த்தும் பெருமையுடையவர் அப்பெருமான், சோற்றுத் துறையில் மேவி என் உள்ளத்தில் புகுந்து சோர்வு நீக்கி, அருள் செய்த பரமரே. 408. பொந்தையைப் பொருளா எண்ணிப்பொருக்கெனக் காலம் போனேன்எந்தையே யேக மூர்த்திஎன்று நின்று ஏத்த மாட்டேன்பந்தமாய் வீடும் ஆகிப்பரம் பர மாகி நின்றுசிந்தையுள் தேறல் போலும்திருச் சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : எந்தையே ! ஏக மூர்த்தியாய் விளங்கும் பெருமானே ! இவ்வுடலையே பெரிதாக எண்ணிக் காலம் கழிதலையும் அறியாதவனாய் வாழ்நாளைக் கழித்து விட்டேன். உடலில் உயிரும் சேர்த்துப் பந்தம் பெறச் செய்பவரும் நீவிர்; வீடுபேறும் நீவிர்; யாங்கணும், வியாபித்துள்ள பரம்பரனும் நீவிர். அந்தோ ! தேவரீரை ஏத்தாதவனானேன். சிந்தையில் தேன் போன்று இனிமையுடன் மேவும் தேவரீர், திருச்சோற்றுத் துறை நாதரே. அருள் புரிவீராக என்பது குறிப்பு. 409. பேர்த்து இனிப் பிறவா வண்ணம்பிதற்றுமின் பேதை பங்கன்பார்த்தனுக்கு அருள்கள் செய்தபாசுப தன்தி றமேஆர்த்துவந்து இழிவது ஒத்தஅலைபுனல் கங்கை யேற்றுத்தீர்த்தமாய்ப் போத விட்டார்திருச்சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : மீண்டும் பிறவியைக் கொள்ளாத வண்ணத்தை பெறுமாறு அம்மையப்பராகிய ஈசனை ஏத்துவீராக ! அர்ச்சுனருக்கு அருள் செய்து பாசுபதத்தை நல்கிய திறத்தினை ஏத்துக ! அப் பெருமான், கங்கையைச் சடை முடியின் மீது ஏற்றுப் பூமியின் மீது புனித தீர்த்தமாக மிளிருமாறு, பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்தின் பயனாய்த் திகழ வைத்தவர். அவர் திருச்சோற்றுத்துறை நாதரே. 410. கொந்தார்பூங் குழலி னாரைக்கூறியே காலம் போனஎந்தைஎம் பிரானாய் நின்றஇறைவனை ஏத்தாது அந்தோமுந்தரா அல்கு லாளைஉடன்வைத்த ஆதிமூர்த்திசெந்தாது புடைகள் சூழ்ந்ததிருச்சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : மனை வாழ்க்கையைப் பெரிதாக எண்ணிக் காலத்தைப் போக்கி, வாழ்க்கை கழிந்ததே ! எந்தை பிரானாகிய ஈசனை ஏத்தாது வீணாகியதே ! உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராக விளங்கும் ஆதிமூர்த்தியே ! மகரந்தங்கள் விளங்கும் திருச்சேற்றுத் துறை நாதரே ! 411. அங்கதி ரோன வனைஅண்ணலாக் கருத வேண்டாவெங்கதி ரோன் வழியேபோவதற்கு அமைந்து கொள்மின்அங்கதி ரோன வனைஉடன்வைத்த ஆதி மூர்த்திசெங்கதி ரோன் வணங்கும்திருச்சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : சூரியனைப் பெருங் கடவுளாகக் கருத வேண்டாம். அவன் கடைப் பிடித்த சிவ வழிபாட்டு நெறியைக் கொள்வீராக. ஈசன், சூரியனைத் தன்னிடத்தில் வைத்த ஆதிமூர்த்தியாவார். அத்தகு சூரியின் வழிபட்ட ஈசன், திருச்சோற்றுத்துறை நாதரே. 412. ஓதியே கழிக்கின் றீர்கள்உலகத்தீர் ஒருவன் றன்னைநீதியால் நினைய மாட்டீர்நின்மலன் என்று சொல்லீர்சாதியா நான்மு கனும்சக்கரத் தானும் காணாச்சோதியாய்ச் சுடரதானார்திருச் சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : உலகத்தில் மேவும் மாந்தர்களே ! ஈசனை ஏத்தி ஓதுகின்றீர். அப்பெருமானை நெஞ்சத்துள் உணர்ந்து தியானம் செய்யுங்கள். அப்பெருமானை நின் மலனே ! என்று போற்றுவீராக. அப் பெருமான், பிரமன், திருமால் ஆகியவர்களும் காணாத அருட் பெருஞ் சோதியாய்த் திகழ்ந்து சுடராகி விளங்கியவர். அவர் திருச்சோற்றுத்துறை நாதரே. 413. மற்றுநீர் மனம்வை யாதேமறுமையைக் கழிக்க வேண்டில்பெற்றதோர் உபாயம் தன்னால்பிரானையே பிதற்றுமின்கள்கற்றுவந்து அரக்கன் ஓடிக்கயிலாய மலையெ டுக்கச்செற்றுகந் தருளிச் செய்தார்திருச்சோற்றுத் துறைய னாரே. தெளிவுரை : மறுமையில் பிறப்பு அடையாதவாறு முத்திப் பேற்றினை அடைய வேண்டுமானால், அதற்கு உபாயமாவது, ஈசனின் திருநாமத்தையே ஏத்தி உரைப்பீராக. பிறவற்றின் மீது மனத்தைப் பதிக்க வேண்டாம். அப்பெருமான் கயிலையை எடுத்த இராவணனைச் செற்று அடக்கினவர் என்றாலும், அவன் ஏத்திப் போற்ற அருளிச் செய்தவர். அவர் திருச் சோற்றுத்துறை நாதரே. திருச்சிற்றம்பலம் 42. திருத்துருத்தி (அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 414. பொருந்திய குரம்பை தன்னைப்பொருளெனக் கருத வேண்டாஇருத்தியெப் பொழுதும் நெஞ்சுள்இறைவன் யேத்து மின்கள்ஒருத்தியைப் பாகம் வைத்தங்குஒருத்தியைச் சடையுள் வைத்துதுருத்தியம் சுடரி னானைத்தொண்ட னேன் கண்டவாறே தெளிவுரை : இந்த சரீரத்தை ஒரு பொருளாகக் கொள்ள வேண்டாம். நெஞ்சில் இறைவனை நிறுத்தி ஏத்துமின். அப்பெருமான், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு அம்மையப்பராகவும், கங்கை என்னும் நங்கையைச் சடையுள் வைத்துக் கங்காதரனாகவும் திகழ்பவர். அவர், துருத்தியில் அழகிய சுடராய் விளங்குதலைத் தொண்டனாகிய நான் கண்டேன். 415. சவைதனைச் செய்து வாழ்வான்சலத்துளே அழுந்து கின்றஇவையொரு பொருளும் அல்லஇறைவனை யேத்து மின்னோஅவைபுரம் மூன்றும் எய்துஅடியவர்க்கு அருளிச் செய்தசுவை யினைத் துருத்தி யானைத்தொண்டனேன் கண்டவாறே. தெளிவுரை : மனைவி மக்கள் உறவுகளைப் பெருக்கி வாழும் தன்மையைக் கருதித் துன்பத்திற்குள் அழுந்துவது ஒரு பொருளாக ஆகாது. ஈசனை ஏத்துமின். அவர் முப்புரங்களை எரி செய்து அடியவர்களுக்கு அருளிச் செய்பவர். ஏத்தும் அடியவர்களின் மனத்தில் இருந்து மகிழ்விப்பவர். அவர் துருத்தியில் மேவுபவர். அப்பெருமானைத் தொண்டனாகிய நான் கண்டேன். 416. உன்னிஎப் போதும் நெஞ்சுள்ஒருவனை ஏத்து மின்னோகன்னியை ஒருபால் வைத்துக்கங்கையைச் சடையுள் வைத்துப்பொன்னியின் நடுவு தன்னுள்பூம்புனல் பொலிந்து தோன்றும்துன்னிய துருத்தி யானைத்தொண்டனேன் கண்ட வாறே. தெளிவுரை : நெஞ்சினுள், எல்லாக் காலத்திலும் ஈசனை வைத்து ஏத்துமின், உமாதேவியை ஒருபால் திகழ வைத்து அம்மையப்பராகிக் கங்கையைச் சடையுள் வைத்தவர், ஈசன். அப்பெருமான், காவிரியாறு இருமருங்கும் சூழ விளங்கும் துருத்தியில், விளங்கத் தொண்டனாகிய நான் கண்டேன். 417. ஊன்தலை வலிய னாகிஉலகத்துள் உயிர்கட்கு எல்லாம்தான்தலைப் பட்டு நின்றுசார்கனல் அகத்து வீழவான்தலைத் தேவர் கூடிவானவர்க்கு இறைவா என்னும்தோன்றலைத் துருத்தி யானைத்தொண்டனேன் கண்டவாறே. தெளிவுரை : ஊன் பெருக்கித் தடித்த உடம்பினைக் கொண்டு உலகத்தில் உள்ள பிற உயிர்களை நெரிக்கித் தானே மேன்மையுடையவனாய் நின்று, அதனால் பிறர் துன்பப் படவும் தேவர்கள் எல்லாம் துதித்து, ஈசனே ! அருள் புரிவீராக என ஏத்த, அனைத்தும் புரிவிப்பர் இறைவன் ஆவார். அவர் துருத்தியில் மேவுபவர். தொண்டனாகிய நான் அப்பெருமானைக் கண்டேன். 418. உடல்தனைக் கழிக்க லுற்றஉலகத்துள் உயிர்கட்கு எல்லாம்இடர்தனைக் கழிய வேண்டில்இறைவனை யேத்து மின்னோகடல்தனில் நஞ்சம் உண்டுகாண்பரி தாகி நின்றசுடர்தனைத் துருத்தி யானைத்தொண்டனேன் கண்ட வாறே. தெளிவுரை : உடலைக் கொண்டு கன்ம வினையைக் கழிக்க மேவும் இவ்வுலக வாழ்க்கையில், உயிர்களின் துன்பம் நீங்க வேண்டுமானால் ஈசனை ஏத்துமின். அப்பெருமான், கடலில் தோன்றி நஞ்சினை உண்டும், காண்பதற்கு அரியதாகவும் மேவும் சோதிச் சுடராய்த் துருத்தியில் வீற்றிருப்பவர். அவரை நான் கண்டேன். 419. அள்ளலைக் கடக்க வேண்டில்அரனையே நினைமி னீர்கள்பொள்ளல்இக் காயந் தன்னுள்புண்டரீ கத்தி ருந்தவள்ளலை வான வர்க்கும்காண்பரி தாகி நின்றதுள்ளலைத் துருத்தி யானைத்தொண்டனேன் கண்ட வாறே. தெளிவுரை : பிறவி என்னும் சேற்றைக் கடக்க வேண்டுமானால், ஈசனையே ஏத்துவீராக. ஈசன், இத்தேகத்திற்குள் விளங்கும் உள்ளமாகிய அகத் தாமரையில் திகழ்பவர். அப் பெருமான், அடியவர்களுக்கு வழங்குகின்ற வள்ளல். வானவர்களுக்கும் அரியவராகிய அப்பரமன், இடப வாகனத்தில் விளங்கு பவராய்த் துருத்தியில் வீற்றிருப்பவர். அவரைத் தொண்டனேன் கண்டேன். 420. பாதியில் உமையாள் தன்னைப்பாகமா வைத்த பண்பன்வேதியன் என்று சொல்லிவிண்ணவர் விரும்பி ஏத்தச்சாதியாம் சதுர்மு கனும்சக்கரத் தானும் காணாச்சோதியைத் துருத்தி யானைத்தொண்ட னேன் கண்ட வாறே. தெளிவுரை : ஈசன், உமாதேவியைத் திருமேனியில் பாகமாக வைத்து அர்த்தநாரியாக விளங்குபவர்; வேதநாயகனாகத் தேவர்களால் விரும்பி ஏத்தப் படுபவர்; உயர்ந்த வகையாய் மேவும் பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகிச் சோதியாய் நெடிது ஓங்கியவர். அவர், துருத்தில் வீற்றிருக்கத் தொண்டனாகிய யான் கண்டேன். 421. சாமனை வாழ்க்கை யானசலத்து ளேஅழுந்த வேண்டாதூமநல் அகிலும காட்டித்தொழுதுஅடி வணங்கு மின்னோசோமனைச் சடையுள் வைத்துத்தொன்னெறி பலவும் காட்டும்தூமனத் துருத்தி யானைத்தொண்டனேன் கண்ட வாறே. தெளிவுரை : அழியக் கூடியதாகிய மனை வாழ்க்கையைப் பெரிதாகக் கருதி, அதன் வழியே ஏங்கித் துன்பத்தில் அழுந்த வேண்டாம். ஈசனுக்கு நன்மணம் கமழும் அகில் முதலான தூபங்களைக் காட்டித் தொழுது, திருவடியை வணங்குவீராக. பிறைச் சந்திரனைச் சடை முடியின் மீது தரித்த ஈசன், தூய்மையான மனத்தினர் மேவும் துருத்தியில் வீற்றிருப்பவர். தொண்டனேன் அவரைக் கண்டேன். 422. குண்டரே சமணர் புத்தர்குறியறி யாது நின்றுகண்டதே கருதுவார்கள்கருத்தொண்ணாது ஒழிமினீர்கள்விண்டவர் புரங்கள் எய்துவிண்ணவர்க்கு அருள்கள் செய்ததொண்டர்கள் துணையி னானைத்துருத்திநான் கண்ட வாறே. தெளிறவுரை : சமணரும் புத்தரும் மெய்ந் நிலையாகிய குறிக்கோளை சிவலிங்கத்தின் சிறப்பினை அறியாது, தமக்குச் சரி எனப் புலனாதலை மொழிவர். அவற்றை ஏற்க வேண்டாம். பகைவராகிய முப்புர அசுரர்களை வென்று, எரி செய்து, தேவர்களுக்கு அருள் புரிந்த பரமன், துருத்தியில் மேவுபவர். அப் பெருமான், திருத்தொண்டர்களுக்குத் துணையாக விளங்குபவர், அவரை நான் கண்டேன். 423. பிண்டத்தைக் கழிக்க வேண்டில்பிரானையே பிதற்று மின்கள்அண்டத்தைக் கழிய நீண்டஅடலரக் கன்றன் ஆண்மைகண்டொத்துக் கால்விரலால்ஊன்றிமீண்டு அருளிச் செய்ததுண்டத்துத் துருத்தி யானைத்தொண்ட னேன் கண்ட வாறே. தெளிவுரை : இவ் உடம்பினைக் கொண்டு பிறந்து, வாழும் நிலையை விட வேண்டும் எனக் கருதுவீராயின், ஈசனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வீராக. அவர், இராவணனின் ஆண்மையைத் திருப்பாத விரலால் ஊன்றி அழித்து, மீண்டும் அருளிச் செய்த அருளுடையவர். அப்பெருமான், நிலவின் துண்டைத் தரித்துத் துருத்தியில் வீற்றிருப்பவர். அவரைத் தொண்டனேன் கண்டேன். திருச்சிற்றம்பலம் 43. திருக்கச்சிமேற்றளி (அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோயில், திருக்கச்சி மேற்றளி, காஞ்சிபுரம்) திருச்சிற்றம்பலம் 424. மறையது பாடிப் பிச்சைக்குஎன்றுஅகம் திரிந்து வாழ்வார்பிறையது சடைமு டிமேற்பெய்வளை யாள்த னோடும்கறையது கண்டம் கொண்டார்காஞ்சிமா நகர்தன் உள்ளார்இறையவர் பாடல் ஆடல்இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : ஈசன், வேதங்களைப் பாடி, மனைகள் தோறும் திரிந்து பிச்சை ஏற்று வாழ்பவர்; பிறைச் சந்திரன் விளங்கும் சடை முடியின் மீது கங்கையைத் தரித்தவர்; நீலகண்டத்தை உடையவர்; காஞ்சி மாநகருள் மேவும் இறைவர். அவர் பாடலும் ஆடலும் ஓயாது மேவும் திருமேற்றளிநாதரே ஆவார். 425. மாலன மாயன் றன்னைமகிழந்தனர் விருத்தராகும்பாலனார் பசுபதியார்பால்வெள்ளை நீறுபூசிக்காலனைக் காலாற் செற்றார்காஞ்சிமா நகர்தன் உள்ளார்ஏலநற் கடம்பன் தந்தை இலங்குமேற் றளிய னாறரே. தெளிவுரை : ஈசன், மேகம் போன்ற வண்ணம் கொண்ட திருமாலை மகிழ்ந்து ஏற்றவர்; விருத்தராகவும் பாலராகவும் விளங்குபவர்; உயிர்களுக்கெல்லாம் தலைவர்; பால் போன்ற திருவெண்ணீறு அணிந்தவர்; காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்தவர்; காஞ்சி மாநகருள் விளங்குபவர்; நறுமணம் கமழும் கடப்பமாலை அணிந்த முருகவேளின் தந்தை. அவர் மேற்றளியில் மேவும் திருமேற்றளிநாதரே ஆவார். 426. விண்ணிடை விண்ண வர்கள்விரும்பிவந்து இறைஞ்சி வாழ்த்தப்பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்கண்ணிடை மணியின் ஒப்பார்காஞ்சிமா நகர்தன் உள்ளார் எண்ணிடை எழுத்தும் ஆனார்இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : விண்ணுலகத்தில் மேவும் தேவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த விளங்கும் சிவபெருமான், பண்ணின் சுவை மிகுந்த புகழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்பவர்; கண்ணில் விளங்கும் மணிபோன்றவராகி ஒளி கொண்டு உணர்த்துபவர்; எண்ணிடை எழுத்தும் ஆனவர். அவர், திருமேற்றளிநாதரே ஆவார். 427. சோமனை அரவி னோடுசூழ்தரக் கங்கை சூடும்வாமனை வானவர்கள்வலங்கொடு வந்து போற்றக்காமனைக் காய்ந்த கண்ணார்காஞ்சிமா நகர்தன் உள்ளார்ஏமநின் றாடும் எந்தைஇலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : ஈசன், சந்திரனை அரவத்தோடு கங்கையும் சூழ்ந்து விளங்குமாறு சூடியவர்; அழகர்; தேவர்களால் போற்றப்படுபவர்; மன்மதனை எரித்தவர்; காஞ்சிமாநகரின் உள்ளே இனிது நின்று ஆடும் எந்தை அவர், திருமேற்றளிநாதரே ஆவார். 428. ஊனவர் உயிரி னோடும்உலகங்கள் ஊழி யாகித்தானவர் தனமும் ஆகித்தனஞ்செய னோடு எதிர்ந்தகானவர் காள கண்டர்காஞ்சிமா நகர்தன் உள்ளார்ஏனம்அக் கோடு பூண்டார்இல்ஙகுமேற் றளிய னாரே. தெளிவுரை : ஈசன், ஊனாய் விளங்கும் உடம்பாகவும், அதன் உயிராகவும், உலகமாகவும், ஊழிக்காலமாகவும், தானம் செய்யும் தன்மையாகவும், செய்யப் பெறும் தனங்களாகவும் விளங்குபவர்; அருச்சுனனோடு எதிர்த்துப் போர் செய்த, கானில் விளங்கும் வேடராகியவர்; கரிய கண்டத்தை உடையவர்; காஞ்சி நகரின் உள்ளே பன்றியின் கொம்பும், எலும்பும், மண்டை ஓடும் பூண்டவர். அவர் திருமேற்றளி நாதரே ஆவார். 429. மாயனாய் மால னாகிமலரவ னாகி மண்ணாய்த்தேயமாய்த் திசைஎட்டாகித்தீர்த்தமாய்த் திரிதற் கின்றகாயமாய்க் காயத்துள்ளார்காஞ்சிமா நகர்தன் உள்ளார்ஏயமென் தோளி பாகர்இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : ஈசன் திருமால், இந்திரன், நான்முகன் எனத் திகழ்பவர்; நிலம், தேசம் எட்டுத் திசைகளாகவும் திகழ்பவர்; புனித தீர்த்தமாக விளங்குபவர்; திரிந்து உலவுகின்ற சரீரமாகவும், அச்சீரத்தில் மேவும் சீவனாகவும் விளங்குபவர். அவர் காஞ்சி மாநகரில் மென்மையான தோளுடைய உமாதேவியைப் பொருந்த மேவி விளங்கும் அம்மையப்பராகியவர். அவர், திகழ்கின்ற திருமேற்றளிநாதரே ஆவார். 430. மண்ணினை உண்ட மாயன்தன்னையோர் பாகம் கொண்டார்பண்ணினைப் பாடி யாடும்பக்தர்கள் சித்தம் கொண்டார்கண்ணினை மூன்றும் கொண்டார்காஞ்சிமா நகர்தன் உள்ளார்எண்ணினை எண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : சிவபெருமான், உலகத்தை உண்டு காத்தருளிய திருமாலை ஒரு பாகமாக உடையவர்; பண்ணின் இசை பெருகப் பாடி ஆடும் பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவர்; மூன்று கண்களை உடையவர்; காஞ்சி மாநகரில் விளங்குபவர். அப்பெருமான், எண்ணத்தில் யாவும் எண்ணுமாறு புரிந்து, பக்தியை அருள்பவர். அவர், நனி விளங்குகின்ற திருமேற்றளி நாதரே ஆவர். 431.செல்வியைப் பாகம் கொண்டார்சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணி யோடுமாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரையி லாதகாஞ்சிமா நகர்தன் னுள்ளார்எல்லியை விளங்க நின்றார்இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : சிவபெருமான், அறம் வளர் செல்வியாகத் திகழ்ந்த உமாதேவியை காமாட்சியை ஒரு பாகமாகக் கொண்டவர்; முருகனைத் திருமகனாகக் கொண்டவர்; கங்கையோடு கொன்றை மாலை சூடியவர்; கல்வியின் பெருக்கமும் மேன்மையையும் எல்லையற்று மேவும் காஞ்சி மாநகரில், கதிரவனைப் போன்று ஒளி விளங்க நின்றவர். அப்பெருமான், நன்கு விளங்கும் திருமேற்றளிநாதரே ஆவார். 432. வேறிணை யின்றி என்றும்விளங்கொளி மருங்கி னாளைக்கூறியல் பாகம் வைத்தார்கோளரா மதியும் வைத்தார்அணிபொழில் கச்சி தன்னுள்ஏறினை ஏறும் எந்தைஇலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : உவமை கூறுவதற்கு வேறு ஏதும் இன்றி ஒளி போன்று திகழும் உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மேவும் சிவபெருமான், அரவமும் சந்திரனும் தரித்திருப்பவர்; கங்கையைச் சடை முடியில் வைத்துள்ளவர். அழகிய பொழில் விளங்கும் கச்சியில் திகழும் அப்பெருமான், இடபத்தின் மீது வீற்றிருக்கும் எந்தையாவார். அவர் நன்கு விளங்கும் திருமேற்றளியில் திகழ்பவரே. 433. தென்னவன் மலையெ டுக்கச்சேயிழை நடுக்கம் கண்டுமன்னவன் விரலால் ஊன்றமணிமுடி நெரிய வாயால்கன்னலின் கீதம் பாடக்கேட்டவர் காஞ்சி தன்னுள்இன்னவற்கு அருளிச் செய்தார்இலங்குமேற் றளிய னாரே. தெளிவுரை : இராவணன் கயிலையை எடுத்த ஞான்று, உமாதேவியார் நடுக்கம் உற, ஈசன், தன் திருப்பாத விரலால் ஊன்றி அவ் அரக்கனின் மணிமுடியை நெரித்தனர். அவ்வமயம் அவ்வரக்கன், சாமவேத கீதம் பாடக் கேட்ட ஈசன், காஞ்சியுள்ளிருந்து அருள் புரிந்தனர். அவர் நனி விளங்கும் திருமேற்றளியில் வீற்றிருப்பவரே ஆவார். திருச்சிற்றம்பலம் 44. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்) திருச்சிற்றம்பலம் 434. நம்பனை நகர மூன்றும்எரியுண வெருவ நோக்கும்அம்பனை அமுதை ஆற்றைஅணிபொழிற் கச்சியுள்ளேகம்பனை கதிர்வெண் திங்கள்செஞ்சடைக் கடவுள் தன்னைச்செம்பொனைப் பவளத் தூணைச்சிந்தியா எழுகின் றேனே. தெளிவுரை : சிவபெருமான், எல்லாராலும் நம்புவதற்கு உரியவராய் ஏத்தப்படுபவர்; முப்புரு அசுரர்களை எரித்த அம்பினை உடையவர்; பக்தர்களுக்கு அமுதம் போன்றவர்; அடியவர்களுக்கு நல்வழி காட்டும் நெறியாகத் திகழ்பவர்; கச்சித் திருவேகம்பத்தில் விளங்குபவர்; வெண்திங்களைச் சிவந்த சடைமுடியில் சூடிய கடவுளாவார்; செம்மை திகழும் பொன் போன்றவர்; பவளத் தூண் போன்று ஒளிர்பவர். அப்பெருமானை நான் சிந்தித்து, மேன்மையாய்த் திகழும் அருள் விளங்க எழுகின்றனன். 435. ஒருமுழம் உள்ள குட்டம்ஒன்பது துளையு டைத்தாய்அரைமுழம் அதன்அ கலம்அதனில்வாழ் முதலை ஐந்துபெருமுழை வாய்தல் பற்றிக்கிடந்துநான் பிதற்று கின்றேன்கருமுகில் தவழு மாடக்கச்சியே கம்ப னீரே. தெளிவுரை : இத் தேகமானது ஒன்பது துளையுடைய சிறிய குட்டை போன்றது. அதில் ஐம்புலன்கள் என்னும் முதலைகள் பற்றி இழுக்க, அதன் வாயில் அகப்பட்டுக் கிடந்து மீளும் வழி தெரியாது நான் பிதற்றுகின்றேன். மேகம் தவழும் உயர்ந்த மாடங்கள் திகழும் கச்சியில் வீற்றிருக்கும் ஏகம்பப் பெருமானே ! என்னைக் காத்தருள் புரிவீராக. 436. மலையினார் மகளோர் பாகமைந்தனார் மழுவொன்று ஏந்திச்சிலையினால் மதில்கள் மூன்றும்தீயெழச் செற்ற செல்வர்இலையினார் சூலம் ஏந்திஏகம்பம் மேவி னாரைத்தலையினால் வணங்க வல்லார்தலைவர்க்கும் தலைவர் தாமே. தெளிவுரை : சிவபெருமான், மலைமகளாகிய உமா தேவியைப் பாகமாகக் கொண்டு அழகர்; முப்புரங்களைத் தீயினால் எரிந்த செல்வர்; மூவிலையுடைய சூலப் படை ஏந்தி, ஏகம்பம் மேவி வீற்றிருப்பவர்; யாவராலும் தலை தாழ்த்தி ஏத்தி வணங்கத் திகழ்பவர். அப்பெருமான், உகிடைத் தலைவராக என மதிக்கப்பெறும் அனைவருக்கும் தலைவராக விளங்குபவர். 437. பூத்தபொற் கொன்றை மாலைபுரிசடைக்கு அணிந்த செல்வர்தீர்த்தமாம் கங்கை யாளைத்திருமுடி திகழ வைத்துஏத்துவார் ஏத்த நின்றஏகம்பம் மேவி னாரைவாழ்த்துமாறு அறிய மாட்டேன்மால்கொடு மயங்கி னேனே. தெளிவுரை : சிவபெருமான், பொன்போன்று பூத்து விளங்கும் கொன்றை மாலையைச் சடை முடியின் மீது அணிந்த செல்வர்; புனித தீர்த்தமாய் இருந்து பாவங்களைத் தீர்க்கும் கங்கையைத் திருமுடியில் திகழ்ந்து விளங்க வைத்தவர்; ஏத்தித் தொழுகின்ற திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் மேவி இருந்து, பக்தர்களுக்கு அருள் புரிபவர். அப்பெருமானை வாழ்த்திப் போற்றும் நெறியினை அறியாது, மயக்கத்தில் சோர்ந்து ஏங்குகின்றேன். 438. மையினார் மலர்நெ டுங்கண்மங்கையோர் பங்கர் ஆகிக்கையிலோர் கபாலம் ஏந்திக்கடைதொறும் பலிகொள்வார்தாம்எய்வதோர் ஏனம் ஓட்டிஏகம்பம் மேவி னாரைக்கையினால் தொழவல் லார்க்குக்கடுவினை களைய லாமே. தெளிவுரை : சிவபெருமான், குவளை மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; கையில் பிரம கபாலம் ஏந்தி, மனைகள் தோறும் சென்று பலி ஏற்பவர்; பாசுபதம் வேண்டித் தவம் புரிந்த அருச்சுனனைத் தாக்க வந்த, பன்றி வடிவம் தாங்கிய அசுரனைத் தொடர்ந்து சென்று அம்பு எய்தவர்; கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவர்; அப்பெருமானைக் கையால் தொழுது ஏத்தி வணங்குபவர்களுக்குக் கடுமையாய் வாட்டும் வினை யாவும் விலகிப் போகும். 439. தருவினை மருவுங்கங்கைதங்கிய சடையன் எங்கள்அருவினை யகல நல்கும்அண்ணலை அமரர் போற்றும்திருவினைத் திருவே கம்பம்செப்பிட உறைய வல்லஉருவினை உருகி யாங்கேஉள்ளத்தால் உகக் கின்றேனே. தெளிவுரை : சிவபெருமான், தன்பால் அடைந்து நீராடும் அன்பர்களின் பாவத்தைத் தீர்த்து, நன்மை தரும் பெருஞ் சிறப்புடைய கங்கை தங்கிய சடை உடையவர்; எங்கள் அரிய வினை தீர்க்கும் அண்ணல்; தேவர்கள் போற்றும் செல்வர்; திருவேகம்பனே எனச் சொல்லும் அடியவர்களின் உள்ளத்தில் உறையும் உருவமானவர். அப்பெருமானை நான் உள்ளம் ஒன்றி ஏத்தி மகிழ்கின்றேன். 440. கொண்டதோர் கோல மாகிக்கோலக்கா உடைய கூத்தன்உண்டதோர் நஞ்ச மாகில்உலகெலாம் உய்ய உண்டான்எண்டிசை யோரும் ஏத்தநின்றஏ கம்பன் றன்னைக்கண்டுநான் அடிமை செய்வான்கருதியே திரிகின் றேனே. தெளிவுரை : ஈசன், பலவாகிய திருக்கோலங்களைத் தாங்கி மேவுபவர்; திருக்கோலக்காவில் வீற்றிருந்து நடனம் புரிபவர்; உலகம் யாவும் உய்ய வேண்டும் என்னும் அருளுகையால் நஞ்சினை உட்கொண்டவர்; எட்டுத் திக்குகளில் உள்ள மக்களும் ஏத்தி வணங்கும் திருவேகம்பர். அப்பெருமானைத் தரிசித்து அடிமை செய்யும் நோக்கத்தில் நான் திரிகின்றேன். 441. படம்உடை அரவி னோடுபனிமதி யதனைச் சூடிக்கடம்உடை உரிவை மூடிக்கண்டவர் அஞ்ச அம்மஇடம்உடைக் கச்சி தன்னுள்ஏகம்பம் மேவினான்றன்நடம்உடை ஆடல் காணஞாலந்தான் உய்ந்த வாறே. தெளிவுரை : சிவபெருமான், படம் எடுத்து ஆடுகின்ற அரவத்தோடு, குளிர்ந்த சந்திரனையும் சூடியுள்ளவர்; மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டு கண்டவர் அஞ்சுமாறு வீரம் வினைவித்தவர்; கச்சியுள் மேவும் திருவேகம் பத்தில் வீற்றிருப்பவர்; நடனச் சிறப்புடைய திருநடனம் புரிபவர். அப் பெருமானைக் கண்டுற்ற இவ்வுலகமே உய்ந்தது. 442. பொன்திகழ் கொன்றை மாலைபொருந்திய நெடுங்கண் மார்பர்நன்றியில் புகுந்துஎன் உள்ளம்மெள்ளவே நவில நின்றுகுன்றியில் அடுத்த மேனிக்குவளையங் கண்டர் எம்மைஇன்துயில் போது கண்டார்இனியரே கம்ப னாரே. தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்று திகழும் கொன்றை மாலை அணிந்த நெடிய மார்பினை உடையவர்; நன்றி செய்யும் கடப்பாடு உடைய இவ்வுடம்பில் புகுந்து, என் உள்ளமானது மெள்ள ஏத்தித் தொழக் குன்றிமணியின் செவ்வண்ணராகக் காட்சி தருபவர், நீலகண்டர். அப்பெருமானை நான் இனிய போக நித்திரையில் இருந்து போதுகண்டவர்; இனியவர். அவர் திருவேகம்பரே. 443. துருத்தியார் பழனத் துள்ளார்தொண்டர்கள் பலரும் ஏத்தஅருத்தியால் அன்பு செய்வார்அவரவர்க்கு அருள்கள் செய்தேஎருத்தினை இசைய ஏறிஏகம்பம் மேவி னார்க்குவருத்திநின்று அடிமை செய்வார்வல்வினை மாயு மாறே. தெளிவுரை : சிவபெருமான் திருத்துருத்தி யென்னும் தலத்தில் விளங்குபவர்; திருப்பழனத்தில் வீற்றிருப்பவர்; திருத்தொண்டர்கள் செலுத்தும் அன்பு வழிபாட்டினை ஏற்று அவரவர்களுக்கு வேண்டியவாறு அருள்களைப் புரிபவர்; இடபவாகனத்தில் உகந்து ஏறித் திருவேகம்பத்தில் திகழ்பவர். அப் பெருமானுக்கு, உடலை வருத்தி மெய்த் தொண்டு செய்வதானது அன்பர்களின் வினை யாவுமுஞூ மாய்வதற்குரிய வழியாகும். திருச்சிற்றம்பலம் 45. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 444. வெள்ளத்தைச் சடையில் வைத்தவேதகீ தன்றன் பாதம்மெள்ளத்தான் அடைய வேண்டின்மெய்தரு ஞானத் தீயால்கள்ளத்தைக் கழிய நின்றார்காயத்துக் கலந்து நின்றுஉள்ளத்துள் ஒளியும் ஆகும்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : கங்கையைச் சடையில் வைத்த வேதகீதன், சிவபெருமான். அப் பெருமானுடைய திருப்பாதத்தில் சேர வேண்டுமானால், மெய்ஞ்ஞானத்தின் துணை கொண்டு, மனத்தில் தோன்றும் கள்ளம் முதலான குற்றங்களை நீக்குமின். அப்போது, இத்தேகத்துள் கலந்து மேவும் உள்ளத்தின் ஒளியாக விளங்கும் பெருமான் தோன்றுவார். அவர் ஒற்றியூரில் மேவும் தலைவரே. 445. வசிப்பெனும் வாழ்க்கை வேண்டாவானவர் இறைவன் நின்றுபுசிப்பதோர் பொள்ளல் ஆக்கைஅதனொடும் புணர்வு வேண்டில்அசிர்ப்பெனும் அருந்த வத்தால்ஆன்மாவின் இடம தாகிஉசிர்ப்பெனும் உணர்வும் உள்ளார்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : மனை வாழ்க்கையைப் பெரிதாகக் கொள்ள வேண்டாம். இவ்வுடம்பின் நிலையற்ற தன்மையை உணர்ந்து கொள்வீராக. ஈசன், ஆன்மாவை இடமாகக் கொண்டுள்ளவர். அதன் சிறப்பினை அருந்தவத்தில் உணர்வுடையவர்கள் அறிவர். ஒன்றி நின்று ஏத்தினால் பரமன் அவ்வுணர்வில் திகழ்பவர். அவரே ஒற்றியூரில் வீற்றிருக்கும் தலைவர். 446. தானத்தைச் செய்து வாழ்வான்சலத்துளே அழுந்து கின்றீர்வானத்தை வண்க வேண்டில்வம்மின்கள் வல்லீ ராகில்ஞானத்தை விளக்கை யேற்றிநாடியுள் விரவ வல்லார்ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : தானம் செய்து பெருமையுடைய வாழ்க்கையில் மேவினும், பிறவி என்னும் துன்ப மானது வந்தடைதல் மெய்ம்மை. மேலான சிறப்பினை அடைய வேண்டும் என விழைவீராயின், வம்மின். ஞான விளக்கை ஏற்றவீர் ! உள்ளத்தில் ஒளி பெறுவீர். அஞ்ஞானத்திலிருந்து நீங்குவீர். அத்தகைய ஊனத்தை ஒழிப்பவர் ஒற்றியூரில் வீற்றிருக்கும் பரமனே. 447. காமத்துள் அழுந்தி நின்றுகண்டரால் ஒறுப்புண் ணாதேசாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னைஏமத்தும் இடையி ராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்குஓமத்துள் ஒளியதாகும் ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும் மூன்று வகையான ஆசையின்பால் அழுந்திப் பாவம் செய்து, கால தூதர்களால் தண்டனை அடையாது, சாமவேதமாக நின்ற சுயம்புவாகிய ஈசன ஏத்துமின். பகலும் இரவும் ஏகாந்தமாக இருந்து தியானம் செய்மின். அப்பெருமான், புறவேள்வியின் ஒளியாகும் மாண்பினைப் போன்று, அகத்துள் மேவி ஒளி தந்து உய்வு பெறச் செய்பவர். அத்தகைய பெருமான், ஒற்றியூரில் வீற்றிருக்கும் பரமனே. 448. சமைய மேல் ஆறுமாகித்தானொரு சயம்பு வாகிஇமையவர் பரவி யேத்தஇனிதில் அங்கு இருந்த ஈசன்கமையினை யுடைய ராகிக்கழலடி பரவு வார்க்குஉமையொரு பாகர் போலும்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், மேலான சமயங்கள் ஆறும் ஆகியவர்; சுயம்பாகி விளங்குபவர்; தேவர்களால் பரவிப் போற்றப்படுபவர்; மனத்தின்கண் பரப்பு அற்ற தன்மையில் சாந்தத்தைக் கொண்டு விளங்கித் திருக் கழலை ஏத்தும் அன்பர்களுக்கு, உமையொரு பாகராய் விளங்குபவர். அவர், ஒற்றியூரில் மேவும் தலைவரே. 449. ஒருத்திதன் தலைச்சென்ற றாளைக்கரந்திட்டான் உலகம் ஏத்தஒருத்திக்கு நல்ல னாகிமறுப்படுத்து ஒளித்து மீண்டேஒருத்தியைப் பாகம் வைத்தான்உணர்வினால் ஐயம் உண்ணிஒருத்திக்கு நல்ல னல்லன்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடையுள் வைத்து, நல்லன் என ஏத்துமாறு ஆகியவர். அவர், உமாதேவியைப் பாகமாக வைத்துக் கங்கையை ஒளித்த தன்மையினை உள்ளத்தில் ஐயமாகக் கொண்டு, நல்லன் அல்லராகியவாறு விளங்குபவர். அவர் ஒற்றியூரில் மேவும் தலைவரே. இது, இரு தேவியரையுடைய ஈசனின் அருள் வண்ணத்தைக் கவி நயம் தோன்ற ஓதப் பெற்றதாம். 450. பிணமுடை யுடலுக் காகப்பித்தராய்த் திரிந்து நீங்கள்புணர்வெனும் போகம் வேண்டாபோக்கலாம் பொய்யை நீங்கநிணமுடை நெஞ்சின் உள்ளால்நினைக்குமா நினைக்கின் றார்க்குஉணர்வி னோடு இருப்பர் போலும்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : பிணமாகக்கூடியதும், முடை நாற்றம் கொள்ளக்கூடியதும் ஆகிய உடலுக்காகப் பித்தர் போல் திரிந்து, போகத்தை கொள்ள வேண்டாம். இது, பொய்ம்மை உடையது, நெஞ்சார நினைத்து ஏத்தும் அன்பர்களுக்கு உணர்வாக விளங்குபவர், சிவபெருமான், அப்பெருமானை நினைமின். அவர், ஒற்றியூரில் மேவும் கோவே. 451. பின்னுவார் சடையான் றன்னைப்பிதற்றிலாப் பேதை மார்கள்துன்னுவார் நரகம் தன்னுள்தொல்வினை தீர வேண்டில்மன்னுவான் மறைகள் ஓதிமனத்தினுள் விளக்கொன்று ஏற்றிஉன்னுரார் உள்ளத் துள்ளார்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : முறுக்கிய சடை முடியுடைய ஈசனைத் தியானம் செய்து, அப் பெருமானுடைய திருநாமங்களைத் திரும்பத் திரும்ப ஓதி உச்சாடனம் செய்யாதவர்கள், பேதையர்களே. அத்தகையோர் நரகத்தை அடைவர். தொல்வினை தீர வேண்டுமானால், பெருமையுடைய மறைகளை ஓதுவீராக. அப் பெருமான், அத்தகையவர் மனத்துள் ஒளி விளக்காகத் திகழ்கின்றவர். அப்பெருமானை, உள்ளத்தில் எண்ணுவீராக. அவர், ஒற்றியூரில் மேவும் கோவே. 452. முள்குவார் போகம் வேண்டில்முயற்றியால் இடர்கள் வந்தால்எள்குவார் எள்கி நின்றங்குஇதுஒரு மாயம் என்பார்பள்குவார் பத்த ராகிப்பாடியும் ஆடி நின்றும்உள்குவார் உள்ளத் துள்ளார்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : உடலால் மேவும் போகமானது பேரருளாளர்களால் எள்ளப்படுவதாகும். இதனை மாயம் என்பர். எனவே, இத்தகைய செயல்களை நீக்குக. ஈசனின் பத்தர்களாகிப் பாடியும் ஆடியும் ஏத்தி நின்று உள்ளத்தால் உருகி நிற்பீராக. அப்பெருமான், அத்தகைய உள்ளத்துள் ஒளிர்பவர். அவர், ஒற்றியூரில் மேவும் கோவே. 453. வெறுத்துகப் புலன்கள் ஐந்தும்வேண்டிற்று வேண்டு நெஞ்சேமறுத்துக ஆர்வச் செற்றக்குரோதங்க ளான மாயப்பொறுத்துகப் புட்ப கத்தேர்உடையானை அடர வூன்றிஒறுத்துகந்து அருள்கள் செய்தார்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : புலன்கள் ஐந்தும், வேண்டுவனவற்றை நாடி அலையும் நெஞ்சே ! அவற்றை வெறுத்து விடுக. ஆசை, குரோதம் என்னும் மாயையை நீக்குக. புட்பக விமானத்தையுடைய இராவணனை, திருப்பாதத்தால் ஊன்றி அடர்த்துப் பின்னர் அருள் செய்தவர், ஈசன். அவர் நுமக்கும் அருள்பவர். அப் பெருமான், ஒற்றியூரில் வீற்றிருக்கும் கோவே. அவரை ஏத்துக என்பது குறிப்பு. திருச்சிற்றம்பலம் 46. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 454. ஓம்பினேன் கூட்டை வாளரஉள்ளதோர் கொடுமை வைத்துக்காம்பிலா மூழை போலக்கருதிற்றே முகக்க மாட்டேன்பாம்பின் வாய்த் தேரை போலப்பலப்பல நினைக்கின் றேனைஓம்பிநீ உய்யக் கொள்ளாய்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : ஈசனே ! நான் இந்த சரீரத்தை ஓம்பினேன். காம்பில்லாத அகப்பையைப் பயன்படுத்த முடியாதது போல, இத்தேகமானது பயனற்றது, நான், தேவரீரின் கருணை மேவும் அமுதை முகக்காதவனானேன். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல, அச்சத்தால் பலப்பல நினைக்கின்றேன். என்னைத் தேவரீர் உய்யுமாறு கொண்டருள வேண்டும். என் அச்சத்தை நீக்க வேண்டும். ஒற்றியூரினை உடைய ஈசனே ! அருள் புரிவீராக. 455. மனமெனும் தோணி பற்றிமதியெனும் கோவை யூன்றிச்சினமெனும் சரக்கை யேற்றிச்செறிகடல் ஓடும் போதுமனன்எனும் பாறை தாக்கிமறியும்போது அறிய வொண்ணாதுஉனையுனும் உணர்வை நல்காய்ஒற்றியூர் உடைய கோவே. தெளிவுரை : மனம் என்னும் தோணியினை, அறிவு என்பதைத் துடுப்பாகக் கொண்டு, சினம் என்னும் சரக்கினை ஏற்றிக் கொண்டு, கடல் என்னும் வாழ்க்கையில் செலுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், மன்மதன் என்னும் பாறை தாக்கிப் படகானது கவிழும்போது, ஈசனே ! தேவரீரை அறியும் தன்மை வயப்படாது. ஒற்றியூரில் விளங்கும் கோவே ! திருச்சிற்றம்பலம் 47. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்) திருச்சிற்றம்பலம் 456. கனகமா வயிரம் உந்துமாமணிக் கயிலை கண்டும்உனகனாய் அரக்கன் ஓடிஎடுத்தலும் உமையாள் அஞ்சஅனகனாய் நின்ற ஈசன்ஊன்றலும் அலறி வீழ்ந்தான்மனகனாய் ஊன்றி னானேன்மறித்து நோக் கில்லை யன்றே. தெளிவுரை : பொன்னும் வயிரமும் மாணிக்கமும் போன்று ஒளிர்விடும் கயிலை மலையைக் கண்டு, இழிந்த குணத்தை உடைய இராவணன் ஓடிச் சென்று பெயர்த்தெடுக்க, உமாதேவி அஞ்சினள். அஞ்ஞான்று, யாவுமாய் விளங்கும் சிவபெருமான், திருப்பாத விரலால் அம்மலையை ஊன்ற, அவ்வரக்கன் அலறி வீழ்ந்தான். பெருமையுடைய மனத்தராகிய அப்பெருமானுக்கு எதிர் நிற்பவர் யாரும் இல்லை அல்லவா ! 457. கதித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஅதிர்த்தவன் எடுத் திடல்லும்அரிவைதான் அஞ்ச ஈசன்நெதித்தவன் ஊன்றி யிட்டநிலையழிந்து அலறி வீழ்ந்தான்மதித்திறை யூன்றி னானேன்மறித்து நோக் கில்லை யன்றே. தெளிவுரை : உள்ளம் சினந்து கண் சிவந்து உமாதேவி அஞ்சுமாறு கயிலை மலையை இராவணன் எடுக்கவும், சிவபெருமான், தன் திருப்பாத விரலால் அம்மலைøயை ஊன்றி, அவ் அரக்கனை அடர்த்து அலறி வீழச் செய்தவர். அப் பெருமானுக்கு எதிர் நிற்பவர் யாரும் இல்லை. 458. கறுத்தவன் கண் சிவந்துகயிலைநன் மலையைக் கையால்மறித்தலும் மங்கை யஞ்சவானவர் இறைவன் நக்குநெறித்தொரு விரலால் ஊன்றநெடுவரை போல வீழ்ந்தான்மறித்திறை யூன்றி னானேன்மறித்து நோக் கில்லை யன்றே. தெளிவுரை : கறுத்த நிறத்தினனாகிய இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பெயர்த்தனன். அஞ்ஞான்று உமாதேவி அஞ்ச, சிவபெருமான் தனது திருப்பாத விரலால் அம் மலையை ஊன்றி, அவ் அரக்கனை நெரித்து அடர்த்தார். அப் பெருமானை மறித்து நோக்குபவர் யாரும் இல்லை. 459. கடுத்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஎடுத்தலும் மங்கை யஞ்சஇறையவன் இறையே நக்குநொடிப்பள விரலால் ஊன்றநோவதும் அலறி யிட்டான்மடித்திறை யூன்றி னானேன்மறித்து நோக் கில்லை யன்றே. தெளிவுரை : இராவணன், சினந்தவனாய், உமாதேவி அஞ்சுமாறு கயிலை மலையை எடுக்க, ஈசன், அதே நொடியில் புன்முறுவல் செய்து, தன் திருப்பாத விரலால் அம்மலையை ஊன்றி, அவ் அரக்கன் அலறி வீழுமாறு அடர்த்தார். அப் பெருமானை மறித்து நிற்பவர் யாரும் இல்லை. 460. கன்றித்தன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவென்றித்தன் கைத்த லத்தால்எடுத்தலும் வெருவ மங்கைநன்றுத்தான் நக்கு நாதன்ஊன்றலும் நகழ வீழ்ந்தான்மன்றித்தான் ஊன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே. தெளிவுரை : இராவணன், கனன்று கண் சிவந்து, உமாதேவி அச்சம் கொள்ளுமாறு, தனது கைகளால் கயிலையை எடுக்கச் சிவபெருமான், புன்முறுவல் செய்து, அம்மலையைத் திருப்பாத விரலால் ஊன்றி, அவ் அரக்கன் வீழுமாறு செய்தார். அப்பெருமானை மறித்து நிற்பவர் யாரும் இல்லை. 461. களித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிநெறித்தவன் எடுத்திடல்லும்நேரிழை அஞ்ச நோக்கிவெளித்தவன் ஊன்றி யிட்டவெற்பினால் அலறி வீழ்ந்தான்மளித்திறை யூன்றி னானேன்மறித்து நோக்கில்லை யன்றே. தெளிவுரை : மும்மலக் களிப்பினால் கண் சிவந்து கயிலை மலையை எடுத்தான், இராவணன். அதன் அசைவினால் உமாதேவி அஞ்சினள். அதனை நோக்கிய ஈசன், தனது திருப்பாத விரலால் அம் மலையை ஊன்றி, அவ் அரக்கன் அலறி வீழுமாறு செய்தார். அப் பெருமானை மறித்து நிற்பவர் யாவர் உளர் ? இது ஈசனின் பேராற்றலை வியந்து ஏத்துதலாயிற்று. 462. கருத்தனாய்க் கண்சி வந்துகயிலைநன் மலையைக் கையால்எருத்தனாய் எடுத்தவாறேஏந்திழை யஞ்ச ஈசன்திருத்த னாய் நின்றதேவன்திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்வருத்துவான் ஊன்றி னானேன்மறித்து நோக் கில்லை யன்றே. தெளிவுரை : இராவணன், கண்கள் சிவக்கக் கயிலையாகிய நல்மலையைக் கையால் எடுத்தபோது, உமாதேவி அஞ்சி நிற்க, ஈசன் தனது திருப்பாத விரலால் ஊன்றி, அவ் அரக்கனை வீழுமாறு செய்தார். அப் பெருமானின் ஆற்றலின் முன் யார் நிற்க முடியும் ? 463. கடியவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவடிவுடை மங்கை யஞ்சஎடுத்தலும் மருவ நோக்கிச்செடிபடத் திருவிரல் லால்ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான்வடிவுற வூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே. தெளிவுரை : இராவணன், சினம் கொண்டவனாய்க் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது, அவ் அசைவினாய் அஞ்சிய உமாதேவியை நோக்கியவராய், ஈசன் தனது திருப்பாத விரலால் ஊன்றி, அரக்கனை வீழச் செய்தார். அத்தகைய ஈசனின் பேராற்றலை மறித்து நோக்குபவர் யாரும் இல்லை. 464. கரியத்தான் கண்சி வந்துகயிலைநன் மலையைப் பற்றிஇரியத்தான் எடுத்தி டல்லும்ஏந்திழை அஞ்ச ஈசன்நெரியத்தான் ஊன்றா முன்னநிற்கிலாது அலறி வீழ்ந்தான்மரியத்தான் ஊன்றினா னேன்மறித்துநோக் கில்லை யன்றே. தெளிவுரை : இராவணன், கயிலை மலையைப் பற்றி எடுத்திட, உமாதேவி அஞ்சுவதை நோக்கிய ஈசன், தனது திருப்பாதத்தால் அம்மலையை ஊன்றி, அவ்வரக்கனை நெரித்து, அலறி வீழுமாறு செய்தார். அப் பெருமானின் பேராற்றலின் முன்னால் யார் மறித்து நோக்க வல்லவர். 465. கற்றனன் கயிலை தன்னைக்காண்டலும் அரக்கன் ஓடிச்செற்றவன் எடுத்த வாறேசேயிழை யஞ்ச ஈசன்உற்றிறை யூன்றா முன்னம்உணர்வழி வகையால் வீழ்ந்தான்மற்றிறை யூன்றி னானேன்மறித்து நோக்கில்லை யன்றே. தெளிவுரை : ஈசனின் திருக்கயிலையைக் கண்ட அரக்கனாகிய இராவணன், ஓடிச் சென்று பெயர்த்து எடுக்க, உமாதேவி அஞ்சினார். அதனை நோக்கிய பெருமான், தனது திருப்பாத விரலால் அம் மலையை ஊன்றி, அவ் அரக்கனின் உணர்வு அழியுமாறு செய்து அடர்ந்தார். அப் பெருமானின் பேராற்றலின் முன் யாரால் மறித்து நிற்க முடியும் ! திருச்சிற்றம்பலம் 48. திருவாப்பாடி (அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி, தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 466. கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்த விண்ணும்உடலகத்து உயிரும்பாரும் ஒள்ளழல் ஆகிநின்றுதடமலர்க் கந்தமாலை தண்மதி பகலுமாகிமடலவிழ் கொன்றை சூடி மன்னுமாப் பாடியாரே. தெளிவுரை : ஈசன் ஏழு கடல், காற்று, ஆகாயம், உயிர், நிலம், நெருப்பு என வழங்கப் பெறும் மூர்த்தம் ஆகியவர்; சூரியன் சந்திரன் ஆகியவர்; அப்பெருமான், கொன்றை மலர் சூடிப் பெருமையுடன் மேவும் ஆடிப்பாடியில் வீற்றிருப்பவரே ஆவார். 467. ஆதியும் அறிவுமாகி அறிவினுள் செறிவு மாகிச்சோதியுள் சுடருமாகித் தூநெறிக் கொருவனாகிப்பாதியிற் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகிவேதியர் வாழும் சேய்ஞல் விரும்புமாப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், ஆதியாக விளங்குபவர்; அறிவாகவும், அறிவுக்குள் விளங்கும் ஞானமாகவும் விளங்குபவர்; சோதியுள் சுடராகவும், தூய நெறிக்கு உரிய ஒருவராகவும் விளங்குபவர்; அம்மையும் அப்பனும் ஆகி அர்த்தநாரியாகத் திகழ்பவர். அப் பெருமான், பரவி ஏத்தப் பெறும் அன்பர்களின் தன்மையாகி, வேதியர் வாழ்கின்ற சண்டேசர் விரும்பும் ஆப்பாடியில் வீற்றிருப்பவர். 468. எண்ணுடை இருக்குமாகி இருக்கினுட் பொருளாகிப்பண்ணொடு பாடல்தன்னைப் பரவுவார் பாங்கராகிக்கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்பெண்ணொரு பாகமாகிப் பேணுமாப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், எண்ணத்தில் திகழும் இருக்கு வேதமாகவும், அதன் உட்பொருளுமாகவும் விளங்குபவர்; பண் இசையுடன் பாடிப் பரவும் அன்பர்தம் பாங்கினராய் விளங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; சிவஞானியர்க்கே அன்றி, ஏனோர்க்குக் கருதற்கரிய அம்மையப்பராய் விளங்குபவர். அவர், ஆப்பாடியில் வீற்றிருப்பவர். 469. அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல்பாதம்கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்கண்டவன் தாதை பாய்வான் காலற வெறியக் கண்டுதண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், அண்டங்களில் உள்ள எல்லாத் தேவர்களுக்கும் தலைவராக மேவும் மகாதேவர்; ஆதி அண்ணலாய் விளங்குபவர்; சண்டீச நாயனாரின் பூசனையை ஏற்றும், தாதை இடறிய காலை எறியக் கண்டும், சண்டேசப்பதம் அருளியவர். அத்தகைய தலைவர், ஆப்பாடியில் வீற்றிருக்கும் பரமர். 470. சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகிவந்தநற் பயனுமாகி வாணுதல் பாகமாகிமந்தமாம் பொழில்கள்சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல்மன்னிஅந்தமோடு அளவிலாத அடிகள் ஆப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், சிந்தையும் அதன் தெளிவும், அத் தெளிவினுள் மேவும் சிவமும், அதன் பயனும் ஆகியவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர். அவர், தென்றல் வீசும் பொழில்கள் சூழ்ந்த மண்ணி ஆற்றின் தென்கரையின் மீது, அந்தமும் அளவும் அற்ற அடிகளாய் ஆப்பாடியில் மேவும் பரமர். 471. வன்னிவா ளரவும் மத்த மதியமும் ஆறும் சூடிமின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருட் பயனுமாகிக்கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகிஇன்னிசை தொண்டர் பாட இருந்தஆப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், வன்னிப் பத்திரம், அரவம், ஊமத்தம், பிறைச்சந்திரன், கங்கை ஆகியவற்றைச் சூடிய மின்னல் போன்ற சிவந்த வடிவமாக விளங்குபவர்; சோதியாகவும் மெய்ப்பொருளாகவும், அதன் பயனாகவும் முத்தியாகவும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டும் விளங்குபவர். அப்பெருமான், கருதுபவர்களின் கருத்தாகி, இன்னிசையால் தொண்டர்கள் பாடும் ஆப்பாடியில் வீற்றிருப்பவர். 