45 ஆண்டுகளுக்கு பின் செல்லியம்மனுக்கு படையல்!
ஊத்துக்கோட்டை: செல்லியம்மனுக்கு, 45 ஆண்டுகளுக்குப்பின், இனிப்புகள், பழங்கள் படைத்து, பக்தர்கள் வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, ஏரிக்கரையோரம் உள்ளது செல்லியம்மன் கோவில். இக்கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில், அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை வழிபடுவர். இங்கு பக்தர்கள் பங்களிப்புடன், 45 ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் திருவிழா நடந்தது. கடந்த, 20ம் தேதி, புதன் கிழமை, காலை 6:00 மணிக்கு, செல்லியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு, கரகம் புறப்பாடு நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் செல்லியம்மன், 16 கைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரெட்டித் தெரு, செட்டித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று காலை, அம்மன் ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள, மண்ணடியைச் சேர்ந்தது. அப்போது பக்தர்கள் இனிப்பு, பழ வகைகள் மற்றும் ஆடுகளை பலியிட்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று மாலை, எட்டு கைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து, மண்ணடியில் இருந்து ரெட்டித் தெரு வழியாக அம்பேத்கர் நகரை அடைந்தது. அங்கு அம்மனுக்கு படையல் இட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அங்கிருந்து புறப்பட்டு அம்மன் கோவிலை அடைந்தது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.