உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 19 காலை 8.15 மணிக்கு நடக்கிறது.

இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடித் தேரோட்ட விழா இன்று (ஜூலை 11ல்) காலை துவங்கியது. அதிகாலையில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் எதிரில் உள்ள மைய மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு அனுமார் உருவம் பொரிக்கப்பட்ட கொடி பல்லக்கில் எடுத்துவந்தனர். காலை 9.45 மணிக்கு மேள, தாளம் முழங்க கொடியேற்றம் நடந்தது. பின் தீபாராதனைகள் நடந்தன. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜூலை 15ல் சுந்தரராஜன்பட்டி வரும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. ஜூலை 16ல் மோகினி அவதாரத்திலும், 17ல் பூச்சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.  முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 19ல் காலை 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்ததராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார். ஜூலை 20ல் திருவிழா சாற்றுமுறையும், மறுநாள் உற்சவ சாந்தியும் நடக்கிறது.  ஆக., 2ல் ஆடிப் பெருக்கு விழா நடக்கிறது. அன்று ஆடி அமாவாசை என்பதால் கோயில் ராஜ கோபுரத்தில் எழுந்தருளியுள்ள 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு கருட வாகனத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோட்டை வாசல் வரை வலம் வருகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !