ஆண்டாள் விரும்பும் "அக்காரவடிசல் பால்கோவாவைவிட சுவை மிகுதி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் நேர்த்திகடனாக "அக்காரவடிசல் செலுத்துகின்றனர். இது பால்கோவாவை விட சுவை மிகுதி என்பது மற்றொரு தகவல்.
பக்தர்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டால் கோயில்களில் வேண்டுதல் போடுகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் மட்டுமல்ல, இறைவனும் வேண்டுதல் போட்டு நேர்த்திகடன் செலுத்தி உள்ளார் என்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் உதாரணம் என்கிறார் பட்டர் வேதபிரான் அனந்தராமகிருஷ்ணன். அவர் கூறுகையில், “ விரும்பிய ரெங்கமன்னாரை திருமணம் செய்ய ஆண்டாள் நினைத்தாள். அது நிறைவேறினால் மதுரை அழகருக்கு 100 தடா "அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் படைப்பதாக ஆண்டாள் வேண்டினார். அதன்படி ராமனுஜர், மதுரை அழகருக்கு 100 தடா அக்காரவடிசல், வெண்ணெய் செலுத்தி, ஆண்டாளின் நேர்த்திகடனை நிறைவேற்றினார்,” என்றார்.
ஆண்டாள் விரும்பிய "அக்காரவடிசல் என்பது வெகுசிலரே அறிந்த உணவுப்பொருள் என்கிறார் ஸ்ரீவி., சேர்ந்த கதலிநரசிம்மன். அக்காரவடிசல் தயாரிப்பு குறித்து இவர் கூறுகையில்,“ அக்காரவடிசல் பால்கோவாவைவிட மிகவும் சுவையானது. தித்திப்பானது. உடல் நலனுக்கு உகந்தது. வெண்கல கடாரம் பாத்திரத்தில் ஊறவைத்த அரிசி பொதும்பியவுடன், அதை நெய் விட்டு வறுக்கவேண்டும். பின்னர் பாலுடன் கலந்து கிளறி இறுகியதும் பாதாம், முந்திரியை அரைத்து ஊற்றவேண்டும். பின்னர் ஏலக்காய், குங்கமப்பூ சேர்த்து பாத்திரத்தின் அடி பிடிக்காமல் கிளறவேண்டும். இதை தயாரிக்க 8 மணி நேரம் வரை ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் அக்காரவடிசலை ஆண்டாள் மிகவும் விரும்புவதால், ஆண்டுதோறும் மார்கழி 27ல் கூடாரை வெல்லும் சீர் திருநாளில் ஆண்டாளுக்கு அக்காரவடிசல் சமர்பிக்கபட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது,” என்றார்.