472. உள்ளுமாய்ப் புறமுமாகி உருவுமாய் அருவுமாகிவெள்ளமாய்க் கரையுமாகி விரிகதிர் ஞாயிறாகிக்கள்ளமாய்க் கள்ளத்துள்ளார் கருத்துமாய் அருத்தமாகிஅள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்தஆப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், அகமாகவும் புறமாகவும் திகழ்பவர்; உருவமும், உருவம் தெரியாத அருவமாகவும் விளங்குபவர்; வெள்ளப் பெருக்கெடுக்கும் நீராகவும் அதன் கரையாகவும் விளங்குபவர்; விரிந்து கதிர்களைப் பெருக்கும் சூரியனாய் விளங்குபவர்; கள்ளமும், அதனை உள்ளிருந்து ஆக்குபவரும் ஆகுபவர்; கருத்தும் ஆகி அதற்குரிய விளக்கமும் ஆகுபவர்; அப்பெருமான் வேண்டியவர்களுக்கெல்லாம் வேண்டியவாறு அருளிச் செய்யும் திருஆப்பாடியில் வீற்றிருக்கும் பரமர். 473. மயக்கமாய்த் தொளிவுமாகி மால்வரை வளியுமாகித்தியக்கமாய் ஒருக்கமாகிச் சிந்தையுள் ஒன்றிநின்றுஇயக்கமாய் இறுதியாகி எண்டிசைக்கும் இறைவராகிஅயக்கமாய் அடக்கமாயவை வராப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், மயக்கமும் தெளிவும் ஆனவர்; மலையும் காற்றும் ஆனவர்; சிந்தையுள் ஒன்றி நின்று இயக்குபவராகவும் அதன் முடிவாகவும் ஆகியவர்; எண் திசைக்கும் இறைவராகி அசைவாகவும் அசைவற்ற உறுதித் தன்மையாகவும் ஆகியவர்; அப் பெருமான், இச் செயல்களின் வகையில் மாறுபட்டிருப்பினும் அதனின்று மாறாதவராய் ஆப்பாடியில் வீற்றிருக்கும் பரமர். 474. ஆரழல் உருவமாகி அண்டமேழ் கடந்து எந்தைபேரொளி உருவினானைப் பிரமனும்மாலும் காணாச்சீரவை பரவியேத்திச் சென்றடி வணங்குவார்க்குப்பேரருள் அருளிச் செய்வார் பேணுமாப் பாடியாரே. தெளிவுரை : ஈசன், நெருப்பின் வடிவமானவர்; அண்டங்கள் யாவும் கடந்து நிற்கும் எந்தை; பிரமனும் திருமாலும் காணுதற்கு அறியவொண்ணாத பேரொளியாய்த் திகழ்பவர். அப் பெருமானுடைய புகழ்களைப் பரவி ஏத்தித் திருவடியை வணங்குகின்ற பக்தர்களுக்குப் பேரருள் புரிபவர். அவர், யாவரும் பேணும் ஆப்பாடியில் மேவும் பரமர். 475. திண்டிறல் அரக்கனோடிச் சீகயி லாயம்தன்னைஎண்டிறல் இலனுமாகி எடுத்தலும் ஏழையஞ்சவிண்டிறல் நெரியவூன்றி மிகக்கடுத்து அலறிவீழப்பண்டிறல் கேட்டுகந்த பரமர்ஆப் பாடியாரே. தெளிவுரை : உறுதியும் திறனும் உடைய அரக்கனாகிய இராவணன், சிறப்பின் மிக்க கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, உமாதேவியானவர் அஞ்சி மேவ, சிவபெருமான் அவ்வரக்கனுடைய பெருந்திறன் நெரியுமாறு அம்மலையைத் தமது திருப்பாத விரலால் ஊன்றி, வலிமை அற்றவனாக அவனை ஆக்கி அலறி வீழச் செய்தார். அவ் அரக்கன் இசைத்த பண்ணின் திறத்தைக் கேட்டு உகந்த அவர், ஆப்பாடியில் மேவும் பரமரே. திருச்சிற்றம்பலம் 49. திருக்குறுக்கை வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை, நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 476. ஆதியிற் பிரம னார்தாம்அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்ஓதிய வேத நாவர்உணருமாறு உணர லுற்றார்சோதியுள் சுடராய்த் தோன்றிச்சொல்லினை இறந்தார் பல்பூக்கோதிவண்டு அறையும் சோலைக்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், பிரமனால் அருச்சித்து வழிபடப் பெற்றவர்; வேதம் ஓதும் நாவுடையவராகிய அப்பிரமன் தன்னை உணருமாறு உணர வைத்தார்; திகழ்கின்ற சோதியின் சுடராய் விளங்குபவர்; சொற்பதங் கடந்த பெரும் புகழ் உடையவர்; அப்பெருமான் பல விதமான பூக்களைக் கோதி வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த குறுக்கையின் வீரட்டனாரே. 477. நீற்றினை நிறையப் பூசிநித்தலும் நியமம் செய்துஆற்றுநீர் பூரித் தாட்டும்அந்தண னாரைக் கொல்வான்சாற்றுநாள் அற்றதென்றுதருமரா சற்காய் வந்தகூற்றினைக் குமைப்பர் போலும்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : திருவெண்ணீற்றைக் குழையப் பூசி நித்தமும் நியமத்துடன் தூய நீர் கொண்டு ஈசனைப் பூசித்து மகிழும் அந்தணராகிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் பொருட்டு, எமதருமராசனின் தூதுவனாய் வந்த கூற்றுவனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்தவர், சிவபெருமான். அவர் குறுக்கையில் வீற்றிருக்கும் வீரட்டனாரே. 478. தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்தாபரம் மணலாற் கூப்பிஅழைத்தங்கே ஆவின் பாலைக்கறந்துகொண் டாட்டக் கண்டுபிழைத்ததன் தாதை தாளைப்பெருங்கொடு மழுவால் வீசக்குழைத்ததோர் அமுதம் ஈந்தார்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஆத்தி மரத்தின் நிழலில் மணலால் சிவலிங்கத்தை தாபித்து, அதற்குப் பசுவின் பாலைச் சொரிந்து சண்டேசர் ஏத்துவதனைக் கண்ட அவருடைய தந்தை, அச் சிவலிங்கத்தை மதியாது பிழை செய்தார். அதனைக் கண்ட மகனார், தன் தாதையின் தாளை மழுவாள் வீசி வீழ்த்தினார். ஈசன் பால் கொண்ட அவர்தம் பேரன்பிற் குழைந்து அருள் செய்த பெருமான், குறுக்கை வீரட்டனாரே. 479. சிலந்தியும் ஆனைக் காவில்திருநிழல் பந்தர் செய்துஉலந்தவண் இறந்த போதேகோச்செங்க ணானும் ஆகக்கலந்தநீர்க் காவிரி சூழ்சோணாட்டுச் சோழர்தங்கள்குலந்தனிற் பிறப்பித் திட்டார்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : திருவானைக்கா என்னும் திருத்தலத்தில், சிலந்தியானது, ஈசனுக்குத் திருநிழல் பந்தலைத் தன் வாயினால் அமைத்துச் சிவபுண்ணியம் செய்து வந்தது. அது இறந்த போதும் சிவபுண்ணியம் தொடரக் கோச் செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்து அருள் புரிந்தவர், பரமன். அவர் குறுக்கை வீரட்டனாரே. 480. ஏறுடன் ஏழ டர்த்தான்எண்ணிஆ யிரம்பூக் கொண்டுஆறுடைச் சடையி னானைஅர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்மேறுமோர் பூக்கு றையமெய்ம்மலர்க் கண்ணை ஈண்டக்கூறுமோர் ஆழி யீந்தார்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : கிருஷ்ணாவதாரத்தில், ஏழு காளைகளை அடக்கி வீரங்காட்டிய திருமால், ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு, கங்கையைச் சடையில் மேவும் சிவபெருமானைப் பூசித்து அர்ச்சித்தார். அஞ்ஞான்று அவர், ஒரு மலர் குறைவுற்றதை ஒட்டித் தன் மெய்யில் உள்ள செந்தாமரை மலர் போன்ற கண்ணை இடந்து அருச்சித்து ஏத்தினார். அவ்வன்பிற் குழைந்த ஈசன், ஆழிப்படையை ஈந்தருளினார். அவர், குறுக்கை வீரட்டனாரே. 481. கல்லினால் எறிந்து கஞ்சிதாமுணும் சாக்கி யனார்நெல்லினார் சோறு ணாமேநீள்விசும்பு ஆள வைத்தார்எல்லியாங்கு எரிகை யேந்திஎழில்திகழ் நட்டம் ஆடிக்கொல்லியாம் பண்ணி கந்தார்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : உண்பதன் முன் மறவாது ஈசன்பால் கல்லெறிந்து வழிபட்ட சாக்கியனாருக்கு நெல்லின் அமையும் சோறு கொள்ளாது, சிவானந்த அமிர்தத்தை அருந்துமாறு முத்திப் பேற்றினை அருளிச் செய்தவர். சிவபெருமான். அப்பெருமான், நெருப்பினைக் கையில் ஏந்தி, இரவில் எழில் மிக்க நடனம் புரிபவர்; கொல்லிப் பண்ணின் இசையை உகந்தவர். அவர் குறுக்கை வீரட்டனாரே. 482. காப்பதோர் வில்லும் அம்பும்கையதோர் இறைச்சிப் பாரம்தோற்பெரும் செருப்புத் தொட்டுத்தூயவாய்க் கலசம் ஆட்டித்தீப்பெருங் கண்கள் செய்யகுருதிநீர் ஒழுகத் தன்கண்கோப்பதும் பற்றிக் கொண்டார்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் கையில் ஏந்தி, இறைச்சியும் கைக் கொண்டு, தோலால் ஆகிய காற்செருப்பு தொட்டுத் தூய்மையான வாய்க்கலசம் ஏந்தி ஈசனைப் பூசித்தவர், கண்ணப்ப நாயனார். அஞ்ஞான்று, இலிங்கத் திருமேனியின் திருவிழியில் இரத்தம் கசிந்து பெருகுவதைக் கண்டு, தன் கண்ணை இடந்து அப்புகையில், தடுத்துப் பற்றி அருள் புரிந்தவர் ஈசன் அவர், குறுக்கை வீரட்டனாரே. 483. நிறைமறைக் காடு தன்னிதல்நீண்டெரி தீபம்தன்னைக்கறைநிறத்து எலிதன் மூக்குச்சுட்டிடக் கனன்று தூண்டநிறைகடல் மண்ணும் விண்ணும்நீண்டவான் உலகும் எல்லாம்குறைவறக் கொடுப்பர் போலும்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : திருமறைக்காடு என்னும் தலத்தில், எரியும் விளக்கில் காணும் எண்ணெயை உண்ணும் எலியின் மூக்கு தீயினாற் சுட, அவ்வசைவினால் தீபமானது, சுடர்விட்டு எரிந்தது. அபுத்தி பூர்வமான இச்சிவ புண்ணியத்தின் பயனாய், எலியானது மறுபிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியாகி, விண்ணும் மண்ணும் ஆளும் பேறுற்றது. இத்தகைய அருள் புரிபவர் ஈசன். அவர் குறுக்கை வீரட்டனாரே. 484. அணங்குமை பாக மாகஅடக்கிய ஆதி மூர்த்திவணங்குவார் இடர்கள் தீர்க்கும்மருந்துநல் லருந்த வத்திகணம்புல்லர்க்கு அருள்கள் செய்துகாதலாம் அடியார்க்கு என்றும்குணங்களைக் கொடுப்பர் போலும்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : ஈசன், உமாதேவியின் ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஆதிமூர்த்தியாய் விளங்குபவர்; வணங்கி ஏத்தும் அடியவர்களுடைய இடர் நீக்கு நன்மருந்தாகத் திகழ்பவர்; கணம்புல்ல நாயனாரின் வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தவர். மெய்யடியார்களுக்குச் சத்துவ குணங்களைக் கொடுப்பவர். அவர் குறுக்கை வீரட்டனாரே. 485. எடுத்தனன் எழிற் கயிலைஇலங்கையர் மன்னன் றன்னைஅடுத்தொரு விரலால் ஊன்றஅலறிபோய் அவனும் வீழ்ந்துவிடுத்தனன் கைந ரம்பால்வேதகீ தங்கள் பாடக்கொடுத்தனர் கொற்ற வாணாள்குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : உயிர்க்கு எழில் தருகின்ற கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்தவர், ஈசன். அவ்வரக்கன் கைநரம்பால் இசைத்துச் சாமவேத கீதங்களைப் பாட, அரசாட்சியும் வாழ்நாளும் நனி அளித்தவர், அப்பெருமான். அவர், குறுக்கை வீரட்டனாரே. திருச்சிற்றம்பலம் 50. திருக்குறுக்கை வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை, நாகப்பட்டினம் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 486. நெடியமால் பிரமனோடு நீரெனும் பிலயங் கொள்ளஅடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்துடியுடை வேடராகித் தூயமந்திரங்கள் சொல்லிக்கொடிநெடுந் தேர்கொடுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காணப் பெறாதவராகி ஓங்கி உயர்ந்த ஈசன், அருச்சுனருக்கு, வில்லும் அம்பும் கொண்ட வேடராகிப் பாசுபதம் முதலான அத்திரங்களும் மந்திரங்களும் ஓதிக் கொடுத்தவர். அவர் குறுக்கை வீரட்டனாரே. 487. ஆத்தமாம் அயனும் மாலும் அன்றிமற் றொழிந்த தேவர் சோத்தம் எம் பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்தீர்த்தமாம் அட்டமீமுன் சீருடை ஏழுநாளும்கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கைவீ ரட்டனாரே. தெளிவுரை : அன்பின் நெருக்கமாகும் திருமால் பிரமன் மற்றும் தேவர்கள் எல்லாரும் எம்பெருமானே என்று தொழுது ஏத்த, அட்டமிக்கு முன்னுள்ள ஏழு நாட்களும் திருவீதியுலா போந்து, வினை தீர்த்தருள்பவர், குறுக்கை வீரட்டனார். (இப் பதிகத்தில் இரு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.) திருச்சிற்றம்பலம் 51. திருக்கோடிக்கா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்) திருச்சிற்றம்பலம் 488. நெற்றிமேற் கண்ணினானே நீறுமெய் பூசினானேகற்றைப்புன் சடையினானே கடல்விடம் பருகினானேசெற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானேகுற்றமில் குணத்தினானே கோடிகா வுடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் வீழியுடையவர்; திருநீறு பூசிய திருமேனியர்; கற்றையாக விளங்கும் சடை முடியினர்; கடலில் தோன்றிய நஞ்சினைப் பருகி நீலகண்டராக விளங்குபவர்; பகைமை கொண்டு முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், எத்தகைய குணக்குற்றமும் அற்றவராய் மன்னுயிர்களின் வினைக் குற்றமும் மலர்குற்றமும் இற்று ஒழியச் செய்து விளங்கும் எண் குணத்தினராய்க் கோடிக்காவில் வீற்றிருக்கும் தலைவரே ஆவார். 489. கடிகமழ் கொன்றையானே கபாலம்கை யேந்தினானேவடிவுடை மங்கைதன்னை மார்பிலோர் பாகத்தானேஅடியிணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானேகொடியணி விழவ தோவாக் கோடிகா உடையகோவே. தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மலரைத் தரித்தவர்; கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; வடிவுடை மங்கையாக மேவும் உமாதேவியைத் திருமார்பில் பாகமாகக் கொண்டவர்; திருவடியை நாள்தோறும் பரவி ஏத்தும் அடியவர்களுக்கு அருள் புரிபவர். அப் பெருமான், கொடி ஏற்றித் திருவிழாக்கள் ஓய்வில்லாது நிகழும் கோடிக்காவில் மேவும் தலைவர் ஆவார். 490. நீறுமெய் பூசினானே நிழல்திகழ் மழுவி னானேஏறுகந்து ஏறினானே இருங்கடல் அமுதொப்பானேஆறுமோர் நான்குவேதம் அறம்உரைத் தருளினானேகூறுமோர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசிய திருமேனி உடையவர்; ஒளி திகழும் மழுப்படை உடையவர்; இடப வாகனத்தை உகந்து ஏறியவர்; பாற்கடலைத் தேவர்கள் கடைந்து பெற்ற அமுதத்திற்கு நிகராக இருந்து மன்னுயிர்களுக்கு இன்பத்தையும் செல்வத்தையும் தருபவர்; ஆறு அங்கமும் நான்கு வேதங்களும் காட்டும் அறங்களை உரைத்தருளியவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அப்பெருமான் கோடிக் காவில் மேவும் தலைவரே. 491. காலனைக் காலாற் செற்றன்று அருள்புரி கருணையானேநீலமார் கண்டத்தானே நீள்முடி அமரர் கோவேஞாலமாம் பெருமையானே நளிரிளந் திங்கள் சூடும்கோலமார் சடையினானே கோடிகாவுடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்து, மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்த கருணை வள்ளல்; நீலகண்டத்தினர்; நீண்டு ஒளிரும் மணி முடியுடைய தேவர்களின் தலைவர்; இவ்வுலகம் எல்லாம் திகழ்ந்து விளங்கும் பெருமை உடையவர். குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனைச் சூடி மேவும் அழகிய சடை முடியுடையவர். அவர் கோடிக்காவில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். 492. பூணரவு ஆரத்தானே புலியுரி அரையினானேகாணில் வெண் கோவணம்மும் கையிலோர் கபாலம்ஏந்திஊணுமோர் பிச்சையானே உமையொரு பாகத்தானேகோணல்வெண் பிறையினானே கோடிகா வுடையகோவே. தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை மாலையாகக் கொண்டு, அதனையே ஆபரணமாகப் பூண்டவர்; புலியின் தோலை அரையில் கட்டியவர்; காணப் பெறுமாறு வெண்மையான வண்ணம் உடைய கோவணத்தைக் கொண்டவர்; கையில் பிரமகபாலம் ஏந்தி, மனைதொறும் திரிந்து பிச்சை ஏற்றவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியவர். அப் பெருமான், கோடிக்கா என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். 493. கேழல்வெண் கொம்புபூண்ட கிளரொளி மார்பி னானேஏழையேன் ஏழையேனான் என்செய்கேன் எந்தை பெம்மான்மாழையொண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்குழையேறு உடைய செல்வா கோடிகா வுடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், பன்றியில் வெண் கொம்பைப் பூண்டவர்; கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய திருமார்பு உடையவர். ஈசனே ! தேவரீரின் பேரருளக்கும் கருணைக்கும், யான் பாத்திரமற்ற ஏழையாகி, அத்தகைய மெய்த்தன்மையை அற்றவனாக உள்ளேன். எந்தை பெருமானே ! யான் மோகத்தால் மயங்குகின்றேன். போர்த்தன்மையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட செல்வனே ! கோடிக்காவில் வீற்றிருக்கும் தலைவனே ! அருளிச் செய்வீராக என்பது குறிப்பு. 494. அழலுமிழ் அங்கையானே அரிவையோர் பாகத்தானேதழலுமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனில் பலிகொள் வானேநிழலுமிழ் சோலைசூழ நீள்வரி வண்டினங்கள்குழலுமிழ் கீதம்பாடும் கோடிகாவுடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், எரியும் நெருப்பினை உள்ளங்கையில் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பராய் விளங்குபவர்; சீறி ஆர்க்கும் அரவத்தைக் கொண்டுள்ளவர்; பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பலி ஏற்பவர். அப்பெருமான், குளிர்ச்சியான நிழல் தரும் சோலைகளில், வண்டினங்கள் குழல் போன்று இசைத்துக் கீதம் பாடுகின்ற சிறப்பு மிக்க கோடிக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். 