உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மகிமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஈரோடு திருவேங்கிட சாமி கோவில் வீதி, மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவிலில் ஓராண்டாக திருப்பணி நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.செப்டம்பர் 4ம் தேதி காலை 9 மணிக்கு, திருக்குட நன்னீராட்டு உறுதி செய்தல், எண்வகை ஆனை பெறுதல், திருமகள் வழிபாடு, விநாயகர் வேள்வி, 5ம் தேதி நவகோள் வழிபாடு, திசை வழிபாடு, பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், 6ம் தேதி புண்ய நீர் சேகரித்தல், புனித மண் எடுத்தல், திருக்குட முழுக்கு உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 7ம் தேதி இரண்டாம் கால வேள்வி பூஜை, திருமுறை ஓதுதல், பேரொளி வழிபாடு நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு, திருமறை ஓதுதல், நிறை வேள்வி, திருக்குடங்கள் எழுந்தருளல், திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. காலை 10 மணிக்கு மகிமாலீஸ்வரர் கோவில் விமானத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு, பவானி, சித்தோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வழிபாடும், மகிமாலீஸ்வரர் திருவீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !