திருவான்மியூர் கோவில் குளத்தில் கழிவுநீர்: பக்தர்கள் கண்ணீர்
திருவான்மியூர்: திருவான்மியூரில் கோவில் குளத்தில், கழிவுநீரும், குப்பையும் சேருவதால், பக்தர்கள் பெரிதும் வேதனைக்கு உள்ளாகிஉள்ளனர்.
திருவான்மியூர் வடக்கு மாடவீதியில், மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இயங்கி வருகிறது. அந்த கோவிலின் அருகில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு மருந்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தைச் சுற்றிய பகுதிகளில் சிறுசிறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
நிறம் மாறும் நீர்: இந்நிலையில், குளத்தைச் சுற்றிய பகுதிகளில், இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். மேலும், சிலர் சிறுநீர், மலம் கழித்து விட்டுச் செல்கின்றனர். இதனால், குளமும், குளத்தைச்சுற்றியுள்ள பகுதிகளும் மாசுபட்டு வருகின்றன. குளத்துத் தண்ணீரில் கழிவுநீரும் கலப்பதால், நீரின் நிறம் மாறி, துர்நாற்றமும் அடிக்கிறது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் கூறுகையில்: திருவிழாக் காலங்களில், சுவாமி சிலைகளை புனித நீராடச் செய்வதற்கு பயன் படுத்தப்படுவதால், இந்த தெப்பக்குளம் புனிதமான குளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை, இந்த குளத்தை முறையாக பராமரிப்பதே இல்லை. உரிய கவனிப்பின்மையால், குளம் மாசுபட்டு உள்ளது என்றனர்.
பிளாஸ்டிக் கழிவு: அருகில் குடியிருக்கும் மக்கள் சிலர் கூறுகையில், இப்போதெல்லாம் எங்கே குடிப்பதென்று விவஸ்தை இல்லாமல், பொது இடங்களில் குடிப்பது அதிகமாகிவிட்டது. குளத்தின் அருகிலேயே சிலர் குடித்து விட்டு, மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை, குளத்திற்குள் எறிகின்றனர். அருகிலேயே திருவான்மியூர் காவல் நிலையம் இருந்தும் போலீசார் கண்டுகொள்வதில்லை. பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது என்றனர்.
இந்த குளத்தின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், இதனை சுத்தம் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரும், குளத்திற்கு அருகில், குடிமகன்கள் போடும் ஆட்டத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.