495. ஏவடு சிலையினானே புரமவை எரிசெய்õனேமாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானேஆவடு துறையுளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்கோவடு குற்றம் தீராய் கோடிகாவுடைய கோவே. தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு செலுத்தி, முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான், மாவடுகிர் கொண்டு கண்ணினாளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவர்; ஆவடு துறையுள் வீற்றிருப்பவர். கோடிக்காவில் மேவும் தலைவரே ! ஐம்புலன்கலால் ஆட்டப் பெற்று நான் அலைகின்றேன்; பசுவைக் கொன்ற பாவத்தை ஒத்த குற்றம் உடையேன்; வினை தீர்த்த அருள் புரிவீராக. 496. ஏற்றநீர்க் கங்கையானே இருநிலம் தாவினானும்நாற்றமா மலர்மேல் ஏறு நான்முகன் இவர்கள்கூடிஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழலுரு வாயினானேகூற்றுக்கும் கூற்றதானாய் கோடிகா வுடைய கோவே. தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் தரித்திருக்கும் பரமன். திருமாலும் நான்முகனும் சேர்ந்து அப்பரமனைத் தமது ஆற்றலால் அளக்கலுற்றனர். ஆயினும் அவர், பேரழலரு ஆகியவராய் அவ்விருவருக்கும் புலனாகாதவாறு ஓங்கி உயர்ந்தவர்; காலனுக்கும் காலனாகியவர்; அவர், கோடிக்காவில் மேவும் தலைவர் ஆவார். 497. பழகநான் அடிசைசெய்வேன் பசுபதீ பாவநாசாமழகளி யானையின்தோல் மலைமகள் வெருவப் போர்த்தஅழகனே அரக்கன் திண்டோள் அருவரை நெரிய ஊன்றும்குழகனே கோல மார்பா கோடிகாவுடைய கோவே. தெளிவுரை : தேவரீருக்கும் அடிமையாகும் தன்மையைப் பழக்கத்தால் செய்பவன் ஆவேன். பசுபதீ ! பாவநாசனே ! யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! இராவணனுடைய தோள் நெரியுமாறு கயிலையை ஊன்றிய அன்பனே ! அழகிய திருமார்பு உடைய நாதனே ! கோடிக்காவில் வீற்றிருக்கும் தலைவனே ! திருச்சிற்றம்பலம் 52. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 498. படுகுழிப் பவ்வத்தன்ன பண்டியைப் பெய்தவாற்றால்கெடுவதில் மனிதர் வாழ்க்கை காண்தொறும் கேதுகின்றேன்முடுகுவர் இருந்துள்ஐவர் மூர்க்கரேல் இவர்களோடும்அடியனேன் வாழ்மாட்டேன் ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : ஈசனே ! கடல் போன்று வயிறு உடையவனாகி, அதற்கே நன்கு உணவைப் பெய்து, படுகுழியில் உளைந்தேன்; கெடுவது இம்மனித வாழ்க்கை. அதனை நினைத்துக் கதறுகின்றேன்; இதனைக் காணும் தோறும் கதறுகின்றேன்; மூர்க்கரான ஐம்புலன்கள் என்னைத் துன்புறுத்துகின்றனர்; ஆரூர் மேவும் மூலட்டநாதரே ! அடியவனை ஈடேற்றுக. இது, வயிற்றிற் கொள்ளும் பேருணவை இழித்து ஓதுதல் ஆயிற்று. ஐம்புலன்களை வெறுத்தலும் ஆயிற்று. 499. புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடிஒழுக் கறா ஒன்பதுவாய் ஒற்றுமை ஒன்றும் இல்லைசழக்குடை இதனுள்ஐவர் சங்கடம் பலவும் செய்யஅழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்ட னீரே. தெளிவுரை : ஆரூர் மூலட்டத்தானத்தில் வீற்றிருக்கும் நாதரே ! புழுக்களின் கூடு போன்ற வயிறு, தோலால் மூடப் பெற்று ஒன்பது வாயில்களை உடைய ஒழுக்கமற்ற இத்தேகத்தில் விளங்குகிறது. ஒற்றுமை அற்ற தன்மையில் இவ்வாயில்கள் உள்ளன. சழக்குடைய இதனுள் ஐம்புலன்கள் இடையூறுகள் பல செய்கின்றன. இதனால் நான் அழிகின்றேன். 500. பஞ்சின் மெல் லடியி னாரகள் பாங்கராய் அவர்கள் நின்றுநெஞ்சில்நோய் பலவும் செய்து நினையினும் நினையவொட்டார்நஞ்சணி மிடற்றினானே நாதனே நம்பனேநான்அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : ஆரூர் மூலத்தானத்தில் மேவும் ஈசனே! பஞ்சினும் மென்மையான அடியுடைய மங்கையர்பால் சார்ந்து நெஞ்சில் துன்பம் எய்தி தேவரீரை நினையாதவனாய் இருந்தேன். நீல கண்டனே ! என் நாதனே ! நம்பனே ! நான் அச்சம் கொண்டு ஏங்குகின்றேன். அஞ்சாதே என்று கூறி, அருள்வீராக. 501. கொண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழுவ வேண்டிக்குண்டராய்த் திரிதந்து ஐவர்குலைத்து இடக் குழியில் நூக்கக்கண்டுநான் தரிக்ககில்லேன் காத்துக் கொள் கறைசேர் கண்டாஅண்ட வானவர் போற்றும் மூலட்டனீரே. தெளிவுரை : ஆரூரின்கண் மேவும் மூலத்தானத்தில் வீற்றிருக்கும் நாதரே ! கெண்டை போல் விழியுடைய மங்கையரின் மோகத்தில் ஐம்புலன்களால் தள்ளப்பட்டு இடருழன்றேன். நான் ஈடேற, தேவரீரே, காத்து அருள் புரிவீராக. நீலகண்டப் பெருமானே ! தேவர்கள் போற்றும் நாதரே ! அருள்வீராக. 502. தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்சம்என்றுஏழையே னாகிநாளும் என்செய்கேன் எந்தை பெம்மான்வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர்வந்துஆழ்குழிப் படுக்க ஆற்றேன் ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : ஆரூரில் மேவும் மூலத்தானத்தில் வீற்றிருக்கும் நாதரே ! இனிய சொல் பகரும் மகளிரின் வயத்தினனாய் இருந்து மதியிழந்தேன். எந்தை பெருமானே ! நான் என்ன செய்வேன் ! நல்ல வாழ்க்கை நெறியில் மேவுவது, அரிது ஆகியதே ! நாள்தோறும் ஐம்புலன்களால் யான் படுகுழியில் தள்ளப்பட்டுத் துன்புறுகின்றேன். ஐயனே யான் ஈடேறுமாறு புரிவீராக. 503. மாற்றம்ஒன்று அருள கில்லீர் மதியிலேன் விதியிலாமைசீற்றமும் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடையராகிக்கூற்றம் போல் ஐவர்வந்து குலைத்திட்டுக்கோகு செய்யஆற்றவும் கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்ட னீரே. தெளிவுரை : ஆரூரில் மேவும் மூலட்ட நாதரே ! நான், மதியற்றவனானேன்; நல்ல விதியிலாமையால் உண்டாகும் வினைச் சீற்றத்தையும் தீர்த்தருள் செய்ய மாட்டீர் ! ஐம்புலன்கள் என்னைச் சிக்கெனப் பிடித்துக் கூற்றம் போல நின்று குலைத்து என்னை வதைக்கின்றது. நான் ஆற்றாமையால் ஏங்குகின்றேன். இதற்கு மாற்றம் புரிந்து அருள்வீராக. 504. உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழியாகத்துயரமே ஏற்றமாகத் துன்பக் கோல் அதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்துமிக்கஅயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே. தெளிவுரை : ஆரூரில் மேவும் மூலட்டானத்தில் வீற்றிருக்கும் நாதரே ! உயிரானது நிலைப்படுகின்ற இந்த உடம்பினையே கால்களாகவும், உள்ளத்தைத் தாழிக் காம்பாகவும், துயரத்தை ஏற்றமாகவும், துன்பமாகிய கோலைப் பற்றிப் பயிருக்கு அல்லாது, பாழ் நிலத்திற்கு நீர் இறைத்து அயர்ந்தேன். ஐம்புலன்கள் என்னை துன்புறுத்தக் கலங்குகின்றேன். இது, நல்வினையை நாடிப் போற்றி ஈசனை ஏத்தாது, தீவினையைப் பெருக்கி நைந்து வருந்தும் செயலை உருவகித்து உணர்த்துதலாயிற்று. 505. கற்றதேல் ஒன்றுமில்லை காரிகை யாரோ டாடிப்பெற்றதேற் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலேமுற்றினால் ஐவர்வந்து முறைமுறை துயரம் செய்ய அற்றுநான் அலந்து போனேன் ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : ஆரூரில் மேவும் மூலட்டநாதரே ! யான் நல்ல நூற்களைக் கற்றது இல்லை. காம வயத்தினனாய்த் துன்புற்றுப் பேதையானேன். ஐம்புலன்கள் ஒவ்வொருவராக என்னைத் தொடர்ந்து வந்து துயருள் சேர்க்க, என் நிலையும் அற்றுக் கலங்கினேன். 506. பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவிவந்துசித்தத்துள் ஐவர்தீய செய்வினை பலவும் செய்ய மத்துறு தயிரே போல மறுகும் என்உள்ளம் தானும்அத்தனே அமரர்கோவே ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : அன்புக்குரிய தேவர் தலைவரே ! ஆரூரில் மேவும் மூலட்டானரே ! நான், பக்தி கொண்டு வாழாதவன்; பாவத்தைப் புரிந்தவன்; சித்தத்தில் ஐந்து புலன்களும் நன்கு பரவி, எல்லாத் தீமைகளும் புரிய, மத்தினால் கடையப் பெறும் தயிர் போலத் துன்பத்தால் மெலிகின்றேன். என் உள்ளமானது கலங்குகின்றதே ! 507. தடக்கைநால் ஐந்துக் கொண்டு தடவரை தன்னைப்பற்றிஎடுத்தவன் பேர்க்கஓடி இரிந்தன பூதம் எல்லாம்முடித்தலை பத்தும் தோளும் முறிதர இறையேஊன்றிஅடர்த்தருள் செய்ததென்னே ஆரூர்மூ லட்டனீரே. தெளிவுரை : இருபது கைகளைக் கொண்டு, கயிலையைப் பற்றி எடுத்த இராவணனுடைய முடிகளும் தோள்களும் நலியுமாறு, நொடி நேரத்தில் திருப்பாதத்தால் ஊன்றி அடர்த்த ஆரூர் மேவும் மூலட்ட நாதரே ! தேவரீர், அவ் அரக்கனுக்கும் அருள் செய்த கருணை தான் என்னே ! திருச்சிற்றம்பலம்.
5139 days ago
5139 days ago